வேதிசிகிச்சை முடிந்த பின்னர், “வேதிசிகிச்சை கொடுக்கும்போது இரண்டு அல்லது மூன்றாம் வேதிசிகிச்சையின் போது முடி எல்லாம் கொட்டிவிடும். சிலர் கொட்டுவதற்கு முன்பே மொட்டை போட்டுவிடுவார்கள். புற்றுநோயாளிகளுக்கு விக் செய்து கொடுப்பவர் இங்கே வருவார்.அவரிடம் சொல்லி விக் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் டாக்டர். நான் மொட்டை போட விரும்பவில்லை. எனவே நாங்கள் விக் விற்பனை செய்பவரிடம், எனக்கு வேண்டிய விக் ஒன்றை ஆர்டர் செய்துவிட்டோம். அதன் விலை அப்போது 3,500 ரூபாய்.

வேதி சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இரண்டு நாட்கள் இருந்த பின்னரே பழனிக்குப் புறப்பட்டேன். டாக்டர் கார்திகேஷ், “இடது மார்பகத்தை எடுத்துவிட்டதால், அந்தப் பக்கத்தைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். கூட்டத்தில் செல்ல வேண்டாம். கீமோதெரபியின் விளைவாக கால்சியம் குறையும். அதனால் நடக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், விழுந்து எலும்பு உடைந்துவிடலாம். உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் உங்களை எளிதாகத் தொற்றலாம். வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. காய்ச்சல் வந்தால் உடனடியாக இங்கே மருத்துவமனைக்கு வந்துவிட வேண்டும். இல்லையெனில் பிரச்னை ஆகிவிடும். கூடியவரை நேர்மறையகவே சிந்தியுங்கள். அந்த எண்ணம் உங்கள் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்” என்று கூறினார்.

என்னைத் தொடர்ந்து உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் செய்யச் சொன்னார். கைக்கான தனிப் பயிற்சியும் சொல்லிக் கொடுத்து செய்யச் சொன்னார். அப்படிச் செய்தால் எனது இடதுகை இயல்பான செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உண்டு என்றார்.

வீட்டுக்கு வந்து, எல்லோரிடமும் கொஞ்ச நாட்களுக்கு வாசல் கதவைப் பூட்டச் சொன்னேன். யார் வீட்டில் இருந்து வெளியே போனாலும், யார் வீட்டுக்கு வந்தாலும் கை, கால்களைச் சுத்தம் செய்துவிட்டுதான் வர வேண்டும். வீட்டு வாசலில் நீரும் சோப்பும் வைத்தாகிவிட்டது. தினமும் மாடியில் காலை, மாலை இரு வேளையும் 40 நிமிடங்கள் நடந்தேன். உடற்பயிற்சியும் செய்தேன்.

என்னைப் பார்க்க நிறைய பேர் வந்தார்கள். சிலர் புற்றுநோய் தொற்றிவிடுவோ என்று பயந்தனர். சிலர் கடவுளின் கோபம்தான் புற்றுநோய்க்குக் காரணம் என்று கூறி, விபூதி குங்குமம் பூசினார்கள். ஒருவர் ஹோமியோபதி புத்தகத்தைக் கொடுத்து, ஹோமியோபதி மருத்துவம் எடுத்துக்கொள்ளச் சொன்னார். இன்னொருவர் சித்த வைத்தியம் செய்துகொள்ளச் சொன்னார். இப்படித் தினமும் அக்கறை என்ற பெயரிலும் மருத்துவம் என்ற பெயரிலும் தோன்றியதை எல்லாம் சொல்லிவிட்டுச் சென்றார்கள். நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டிருந்தேன்.

எனக்கு ஹோமியோபதி, சித்தா போன்ற மாற்று மருந்துகளில் நம்பிக்கை இல்லை. மாற்று மருந்துகளால் புற்றுநோய் குணமானவர்கள் எவ்வளவு பேர், மரணமடைந்தவர்கள் எவ்வளவு பேர் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. தற்போதுள்ள நிலையில் ஆங்கில மருத்துவம் மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அந்த மருத்துவத்தை எடுத்துக்கொள்வதே சிறந்தது என்பது என் கருத்து.

எந்த அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும் வீட்டுக்குப் பார்க்க வருபவர்கள் மூலம் கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகம் என்பதால், யாரையும் பார்க்க அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. இதில் கறாராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இன்னொன்று பார்க்க வருகிறவர்கள் அங்கே அந்த நோயால் அவர் இறந்தார், இங்கே இந்த நோயால் இவர் இறந்தார் என்றெல்லாம் சொல்லி, நம் நம்பிக்கையைக் குறைத்துவிடுவார்கள். அதனால் பார்வையாளர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.

நேர்மறை சிந்தனை நோயை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.

