September 12

புரசைவாக்கத்தில் வாடகைக்கு எடுத்திருந்த இரண்டு பெட்ரூம் அபார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்த நித்யாவிற்குத் தலை சுற்றியது. எப்போதுதான் இந்த வேலைகள் முடியும்? பிரிக்கப்படாத அட்டைப் பெட்டிகள் ஆங்காங்கே இருந்தன. பொருட்கள் வாங்கிய கவர்கள் பாதிப் பிரிக்கப்பட்ட நிலையில் இங்கும் அங்குமாகக் கிடந்தன. இண்டர்நெட் கனெக்ஷனுக்கு வேலை முழுவதும் முடியாத நிலையில் ஒய்- ஃபை மோடம், தரையில் ஓர் ஓரமாகக் கிடந்தது.

வேலைக்கு ஆள் தேடினால் கிடைக்கவில்லை. ஆர்டர் செய்திருந்த சோபாவும் கட்டிலும் இன்று டெலிவரி ஆகும் எனச் சொல்லியிருந்தார்கள்.

சின்க்கில் குவிந்து கிடந்த பாத்திரங்களில் இருந்து, பால் பாத்திரத்தை எடுத்து கழுவி, பாலை ஊற்றி இண்டக்க்ஷன் ஸ்டவ்வை ஆன் செய்தாள். அத்தனை பாத்திரங்களையும் உபயோகித்தாயிற்று. வீட்டு வேலை செய்ய உதவிக்கு யாரையாவது பார்த்தே ஆக வேண்டும். இங்கு சென்னையில் இப்போதைக்கு ஷாலினியை மட்டும்தான் தெரியும். பக்கத்தில் சொல்லி வைத்தும் ஒரு வாரமாக யாரும் வரவில்லை என நினைத்தவாறே, மேல் ஷெல்ஃபில் இருந்து, காபி பொடியைக் கையில் எடுத்துக் கொண்டு, ஸ்டவைப் பார்த்தால், பாத்திரத்தில் பால் திரிந்திருந்தது.

ஸ்விகியில் ஆர்டர் செய்தபடியே, கீழே விரிக்கப்பட்ட சிறு விரிப்பில் படுத்துக்கொண்டாள். முதுகெலும்பும் கிரானைட் தரையும் பரஸ்பரம் அளவளாவியது போல இருந்தது. ஷாலினியிடமிருந்து அழைப்பு வர, போனை ஆன் செய்தாள்.

“சொல்லு ஷாலினி…”

“என்ன நித்யா, வாய்ஸ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. நல்லா இருக்குறதானே?”

“நல்லாதான் இருக்கேன் ஷாலினி, படுத்துக்கிட்டே பேசுறேன். அதனால வாய்ஸ் அப்படி இருக்கு.”

“நித்யா, நீ காலேஜ் குரூப்ல மெசேஜ் பாத்தியா?”

“இல்லை ஷாலினி, கொஞ்சம் பிஸியா இருந்தேன். தலைக்கு மேல வேலை கெடக்கு. இதுல எங்க காலேஜ் மெசேஜை உக்காந்து பாத்துட்டு இருக்குறது. ஏன் என்னாச்சு சொல்லு நீயே சொல்லு?”

“நாம காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போது ரம்யானு ஒரு பொண்ணு லவ் மேட்டர்ல மாட்டுனா ஞாபகம் இருக்கா? அப்புறம் அவ வேற காலேஜுக்கு போயிட்டா, அவளைச் சொல்லி கிண்டல் பண்ணியிருந்தாங்க.”

நித்யாவின் அழைப்பை ஹோல்ட் செய்துவிட்டு, வாட்ஸ் அப்பில் மெஸேஜைப் பார்த்தாள்.

“காலேஜ் கெட்டுகதர் வைக்கலாமானு?” ஒருத்தன் கேட்டிருக்க, அதற்குப் பதிலாக, “கெட்டுகதர் வைச்சா ரம்யா வருவாளா?” என இன்னொருவன் கேட்டிருந்தான்.

“உனக்கு அவள பத்தி விபரம் தெரியுமா?” என்று வேறு ஒருவன் கேட்டும் கவுண்டமணி மீம் போட்டிருந்தான்.

“என்ன சார், ரொம்ப நாளா கார் ப்ரோக்கரா இருக்கீங்க போல? டீட்டெயில் கேக்குறீங்க. ஏன் சாருக்கு, அதே செக்கண்ட் இயர்ல படிப்பைத் தொடராமல் போன ராகேஷ் பத்தி ஞாபகம் இல்லையா?” எனப் பதில் அனுப்பினாள் நித்யா.

