ஒவ்வொரு காலிலும் வெவ்வேறு ப்ராண்ட் ஷூ க்களை அணிந்து பார்த்தேன். கடையை இரண்டு, மூன்று முறை சுற்றிவந்தேன். எல்லாச் சோதனைகளுக்குப் பிறகும் மனம் என்னவோ அந்த விலையுயர்ந்த ப்ராண்ட் ஷூக்கள் மீதே நாட்டம்கொண்டிருந்தது.

“இந்த ஷூவே கொடுத்திடுங்க” என்று கடைக்காரரிடம் என் டெபிட் கார்டை நீட்டினேன்.

ஆறாயிரம் ரூபாயை தீட்டிவிட்டார்கள்.

ஷூ வாங்கியாகிவிட்டது. அடுத்து ட்ராக் பாண்ட். அதுவும் ப்ராண்டடாக இருக்க வேண்டும் அல்லவா! அதையும் வாங்கி விட்டேன்.

ரெண்டாயிரம்!

இதயத்துடிப்பு, நடக்கும் அடிகளைக் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் வாட்ச் நாலாயிரம்!

அந்த நாள் இனிய நாளாக முடிந்தது.

காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, புதிதாக வாங்கிய ட்ராக் பாண்ட், ஸ்மார்ட் வாட்ச், ஷூவை மாட்டிக் கொண்டு காலை நடைப்பயிற்சிக்குத் தயாரானேன்.

‘நல்ல வேளை இந்த ப்ராண்ட் ஷூ வாங்கினோம். நடக்க மிகவும் வசதியாக உள்ளன. அதிக விலையாக இருந்தாலும் பரவாயில்லைன்னு இனி இந்த ப்ராண்ட்தான் வாங்கணும்’ என என் முடிவுக்கு நானே வெகுமதி அளித்துக் கொண்டேன்.

நான் நடக்கும்போது, இரண்டு பெண்கள் சத்தமாக அரட்டை அடித்துக்கொண்டு எனக்கு முன்னால் முழு வேகத்தில் நடப்பதைக் கவனித்தேன்.

“அந்தப் பொண்ணு தினமும் செய்றது என்னவோ ரொட்டியும் அந்த ரெண்டு நிமிச நூடுல்ஸும்தான். ஆனா, ஹோட்டல்ல விழற மாறி பாத்திரம் தினமும் விழுது. பிசுபிசுன்னு எல்லாப் பாத்திரமும். முடியல. இன்னைக்குச் சொல்லிடப் போறேன். கொடுக்குற ஆயிரம் ரூபாய்க்கு வயசுகூடப் பாக்காம எவ்ளோ வேலை வாங்குதுங்க” என்று சத்தமாக ஒரு குரல் கேட்டது.

“அஞ்சலை, நான் சொல்றத கேளு. முதல்ல மூஞ்சிய காட்டு. அதுவும் முடியலைன்னா மூணு நாளைக்கு லீவு போடு. அப்புறம் வழிக்கு வரும்” என்றது இன்னொரு குரல்.

“நீ வேற என் வேலைக்கே உலை வெச்சிடுவ போல. காலம் மாறிப் போச்சு மரகதம். நானில்லனா வேற ஆளு ரெடியா இருக்கு. இந்த வயசுலகூட வேலை செஞ்சி பிழைக்க வேண்டி இருக்கு. இதுவும் போச்சுன்னா அம்புட்டுதான். சோத்துக்கு இன்னா செய்வேன்?”

அவர்களின் உரையாடலைக் கேட்டபோது, அவர்கள் வீட்டுப் பணிப்பெண்கள் என்று அறிந்துகொண்டேன். அவர்கள் இருவருக்கும் அறுபது அறுபத்தியைந்து வயது இருக்கும். புடவை உடுத்தி இருந்தார்கள். வெறும் கால்களுடன் நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் பாதங்களைக் கவனித்தேன். பித்த வெடிப்புகள் இருந்தன. ஆனால், அவர்களின் வேகத்திற்கு மட்டும் குறைவே இல்லை. தொடர்ந்து நடந்தனர்.

