1983ஆம் ஆண்டில் டேவிட் வேட் சேம்பர்ஸ் என்பவர் Draw-A-Scientist Test (DAST) என்கிற ஒரு பரிசோதனையை வடிவமைத்தார். அறிவியலாளர்களைப் பற்றிய குழந்தைகளின் பார்வையை அறிந்துகொள்வதற்காக இது உருவாக்கப்பட்டது. இந்தச் சோதனையின்போது குழந்தைகளிடம் ஓர் அறிவியலாளரை வரையச் சொல்வார்கள். பிறகு அவர்கள் வரைந்த ஓவியத்தை ஆராய்வார்கள். ஆய்வுக்கூட உடை, கண்ணாடி, முகத்தில் முடி இருக்கிறதா/இல்லையா, ஓவியத்தில் காணப்படும் ஆய்வுக்குறியீடுகள், அறிவுக்குறியீடுகள், ஓவியத்தில் இருக்கும் தொழில்நுட்பக் கருவிகள், ஓவியத்தின் தலைப்பு/குறிப்பு ஆகிய ஏழு அம்சங்கள் ஆராயப்படும். குழந்தைகளின் மனதில் அறிவியலாளர்கள் பற்றிய ஒரு பொது பிம்பம் எப்படி இருக்கிறது என்பதை அறியும் சோதனை இது.

1983ஆம் ஆண்டில் முதற்கட்டமாக டேவிட் வேட் இந்தச் சோதனையை 4807 தொடக்கப் பள்ளி குழந்தைகளிடம் நடத்தினார். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நான்கு நாடுகளில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. வரையப்பட்ட அறிவியலாளர்களின் உடல், முக அமைப்பு, தலைமுடி, முகத்தில் வரையப்பட்ட முடி ஆகியவற்றைக் கொண்டு அவர்களின் பாலினத்தை டேவிட் வேட் உறுதி செய்தார்.

ஓவியங்களில் இருந்த அறிவியலாளர்களின் பாலினம் பற்றிய முடிவுகள் வியப்பூட்டக்கூடியவையாக இருந்தன. 4807 குழந்தைகளில் மொத்தம் 28 குழந்தைகள் மட்டுமே பெண் விஞ்ஞானிகளை வரைந்திருந்தார்கள்! அதாவது 0.6% குழந்தைகள் மட்டுமே விஞ்ஞானி என்கிற இடத்தில் ஒரு பெண்ணைக் கற்பனை செய்திருந்தார்கள். இவ்வாறு வரைந்த எல்லாருமே பெண் குழந்தைகள் என்பதும் முக்கியமானது.

2016இல் இந்தச் சோதனை மீண்டும் நடத்தப்பட்டபோது நிலைமை கொஞ்சம் முன்னேறியிருந்தது. 28% குழந்தைகள் பெண் விஞ்ஞானிகளை வரைந்திருந்தார்கள். அதிலும் பெரும்பான்மையாகப் பெண் குழந்தைகளே இருந்தார்கள் என்றாலும் இது முக்கியமான ஒரு முன்னேற்றம் என்று ஆய்வை நடத்தியவர்கள் தெரிவிக்கிறார்கள். இன்னும் இந்தச் சதவீதம் 50-50 என்ற சமநிலையை எட்டவில்லை என்றாலும் குழந்தைகளின் எண்ண ஓட்டங்கள் மாறியிருக்கின்றன என்பது ஆறுதலான விஷயம்.

“உங்களுக்குத் தெரிந்த பத்து விஞ்ஞானிகளைச் சொல்லுங்கள்” என்று நாம் பொதுவெளியில் கேட்டால், அந்தப் பத்துப் பேரில் எத்தனை பெண் விஞ்ஞானிகள் இருப்பார்கள்? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றி, “உங்களுக்குத் தெரிந்த பத்துப் பெண் விஞ்ஞானிகளைச் சொல்லுங்கள்” என்று சொன்னால் எத்தனை பேரால் பத்துத் தனி பெயர்களைச் சொல்லமுடியும்? மேரி க்யூரியைத் தவிர, அவரது மகள் ஐரீன் க்யூரிக்கு அப்பால் ஏன் நமக்குப் பெண் விஞ்ஞானிகளைப் பற்றி அதிகம் தெரிவதில்லை?

