குழந்தைகளுக்கு ஒரு கதை

ஓர் ஊரில் பொம்மி, திம்மி, வம்பி ஆகிய மூன்று சகோதரிகள் தங்கள் வயதான தாய் தந்தையுடன் வசித்து வந்தனர். அப்போது அவர்கள் ஊரில் திடீரென்று புயல் மழை பெய்தது. பயிர்களெல்லாம் நாசமாகிக் கடும் பஞ்சம் ஏற்பட்டது.

அப்போது பொம்மி சொன்னாள், “அம்மா, நீங்கள் பயிரிட்டதெல்லாம் நாசமாகி விட்டதே என்று வருந்தாதீர்கள். நான் பக்கத்து ஊருக்குச் சென்று ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு வருகிறேன். அப்பா, எனக்கு வழிப்பயணத்துக்குக் கட்டுச் சோறு கட்டித் தா!”


அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு பொம்மி அண்டை ஊருக்குக் கால்நடையாகவே சென்று அடைந்தாள். அந்த ஊரின் பண்ணையாரிடம் போய் வேலை ஏதாவது தருமாறு கேட்டாள்.

அந்த ஊர்ப் பண்ணையாரோ மகா கஞ்சப் பேர்வழி. ஈவிரக்கம் இல்லாதவர். அவர் பொம்மியைப் பார்த்துச் சொன்னார்.

“உனக்குத் தாராளமாக என் பண்ணையில் வேலை தருகிறேன். வேலை முடிந்ததும் சம்பளமும் சாப்பாடும் தருவேன். ஆனால், நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்.”

“என்ன அம்மா அது?”

“எக்காரணம் கொண்டும் நீ என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது. நானும் உன்னிடம் கோபித்துக் கொள்ள மாட்டேன். மீறி நீ என்னிடம் கோபம் கொண்டால் உன்னை வேலையை விட்டு நீக்கி விடுவேன். கூலி எதுவும் தரவும் மாட்டேன்” என்றார்.

“நீங்கள் என்னிடம் கோபித்தால்?” என்று பொம்மி கேட்டாள்.

“அப்போது நான் உனக்கு இருபதாயிரம் ரூபாய் தருவேன்.”

தனது வைர மூக்குத்தி மின்ன பண்ணையார் விஷமமாகச் சிரித்தபடியே சொன்னார்.

பொம்மிக்கு இந்த நிபந்தனை நியாயமாகத் தோன்றியது. மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள். உடனே தோட்டத்துக்குச் சென்று வேலை செய்யலானாள்.

கடும் உழைப்பாளியான பொம்மி உற்சாகமாக வேலை செய்தாள். நாளெல்லாம் தோட்டத்தைச் சுத்தம் செய்தாள், பாத்தி வெட்டிச் செடிகள் நட்டாள், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினாள்.

மாலையில் மிகவும் களைத்துப் போனாள். பயங்கரமாகப் பசி எடுத்தது. பண்ணையாரிடம் சென்று வேலை முடிந்தது என்று கூறி, பசிக்கிறது என்பதைக் குறிப்பால் உணர்த்தினாள்.

பண்ணையார் மலர்ந்த முகத்துடன் அவளைத் தன் பின்னால் வரும்படி அழைத்தார். தோட்டத்தின் மூலையில் ஓர் அறிவிப்புப் பலகை சாத்தி வைக்கப்பட்டிருந்தது. புன்னகையுடன் அதைச் சுட்டிக் காட்டினார். அதில்,
“பண்ணையில் வேலை செய்யும் ஆட்களுக்கு நாளை சம்பளமும் சாப்பாடும் கிடைக்கும்.”

பொம்மிக்குக் கோபமாக வந்தது. ஒப்பந்தத்தை எண்ணி ஒன்றும் பேசாமல் திரும்பினான். கஷ்டப்பட்டுப் பசியை அடக்கிக் கொண்டு உறங்கிப் போனாள்.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து விரைவாக வேலைகளை முடித்துவிட்டு பண்ணையாரிடம் சென்று ஊதியம் கேட்டாள்.