எதிர்காலத்தை மையமாகக் கொண்ட நேர்மறையான எண்ணங்கள் எதிர்காலத்தைச் சரியாகச் செப்பனிடும். அதனால், “எல்லாம் சரியாகிவிடும். எனக்குப் புற்றுநோய் சரியாகி, நான் மீண்டும் ஆரோக்கியமாகச் செயல்படுவேன். நான் வாழ்வதற்காகவே பிறந்திருக்கிறேன். இன்னும் நீண்ட காலம் நான் வாழ வேண்டும். என் இலக்குகளை நோக்கி நான் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று எனக்குள் அடிக்கடி சொல்லிக்கொள்வேன்.

நேர்மறை சிந்தனையின் நன்மைகள்

  • ஆயுட்காலம் கூடும்
  • மனச்சோர்வு குறையும்
  • குறைந்த அளவு துன்பம் மற்றும் வலி
  • நோய் எதிர்ப்பு அதிகம்
  • உடல் நலன்
  • இதய ஆரோக்கியம். இதய நோய், பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு அபாயத்தைக் குறைக்கிறது.
  • புற்றுநோய் வளர்ச்சியைக் குறைக்கிறது.
  • புற்று நோய் இறப்பைக் குறைக்கிறது.

முதல் வேதிசிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்ததும் தலை சுற்றல், வாந்தி இருந்தது. சாப்பிட முடியவில்லை. வயிற்றுப் போக்கு இருந்தது. வாயெல்லாம் புண்ணாக இருந்தது. வலது புறங்கையில் வேதிசிகிச்சையின்போது ஏற்பட்ட வீக்கம் வேறு. வேதிசிகிச்சைதான் புற்றுநோய் சிகிச்சையில் கொடுமையான காலகட்டம். ஆனால், அது கொடுக்கப்பட்டால்தான் உயிர் வாழமுடியும். அதற்குத் தகுந்தாற்போல உணவு உட்கொள்ள வேண்டும். இல்லையெனில், உடலில் ரத்தத்தின் அளவு குறையும். எலும்பில் கால்சியம் குறையும். உடல் மிகச் சோர்வாக இருக்கும். எனவே கால்சியம் அதிகம் உள்ள, இரும்புச் சத்து அதிகம் உள்ள, குறைவான கொழுப்பு உள்ள, அதிகமான புரதம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வாயெல்லாம் புண்ணாக இருக்கும். காரம், புளிப்பு சாப்பிட முடியாது. ஆனால், ஒரு மணி நேரத்து ஒரு தடவை கொஞ்சம் கொஞ்சமாக உணவுப்பொருள் திட, திரவமாக உட்கொள்ள வேண்டும்.

மீனில் புரதம் அதிகம் உள்ளதால், வாரம் இருமுறை சாப்பிடுவேன். தினம் ஏதாவது ஒரு கீரை உண்டு. சூப் சாப்பிடுவேன். தினம் காலையிலேயே 3 பொரியல், கூட்டு வகைகள். வறுவலே சாப்பிடக் கூடாது. வறுக்கும்போது எண்ணெய்யும் பொருட்களும் தொடர்ந்து சூடாவதால், எண்ணெயிலுள்ள வேதிப் பொருள் புற்றுநோய்க் காரணியாக மாறலாம். எப்போதுமே வீட்டில் ஒருமுறை அப்பளம் பொரித்தால், அந்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. சர்க்கரையின் அளவும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இவை எல்லாம் புற்றுநோய்க் கட்டிகளின் வளர்ச்சியைத் தூண்டும் பொருட்கள். அத்துடன் தினம் மூன்று முறை க்ரீன் டீ சாப்பிடுவேன். இதில் புற்றுநோயை எதிர்க்கும் antioxident உள்ளது.

புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், வீட்டில் தொடர்ந்து வேலை செய்துகொண்டும், சுறுசுறுப்பாக இருக்கவும் முயற்சி செய்ய வேண்டும். நான் புத்தகங்களோடு அதிக நேரம் செலவிடுவேன். கட்டுரைகள் எழுதுவேன். இதனால் எனக்கு வேதனை அவ்வளவாகத் தெரியவில்லை.

இப்படியே வேதிசிகிச்சைக்குப் பின் 18 நாட்கள் ஓடிப்போயின. முடி கொட்டவில்லை. ரத்தப் பரிசோதனை செய்து, ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், ரத்தம் ஏற்றிக்கொண்டோ அல்லது அதற்கான மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டே வரச் சொன்னார் டாக்டர்.

முருங்கை கீரை (கால்சியம் அதிகம் ) மற்றும் அகத்திக்கீரை (மக்னீசியம் மற்றும் தாதுப்புகள் அதிகம்) உணவில் சேர்த்துக்கொண்டேன். எனது ஹீமோகுளோபின் அளவு 12 Hb இருந்தது. இது ஒன்றும் குறைவான ரத்த அளவு இல்லை. எனக்கு இந்த வேதிசிகிச்சையின்போது ஹீமோகுளோபின் 10 க்குக் கீழே வந்ததே இல்லை. எனவே இரண்டாவது வேதிசிகிச்சைக்குத் தயாராகிவிட்டேன்.

(இன்னும் பகிர்வேன்)

படைப்பாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.