போன் கால் ஹோல்டிங்கில் இருந்து மாறியது.

“சூப்பரா சொன்ன நித்யா.” என்றாள் ஷாலினி.

“ம்ம் … காலம் காலமா அவனுங்க அப்படித்தானே?

ஆண்களும் பெண்களும் இருக்குற க்ரூப்ல இப்படிப் பதிவு செய்வதுகூட அவர்களுக்குத் தவறாக தோணவே இல்லையா? ஷாலினி, ஆண்களில் பல பேருக்குத் தங்களை ஆணாதிக்கவாதிகளாகக் காட்டிக் கொள்வதற்கும், அதுதான் சரி எனச் சொல்லித் திரிவதற்கும் தயக்கம் இல்லை. சரி, க்ரூப்பில் எத்தனை பெண்கள் வாய் திறந்தார்கள்?.

ஒருத்தியும் வாய் திறக்கவில்லை. இதைப் பத்தி இன்னொரு நாள் பேசலாம். முதல்ல எனக்கு யாராவது வேலைக்கு ஒத்தாசை பண்ண கிடைபாங்களானு சொல்லு.”

“நான் கேட்டுச் சொல்றேன். சமாளிக்கக் கஷ்டமா இருந்தா, நீ இங்க எங்க வீட்டுக்கு வர்ரியா?”

“ஏன் அருண் இல்லையா? வெளியூர் போயிருக்காரா?”

“இல்ல, எனக்கும் அருணுக்கும் சின்னப் பிரச்னை… அதுனால, நான் அக்கா வீட்டுக்கு வந்திருக்கிறேன்… நான் உன்னை என் அக்கா வீட்டிற்குத்தான் கூப்பிட்டேன்’’ என மெதுவான குரலில் சொன்னாள் ஷாலினி.

நித்யா எதுவும் பேசாமல் மெளனம் காத்தாள்.

“நம்மகூடப் படிச்ச கவிதாவும் இங்கேதான் இருக்கா. அவளும் உன்னப் பாக்க வர்றதா சொன்னா. நாங்க ரெண்டு பேரும் ஒரு நாள் முடிவு பண்ணி உங்க வீட்டுக்கு வர்ரோம். மூணு பேரும் மீட் பண்ணலாம்.”

“ஏய், கவிதாவா? அந்த காலேஜ் கனவு கன்னியா?” எனக் கேட்டாள் நித்யா, ஆச்சரியமாக.

“ஆமா, அவளேதான்” எனச் சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள் ஷாலினி.

“அதே மாதிரிதான் இன்னமும் மேட்சிங் வளையலும், கம்மலும் போட்டுட்டு, கொஞ்சி சிரிச்சிப் பேசிட்டு ஸ்டைலா இருக்காளா?” எனக் கேடாள் நித்யா.

“ம்… ஹீம்… இப்போ கவிதா ஆளே மாறிட்டா… நீ பார்க்கதானே போறே…?”

“ஷாலினி… யாரோ கதவைத் தட்ற மாதிரி இருக்கு, நான் அப்புறம் பேசட்டுமா?”

“சரி, நீ சரியா சாப்பிடறயா, இல்லையா? தனியா எப்படித்தான் இவ்ளோ நாள் இருக்கறீயோ? காலா காலத்துல ஒரு கல்யாணத்த பண்ணிருக்க வேண்டியதுதான?” என்றாள் ஷலினி.

“நான் சரியாதான் சாப்பிடுறேன். எனக்கு மட்டும் சமைச்சா போதும். ஈசியாதான் இருக்கு. ஏன், உனக்கு, உன் புருஷனா டெய்லி சமைச்சி தர்றாரு?” என நக்கலாகக் கேட்டாள் நித்யா.

“நீ இப்படித்தான் பேசுவ.. அப்பறம் கால் பண்றேன்” என அழைப்பை துண்டித்தாள் ஷாலினி. அருணைப் பற்றி நித்யா ஏதும் கேட்காமல் இருந்ததே போதும் என்றிருந்தது ஷாலினிக்கு.

‘கல்யாணம் செய்து அவங்க ரொம்ப நல்லா சொகுசா வாழ்ந்துட்டு நம்மள கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னாகூடப் பரவால்ல. இதுங்களே, பூரா அடிச்சுக்கிதுங்க. ஒரே சண்டையும் ஒரே கூப்பாடுமா இருக்குது. இதுல நாம வேற கல்யாணம் பண்ணிக்கணுமாம்.

