எனக்கு நேரமே இல்லை என்று ஓடிக்கொண்டே இருக்கிறீர்களா? எனக்கு 24 மணி நேரம் போதவில்லை என்று நினைப்பவரா நீங்கள்? அப்படி என்றால் உங்களின் நேர மேலாண்மையில், மன சமநிலையில் ஏதோ தவறிருக்கிறது என்று பொருள்.

எப்போதும் நேரமே இல்லை என்று புலம்புபவர்கள் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடிவதில்லை. ஏனென்றால் மனம் செய்கிற வேலையில் இல்லாமல், அடுத்து என்ன என்பதிலேயே முனைப்போடு இருக்கும். மனம் எப்போதும் ஒரு பரபரப்பில், பதற்றத்தில் இருக்கும். எந்தத் துறையில் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள் உள்ள பொதுவான அம்சம் சிறப்பான நேர மேலாண்மை.

இங்கு தேவைப்படுவது நேர மேலாண்மை அல்ல, சுய மேலாண்மை. நம்மைச் சரி செய்துகொண்டால், நேரம் நம் ஆளுமையில் இருக்கும்.

மன ஒருமுகப்படாமல் எத்தனை வேலைகள் செய்தாலும், அது முழுமையாவதில்லை. செய்து முடித்த திருப்தியும் கிடைப்பதில்லை.

முதலில் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு உங்களுக்கு நேரம் போதாமைக்கான காரணத்தை அலசுங்கள்.

 1. உங்களின் சக்திக்கு மீறிய வேலைகள்.

இது உண்மையிலேயே சவாலான சூழ்நிலைதான். தினம் தினம் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளின் எண்ணிக்கை கூடுவதும், நேற்றைய நிலுவைகளும் சேர்ந்து இன்னும் நம்மை அயர வைக்கும்.

 1. முதலில் வேலைகளை பட்டியலிடுங்கள்.
 2. முன்னுரிமை, முக்கியத்துவம் அடிப்படையில் பட்டியலை திருத்துங்கள்.
 3. முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொன்றாக வேலைகளை முடிக்கப் பழகுங்கள்.
 4. ஒரு நேரத்தில் செயலாலும் மனதாலும் ஒரு வேலையில் மட்டும் ஈடுபடுங்கள்.
 5. நிலுவையில் உள்ளதைக் கவனத்தில் ஏற்காமல் கையில் உள்ள செயலைச் சிறப்பாகச் செய்வதில் மட்டும் முழுக் கவனமும் இருக்கட்டும். எந்தக் காரணத்தினாலும் முடித்த செயலை மறுபடியும் செய்யத் தேவையில்லாத அளவிற்கு முழுமையாக ஈடுபடுங்கள்.
 6. இதனால் செய்ய வேண்டிய வேலைகள் முடிய முடிய உற்சாகம் பிறக்கும், மனம் அயர்ந்து போகாது. ஒரு நேரத்தில் நம்மிடம் எந்தச் செயலும் நிலுவையில் இருக்காது.
 7. எல்லா வேலைகளையும் குறித்த நேரத்தில் திறம்படச் செய்து சூப்பர் வுமன் / மேன் என்கிற பட்டம் வாங்கிச் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை. முடியாத வேலைகளுக்கு ‘No’ சொல்லப் பழகுங்கள். முடியாததை முடியாது என்று சொல்வதற்காக யாரும் உங்களுக்கு தண்டனை தரப் போவதில்லை.
 8. நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்த போதும் சில நேரம் நிலுவை இருக்கதான் செய்யும், அதற்காக குற்ற உணர்ச்சி தேவை இல்லை. நம்மால் முடிந்த சிறந்த முயற்சியை செய்தோம் என்பதே முக்கியம்.
 9. நீங்கள் தள்ளிப் போடும் பழக்கமுள்ளவரா ?

இதைப் பற்றி விரிவாகப் போன வாரம் பார்த்தோம்.

2. உங்களின் நேரத்தை எப்படி உபயோகிக்கிறீர்கள் என அளவிடுங்கள்.

நீங்கள் எழுந்ததில் இருந்து தூங்கப் போகும் வரை ஒவ்வொரு மணி நேரத்தையும் அட்டவணைப் படுத்தி எதில் அதிகமான நேரம் செலவிடுகிறீர்கள் என்று பாருங்கள்.

தளர்வு நேரம், உடலுக்கும் மனதுக்கும் தேவையான புத்துணர்ச்சி தரும், அது வீண் அல்ல. அதே நேரம் அது அளவு மீறும் போது, நம்மை அடிமைப் படுத்திவிடுகிறது. ஒரு வாரம் 24 மணி நேர அட்டவணை உங்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கும். எங்கே உங்கள் நேரம் விரயமாகிறது என்று ஆராய்ந்து, அதற்கேற்ப வாழ்வில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வாருங்கள்.

3. கட்டாயம் முடிக்க வேண்டியவை.

முடித்தால் நல்லது. நேரமிருந்தால் செய்ய வேண்டியவை என ஒரு பட்டியல் தயாரித்து, அதன்படி செயல்களை முடிக்க முயற்சி செய்யுங்கள்.

 1. சில சவாலான செயல்களைச் செய்ய நமக்குச் சிறப்பான தகுதிகள் தேவைப்படலாம். தேவைப்படும் தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இதனால் செயலை விரைவாகவும் திறமையாகவும் செய்ய முடியும். இதில் செலவு செய்யும் நேரம் விரயமல்ல, முதலீடு.

2. எல்லா வேலைகளையும் நீங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று இல்லை. சாத்தியமெனில் சில வேலைகளைப் பிறருக்குப் பிரித்துத் தரலாம்.

3. நேரமே இல்லை என்று காரணம் கூறி உங்கள் உடல், மன ஆரோக்கியத்திற்குத் தேவையான நேரத்தை மறுத்து விடாதீர்கள். நன்கு பராமரிக்கப்படும் இயந்திரமே் அதன் வேலையைச் சிறப்பாகச் செய்யும். உங்கள் உடலும் மனமும்கூடப் பராமரிப்பு தேவைபடும் இயந்திரம்தான்.

4. எந்தச் செயலைச் செய்தாலும் உங்கள் ஒருமுகப்பட்ட கவனத்தை அதில் செலுத்துங்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய (Multi Tasking) நீங்கள் இயந்திரம் அல்ல. அது உங்களின் கூர் கவனத்தைச் சிதைத்துவிடும்.

வாருங்கள் நேரத்தைக் கையிலெடுக்கலாம், வெற்றி பெறலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.