மனித குலத்தைத் தழைக்கச் செய்யும் மாபெரும் பொறுப்பை இயற்கை ஒவ்வொரு பெண்ணிற்கும் கொடுத்திருக்கிறது. அதீத பாதுகாப்புணர்வையும் காதலையும் கொடுக்கும் ஆண்களை தன்னையறியாமல், அனிச்சையாக ஒரு பெண் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம், இயற்கையே அவளை அப்படி வடிவமைத்திருப்பதால்தான். தனது உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படும் ஒரு ஆணால்தான், தங்கள் வாரிசுகளுக்கும் ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியும் என்று அவளது மூளையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கூடலில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்தும் அளவுக்குப் பொறுமையுள்ள ஒரு ஆணால், வாழ்க்கையின் எந்த ஒரு கட்டத்திலும் நிதானமான உறுதியுடன் செயல்பட முடியும் என்ற உளவியல் உண்மையை யாரும் கற்றுத்தராமலேயே ஒரு பெண் புரிந்து வைத்திருக்கிறாள்.

இல்லற இன்பத்திற்குத் தேவையான உடலுறுதியும், மன உறுதியும் எந்த ஆணிடம் இருப்பதாக உணர்கிறாளோ, அவனை நோக்கி ஈர்க்கப்படவே அவளது ஹார்மோன்கள் அவளைத் தூண்டுகின்றன. இதனால்தான், ஒரு பெண்ணைக் கவர நினைக்கும் ஆண், சிக்ஸ்-பேக், எய்ட்-பேக் எனத் தன் உடலை வலுப்படுத்தி, அதைக் காட்சிப்படுத்துகிறான்

ஒரு ஆண், ஆரோக்கியமான உடல் வாகுள்ள, கலவியலுக்கு ஏற்றத் தோற்றமுள்ள பெண்ணை நோக்கி ஈர்க்கப்படுவதும், இந்த ஆரோக்கியமான மனிதகுல அபிவிருத்திக்காகத் தகவமைக்கப்பட்டுள்ள இயற்கை விதியால்தான். தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாகப் பிறக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துத்தான் அவன் மூளை அவனுக்கானத் துணையைத் தேர்வு செய்கிறது

நம் பாஷையில் சொன்னால், ‘இதெல்லாம் ரூம் போட்டு யோசிச்சு செய்வீங்களாடா?’ என்றால், பதில் ‘இல்லைஎன்பதுதான். அவர்கள் கர்ம சிரத்தையடன் இவற்றையெல்லம் யோசித்து, திட்டமிடாவிட்டலும்கூட அவர்களது ஆழ்மனதில் அப்படித்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

பெண்களுக்கு ஏற்படும் இந்த பொய்யான உச்சக்கட்டம்என்ற பிரச்னையை சரியாக அணுக, முதலில் ஒரு பெண்ணின் உடலியலையும் உளவியலையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவளது கலவியல் உணர்வுகள் தூண்டப்படுவதற்கும் இந்த உடலியல், உளவியல் காரணிகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டியது மிக, மிக அவசியம்

இல்லையென்றால், பாதை தெரியாமல் மலைப் பாதையில் , கும்மிருட்டில் பயணம் செய்வதைப் போன்ற நிலைதான். வாகனம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது, எங்கே பெரும் பள்ளம் வரும், மரக் கிளைகள் எங்கே உடைந்து விழுந்திருக்கும், கொடிய மிருகங்கள் எங்கே குறுக்கே வரும், நிலச்சரிவும் உடைந்த பாலங்களும் எங்கே தென்படும் என்ற விவரங்கள் ஏதும் தெரியாமல் நீங்கள் வாகனத்தை ஓட்டிச் சென்றீர்களென்றால், அது எங்கே, எப்போது மோதும் என்றே தெரியாதுஆனால், நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் தாறுமாறாக ஓடி அதலபாதளத்தில் விழுந்து சுக்குநூறாகிவிடும்

அதனால், ஒரு முன்தயாரிப்பு முயற்சியாக இவற்றைப் பற்றியெல்லாம் இந்த அத்தியாயத்தில் கொஞ்சம் பேசிவிடுவோம்.