பண்ணையார் மறுபடியும் சிரித்துக் கொண்டே அதே அறிவிப்பினைக் காட்டினார்.

பொம்மி அமைதியாகக் கேட்டாள், “என்னம்மா இது, நேற்றுதான் நாளை தருவதாகச் சொன்னீர்களே?”

அதற்குப் பண்ணையார் சொன்னார், “ஆமாம், நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு எல்லாம் என்னிடம் கிடையாது. எப்போதும் ஒரே பேச்சுத் தான்” என்று சிரித்தார்.

பொம்மிக்குக் கோபம் பீறிட்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

மூன்றாம் நாள் வேலை முடிந்ததும் பண்ணையாரிடம் சென்றாள். அன்றும் அவர் அதே பலகையைக் காட்டியதும் பொம்மியால் பொறுக்க முடியவில்லை.

“அடியேய், என்ன மாதிரி ஆள் நீர்? முதுகொடிய வேலை செய்பவளை இப்படி ஏமாற்றுகிறீர்? நீர் மனிதிதானா?” என்று ஆத்திரம் தீரக் கத்தினாள்.

நயவஞ்சகமான அந்தப் பண்ணையாரோ முகத்தில் புன்னகை மாறாமல், “அடடா, பொம்மி பாப்பா, ஒப்பந்தத்தை மீறி விட்டாயே. என்னிடம் கோபித்துக் கொண்டு கத்தி விட்டாயே. நீ போகலாம்“ என்றார்.

அவமானமும் கோபமும் தாங்காமல், பொம்மி ஊர் திரும்பினாள். வீட்டுக்கு வந்து பெற்றோரிடமும் தங்கையரிடமும் தனக்கு நேர்ந்த அநியாயத்தைச் சொன்னாள்.

அடுத்த சகோதரியான திம்மி தான் அப்பண்ணையாரிடம் சென்று நியாயம் கேட்பதாகக் கூறிச் சென்றாள். அவளையும் பண்ணையார் அதே போல ஏமாற்றி அனுப்பி விட்டார்.

இறுதியாகக் கடைக்குட்டி வம்பி சொன்னாள். “அக்காமார்களே, நான் போகிறேன் அந்தப் பண்ணையாரிடம் வேலை செய்ய. அவரை என்ன செய்கிறேன் பாருங்கள்!”

”அடீ வம்பி! நீ சின்னவள். உன்னால் சும்மாவே பசி தாங்க முடியாது. வேலையும் எப்படியடி செய்வாய்? வேண்டாமடி” என்று குட்டித் தங்கை மீது பாசத்தில் தடுத்தனர் பொம்மியும் திம்மியும்.

வம்பி அவர்களைக் கவலைப்படவேண்டாம் என்று கூறிப் புறப்பட்டாள். துணைக்குத் தன் செல்ல நாயையும் அழைத்துச் சென்றாள்.

பண்ணையார் வம்பிக்கும் அதே நிபந்தனைகளைக் கூறி வேலைக்கமர்த்திக் கொண்டார்.

முதல் நாள் மாலை வேலை நேரம் முடிந்ததும் வம்பி தன்னிடம் வருவாள் என்று எதிர்பார்த்தார். அவள் வரவேவில்லை. அப்படியே மூன்று நாட்கள் கழிந்தன. வம்பி அவரைப் பார்த்தால் முகம் மலர்ந்து வணங்குவதும் உற்சாகமாக வளைய வருவதுமாக இருந்தாளே தவிர ஊதியமும் கேட்கவில்லை, சாப்பாடும் கேட்கவில்லை.

எப்படித்தான் சாப்பிடாமல் வேலை செய்கிறாள் என்று பார்த்து விடுவது என்று முடிவு செய்தார். வம்பியைத் தேடிச் சென்ற போது தோட்டத்தில் மல்லாந்து படுத்துச் சுகமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் வம்பி.

“வம்பி, நீ எப்படி இத்தனை நாட்களாக ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறாய்?