அறிவியல் மற்றும் அதுசார்ந்த துறைகளில் பெண்களின் பங்களிப்புக்கான அங்கீகாரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ஓர் உதாரணத்துக்காக நோபல் பரிசை எடுத்துக்கொள்வோம். மருத்துவம், வேதியியல், இயற்பியல் ஆகிய அறிவியல் துறைகளில் இதுவரை மொத்தம் 644 பேர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். இந்த அறுநூற்று நாற்பத்தி நான்கு பேரில் மொத்தம் 64 பேர் மட்டுமே பெண்கள். விழுக்காடு என்று பார்த்தால் பத்துக்கும் குறைவு. அப்படியானால் இதுவரை மொத்தம் 64 பெண் விஞ்ஞானிகளுக்கு மட்டும்தான் நோபல் பரிசு பெறும் தகுதி இருந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாமா? தகுதி மட்டுமே காரணமில்லை என்றால், அங்கே வேறு என்ன தடை இருந்தது? ஒருவரது திறமைக்கு விருது மட்டுமே சான்றல்ல என்பது உண்மைதான். ஆனாலும் முக்கியமான ஒரு சர்வதேசப் பரிசில் பெண்களுக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதையும் பேசத்தானே வேண்டும்?

கணிதத்தில் அளப்பரிய சாதனை படைத்தவர்களுக்காக வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கத்தின் (Field’s medal) நிலைமை இன்னும் மோசம். இதுவரை 64 ஃபீல்ட்ஸ் பதக்கங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில் இருவர் மட்டுமே பெண்கள்! அது மட்டுமல்ல, 1936ஆம் ஆண்டு முதல் இந்தப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்தப் பதக்கத்தை முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு வழங்குவதற்கு 2014ஆம் ஆண்டுவரை ஆகிவிட்டது. 2014ஆம் ஆண்டில், ஃபீல்ட்ஸ் பதக்கத்தை முதன்முதலில் வென்ற பெண் என்கிற பெருமை மர்யம் மிர்சாகானி என்கிற ஓர் இரானியக் கணிதவியலாளருக்குக் கிடைத்தது.

‘அறிவியல்’ என்று நாம் பொதுவாகச் சொன்னாலும் கல்விப்புலத்தில் அது தனியாகப் பார்க்கப்படுவதில்லை. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM – Science, Technology, Engineering and Mathematics) ஆகிய நான்கையும் இணைத்து ஒன்றாகத்தான் கல்வியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நவீன சமூகத்தில் இருக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இவை அனைத்தும் அவசியம் என்கிற வகையிலும், இவை நான்கும் ஒன்றோடொன்று பிணைந்தவை என்பதாலும் இந்த ஸ்டெம் கருத்தாக்கம் உருவானது. ஆகவே இந்தத் தொடரில் அறிவியல் மட்டுமல்லாது தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய களங்களிலும் பெண்களின் நிலை பற்றிப் பேசப்போகிறோம்.

தனித்தனியாகப் பெண் அறிவியலாளர்களை அறிமுகப்படுத்தி, பட்டியலிட்டு அவர்களது சாதனைகளை ஆவணப்படுத்துவது இத்தொடரின் நோக்கமல்ல. மாறாக, ஸ்டெம் துறைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், வரலாற்றுரீதியாக அவர்கள் சந்தித்த பிரச்னைகள், அங்கீகார மறுப்பு, ஆய்வுப்புலங்களில் பெண்கள் தொடர்ந்து இயங்குவதற்கு இருக்கும் சமூகத் தடைகள் போன்ற பல அம்சங்களை விவாதிக்கப் போகிறோம்.

இதுபோன்ற சமூக-அரசியல் அம்சங்களுக்குள் பயணிப்பதற்கு முன்னால் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாம். டெலிபோனைக் கண்டுபிடித்தவர் கிரகாம் பெல், மின்சார பல்பைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேட்டரியைக் கண்டுபிடித்தவர் அலசாண்ட்ரோ வோல்டா எனப் பெரும்பாலும் நாம் அறிந்த கண்டுபிடிப்பாளர்கள் (Inventors) அனைவரும் ஆண்களாக இருக்கிறார்கள். ஆகவே பெண்களுடைய ஆராய்ச்சிகளை யாரும் நேரடி கண்டுபிடிப்புடன் தொடர்புபடுத்துவதில்லை. இதனாலேயே பொருட்களைக் கண்டுபிடித்து நம் வாழ்வை மேம்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு அவ்வளவாக கண்டுகொள்ளப்படுவதில்லை.

இன்றும் நாம் பயன்படுத்தும் பல முக்கியமான பொருட்களைக் கண்டுபிடித்ததும் வடிவமைத்ததும் பெண்கள்தாம். யார் அந்தக் கண்டுபிடிப்பாளர்கள்? அவர்கள் உருவாக்கிய பொருட்கள் என்னென்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!