1

ஞாயிறு காலை வருணும் அவனது மாமனாரும் ஒன்றாக மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வந்து நிதானமாக மீனை ஆய்ந்து கொண்டிருந்தார்கள்.

மார்க்கெட்டில் சந்தித்துப் பேசிய அடுத்த வீட்டு சேகரின் தலை உருண்டு கொண்டிருந்தது. பின்னே மாமனாரும் மருமகனும் சண்டை போடாமல் கலகலப்பாகப் புறணி பேச வேண்டுமென்றால் இன்னோர் ஆணின் தலை கிடைத்தால்தானே!

சேகரின் மனைவி போன ஆண்டு இறந்துவிட்டார்; ஒரே மகள் தாரா நிலாவின் சிறுவயதுத் தோழி. நிலாவைவிட புத்திசாலி, நன்கு படித்து நல்ல வேலையில் இருந்தவள். இப்போது அவளைக் குறித்துத்தான் சேகருக்குக் கவலையே. மார்க்கெட்டில் நிலாவின் அப்பாவையும் வருணையும் பார்த்தவுடன் தன் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தார். தாரா ஆறு மாதமாக வேலைக்கே போவதில்லையாம்.

“ஏன்பா வருண், ஏன் இப்டி வேலையை விட்டுட்டுக் குடி சிகரெட் கஞ்சானு சுத்திக்கிட்டு இருக்கா அந்தப் பொண்ணு?”

“ஹும். பாவம் மாமா, தாராதான் என்ன பண்ணுவாங்க? அவங்க புருசன் சண்டை போட்டு புள்ளையோட அவன் அப்பா வீட்டுக்குப் போயிட்டான். அந்த விரக்தியில வேலையை விட்டுட்டு இப்டி சுத்திக்கிட்டிருக்காங்க.”

“அடப்பாவி! வயசான மாமனார் இருக்காரே அவரைப் பார்த்துக்கணும்ங்கிற பொறுப்புகூட இல்லாம புள்ளையோட போயிட்டானே அவ புருசன்?”

“அந்தக் கொடுமையை ஏன் கேட்குறீங்க? டிவோர்ஸ்னு குடுத்தாலாவது இவங்களுக்கு வேற நல்ல பையனப் பார்த்துக் கட்டி வெச்சிடலாம். பாவம் பொங்கிப் போடவும் துணி துவைச்சிப் போடவும்கூட யாருமில்ல அவளுக்கு! வயசான காலத்துல சேகர் அங்கிள்தான் பாவம், பொண்ணுக்குச் சமைச்சிப் போட்டுக்கிட்டு, துணி துவைச்சிப் போட்டுக்கிட்டுக்கூட இருக்கார். வருண் பெருமூச்சு விட்டான்.”

”என்னவாம்? ஏன் தாரா புருசன் அவங்கப்பா வீட்டோட போயிட்டானாம்?”

”ஒண்ணுமே இல்ல மாமா. சின்ன விஷயம். தாரா புருசன் வீட்ல எல்லாரும் சுத்த சைவம். இங்கேயும் தாரா வீட்ல அப்படித்தான். ஆனா, தாராவுக்கு மீன், கறி இல்லாம சோறே இறங்காது. இந்த விஷயத்தை மறைச்சிட்டாங்க. கல்யாணமானதும் தெரிஞ்சு போச்சு. அப்பகூட கறி சமைச்சித் தரச்சொல்லி புருசனை ஒண்ணும் தாரா கட்டாயப்படுத்தல. வெளில வாங்கிட்டு வந்து சாப்பிடுவா. அது பொறுக்காம அவ புருசன் கோவிச்சிக்கிட்டுப் போயிட்டான். இப்ப ஊர்லயே வேலை பார்த்துக்கிட்டு அப்பா வீட்டோட இருக்குறான்.”

”அப்படியா?”

“ஆமாம். அநியாயம்ல? ஆனா புருசன் விட்டுட்டுப் போயிட்டாலும் தாரா கேரக்டர் படு சுத்தம். ரோட்ல போற ஒரு ஆம்பளையத் தப்பா பார்க்க மாட்டாங்க. அன்னிக்குப் பலகாரம் கொடுக்கப் போனேன், வாசல்ல தம்மடிச்சிட்டு இருந்தவங்க என்னைப் பார்த்ததும் உள்ள போயி அப்பாவை வரச் சொல்லிட்டாங்க. ஆண்களைச் சமமா மரியாதையா நடத்துறவங்க. அவங்க வாழ்க்கை போய் இப்படி ஆயிடுச்சே. ரொம்பத்தான் திமிரு அவங்க புருசனுக்கு.” – வருண்

“ஹும். இதுக்குத்தான் ரொம்பப் படிச்ச பசங்களையே கட்டி வெக்கக் கூடாது. வாய் ஜாஸ்தி!” வருணுக்குக் கேட்காத மாதிரி முணுமுணுத்த மாமா தொடர்ந்தார்.

