ரமணிச்சந்திரன் சிறு பிராயத்தில் எங்களை வெகுவாகப் படிக்க ஈர்த்த எழுத்தாளர்களில் ஒருவர். ‘தேவி’ நாவலின் நாயகி செந்தாமரை தேவியும் நாயகியின் தங்கை வெந்தாமரை செல்வியும் அவர்களின் அத்தை வீட்டில் வளர்கின்றார்கள். அவர்கள் அங்கு அனுபவிக்கும் கொடுமைகளுடன் கதை ஆரம்பிக்கிறது. முதல் அத்தியாயத்திலேயே (தினகரன்) நாயகன் என்று தெரியாமலேயே, நாயகி சந்திக்கிறாள். அத்தையின் கொடுமை தாங்காமல் தேவியும் செல்வியும் மதுரையில் இருந்து சென்னைக்குப் பயணப்படுகின்றனர். சசி என்கின்ற டாக்டர் தோழியின் உதவியுடன் ஒரு வேலை தேடிக்கொண்டு, அக்காவும் தங்கையும் ஒரு வீட்டில் தங்குகின்றனர். அவர்களின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களும் அவற்றை எதிர்கொண்டு நாயகன் நாயகி இணைப்பும்தான் இந்நாவலின் கரு.

இந்தக் கதை ஒன்றும் நம் தமிழ் உலகத்திற்குப் புதுமையான கரு இல்லைதான். இதை நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் 1970களில் பெண்களைச் சிறிது தைரியத்துடன் படைத்துள்ளது ரமணிசந்திரனின் எழுத்துகள்.

இந்த நாவலின் ஆரம்பத்திலேயே தேவி படித்தவளாக, சுய சிந்தனை உடையவளாக, தப்பைத் தட்டிக் கேட்கிறவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். ஓர் ஏழைப் பெண்ணை ஒருவன் அவமானப்படுத்தியதற்கு ஓர் ஆண் என்று ஒதுங்கி விடாமல் அவனை எதிர் கேள்வி கேட்கிறாள்.

பின்பு அவள் அத்தை வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்யும் போதும் தன் தோழி சசியின் வீட்டிற்கு மதுரையில் இருந்து தானே சென்னைக்குத் தன் தங்கை செல்வியுடன் செல்ல முடிவெடுத்து, அம் முடிவினைச் செயல்படுத்திய போதும் அவளின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியது. அவர்கள் இருவரும் தோழி சசியைச் சந்தித்து பின் ஒரு வேலையில் சேர்ந்து இருவரும் ஒரு தனி வீட்டில் வசித்து வருவது அவள் அவளுடைய திறமையின் மீது வைத்த நம்பிக்கையை வெளிப்படுத்தியது.

இதன் பிறகு கதையின் திருப்பங்கள் முற்றிலும் உணர்வுகளின் அடிப்படையில் நகர்கிறது. செல்வியை, அவளின் படிப்பைத் தொடரச் செய்திருக்கலாம். அவள் தேவியைப் பார்த்துச் சிறிது மாற்றம் அடைந்தவளாகச் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். காய்கறி வாங்கச் சென்ற இடத்தில் ஒருவனிடம் ஏமாந்ததாகக் கூறியிருப்பது கதைக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், செல்வியின் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கவில்லை. பின்வரும் சில நிகழ்வுகள் மேலும் தேவியைச் சிறிது உணர்வுபூர்வமான கதாபாத்திரமாக சித்தரிக்கிறது.

பின்பு தேவி, செல்வியின் பிரச்னையைத் தீர்ப்பதற்குச் செல்லும்போது தினகரைச் சந்திப்பது சிறிது சுவாரசியம் கூட்டுகிறது. தேவியும் தினகரும் அகங்காரம் உடைய கதாபாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இடையில் வரும் மாமியார், டாக்டர், கதாபாத்திரங்கள் அவர்களுக்கே உரிய கம்பீரத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ரேவதி கதாபாத்திரம் மிகவும் வலு இழந்த கதாபாத்திரமாக இருக்கிறது.

ரமணிச்சந்திரன்

முடிவாக ரமணிச்சந்திரனின் பல நாவல்களைப் போல இதுவும் ஒரு காதல் கதை. இவர்களின் கதை எப்போதும் எந்த ஓர் எதிர்மறை சம்பவங்களையும் சித்தரிப்பது இல்லை. கதாபாத்திரங்களும் எதிர்மறையாகச் சித்தரிக்கப்படுவதில்லை. ஒரு நல்ல பொழுதுபோக்கு வாசிப்பு. இன்றைய தலைமுறை பெண்களுக்கு தேவியைவிட வலுவான கதாபாத்திரங்கள் தேவை.

படைப்பாளர்:

எஸ். பானுலஷ்மி, பி.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்.சி. சைகோதெரபி & கவுன்சிலிங் படித்தவர். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். சென்னையில் சிறிது காலம் சைகோதெரபிஸ்டாகவும் கவுன்சிலிங் கொடுப்பவராகவும் செயல்பட்டிருக்கிறார்.