சமீபத்தில் பேச்சாளரும் எழுத்தாளருமான பாரதி பாஸ்கர் எழுதிய ‘சில பாதைகள் சில பயணங்கள்’ என்னும் நூலை வாசித்துக் கொண்டிருந்த போது, செரிப்ரல் பால்ஸி என்னும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு இறந்த தன் குழந்தையைப் போல யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகத் தமிழகத்தில் ‘வித்யாசாகர்’ என்னும் சிறப்பு பள்ளியைத் தொடங்கிய பூனம் நடராஜன் பற்றித் தெரிய வந்தது. என் மரியாதைக்குரிய நபர் அவர். கடந்த ஆறு ஆண்டுகளாக என் தேடல்கள் யாவும் மரபணுக்களையும் அவற்றால் உருவான மரபணுக் குறைபாடுகளைப் பற்றியும்தான் வலம் வந்தன. உலகில் இதுவரை சுமார் ஏழாயிரம் மரபணுக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், அதில் நமக்குப் பரிட்சயமானது எத்தனை என்று கேட்டால் ஒன்று, இரண்டு என்று விரல்விட்டு எண்ணி விடலாம். மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதை ஒரு சில காரணங்களால் ஏற்றுக் கொண்டாலும்கூட மருத்துவர்களிடையேகூட இது போன்ற மரபணுக் குறைபாடுகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளாக சிஸ்டிக் ஃபைபிரோஸிஸ் என்னும் மரபணுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்து வருகிறேன். எத்தனை மருத்துவமனைப் படிகளை அந்தக் குழந்தை மிதித்திருக்கிறது! எத்தனை சிகிச்சை முறைகளுக்கு அந்தக் குழந்தை தன்னை ஆளாக்கி இருக்கிறது! எத்தனை மருத்துவக் கோப்புகளை அந்தக் குழந்தையின் பெற்றோர் தூக்கிக் கொண்டு அலைந்திருக்கிறார்கள்! அத்தனையும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. இத்தனைக்கும் காரணம் மரபணுக் குறைபாடுகளைப் பற்றிய விழிப்புணர்வும் அதற்கான போதிய மருத்துவ வசதியும் இல்லாததுதான்.

சி.எம்.சி போன்ற ஓரிரு மருத்துவமனைகள்தாம் இது போன்ற மரபணுக் குறைபாடுகளுக்கென்றே தனிப்பிரிவை வைத்து இயங்கி வருகின்றன. ஒற்றைப் புள்ளியில் தொடங்கிய உயிர்கள் அனைத்தும் இந்த மரபணுக்களால் கட்டமைக்கப்பட்டதுதாம். அவ்வளவு ஏன் செடி, கொடி, தாவரங்கள்கூட மரபணுக்களால் பிணைக்கப்பட்டதுதான். ஆனால், அதைப் பற்றிப் படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைவாகவே இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றிலிருந்துதான் மக்களிடையே மரபணு பிறழ்வு, பி.சி.ஆர் (PCR) போன்ற நுட்பங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் மரபியல் ஆலோசகர்கள் ஒவ்வொரு மருத்துவமனையிலும் பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மரபியல் ஆலோசனைக்கென்றே ஒரு தனி பட்டப்படிப்பே இருக்கிறது. ஆனால், இன்னும் நம்மில் நிறைய பேருக்கு மரபணு, தாயனை போன்ற வார்த்தைகளே பரிட்சயமாக இல்லை என்பதுதான் நிதர்சனம்.

இந்தப் பக்கம் இருந்து பார்க்கும்போது மக்களிடையே இதுபோன்ற விழிப்புணர்வும் தகவல்களும் கிடைக்க பெறுவதே சரி என்று தோன்றுகிறது. ஆனால், இதன் இன்னொரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது மரபணு உருமாற்றத்தை உயிரினங்களில் புகுத்தி இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் ஆராய்ச்சிகள் தொடர்வது ஆக்கப்பூர்வமானதல்ல என்கிற கருத்து உறுத்துகிறது. மரபணுக்களைப் படிக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், அதை எப்படிக் கையாள்கிறோம் என்பது அதைவிட அவசியம். தடயவியலில், தொல்பொருள் ஆராய்ச்சியில், பரிணாம வளர்ச்சியில், மருத்துவத்தில், தாயனை பற்றிய விழிப்புணர்வு கட்டாயமாக இருக்க வேண்டும்.

மரபணு பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான் சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்வது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம். காலம் காலமாக நம் குடும்பங்களில் பின்பற்றப்பட்ட வழக்கத்தைத் தவறென்று சொல்வதா என்கிற கேள்வி இன்றும் பலரிடம் விவாதத்திற்குரியதாக இருக்கிறது. இது தவறா, சரியா என்பதைப் பற்றி விவாதிப்பதைத் தாண்டி இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி யோசிப்பதுதான் சாமர்த்தியம்.