சில ஆண்களுக்கு, ஏன் சில நாட்களில் மட்டும் தன் மனைவி உறவில் ஆர்வம் காட்டுகிறாள், சில நாட்களில் முற்றிலும் வெறுப்பைக் காட்டுகிறாள் என்பது புரியாமலிருக்கும். மனநல ரீதியாக இதற்கான காரணங்கள் பெண்ணுக்குப் பெண் மாறுபடும். ஆனால், உடல் ரீதியான காரணிகள் பெண்கள் அனைவருக்கும் பொதுவானவைதான். சில விதிவிலக்குகள் இருக்கலாம்அல்லது தனிப்பட்ட மனநலம் சார்ந்த காரணிகளும் அவளுக்கிருக்கும் வெளிப்புறப் பிரச்சினைகளும் இந்த உடலியல் சுழற்சியில் சில, பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம்

கலவியல் ஆசை என்பதேஇயற்கை, ஆரோக்கியமான மனிதகுல விருத்திக்காக வடிவமைத்திருக்கும் ஒரு தயாரிப்பு ஏற்பாடுதான் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா…? அதற்கேற்பத்தான் பெண்களின் உடல் சுழற்சியும் அவர்களது கலவியல் தேவை அல்லது ஆசைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன

பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் நாட்களில், (Ovulation period) ‘உன் உடல் இப்போது ஒரு அழகான, ஆரோக்கியமான குழந்தையை உருவாக்குவதற்குத் தயார் நிலையில் இருக்கிறதுஎன்ற செய்தியை அவளது உடலும், மனமும் தெரிவிக்கத் தொடங்கி விடும். எந்த முயற்சிகளும் இல்லாமலேயே அவளது பெண்ணுறுப்பில் நெகிழ்வுத்தன்மையும், வழுவழுப்பும் ஏற்படும் (Vaginal lubrication).

பெண்ணுறுப்பின் சுவர்களில் (Vaginal walls) தோன்றும் இந்த திரவம், அவள் கலவிக்குத் தயார் என்பதை வெளிப்படுத்தும் முதல் அறிகுறி. கூடலை வலியின்றி, எளிதாகவும் மகிழ்ச்சி மிக்கதாகவும் ஆக்குவது இந்த திரவம்தான்

மாதவிடாய் முடிந்து ஏழெட்டு நாட்கள் வரை, குறிப்பாக நான்கு முதல் பனிரெண்டாம் நாட்கள் வரை உள்ள காலகட்டத்தை கருவணு வளரும் காலம் (Follicular period) என்று சொல்வோம். இந்த நாட்களில் பெண்கள் அதிக சுறுசுறுப்பாகவும் தங்களை அலங்கரித்துக் கொள்வதிலும் தனக்குப் பிடித்த விஷயங்களை செய்வதிலும் அதிக ஆர்வத்துடனிருப்பார்கள்

கருமுட்டை உருவாகி, விந்தணுக்களுடன் சேர்ந்து, ஒரு புதிய உயிரை உருவாக்கத் தயாராயிருக்கும் அண்டவிடுப்பு கட்டம் (Ovulation phase)என்பது மாதவிடாய் முடிந்த பனிரெண்டாம் நாளிலிருந்து, பதினாறாம் நாள் வரை. இந்த காலகட்டத்தில், அவளது ஈஸ்ட்ரோஜன் சுரப்பின் அளவு அதிகரித்து இடையீட்டுச் செல்களைத் தூண்டும் இயக்குநீர் (Luteinizing Hormone) அளவில் மாற்றத்தை உருவாக்கி ஒரு புதிய உயிரை உருவாக்குவதற்கான ஆசையையும் வேகத்தையும் இயற்கை அவளுக்கு ஏற்படுத்தும்

கருப்பையின் நுழைவாயில் பகுதிதான் செர்விக்ஸ். (Cervix) இதுதான் கருப்பைக் குழியையும் (Uterine cavity) பெண்ணுறுப்பையும் (Vagina) இணைக்கிறது. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழியில் சொல்வதென்றால், ஒரு காவலாளியைப் போல சரியான நேரத்தில் விந்தணுக்கள் நுழைவதற்குக் கதவைத் திறந்துவிட்டு அனுமதிப்பதுதான் இதன் வேலைஇந்த கலவிக்கேற்ற காலகட்டத்தில்பெண்ணுடலில் சுரக்கும் ஹார்மோன்கள், செர்விக்ஸ் பகுதியில் சுரக்கும் செர்விகல் ம்யூகஸ் எனும் திரவத்தின் தன்மையை, அளவை மற்றும் நிறத்தை மாற்றி அமைக்கின்றன

மாதவிடாய் சுழற்சி முழுவதும், இந்த திரவத்தின் தன்மை மாறிக்கொண்டேயிருக்கும். இதை வைத்தே ஒரு பெண் இப்போது மாதவிடாயின் எந்த சுழற்சி நிலையிலிருக்கிறாள், கலவிக்குத் தயார் நிலையில் அவள் உடல் இருக்கிறதா என்று ஆண்கள் புரிந்து கொள்ளலாம்

