சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 24, 2023இல் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. சில இடங்களில் சில நீதிமன்றம் பெண்களுக்கு எதிராக வழங்கினாலும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தமிழ்நாட்டில் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கி ஆறுதல் அளித்திருக்கிறார். இந்த வாரம் உடல் நலம் சரியில்லை என்று வீட்டில் இருந்த போது நானும் அம்மாவும் ஒன்றாக இருக்க நேரிட்டது. அப்போது அம்மா என்னிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

“இன்னிக்கு உன்னோட அப்பாவுக்குப் பயங்கர வேலை…” என்று மூன்றாவது தடவையாகப் புலம்பினார் அம்மா.

“அப்பா மட்டும் வேலை செய்யல. தினமும் நீ அதைவிட வேலை செஞ்சுட்டு இருக்கம்மா” என்றேன்.

அப்போதுதான் என் தாய்க்குலத்திற்குத் தோன்றி இருக்கும் போல, “அட ஆமா, சொல்லப் போனால் நாமதான் இங்க அதிகமாக வேலை செஞ்சுட்டு இருக்கோம்” என்றார்.

நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நிச்சயம் இருக்கிறது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?

தன் மனைவிக்குச் சொத்து பங்கு தர முடியாது என்று கணவன் தொடர்ந்த வழக்கு, வட்டார நீதிமன்றத்தில் சரி எனப்பட, அது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டிற்கு வர, பல வருடங்களாகத் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதி கிடைத்துள்ளது.

தீர்ப்பின்படி, சொத்து கணவனின் பெயரில் அல்லது மனைவியின் பெயரில் வாங்கப்பட்டிருந்தாலும், அது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து உழைத்து வாங்கியது என்றே கருதப்படும். இல்லத்தரசி நேரம் பார்க்காமல் பல பணிகளைச் செய்கிறார். அவர்களுக்கு நிர்வாகம் செய்யும் பண்பு, சமைக்கும் திறன், பொருளாதாரம், கணித அறிவு எல்லாம் அவசியமாகிறது. வீட்டைப் பார்த்துக்கொள்ளுதல் என்பதில் அடிப்படை மருத்துவமும் அடங்கி இருக்கிறது. அதனால் மனைவியின் இந்தப் பங்கை ஒன்றுமில்லாதது எனக் கூற முடியாது. கணவன் சம்பாதித்த சொத்தில் சம உரிமை மனைவிக்கு உள்ளது. மனைவி இல்லாமல் அதை அவர் சம்பாதித்து இருக்க முடியாது. பெண்கள் குடும்பத்திற்காக அனைத்தையும் செய்யும்போது இறுதியில் அவர்களுக்கு எதுவும் இல்லை எனக் கூற முடியாது. நீதிமன்றங்களும் பெண்கள் தன் தியாகத்துக்குச் சரியான பரிசு பெறுகிறார்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

இதுதான் தீர்ப்பு. பெண்கள் பலருக்கு தான் இத்தனை வேலை செய்கிறோம் என்பதே கருத்தில் இருப்பது இல்லை. ஓர் ஆண் சமையல் செய்து விட்டாலோ அல்லது வீட்டு வேலை செய்து விட்டாலோ ஆர்ப்பரிக்கும் பலர் பெண்கள் இதையேதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைப்பது இல்லை.

நீங்கள் சமூகத்தில் குடும்பம் என்ற ஒன்றிற்குச் செய்வது விலைமதிப்பற்றது. அதை யாரும் ஏன் நீங்களேகூட குறைவாக எண்ணிவிடாதீர்கள். நான் பெண் அதனால் இதெல்லாம் நான் மட்டுமே செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. உங்களை நீங்களே மதியுங்கள். அனைத்து மனிதர்களும் சமம். அதில் ஆண், பெண் வித்யாசம் இல்லை.

YOU ARE NOT WORTHLESS BUT PRICELESS. இப்போது வரைக்கும் புரியவில்லை. பெண்களைப் பலவீனமானவர்கள் என்று கூறிவிட்டு அன்றாடம் செய்யும் கடினமான பல வேலைகளைக்கூடப் பெண்கள் தலையில் சுமத்திவிடுகிறது இந்தச் சமூகம்.

படைப்பாளர்:

மனோஜா. ஆசிரியராக இருக்கிறார். உளவியல் முதுகலை அறிவியல், முதுகலை தமிழ் இலக்கியம் படித்தவர். திருப்பூரில் வசிக்கிறார்.