மந்திரி குமாரி 1950

குண்டலகேசியைத் தழுவி மு. கருணாநிதி எழுதிய ஒரு நாடகம்தான் கதை. மந்திரி குமாரி என்கிற பெயரில் அரங்கேறிக் கொண்டிருந்த நாடகத்தைப் பார்த்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், அதற்குத் திரைக்கதை, உரையாடல் எழுதித் தர அவரிடமே சொல்லி இருக்கிறார். அப்படி உருவானதுதான் மந்திரி குமாரி.

ஏற்கனவே 1947ஆம் ஆண்டு, குண்டலகேசி என்கிற படம் வெளியாகி இருக்கிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் குண்டலகேசி எழுதப்பட்டுள்ளது. இது தமிழின் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. இதன் கதைச் சுருக்கம்.

பணக்காரப்பெண் ஒருவர், வழிப்பறிக் கொள்ளை அடித்து, அரசனால் கொலைக்களத்துக்குப் போய்க் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்துக் காதல் வசப்படுகிறார். இதை அறிந்த அவரின் அப்பா, அரசருக்குப் பெரும் பொருள் கொடுத்து, திருடனை மீட்டு, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார். சிறிது காலத்திற்குப் பின், திருடனுக்கு மனைவியின் நகைகளை கொள்ளை அடிக்கும் எண்ணம் வரவே, அவரை மலை உச்சியில் இருந்து தள்ளிவிடும் நோக்கில் அழைத்துச் செல்கிறார். மனைவி, ‘இறப்பதற்கு முன் கணவனைச் சுற்றி வந்து வணங்க விரும்புவதாகக் கூறி, சுற்றி வந்து, மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டார். பின், சமண மதத்தைத் தழுவுகிறார். அவரது மழிக்கப்பட்ட முடி, வளைந்து குண்டலம் போல இருந்ததால், குண்டலகேசி (குண்டலம் + கேசம் உடையவர்) என அழைக்கப் பட்டிருக்கிறார். பின் புத்த சமயத்தினருடன் வாதம் புரிந்து, புத்தத் துறவியானார்.

இந்தக் கதையில் கணவன் திருடன்; மனைவி, கணவனைச் சுற்றி வந்து வணங்க விரும்புவதாகக் கூறி, சுற்றி வந்து, மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டார் என்கிற இரு கருத்துகளையும் வைத்துக் கலைஞர், கதையைப் புனைந்து உள்ளார்.

டைரக்ஷன் TR சுந்தரம் & எல்லிஸ் R டங்கன் எனப் போடுகிறார்கள். TR சுந்தரம் மார்டன் தியேட்டர் உரிமையாளர். அவரே தயாரிப்பாளர். எல்லிஸ் துரை குறித்து வாசிக்கும் போதுதான் எல்லிஸ் என்று ஓர் இயக்குநர் இருந்தது தெரியவந்தது. ஹாலிவுட்டில் உடன் பயின்ற மாணிக் லால் டாண்டனுடன் நந்தனாரில் இணைந்து பணியாற்றிட எல்லிஸ் ஆர்.டங்கன், அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருக்கிறார் என்னும் போது வியப்பாகத்தான் இருந்தது.

பின்னணிப் பாடியோர் லோகநாதன், M L வசந்தகுமாரி, KV ஜானகி, ஜிக்கி, லீலா, கோமளா, லலிதா, மாஸ்டர் சுப்பையா எனப் போடுகிறார்கள். ஓர் ஆண்குரலும் பல பெண்குரல்களும் இருப்பதுடன், சில பாடல்களை நடிகர்களும் பாடியுள்ளனர்.

நடனம்

லலிதா, பத்மினி, ராகினி, குமாரி கமலா, குமாரி வனஜா

பின் தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர்களை எல்லாம் போட்ட பின்தான் நடிகர்கள் பெயருக்கே வருகிறார்கள்.