கருமுட்டை உருவாகாத காலகட்டத்தில் இந்த திரவம் கெட்டியாகவும் வறட்சித் தன்மையுடனுமிருக்கும். அப்போது உடலுறவுக்கு அவளது உடல் கொஞ்சமும் தயார் நிலையில் இல்லாத போது, அவளது உணர்வுகளைத் தூண்டும் எவ்வித முன் விளையாட்டுகளிலோ (Foreplay) அல்லது நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தும் வழவழப்பான திரவங்களையோ பயன்படுத்தாமல், நேரம் எடுத்துக் கொள்ளாமல், தன்னுடைய உணர்ச்சி வற்றி விடுவதற்குள், தன் வேலையை முடித்து விடவேண்டும் என்ற சுயநலத்துடன் அவளை ஆக்ரமித்து செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது ஏற்படும் மரண வலியில் எப்படி அவளுக்கு அந்த ஆணின் மீது காதலும் கூடலில் ஆர்வமும் ஏற்படும்..? 

இப்படிப்பட்ட வன்புணர்வுகளைத்தான் பெரும்பாலான பெண்கள் இன்னமும் நம் சமுதாயத்தில் கடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ‘ஒரு கணவன் தன் மனைவியை வன்புணர்வு செய்வது குற்றமாகாது, அது அவனது உரிமை’, என்று ஆணித்தரமாய் சொல்லும் இந்த கேடுகெட்ட சமுதாயத்தில் எந்த விதமான நியாயத்தைப் பெண்கள் எதிர்பார்த்துவிட முடியும்

வேறு பெண்களிடம் தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டு ஆறுதல் தேடிக் கொள்ளலாம் என்றால், “அப்படித்தானிருக்கும் வலிக்கத்தான் செய்யும்பொம்பளைன்னா இதையெல்லாம் பொறுத்துத்தான் போகணும்உனக்காவது பரவாயில்லை, வலிக்கத்தான் செஞ்சுச்சு. எனக்கெல்லாம் ரத்தமே வந்திரும் தெரியுமா?”, என்று ஏதோ போர்க்களத்தில், சுதந்திரம் வாங்க ரத்தம் சிந்தியதைப் போன்ற தொனியில் சொல்லும் பெருமை வேறு சில பெண்களுக்கு… 

‘தான் பெற்ற துன்பம், பெருக இவ்வையகம்’ என்பது போல் ‘பரவாயில்லையே இத்தனை நாட்கள் எனக்கு மட்டும்தான் இந்த கஷ்டம்னு நினைத்தேன். உனக்கும் இதே கதிதானா? சோழமுத்தாபோச்சா…?’ என மனசுக்குள் குதூகலித்து வக்கரிக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

‘நம்ம புருஷனுக்காக, இந்த வலியைக் கூடத் தாங்கலேனா எப்படி? இந்த தியாகத்தைக் கூட செய்யலேன்னா எப்படி…?’ என ஆண்களுக்கு வக்காலத்துக்கு வேறு வந்துவிடுவார்கள். ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொள்வதைக்கூட விடுங்கள், அதெல்லாம் மிகப் பெரிய விஷயம்அவளது உடலை எப்படிக் கையாள்வது என்றுகூடத் தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத, தெரிந்தும் தெரியாமல் நடிக்கும், தெரிந்திருந்தும் அந்த அற்ப (?) விஷயங்களுக்கெல்லாம் நேரம் செலவிட விரும்பாத, தன் மனைவியின் உடலைக் கொண்டாடி அவளுக்கு சேவகம் செய்துவிட்டால் தன் ஆண்என்ற கௌரவம் என்னாவது என்று அகம்பாவத்தில் அலையும் இந்த துப்புக் கெட்ட ஜென்மங்களுக்கு, பெண்கள் ஆக்கி வடித்துக் கொட்டுவதுடனுன், படுக்கையறையிலும் ரத்தம் சிந்தி, வலி அனுபவித்து ‘தியாகிப் பட்டம்’ பெறுவது ஒன்றுதான் கேடு… 

தங்களது கணவன்மார்கள் வேறு ஒரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்வதைக்கூட பல பெண்கள் கண்டும் காணாமல் இருப்பதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? அவளுக்குத் தெரியும் ‘இங்கே கிழிக்கும் லட்சணத்தில்தான், அவன் அங்கேயும் கிழிப்பான்’ என்று

இன்னும் சொல்லப் போனால், வடிவேலு காமெடியில் வருவதைப் போல்… ‘அப்பாடா இன்னொரு அடிமை சிக்கிருச்சு! நாம கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் …’ என்று நினைக்கும் அளவுக்குக்கூடப் போய்விடுகிறார்கள். ‘என்னை நீ நிம்மதியா விட்டாலே போதும் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்…’ என்ற மனநிலையில்தான் காமத்தைக் குறித்து பல பெண்கள் இருக்கிறார்கள்.