கல்யாணம் முடிச்ச கோஷ்டில முக்காவாசிப் பேர், வாய தொறந்தா, தன் கணவனையும் தன் மனைவியும் குறையா சொல்லுறாங்க. அப்புறம் என்னத்துக்கு நம்மகிட்ட வந்து கல்யாணம் பண்ணிக்கணும்னு அட்வைஸ்? இவ மட்டும் எப்படிச் சந்தோஷமா, சுதந்திரமா இருக்கலாம், அப்படிங்குற கடுப்பா இருக்குமோ?’

கதவை நோக்கி நடந்தாள் நித்யா. கீழே இறைந்து கிடந்த பேனா, பேப்பர், பாத்திரங்களைக் கடந்து போகையில் ஐயோ சீக்கிரமா யராவது வேலைக்குக் கிடைக்க மாட்டார்களா என்று அழுகையே வந்தது.

“நீங்க வேலைக்கி ஆள் வேணும்னு கேட்டதா பக்கத்து வீட்டு அக்கா சொல்லிச்சி” எனக் கதவைத் திறந்தவுடன் எதுவும் கேட்காமலே பதில் சொன்ன அந்தப் பெண்ணை புன்னகையுடன் பார்த்தாள் நித்யா. நின்றுவிட்ட மூச்சு திரும்ப வந்தது போல இருந்தது.

“உங்க பேர்?”

“லட்சுமி.”

“லட்சுமிக்கா, எனக்கு இப்பவே கொஞ்சம் வேலை செய்துட்டுப் போறீங்களா?”

“சரி அக்கா… நான் செய்திட்டுப் போறேன்.”

திருத்தமாகப் புடவையணிந்திருந்தார் நடுத்தர வயது லட்சுமி. அதிகமாகப் பேசவில்லை. அவருக்கு நன்றாகத் தெரிந்த வீடு போல, அவரே சோப்பை எடுத்து பாத்திரங்களைத் துலக்க ஆரம்பித்தார்.

லட்சுமி வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணிகளை மடித்து வைப்பது போன்ற எல்லா வேலைகலையும் முதல் நாளே, சொல்லாமலே செய்வது, ஏதோ ஆபிஸில் அவார்டு வாங்குவதை மாதிரி சந்தோஷமாக இருந்தது நித்யாவுக்கு.

கிச்சன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்த லட்சுமி, நித்யாவிடம், “அக்கா, சோபா, கட்டில் எல்லாம் எடுத்துட்டு வர்றாங்க. நம்ம வீட்டுக்கா?” என்று கேட்டார்.

“ஆமாம் …”

எல்லா ஃபர்னிச்சர்களையும் ஏற்கெனவே திட்டமிட்ட இடங்களில் போட வைத்தாள் நித்யா. அட்டைப் பெட்டியில் இருந்து, ப்ரேம் செய்யப்பட்ட இரண்டுக்கு இரண்டு அடி தன்னுடைய போட்டாவை வெளியே எடுத்தாள். பருக்களோ வடுக்களோ இல்லாத தெளிவான முகம். கூரிய கண்கள். பாய் கட் செய்யப்பட்ட தலைமுடி. எந்த ஆபரணங்களும் இல்லை. போட்டோவைப் பார்த்து, அழகும் அறிவும் எனச் சொல்லிக்கொண்டாள்.

வீட்டின் ஹாலில் மையமாகத் தனது போட்டோவை மாட்டினாள். தன்னைப் பார்க்கவே பெருமிதமாக இருந்தது நித்யாவுக்கு.

வீடு சுத்தமானது நன்றாக இருந்தது. ஃபர்னிச்சர்கள் வந்தவுடன்தான், வீட்டில் இருப்பது போலவே உணர்ந்தாள்.

கட்டிலில் ஓய்வெடுக்கச் சாய்ந்தவள், ‘அமித்’ என்கிற ஒரு பெயர் தன்னை மீண்டும் மீண்டும் துரத்துவதை உணர்ந்தாள். தூக்கம் போனது எனத் தெரிந்துகொண்டவள் டயரியை எடுத்து எழுத ஆரம்பித்தாள்.

வாழ்வின் ஒரு சில மணித் துளிகளை அப்படியே ஏற்றுக்கொண்டால், செய்த முட்டாள்தனங்களை அப்படியே ஒத்துக்கொண்டால், அதுவே அவற்றைக் கடந்து செல்லவும் எளிதாக இருக்கும். தன்னை மிகச் சாதுர்யமானவர்களாகக் கருதிக்கொள்ளும் மனிதர்களால் தனது முட்டாள்தனங்களை ஒத்துக்கொள்வது எளிதான காரியமா என்ன?

(தொடரும்)