நடிகர்கள்

எம்.ஜி.ராமச்சந்தர்

எம்.என்.நம்பியார்

எஸ்.ஏ.நடராஜன்

சி.வி.நாயகம்

சிவசூரியன்

கே.வி.சீனிவாசன்

அ.கருணாநிதி

சௌந்தர்

பெண் நடிகர்கள்

அமுதவல்லியாக மாதுரி தேவி

இளவரசி ஜீவரேகாவாக சகுந்தலா

கே.எஸ்.அங்கமுத்து

கற்பகமாக முத்துலட்சுமி

எடுத்த உடன் கொள்ளை நடைபெறுவதைத்தான் காட்டுகிறார்கள். கொள்ளை முடிந்தவுடன் அரசவையில் பெண்களின் நடனத்தைக் காட்டுகிறார்கள். அவ்வாறு நடனமாடும் பெண்களுக்கு, ராஜகுருவை வைத்துப் பரிசுகள் வழங்குகிறார் மன்னர். அந்த நேரத்தில் மக்கள் அரசவையில் வந்து, கொள்ளையர்களால் அவர்கள் உயிரிழப்பதையும் உடமைகளை இழப்பதையும் சொல்லி முறையிடுகிறார்கள்.

அவர்களைச் சமாதானப்படுத்த மன்னர் முயல்கிறார். மக்கள் சமாதானமாகவில்லை. இதனால், தளபதியான வீரமோகனிடம் கொள்ளையர்களைப் பிடிக்க உத்தரவு இடுகிறார். ராஜகுருவோ, தான் யாகம் வளர்த்து, கொள்ளைக்காரனை எரித்து விடுகிறேன் என்கிறார். தளபதியோ, நான் கொள்ளையனைப் பிடித்து வருகிறேன், அவனை யாகத்தில் போடுங்கள் என்கிறார். மன்னர் இதற்கும் தலையாட்டுகிறார். அதற்கும் தலையாட்டுகிறார். இறுதியில், அருகில் இருக்கும் அமைச்சரிடம் கை காட்டி விடுகிறார். அமைச்சரோ, தளபதி சொல்வதுதான் சரி எனச் சொல்ல ராஜகுரு கோபத்தில் செல்கிறார்.

பின் ராஜகுரு, தனது மகனிடம் பேசுகிறார். அப்போதுதான் தெரிகிறது, கொள்ளைக்காரனாக ஊருக்குள் உலா வருவது அவரது மகன் என்று. அதனால்தான் அவர் அரசவையில் இவ்வளவு போராடியிருக்கிறார். போட்டி வைத்துத் தளபதியைத் தேர்ந்தெடுக்கும் போது, வீரமோகன் வெற்றி பெற்று ராஜகுருவின் மகன் பார்த்திபன் தோல்வியடைகிறான். அதனால், பதவி கிடைக்காத கோபத்தில் பார்த்திபன் கொள்ளைக்காரனாகி இருக்கிறான். இப்போது அப்பா சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. கொள்ளை அடிப்பதை நிறுத்துவதாக இல்லை.

அரசரின் மகளும் வீர மோகனும் காதலிக்கிறார்கள். பார்த்திபனும் இளவரசிக்குக் காதல் கடிதம் எழுதுகிறான். அது மந்திரி குமாரி கையில் கிடைக்க, அவர், இளவரசி, ஒரே நேரத்தில் இருவரைக் காதலிக்கிறார் என நினைக்கிறார். அதனால், கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் போனால், அங்கு பார்த்திபன் இருக்கிறான். கதையை மாற்றி, மந்திரி குமாரிக்குத்தான் கடிதம் எழுதியதாகச் சொல்கிறான். அதை உண்மை என்று நம்பிய மந்திரி குமாரியும் காதலிக்கத் தொடங்குகிறார்.

இது நடந்து ஓரிரு நாட்களில் பார்த்திபன் தளபதியிடம் பிடிபட்டு, சிறையில் அடைக்கப்படுகிறான். தளபதி பொய் சொல்வதாக ராஜகுரு சொல்கிறார். இதனால் மந்திரி நீதி விசாரணை செய்ய வேண்டும் என மன்னர் உத்தரவு இடுகிறார்.

மந்திரியாலும் சரியான முடிவு எடுக்க முடியவில்லை. அதனால் அம்மனிடம் போய் வேண்டுகிறார். மந்திரி குமாரி, அம்மன் சிலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, பார்த்திபன் குற்றமற்றவர் என அறிவிக்க, மன்னர் பார்த்திபனை விடுவித்து வீரமோகனை நாடு கடத்துகிறார். அவரைத் தொடர்ந்து இளவரசியும் சென்று விடுகிறார்.

