அருமை தோழிகளே,

கடந்த 25 வாரங்களாக வாழ்வியல் திறன்களைப் பற்றி பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்ததில் ஆகச் சிறந்த மகிழ்ச்சி. நிறைவு பகுதியான இன்று ஒரு முக்கிய நினைவூட்டல்.

‘வாழ்வு ஒரு முடிவில்லா விளையாட்டு.’ இதை மகிழ்வு வரும் போதும் துன்பம் வரும் போதும் நினைவுகொள்வது அவசியம்.

மகிழும்போது இதை நினைவுகூர்ந்தால், வாழ்வு இந்த மகிழ்ச்சியான தருணத்தோடு முடிந்துவிடப் போவதில்லை என்கிற தெளிவோடு சமநிலையை இழக்காமல் வாழ்வைத் தொடர இயலும். அடுத்து இன்னல் வரலாம் என்கிற எச்சரிக்கையும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்ளலாம்.

துன்பம் வரும் போது இதை நினைவுகூர்ந்தால் வாழ்வு இந்தத் துன்பத்தோடு முடியப் போவதில்லை என்பது மனதிற்குப் புரியும். இந்த நிகழ்வு தந்த அனுபவத்தை மனதில் இருத்தி, அடுத்து வரும் இன்பத்தை எதிர்கொள்ள மனம் தயாராகும்.

எல்லாவற்றையும்விட இது ஒரு விளையாட்டு என்கிற எண்ணம் எதையும் எளிதாகக் கையாளும் மனபாங்கும் வரும்.

நம் வாழ்வு நம் கடைசி மூச்சு விடும் நொடி வரை நம் கையில்தான் உள்ளது. ஒவ்வொரு முறையும் நாம் நம்மைவிட சிறந்த மனிதராக மாறும் போது மட்டுமே இந்த விளையாட்டில் இறுதி வெற்றி. எப்போது நாம் பிறரை வெற்றிகொள்ளும் எண்ணத்தை விடுத்து நேற்று இருந்த நம்மைவிட இன்று சிறப்பான ஒரு மனிதராக மாற முயற்சி செய்கிறோமோ அப்போது வெற்றி நம் வசம்.

வாருங்கள் தோழிகளே, இந்த முடிவில்லா விளையாட்டில் நம்மை நாமே ஜெயிப்போம், அப்படியே இந்த அகிலத்தையும்.

(நிறைந்தது)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.