பொதுவாகவே ஒரு நபர் தனக்குப் பிடித்த எந்தவொரு காரியத்தையும் செய்யத் தொடங்கிய செய்தியானது, அவரைச் சுற்றியுள்ள வட்டாரங்களுக்குத் தெரிய வந்ததும், அது குறித்து அந்த நபருக்குச் சாதகமாகச் சிலர் பேசுகிறார்களோ இல்லையோ, பாதகமாகப் பேச பலரும் பலவிதமான அறிவுரைகளைத் தூக்கிக் கொண்டு வருவது இன்று வழக்கமாகிவிட்டது.

அதிலும் குறிப்பாக, அந்த நபர் ஒரு பெண் என்று தெரிந்துவிட்டால் போதும், சொல்லவே தேவையில்லை. ஆரம்பிக்கும் முன்பே ஆயிரத்தெட்டு எதிர்மறை கருத்துகள், எதிர்ப்புகள். அவளைப் பல விதமான கேள்விகளைக் கேட்பதுடன், தேவையற்ற சஞ்சலத்திற்கு ஆளாக்கி, எதுக்கு இந்த முடிவை எடுத்தோம் என்கிற நிலைமைக்கு அவளைச் சிந்திக்க வைத்துவிடும் இந்தப் பொல்லாத உலகம்.

சரி, வேலைக்குச் சென்றால் தானே பிரச்னை என்று வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துவிட்டால் மட்டும் இந்தப் பிரச்னை தீர்ந்து விடுமா என்று கேட்டால், தீரவே தீராத தமிழ்நாடு – கர்நாடகாவின் காவிரி பிரச்னை போல அதற்கு ஒரு முடிவே கிடையாது.

இந்தச் சமுதாயத்தைப் பொறுத்தவரை, ஒரு பெண் வேலைக்குச் சென்றாலும் சரி, வேலைக்குச் செல்லாவிட்டாலும் சரி, எப்படியாவது, எங்காவது அவளுடைய இயலாமையைச் சுட்டிக்காட்டி, தேவையற்ற குற்ற உணர்வை அவளுடைய ஆழ்மனதில் விதைத்து, அவளை மன அழுத்தத்திற்குத் தள்ளிவிடுகிறது இந்தச் சமூகம். இதுதான் இன்றைய நடைமுறை.

ஒரு பெண் வேலைக்குச் செல்வதும், செல்லாதிருப்பதும், அவளுடைய குடும்பச் சூழ்நிலை, சுயவிருப்பத்தைப் பொறுத்தது. வேலைக்குச் செல்வதற்கு ஆயிரம் காரணம் இருப்பது போல, வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்கும் பல்லாயிரம் காரணம் இருக்கலாம்.

இன்று பலரும் வேலை நிமித்தம் தன்னுடைய சொந்த ஊரை அல்லது நாட்டை விட்டு வேறொரு நகரத்திலோ அல்லது நாட்டிலோ வாழ வேண்டிய சூழல் உருவாகிறது. தன் குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்து தனிக் குடும்பமாக வாழும் தருவாயில், அவர்களுடைய குழந்தைகளைக் கவனிக்க ஆளில்லாமல், தனியாக அவர்களே கவனிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கலாம். இன்னும் ஒரு சிலருக்கு வேலைக்குச் சென்று சம்பாத்தியம் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் இருக்கலாம். பலருக்குப் பொருளாதார நெருக்கடி இல்லாமல், இருப்பதாலும்கூட வேலைக்குச் செல்லாமல் இருப்பார்கள். மேலும் ஒரு சிலர் தன்னுடைய தேவையைக் குறைத்து கொண்டு, வீட்டில் ஒருவரது வருமானத்தில் வாழ்ந்தால் மட்டும் போதுமானது என்றுகூட முடிவெடுத்திருக்கலாம். இல்லையென்றால், குழந்தையை வளர்ப்பதற்காகவும் வீட்டில் உள்ள பெரியவர்களை அல்லது உடல் நலம் குன்றியவர்களைக் கவனிக்க வேண்டும் என்கிற அக்கறையில் வேலைக்குச் செல்லாமல் இருக்கலாம்.

இப்படிப் பலதரப்பட்ட காரணங்களால் பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்கலாம். இந்தப் புரிதல் பலரிடமும் இல்லாது இருக்கும் பட்சத்தில்தான், இங்கு பிரச்னையே உருவாகிறது.

நம் சமூகம் எப்போதும் குடும்பப் பொறுப்பைப் பெண்களுக்காகவே விதிக்கப்பட்டது போலதானே நடைமுறைப்படுத்தியிருக்கிறது. விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் வேலைக்குச் சென்று சம்பாதிப்பது ஆண் மகனின் கடமை, வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் குடும்ப உறுப்பினர்களையும் பார்க்க வேண்டியது ஒரு பெண்ணின் கடமை. இதுதானே ஆதிகாலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இப்படியெல்லாம் பல விதிகளை வகுத்துவிட்டு, திடீரென பெண்கள் மீது மட்டும் பழி சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு பெண் வேலைக்குச் செல்லாவிட்டால், அவளை இந்தச் சமூகம் பார்க்கும் விதமும், அவர்களை நடத்தும் விதமும், பொது நிகழ்ச்சிகளில் அவர்களிடம் ஏளனமாக கேட்கப்படும் கேள்விகளும் அப்பப்பா… சொல்லி முடியாது.

“படிச்சிட்டு வீட்டுல சும்மாவ இருக்க?” என்ற இந்தவொரு கேள்வியே போதும், தன்னம்பிக்கை மிகுந்த பெண்களின் மனதைக்கூட ரணமாக்கிவிடும்.