பெரிதாகச் சிரித்த வம்பி, “நானா? சாப்பிடவில்லையா? நல்ல வேடிக்கை போங்கள், என்னால் ஒரு வேளைகூட சாப்பிடாமல் இருக்க முடியாது. மூன்று வேளையும் முத்தம்மா கடையில் மூக்குப் பிடிக்கச் சாப்பிடுகிறேனே. என் அப்பாவின் கைப்பக்குவம் அவருக்கு அப்படியே இருக்கிறது.”

“காசு…” என்று பண்ணையார் இழுத்தார்.

“இதோ நம் பண்ணையிலிருந்துதான் நெல் மூட்டைகளைக் கொடுத்துப் பதிலுக்குச் சாப்பாடு வாங்கிக் கொள்கிறேன். என் நாய்க்குக்கூடக் கஞ்சி ஊற்றாமல் சுடுசாதம் போடுகிறார். பாருங்கள் எப்படி வாலாட்டுகிறது!” என்று சொல்லிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டு குஷாலாகப் பாட ஆரம்பித்தாள்.

பண்ணையாருக்குக் கோபத்தில் கண்கள் துடித்தன. சின்னப் பெண் எவ்வளவு சாதுர்யமாகத் தம்மை ஏமாற்றி இருக்கிறாள் என்று நினைத்தார். ஆனால், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கோபப்பட்டால் இருபதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமே!

பொறுத்திருந்துதான் யோசிக்க வேண்டும் என்று திரும்பி விட்டார்.

மறுநாள் வம்பி அவரிடம் வந்தாள். “எசமானியம்மா, பூங்குளத்தில் பயிர் விதைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதாக ஊரில் சொல்கிறார்கள். பலரும் அங்கு வண்டி கட்டிக்கொண்டு செல்கிறார்கள். நாம் சீக்கிரமே போனால் நல்ல பேரம் கிடைக்கும். வாருங்கள்“ என்று அழைத்தாள்.

பண்ணையாரும் பேராசைப்பட்டு அவளுடன் போகச் சம்மதித்தார். வம்பி தானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லித் தாறுமாறாக மாடுகளை விரட்டினாள். வண்டி காடுமேடுகளில் இஷ்டத்துக்கும் ஓடிற்று. பண்ணையாருக்குக் குண்டு உடல். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “அடியே மெதுவாடி, மெதுவாடி” என்று கெஞ்சிக் கொண்டு குலை நடுங்க அமர்ந்திருந்தார்.

பொழுது சாய்ந்துவிட்டது. அவர்கள் கடந்து சென்ற சாலை ஓரமாக ஒரு சேற்றுக் குட்டை தென்பட்டது. அதனுள் பன்றிகள் விளையாடித் திளைத்துக் கொண்டிருந்தன.

சடக்கென்று வண்டியைச் சாய்த்தாள் வம்பி; பண்ணையார் ’தொபுக்கடீர்’ என்று குட்டையில் விழுந்தார். அவர் பட்டுச்சேலையெல்லாம் பாழாகி உடல் முழுவதும் சேறு படிந்தது. அருகில் ஒரு பன்றி வேறு அவரை நோக்கி உறுமிக் கொண்டே கடிக்க வந்தது.

அவ்வளவுதான், கோபம் பொத்துக் கொண்டு, வம்பியைப் பார்த்துக் கண்டபடி ஏச ஆரம்பித்தார் பண்ணையார்.

சாலை மேலே நின்று கொண்டிருந்த வம்பி, புன்முறுவலுடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாள். பின்பு சொன்னாள்:

“அம்மா, ஒப்பந்தத்தை மீறிட்டீங்களே? கோபப்பட்டு என்னைத் திட்டிட்டீங்களே? எடுங்கள் ரூபாய் இருபதாயிரம்” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணும் முடியாது போடி” என்றார் பண்ணையார்.

“அப்படியா, அப்போ இந்தச் சேத்துக் குட்டையிலேயே கிடங்க. இரவாகிவிட்டது, காலையில் யாராவது வந்து கை தூக்கி விடற வரைக்கும் இந்தப் பன்றிகளுடன் விளையாடிக் கொண்டிருங்கள்” என்று சிரித்தாள் வம்பி.