அவர்களை முந்திச் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். என்னால் அவர்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. நான் எவ்வளவு முயன்றும் அவர்களின் பின்னாலேயே நடந்து கொண்டிருந்தேன்.

என்னுடைய விலையுயர்ந்த ட்ராக் பேண்ட்டும் ப்ராண்டட் ஷூவும், அசௌகரியம் என்று நான் எப்போதும் கண்மூடித்தனமாக நம்பிய புடவை, வெற்றுக் கால்களிடம் தோற்றுப் போயின.

வெறுத்துப் போய் அவர்கள் பின்னாலேயே நடந்து கொண்டிருந்தேன், அவர்களின் அரட்டையை கேட்டபடியே!

பெரும்பாலான நேரத்தில் நம்மை நாம் நம்புவதைவிட, நம் வாழ்க்கையின் எல்லா அற்புதங்களையும் நிகழ்த்த நாம் உடைகளிடம் சரணடைந்துவிடுகிறோம். வெளிப்படையாகச் சொன்னால் ப்ராண்டுகளிடம்!

நாம்தான் ப்ராண்டுகளின் பின்னால் மடத்தனமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால், சில பல யூடுயூப் வீடியோக்களைப் பார்த்துவிட்டு, என் ஏழு வயது மகன் ‘ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குவதுதான் என் வாழ்வின் லட்சியம்’ என்று சொல்லிக்கொண்டிருந்தான். என் மகள், ‘அம்மா என் பிறந்தநாளுக்கு ஆப்பிள் ஐ பேடு வாங்கித் தாங்கம்மா’ என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தாள்.

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்று நினைத்துக்கொண்டேன்.

ப்ராண்டுகளின் மோகம் குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை.

கடிவாளம் கட்டிய குதிரைகள்போல நாம் ஒவ்வொருவரும் ப்ராண்டுகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம்.

ப்ராண்டுகளால் மதிக்கப்படும் ஒரு போலியான சமூகத்தில்தான் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனம்.

இந்த ப்ராண்டுகளை எல்லாம் நமக்கு அறிமுகப்படுத்திய, நம் மூளைக்குள் ஏற்றிவிட்ட பல கோடீஸ்வரர்கள் எப்படி வாழ்கிறார்கள் தெரியுமா?

விமானத்தில் எகானமி வகுப்பில் எளிமையாகப் பயணிக்கின்றனர். தெருக்களில் உள்ள காபி கடைகளில் காபி அருந்துகின்றனர். சாதாரணமான அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர். அவர்களின் தொழிற்சாலையில் ஒரு சக தொழிலாளியாக வேலை செய்கின்றனர். பழைய மலிவு விலை கார்களில் தினமும் அலுவலகத்திற்கு செல்கிறார்கள்.

ரத்தன் டாட்டா, சுதா மூர்த்தி , அனு அகா, ராஜஸ்ரீ பிர்லா, ஆசிம் பிரேம்ஜி, வாரன் பஃபெட், மார்க் ஸுக்கர்பேர்க் இவர்களில் சிலர்.

அவர்கள் எல்லாரும் அவர்களின் தன்னம்பிக்கையையும் உழைப்பையுமே சிறந்த ப்ராண்டுகளாகக் கருதி வாழ்க்கையை முன்னெடுக்கிறார்கள்.

ஒருவரின் தன்னம்பிக்கையே அவர் அணியும் மிகச் சிறந்த உடை என்பதையும், எளிமையே உறுதியான நுட்பம் என்பதையும் நாம் அனைவரும் உணர்ந்தால் யாவரும் நலமாக இருப்போம்.

இன்று காலை தன்னம்பிக்கையுடன் என் நடைப்பயிற்சியைத் தொடங்க முடிவு செய்து வெளியே வந்தேன். அந்த அம்மாக்களை எப்படியாவது இன்று முந்த வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

என்ன கொடுமை சரவணா!

‘ஏய் மரகதம், வாக்கிங்கவிட ஸ்லோ ஜாக்கிங் சூப்பரா இருக்குடி’ என்று சொல்லிக்கொண்டே ஓட ஆரம்பித்தனர்.

எனக்கு ஏனோ அவர்களைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். இது இவருடைய இரண்டாவது தொடர்.