மரபணுக் குறைபாடுகளைப் புரிந்துகொள்வது சற்றுக் கடினம். அதற்குக் காரணம் சில மரபணுக் குறைபாடுகளுக்கு அம்மா, அப்பாவிடம் இருந்து வரும் ஏதோ ஒரு மரபணுவில் குறைபாடு இருந்தாலும்கூட அந்த மரபணுக் குறைபாடு குழந்தைக்கு வருவதற்கு 75 சதவீதம் வாய்ப்பிருக்கிறது. ஆனால், சில மரபணுக் குறைபாடுகளுக்கு அம்மா, அப்பாவிடம் இருந்து வரும் இரண்டு மரபணுக்களும் குறைபாடுடன் இருந்தால் மட்டுமே குழந்தைக்கு அந்த மரபணு குறைபாடு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதுவும் 25 சதவீதம்தான். இந்த வகை குறைபாடுதான் சொந்தத்திற்குள் திருமணம் செய்யும்போது அடுத்த தலைமுறையைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. அதுவும் நெருங்கிய சொந்தங்களைத் திருமணம் செய்தால் இது போன்ற மரபணுக் குறைபாடுகள் குழந்தைகளுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. நெருங்கிய சொந்தங்களைத் திருமணம் செய்யும் அனைவருக்குமே இந்த வகை மரபணுக் குறைபாடுகள் வருமா என்று கேட்டால், இல்லை. ஒரு குடும்பத்தில் யாரோ ஒருவர் ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட மரபணுக் குறைபாடால் பாதிக்கப்பட்டு அந்த மரபணு பிறழ்வு அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே வலம்வரும்பட்சத்தில் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை திருமணம் செய்துகொண்டாலும் மரபியல் ஆலோசகர்களுடைய ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கேட்டு நடப்பது அவசியம்.

சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்ளாமலும் இது போன்ற மரபணுக் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால், அதற்கான சதவீதம் சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்வதால் ஏற்படுவதைவிடக் குறைவு. சில மரபணுப் பிறழ்வுகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் சொந்தமானதாக இருப்பதற்குக் காரணம் இது போன்ற நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்வதுதான்.

காலம் காலமாக இருந்து வந்த மரபால் முந்தைய தலைமுறையினருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையா என்கிற கேள்விக்கு உணவு முறையும் வாழ்க்கை முறையும்தான் பதில். இன்றைய சூழலில் அதிக மரபணுப் பிறழ்வுகள் ஏற்படுவதற்குத் துரிதமாக நாம் செய்யும் ஒவ்வொன்றும்தான் காரணம்.

இது போன்ற மரபணுக் குறைபாடுகளுக்கு எங்கு சிகிச்சை கிடைக்கும்? முதலில் இது மரபணுக் குறைபாடுதான் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? ஏற்கெனவே இந்த மரபணுக் குறைபாடு வேறு யாருக்காவது இருக்கிறதா? அப்படி இருந்தால் அவர்களை எப்படித் தொடர்பு கொள்வது? அதற்கான மருத்துவ வசதி எங்கு இருக்கிறது? மருந்து மாத்திரைகள் எங்கு கிடைக்கும்? இது போன்ற அரிதான நோய்களுக்கு வழக்கமான மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள் எளிதாக கிடைப்பதில்லை. அதனால் இது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்.

அது மட்டுமின்றி மரபணுப் பிறழ்வால் ஏற்படக்கூடிய புற்றுநோய்களைத் தடுப்பதற்கு வருடம் ஒருமுறை அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். தற்போதிருக்கும் தொழில்நுட்பத்தை வைத்து, ஏற்கெனவே ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். அதுவும் ஏற்கெனவே குடும்பத்தில் யாரோ ஒருவருக்குப் புற்றுநோய் இருக்கும் பட்சத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு மரபியல் ஆலோசகர்களுடைய அறிவுரையைக் கேட்டு நடப்பதும் முக்கியம்.

சில மரபணுக் குறைபாடுகள் பிறவியிலிருந்து வெளிப்படுவதில்லை. நடுத்தர வயது, அதாவது நாற்பது வயதிற்கு மேல்தான் அந்த மரபணுக் குறைபாடுகள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். இதை ஆங்கிலத்தில், late onset disorders என்பர். இந்த வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கட்டாயம் அந்தக் குறைபாட்டிற்கான மரபணு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். குழந்தைக்காகத் திட்டமிடும் போதும் குழந்தை பிறந்த பிறகும் மரபியல் ஆலோசகர்களை அணுக வேண்டும்.

இது போன்ற தவிர்க்க முடியாத குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அடுத்த தலைமுறையின் ஆரோக்கியம் இன்றைய தலைமுறையின் செயல்.

(நிறைவுற்றது)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.