பார்த்திபனும் மந்திரி குமாரி அமுதவல்லியும் திருமணம் செய்து வாழ்கின்றனர். ராஜகுரு அரசரைக் கொன்று விட்டுத் தான் அரசனாகலாம் எனத் திட்டம் போடுகிறான். பார்த்திபன், மனைவி தூங்கிய பின் கொள்ளையடிக்கச் செல்வதும், கேட்டால் கொஞ்சுவதும் மிஞ்சுவதுமாக இருக்கிறான். இவ்வாறு ஒரு நாள் கொள்ளையடிக்கப் போன பார்த்திபன், இளவரசியத் தூக்கிச் சென்று வருகிறான். பார்த்திபனைப் பின்தொடர்ந்த மனைவி, இளவரசியைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறார்.

மனைவியிடமிருந்து தப்பிக்க நினைக்கும் பார்த்திபன் நல்லவனாக வேடம் பூண்டு, அவரைக் கொல்ல முடிவு செய்கிறார். வாராய் எனப்பாடி ஒரு மலை உச்சிக்குக் கூட்டிச் செல்கிறான், அங்கிருந்து அவரைக் கீழே தள்ளி விடுவதுதான் அவனது திட்டம். தன் திட்டத்தை மனைவியிடம் சொல்வதுடன், ராஜகுரு மன்னரைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதையும் சேர்த்தே சொல்லிக் கொக்கரிக்கிறான். மனைவி, தான் இறப்பதற்கு முன், கணவனை மூன்று முறை சுற்றி வந்து வணங்க விரும்புவதாகக் கூறுகிறார். பார்த்திபன் ‘சரி’ என்கிறான். மனைவி, அவனைக் கீழே தள்ளிக் கொல்கிறார்.

இதற்கிடையில், அரண்மனை சென்றுவிட்ட இளவரசியைக் காண வீர மோகன் மாறுவேடத்தில் சென்றால், அங்கே ராஜகுரு, மன்னரைக் கொல்ல முயற்சி செய்வதைக் காண்கிறார். ஆனால், மன்னரோ மீண்டும் தவறாகவே முடிவு செய்கிறார். மந்திரி குமாரி வந்து, அனைத்து உண்மைகளையும் சொல்கிறார். ராஜகுரு மகனைக் கொன்ற ஆத்திரத்தில், மந்திரி குமாரியைக் கத்தியை வீசிக் கொள்கிறான். ராஜா குரு சிறையில் அடைக்கப் படுகிறான். வீர மோகன் இளவரசியுடன் மீண்டும் இணைகிறார்.

திரைப்படத்தின் மணிமகுடமாக இருப்பது உரையாடல்தான். சொல்ல வேண்டும் என்றால், பக்கம் பக்கமாகச் சொல்லலாம்.

திருடும் பார்த்திபன் வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. வில்வித்தை என்கிற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன் பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். காமம் அங்கே கலையாகிறது. அதுபோல கொள்ளை அடிப்பதும் ஒரு கலைதான்!” என்கிறான்.

‘கலையப்பா கலை. அந்த கலையை நான் விட முடியாது’ என்கிற இந்தச் சொற்றொடரை வைத்து, கலைஞரை மேடைக்கு மேடை திட்டியிருக்கிறார்கள். “அதைத் தீயவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே! மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே! அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாகப் பொருளா?” என அவர் கேட்டதாக, தனது நெஞ்சுக்கு நீதியில் சொல்கிறார்.

திரைப்படத்தின் பலமாக இருப்பது ராஜகுருவான நம்பியாரும், பார்த்திபனான எஸ்.ஏ. நடராஜனும்தான். மந்திரி குமாரியாக வரும் மாதுரிதேவி குறித்துச் சொல்லவே வேண்டியது இல்லை. வழக்கம் போல அபாரமாக நடித்து உள்ளார். துணிவான பாத்திரம் என்றால் அவருக்குக் கை வந்த கலைதான், வாள்வீச்சில் கை தேர்ந்த எம்ஜிஆருக்குத் தளபதி வேடம் என்றால் கேட்கவா வேண்டும்? நிறைவாகச் செய்து இருக்கிறார். இளவரசியாக வரும் சகுந்தலா அவர்களுக்கு இதுதான் முதல் படம். சோகக்காட்சிகளில் மிகவும் நன்றாக நடித்து இருக்கிறார்.

கிளைக் கதையாக நகைச்சுவை நடிகர் கருணாநிதியின் நகைச்சுவை வருகிறது, அவரின் அம்மாவாக அங்கமுத்து வருகிறார். அந்தக் காலகட்டத்தின் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் அவர்.