ஆனால், “ஏண்டி அலையுற…? உனக்கென்ன ‘அது’ இன்னும் நிறைய கேட்குதா? இவளுக்கு ஒருத்தன் போதாது…” எனப் பெண்களின் வலைப் பக்கங்களில் ஆபாசத்தை அள்ளித் தெளித்திருப்பார்கள் நம் ஆண்குலங்கள். மனைவியை மகிழ்ச்சிப்படுத்த வக்கில்லாத ஆண்கள்தான் இப்படிப்பட்ட வக்கிர வார்த்தைகளை யாரோ ஒரு முகம் தெரியாத பெண்ணிடம் கொட்டி தங்களது ‘ஆண்மை’யை நிரூபித்துக் கொள்கிறார்களென்று நான் நினைத்திருக்கிறேன்.

சரி, இந்த இடத்தில் பெண்களுக்கு பாலியல் நிபுணர்கள் பலரும் பரிந்துரைத்துள்ள ஒரு தீர்வை சொல்கிறேன்முயன்று பாருங்கள். மாதவிடாய் சுழற்சியின் வறட்சி நாட்களிலோ அல்லது சாதாரணமாக அனைத்துக் காலகட்டங்களிலுமோ உங்கள் கணவன், உங்களுக்குள் காதலைத் தூண்டிகலவிக்குத் தயார் செய்வதெல்லாம்இனி ஆகாத காரியம் என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா…? இந்த இரண்டு முறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்

ஒன்று ‘தன் கையே, தனக்குதவி’. இன்று கட்டாயம் உங்கள் கணவன் உங்களை உறவுக்கழைப்பார் என்று தோன்றியவுடனேஉங்கள் பெண்ணுறுப்பின் மேல் பகுதியையும் ‘கிளிட்டரஸ்’ (clitoris) எனப்படும் பெண்ணுறுப்பின் (Vagina) மேலிருக்கும் சிறிய மொட்டுப் போன்ற பாகத்தையும் மெதுவாகத் தடவி, வருடத் தூண்டிவிடுங்கள் (Clitoral stimulation). இந்த வறண்டகாலகட்டத்தில் இப்படி செய்யும் போது ஓரளவுக்கு உங்கள் பெண்னுறுப்பு வழவழுப்பு தன்மையடைந்து, நெகிழ்ந்து உறவுக்குத் தயாராகும்

பெண்ணுடலில் வெளியே தெரியும் கிளிட்டரஸ்’ ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் பனிப்பாறையின் வெளியே தெரியும் சிறிய முனை போன்றதுதான். கிளிட்டரஸின் பெரும்பகுதி கண்ணுக்குத் தெரியாமலிருக்கிறது. கிட்டத்தட்ட 5 இன்ச் (12 சென்டிமீட்டர்) நீளமுடையாது. சொல்லப்போனால் கரு உருவாதலின் ஆரம்ப காலகட்டத்தில் ஆணுறுப்பும் (Penis) கிளிட்டரஸும் ஒரே மாதிரித்தானிருக்கும். கருத்தரிப்பு காலத்தின் ஒன்பதாவது வாரத்தில்தான் இரண்டும் வெவ்வேறான அமைப்பில் உருமாறுகின்றன.

ஆணுறுப்பைப் போலவே, உணர்வுகள் தூண்டப்படும்போது ரத்தம் கிளிட்டரிஸ் நோக்கிப் பாய்வதால், அதுவும் பெரிதாகிறது. இந்த ரத்தஓட்ட அதிகரிப்பினால்தான் கருவாயின் (vulva) நிறம் அடர்த்தியாகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்ணுறுப்பும் அகலத்திலும் நீளத்திலும் விரிந்து கொடுத்து கூடலை எளிதாக்குகிறது

இனப்பெருக்கத்திற்கும் கிளிட்டரஸுக்கும் நேரடியாகத் தொடர்பெதுவும் இல்லையென்றாலும் பெண்ணுக்கு கூடல் என்பது மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் இந்த கிளிட்டரஸை இயற்கை உருவாக்கியிருக்க வேண்டும்.