“சேகரைப் பார்த்தாதான் பாவமா இருக்கு. மருமகன் வந்ததும் வீட்டுப் பொறுப்பை அவன் கிட்ட ஒப்படைச்சிட்டு நிம்மதியா இருக்கணும்னு சொல்லிட்டே இருப்பான். ம்ச்…”

“ஆமாம் மாமா. அதுகூடப் பரவால்ல. சில நாள் தாரா ஓவரா குடிச்சிட்டு, ‘நிம்மதியா இருந்தேன். கல்யாணம் பண்ணி வெச்சி ஏண்டா என் வாழ்க்கையை கெடுத்தே’ன்னு அப்பாவை அசிங்க அசிங்கமா திட்டுறாங்க. அதைத்தான் தாங்கவே முடியல.” வருண் வருத்தப்பட்டான்.

“ஹும்… என்ன பண்றது? எல்லாருக்கும் நல்ல காலம் வரட்டும். சரி, நான் குழம்பைக் கூட்டி வைக்கிறேன். நீ அப்புறமா மீனைப் பொரிச்சிடு.” என்றபடியே வேட்டியைக் கவனமாகச் சரி செய்து கொண்டு எழுந்தார் மாமா.

2

திங்கள் கிழமை காலை எட்டு மணி.

“ஆதிரா! டிபனுக்கு இட்லியும் சட்னியும் வெச்சிருக்கேன். லஞ்ச் சமைச்சு எல்லாமே ஹாட் பாக்ஸ்ல சூடா இருக்கு. நேரத்துக்குச் சாப்பிடு. நான் போன் பண்ணி நினைவு படுத்தலைன்னு திட்டாதே. ஃப்ளாஸ்க்ல காபி இருக்கு. நான் வரட்டுமா?”

படுக்கையில் கால் மேல் கால் போட்டு மோட்டு வளையை வெறித்தபடி கிடந்த ஆதி எல்லாவற்றுக்கும் “ம்… ம்…” என்றாள்.

சிபிக்கு அவளைப் பார்த்தால் பாவமாக இருந்தது. ஆறுமாதங்களாக வேலை எதுவும் செய்யாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறாள் ஆதிரா. எத்தனையோ வேலை வாய்ப்பு வந்தாலும் தன் இலக்கிய லட்சியத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் பிடிவாதமாக இருந்தாள். அதுவே சிபிக்கு அவளிடம் மிகவும் பிடித்திருந்தது!

மென்மையாக அவளின் முன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, “வரேன்…” என்று விடை பெற்றான்.

வாசலுக்கு வந்தவனை எதிர்வீட்டு மாமி கூப்பிட்டார்.

“சிபி, இங்கே கொஞ்சம் வாப்பா. இங்கே பாரு, உன் பொண்டாட்டி பண்ற தொல்லை தாங்க முடியல. ரோட்ல போன என் புருசனை வழிமறிச்சி என் கவிதையக் கேளு, கதையைக் கேளுன்னு உயிரை வாங்குறா. அட, தானே எழுதுன கதையச் சொன்னாலும் பரவால்ல. பெரும்பாலும் யாராச்சும் எழுதுன கதைக்குக் கண்ணு மூக்கு பெயிண்ட் எல்லாம் அடிச்சு உணர்வுபூர்வமா சொல்றேன்னு தொல்லை தாங்கல. போதாதுன்னு நைட் தண்ணியப் போட்டுட்டுக் கத்துற சத்தம் வேற எங்களால தூங்கவே முடியல. கொஞ்சம் பார்த்துக்கப்பா.”

சிபிக்கு ரத்தம் சூடேறியது.

“என் பொண்டாட்டி அவ வீட்டுக்குள்ளதானே தண்ணியடிக்கிறா? உங்க வீட்ல இல்லியே?

ஆமாம், கதை கவிதை கேளுன்னுதானே சொன்னா? உன் புருசனை வந்து கையப் புடிச்சி இழுக்கலியே? இதே மாதிரி மொக்கையா இனிமே பேசினே, நீ தான் என்னை செக்ஸ் டார்ச்சர் பண்றேன்னு கம்ப்ளெயிண்ட் குடுப்பேன் ஜாக்கிரதை.”

சொல்லி விட்டு வேகமாகத் தெருவில் இறங்கி நடந்தான் சிபி.

‘பிறை தேடும் இரவிலே… உயிரே எனைத்தேடி அலைகிறாய்….’ டீக்கடையில் பாடல் ஒலித்தது.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.