இடத்திற்கேற்றார் போல மாறும் பச்சோந்தி போல, வேலைக்கு ஏன் செல்லவில்லை என்று கேட்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல், “உனக்கென்ன கொடுத்து வச்ச மகாராசி வீட்டுல சும்மா இருக்க…” என்றும் தொடர்ந்து பேசுவார்கள்.

இப்படியெல்லாம் கேள்வி கேட்க, அவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறது?

வீட்டிலிருக்கும் பெண்களுக்கென மட்டும் பிரத்யேகமாக பத்துப் பதினைந்து வேலை ஆட்கள் அமர்த்தி, அப்பெண்களை எந்தவித வீட்டு வேலைகளையும் பார்க்க விடாமல், அவர்களுக்குச் சேவகம் செய்ய ஆளிருக்கிறார்களா என்ன?

வேலைக்குச் செல்லாத பெண்களெல்லாம் என்னமோ தினமும் படுத்துக்கொண்டும், உல்லாசமாக ஊஞ்சலாடிக் கொண்டும் இருப்பது போல் அல்லவா அனைவரும் நினைக்கிறார்கள்.

வீட்டிலிருப்பது என்றால் அவ்வளவு சுலபமான காரியமா? காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்க படுக்கைக்குச் செல்லும் வரை அவர்களுக்கு அடுத்தடுத்த கடமைகளை நிறைவேற்ற வேண்டிய வேலை இருந்து கொண்டுதான் இருக்கும்.

இப்படிப் பேசுபவர்களைக் குறித்துக் கேட்கும்போது, ஒரு பக்கம் ஆத்திரம் வந்தாலும், மறுபக்கம் இந்த மாதிரியான கேள்விகளை முதலில் கேட்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமளிக்கிறது.

இதைவிட மிகப் பெரிய கொடுமை ஒன்று இருக்கிறது. ஒரு பெண், பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது பள்ளியில் குழந்தைகளுக்கென நடைபெறும் நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்ளும்போது, அங்கு வேலையை மையமாக வைத்து நடக்கும் பாரபட்சம் அதைவிட மோசமானது.

சகப் பெண்களே வேலைக்குச் செல்பவர்களை ஒரு விதமாகவும் வேலைக்குச் செல்லாதவர்களை ஒரு விதமாகவும் பாகுபாடு பார்த்து நடந்துகொள்கிறார்கள். இதைப் படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரும் செய்கிறார்கள்.

பெண்களின் முன்னேற்றத்தின் மீது அதீத அக்கறை கொண்ட சமூகம், பெண்கள் வேலைக்குச் சென்றால் மட்டும் சும்மாவா விடப் போகிறார்கள்? கணவன், குழந்தையைவிட அவளுக்குக் காசுதான் முக்கியம் என்று அடுத்த அம்பைப் பாய்ச்ச தயாராகவல்லவா இருக்கிறார்கள்.

அலுவல் பணிச் சுமையின் காரணமாக, மாதத்தில் என்றாவது ஒரு நாள் ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடும் விஷயம் மட்டும் வெளியே தெரிந்துவிட்டால் போதும், ஒரு நாள்கூட வீட்டில் அந்தப் பெண் சமைக்கிற பழக்கமே கிடையாது என்று அடுத்த கதை கட்டத் தொடங்கிவிடுவாார்கள்.

இந்த உலகம் யாரைத்தான் மட்டம் தட்டிப் பேசவில்லை. வீட்டிலிருக்கும் பெண்களிலிருந்து, நாட்டை ஆளும் பெண்கள் என அனைத்துத் துறைகளிலும் தனக்கென்று தனித்த அடையாளத்தை உருவாக்கி, மறைந்த அனைத்துப் பெண்களும் ஒரு காலக்கட்டத்தில், இது போன்ற பல வீணற்றவர்களின் பேச்சையெல்லாம் கேட்டு, காதில் வாங்கிக்கொள்ளாமல் அவர்களுடைய லட்சியத்தை நோக்கி வளர்ந்து வந்தவர்கள்தாம்.

அதனால், தோழர்களே, நீங்கள் வேலைக்குச் சென்றாலும் சரி, செல்லா விட்டாலும் சரி, யார் பேசுவதையும் பொருட்படுத்த வேண்டியதில்லை.

எப்படியிருந்தாலும் ஏதாவது குறைகளை கண்டறிந்து குத்தம் சொல்லும் உலகமிது. உங்களுடைய கனவுகளை நோக்கி தொடந்து சந்தோஷமாகப் பயணியுங்கள்.

Everything happens for a reason என்று பொதுவாகக் கூறுவது உண்டு.

நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சூழ்நிலையும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுக் கொள்வதற்காகத்தான் நிகழ்கிறது. அந்தச் சூழ்நிலை மேலும் உங்களை மெருக்கேற்றுவதற்காகக்கூட இருக்கலாம். அதை மட்டும் சிந்தையில் வைத்து கொண்டு முன்னேறிச் செல்லுங்கள்.

படைப்பாளர்:

 இராஜதிலகம் பாலாஜி. ஹங்கேரியில் வசித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர். வளர்ந்து வரும் ஓர் இளம் எழுத்தாளர். பிரதிலிபி தமிழ், பிரித்தானிய தமிழிதழ், சஹானா இணைய இதழ் பலவற்றில் கதை, கட்டுரை, கவிதை, குறுநாவல், நாவல் பல எழுதி வருகிறார். சிந்தனைச் சிறகுகள் என்கிற சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தின் ஆசிரியர்.