மனிதப்பெண்ணுக்கு மட்டுமல்ல, பல பாலூட்டிகளிலும் இத்தகைய மகிழ்ச்சியைத் தூண்டும் உடலியல் ஏற்பாட்டை இயற்கை வடிவமைத்திருக்கிறது. மனித கிளிட்டரஸுக்கும், டால்ஃபினின் கிளிட்டரஸுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

சமீபத்திய ஆராய்ச்சிகள் 18 சதவீதத்துக்கும் குறைவான பெண்களே காலம் காலமாக, சம்பிரதாயமாக இந்த சமுதாயமும் குறிப்பாக நம் ஆணாதிக்க ஊடகங்களும் வலியுறுத்தி, போற்றிப் புகழ்ந்து வெளிப்படுத்தி வரும் இயல்பான செக்ஸ்என்று அழைக்கப்படும் ஆணுறுப்பு உள்ளே நுழையும் (Penetrative vaginal sex) முறையில் உச்சமடைவதாகவும் மீதமிருக்கும் பெருவாரியான பெண்கள் கிளிட்டரஸ் தூண்டுதலால் மட்டுமே உச்சமடைவதாகவும் தெரிவிக்கின்றன

மேற்சொன்ன அந்த 18 சதவீதப் பெண்கள்கூட எல்லா சமயங்களிலும் ஆணுறுப்பு நுழைவதால் மட்டுமே உச்சமடைந்தவர்கள் அல்ல. அந்த அதிசயத்தை(!) வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவித்தவர்கள். நம் சினிமா எப்படியெல்லாம் பொய், பொய்யாகக் காட்டி நம்மை ஏமாற்றி வந்துள்ளது என யோசித்துப்பார்த்தால்‘அடச் சே‘ என்றுதானிருக்கிறதுஇல்லையா..?

நிபுணர்கள் வலியுறுத்தியுள்ள இரண்டாவது வழிபல பெண்களும் பின்பற்றி வெற்றியடைந்த ஒரு எளிய வழிதான். ‘ஆணை நம்புவதை விட, வெண்ணெயை நம்பலாம்…’ இயற்கையான பொருள்களை, பெண்னுறுப்பு வழுவழுப்புத் தன்மையடையப் பயன்படுத்துவது (Vaginal lubricants). உப்பு அல்லது வேறெதுவும் கலக்காத, சுத்தமான வெண்ணையை உடலுறவுக்கு முன் உங்கள் பெண்ணுறுப்பில் தடவிக் கொள்ளுங்கள். இது நம் உடலில் கருமுட்டை உருவாகும் காலகட்டத்தில் சுரக்கும் திரவத்தைப் போல இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு அத்தகைய தன்மையுடனிருப்பதால், தேங்காயெண்ணையை விட சிறப்பாக உணர்வீர்கள். பெண்ணுறுப்பு வறட்சியாக இருக்கும் காலகட்டத்தில் கூட, கூடலை ஓரளவு மகிழ்ச்சியானதாகவும் குறைந்த பட்சம் வலியில்லாததாகவும் உங்களால் அமைத்துக் கொள்ளமுடியும்

இவை தவிர செயற்கையான லூப்ரிகன்ட்கள் கடைகளில் கிடைக்கின்றன. தண்ணீர் சார்ந்த (Water based , சிலிக்கான் சார்ந்த (Silicone based) என இரண்டு மூலப்பொருள்கள் வித்தியாசத்துடன் மற்றும் கிளிசரின் சேர்க்கப்பட்டு எனப் பலவாறாகக் கிடைத்தாலும் பெரும்பாலும் வேதிப்பொருட்கள் கலப்பில்லாமல் இவை தயாரிக்கப்படுவதில்லை என்பதால், இவற்றைத் தவிர்த்து இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்துவது நல்லதுவெண்ணெய், தேங்காய் எண்ணெய் மட்டுமல்லாமல், சுத்தமான அவக்காடோ எண்ணெய், ஆலிவ் எண்ணெய், காய்கறி எண்ணெய்களும் பரிந்துரை செய்யப்படுகின்றன. முன் விளையாட்டுகளின்போது, உங்கள் கணவர் இந்த வேலையைச் செய்தால் சிறப்பு.

கற்றுக்கொண்டால் குற்றமில்லை…

படைப்பு:

செலின் ராய்

காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும்இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர்விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கிதமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.