‘அங்கமுத்தும் தங்கமுத்தும் தண்ணிக்குப் போனாளாம்,

தண்ணிக் கொடத்த கீழே வச்சி எங்கிட்டே வந்தாளாம்.’

1971 ஆம் ஆண்டு, தங்கைக்காகப் படத்தில் ஏ.எல்.ராகவன், சதன் குழுவினருடன் பாடிய நகைச்சுவை பாடல். இவரது பெயரை நகைச்சுவைப் பாடலுக்குப் பயன்படுத்தியது மூலம் இவர், எவ்வளவு பிரபலமாக இருந்திருக்கிறார் என அறியலாம். 1979 ஆம் ஆண்டின் குப்பத்து ராஜா வரை இவர் நடித்து உள்ளார்.

ஜி. ராமநாதன் இசை அமைத்து இருக்கிறார்.

மந்திரி குமாரி என்றவுடன் மனதில் சட்டென்று தோன்றுவது கா.மு. ஷெரீப் எழுதிய ‘வாராய் நீ வாராய் பாடல்தான்.’

வாராய் நீ வாராய்

இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்

முடிவிலா மோன நிலையை நீ

மலை முடியில் காணுவாய்

வேறுலகம் காணுவோம்

புலியெனைத் தொடர்ந்தே புதுமான் நீயே வாராய்

எனக் கொல்லப் போவதைக் குறியீடாகச் சொல்லும் பாடலும் செல்லும் மலையும் பலருக்கும் மனதை விட்டு மறையாது.

மற்றொரு பாடல்,

‘உலவும் தென்றல் காற்றினிலே’

அலைகள் வந்து மோதியே

ஆடி உந்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே

தெளிந்த நீரைப் போன்ற தூயக் காதல் கொண்டோம் நாம்

களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார்

கா.மு. ஷெரீப் எழுதிய வரிகள் மிகவும் ரசிக்கத் தகுந்தவை.

இந்த இரு பாடல்கள் தவிர, வேறு சில பாடல்களும் நன்றாக உள்ளன.

“உபகாரம் செய்பவருக்கே…

அன்னமிட்ட வீட்டிலே

கன்னக்கோல் சாத்தவே

எண்ணம் கொண்ட பாவிகள்

மண்ணாய் போக நேருமே

பாலை ஊற்றி பாம்பை நாம்

வளர்த்தாலும் நம்மையே

கடிக்கத்தானே வரும் அதை

அடித்து கொல்ல நேருமே

என்னும் பாடல் ஒன்றும் உள்ளது. மந்திரி குமாரி கணவனைக் கொன்று விட்டுக் கீழே வரும்போது, மாடு மேய்ப்பவர் ஒருவர் பாடும் பாடல் அது. பாடலைப் பாடியவர் டி.எம். சௌந்தரராஜன். இதே ஆண்டில்தான் கிருஷ்ணா விஜயம் திரைப்படத்தில் தனது முதல் பாடலை அவர் பாடியிருக்கிறார். இது அவர் பாடிய இரண்டாவது திரைப்படம். பெரும்பாலான பாடல்களை எழுதியவர், மருதகாசி. 1949 இல் மாயாவதி என்கிற படத்திற்குத் தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார் என்றாலும் அவருக்குப் பெரும் புகழைத் தந்த திரைப்படம் மந்திரி குமாரிதான்.

நான் இந்தத் திரைப்படத்தை ஏறக்குறைய பத்து வயது இருக்கும் போது, முதலில் பார்த்தேன். என் மனதில் உறுதியாகப் பதிந்து இருந்தது, சிறுவன் ஒருவன், எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என எருமை மாட்டின் மேல் உட்கார்ந்து பாடும் பாடல். அப்போது, இப்படி எருமை மீது அமர்ந்து போனால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்தது உண்டு. பாடலைப் பாடியவர் மாஸ்டர் சுப்பையா எனப் போடுகிறார்கள். அவர்தான் நடித்தும் இருப்பார் என நினைக்கிறேன். கலைஞர்தான் இந்தப் பாடலை எழுதி இருக்கிறார்.

‘நல்லதுக்குக் காலமில்லே

நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு

சொல்லப்போனா வெட்கக்கேடு’

என்கிற இந்த வரிகளை அடிக்கடி என் அப்பா முணுமுணுப்பார். அதுவும் என் மனதில் இப்பாடல் பதிந்து இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.


(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.