“சரி தர்றேன், கை தூக்கி விடுடி.”

“ஹும். இந்தக் கையில் பணம், இந்தக் கையால் தூக்கி விடுவேன்!” என்று கை நீட்டினாள் வம்பி.

வேறு வழியின்றி பணத்தை எடுத்து வம்பியிடம் கொடுத்தார் பண்ணையார்.

அவரைக் கைதூக்கி விட்டபின், வெற்றிக் களிப்புடன் பணத்துடன் தன் சொந்த ஊரை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தாள் வம்பி. அவளது செல்ல நாய் உற்சாகத்துடன் குரைத்தபடி அவளைப் பின்தொடர்ந்தது.


பின்கதை

குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களில் ஆண் குழந்தைகளே சாகசம் புரிபவர்களாக எப்போதும் இருக்கிறார்கள். பெண் பாத்திரங்கள் துணைப்பாத்திரங்களாக, காப்பாற்றப்பட வேண்டிய இளவரசிகளாக மட்டுமே இருக்கக் கண்டிருக்கிறோம். இருபத்தியோராம் நூற்றாண்டைக் கலக்கிய ஹாரிபாட்டர் வரை இதுதான் கதி.

ஒரு குழந்தை புத்தகக் கடையில் சிறுமியர் நாயகிகளாக இருந்த புத்தகங்களை மட்டும் தேடி ஓர் அம்மாவும் சிறிய மகளும் சென்ற போது நூற்றில் இரண்டு புத்தகங்கள்கூட இல்லையாம்.

நிற்க,

ரத்னபாலா, மணிப்பாப்பா ஆகிய இரு சிறுவர் இதழ்களை நினைவிருக்கிறதா? அவற்றை வாசித்த எவருக்கும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடாது. செல்லம் வரைந்த அழகு ஓவியங்களும் வண்ணப்படங்களும், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் கதைகளுமாகக் குழந்தை இலக்கியத்தின் பொக்கிஷமாகத் திகழந்தவை அவை.

இதன் ஆசிரியரான முல்லை தங்கராசன்என்கிற மிகச்சிறந்த குழந்தை எழுத்தாளரின் திடீர் மரணத்தால் அவ்விதழ்கள் வருவதும் நின்று போயின.

இது தமிழ்க் குழந்தை இலக்கியத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகி விட்டது என்பதை அனுபவபூர்வமாகச் சொல்கிறேன்.

முட்டாள் பட்டணம், மதியூகி மாப்பிள்ளை, ஜாம் ஜிம் ஜாக் போன்ற எண்ணற்ற கதைகளும் சித்திரக்கதைகளும் தாங்கிக் கனவுலகம் போல் வலம் வந்த அந்த இதழ்களுக்கு ஈடாக வேறெதையுமே சொல்ல முடியாது.

குழந்தை இலக்கியமென்றால் நீதிக் கதைகள் இருந்தே ஆகவேண்டுமென்ற நியதி எல்லாம் இல்லாமல் பெரியவர்களும் ரசிக்கும் வண்ணம் அலாதியான நகைச்சுவைக் கதைகள் இடம்பெற்றிருந்தன.

மேற்கூறிய கதை ரத்னபாலாவில் வந்தது. எழுதியது யாரென்று உறுதியாகத் தெரியவில்லை. மூலக்கதையில் எழுத்து பதின்மடங்கு சுவாரசியாமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும்.

ஆனால், இக்கதையை என் மகள்களுக்குச் சொல்லும்போது இப்படித்தான் பாலினத்தை மாற்றிச் சொல்வேன். இந்தக் கதை என்றில்லை, நான் சிறு வயதில் ரசித்த எல்லாக் கதைகளிலும் வரும் சாகச் சிறுவனைச் சிறுமியாக மாற்றிச் சொல்வதில் அலாதி ப்ரியம் இருந்தது.

மூலக்கதையில் சிறுமிக்குப் பதிலாக சிறுவன் இருப்பதே மகள்களுக்குத் தெரியாது.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.