கல்லூரி நாட்களில் வகுப்பறையைத் தாண்டி அதிகம் செலவிட்ட நேரம் அனைத்தும் தேநீர் கடைகளில்தாம். ஒவ்வொரு முறையும் தேநீர் குடிக்க வருபவர்களில் யாரோ ஒருவர், “ஒரு டீ சர்க்கரை இல்லாமல்” என்று சொல்வதைத் தினமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த வசனத்திற்குப் பின்னால் இருப்பது, நீரிழிவு குறைபாடு என்று சொல்லப்படும் டயாப்படிஸ். ஆசியர்கள் அதுவும் குறிப்பாக இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் அதிகமாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்று உணவு முறை. அரிசியைப் பிரதான உணவாகக் கொண்ட ஆசியர்கள்தாம் இந்த நீரிழிவு குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுவாகவே ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு நீரிழிவு குறைபாடு வருவது சாதாரணமானது. ஆனால், எனக்குத் தெரிந்த ஒரு கல்லூரி மாணவிக்குச் சிறுவயதில் இருந்தே நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. கார்போஹைட்ரேட்டு அதிகமாக இருக்கும் உணவுகளைத் தொடர்ந்து உட்கொண்டு வருவதால் ஐம்பது வயதிற்கு மேல் ஏற்படும் நீரிழிவு நோய் நாம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், சிறுவயதிலிருந்தே அதாவது பிறந்ததிலிருந்தே இருக்கும் நீரிழிவு குறைபாட்டைப் பற்றி இங்கு நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நீரிழிவு குறைபாடு ஏற்படுவதற்குக் காரணம் இன்சுலின் என்கிற ஹார்மோன் தேவையைவிடக் குறைவாகச் சுரப்பதுதான். இன்சுலின் என்பது ஒருவகையான புரதம். இது உடலில் இருக்கும் ரத்தத் சர்க்கரையின் (blood glucose) அளவைச் சீராக வைத்திருக்கும். கணையத்தில் (pancreas) சுரக்கக்கூடிய இந்த இன்சுலின், தேவையைவிடக் குறைவாகவோ அல்லது முற்றிலும் சுரக்காமலோ இருக்கும் போதுதான் ரத்தச் சர்க்கரையின் அளவு கூடுகிறது. இதைத்தான் நீரிழிவு என்கிறோம். உலகில் பெரும்பான்மையானவர்களைப் பாதித்திருக்கும் இந்த நீரிழிவு குறைபாடானது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அதுவும் இதில் இருக்கும் இரண்டு முக்கியமான பிரிவுகளைப் பொறுத்துதான் இதன் விளைவுகளும் சிகிச்சைகளும் தீர்மானிக்கப்படுகின்றன.

டயாப்படிஸில் டைப் 1, டைப் 2 என்று இரு வகைகள் உள்ளன. அதில் டைப் 1 டயாபடிஸில் இன்சுலின் சுரத்தல் முற்றிலுமாக நின்றுவிடும். இதற்கு காரணம் நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் அனைத்தும் ஏதோ ஒரு மரபணு பிறழ்வால் தன் உடலில் இருக்கும் கணையத்தில் இன்சுலின் சுரப்பதற்கு காரணமான பீட்டா (beta cells) செல்களைத் தாக்குவதுதான். இதனால் பீட்டா செல்களின் எண்ணிக்கை குறைவதோடு இன்சுலின் சுரத்தலும் முற்றிலுமாக நின்றுவிடுகிறது. இதன் காரணமாக டைப் 1 டயாபடிஸால் பாதிக்கப்பட்டவர்கள் இன்சுலினை ஊசி வழியாக உடலுக்குள் எடுத்துக்கொள்கிறார்கள். உடலின் ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்துக்கொள்ள இந்த இன்சுலின் ஊசி பெரும் உதவியாக இருக்கிறது.

இந்த டைப் 1 டயாபடிஸ் மரபணு பிறழ்வுகளால் ஏற்படுகிறது. அதுவும் குறிப்பாக இந்த ஒரு மரபணுவில் ஏற்படும் பிறழ்வுதான் இந்த வகை டயாபடிஸ் வர காரணம் என்று சொல்லிவிட முடியாது. குறிப்பிட்ட சில மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகளின் விளைவுதான் இந்த டைப் 1 டயாபடிஸ். இந்த மரபணு பிறழ்வுகள் எதனால் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது என்பது போன்ற தகவல்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இவற்றைப் புரிந்துகொள்வதற்கான ஆராய்ச்சிகள் இன்றும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இது போக இந்த டைப் 1 டயாபடிஸ் மரபணு பிறழ்வுகளால் ஏற்படக்கூடியது என்பதால் இது ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்படும் ஆற்றல் உடையது. ஆனால், முந்தைய தலைமுறையில் அப்பாவிற்கோ அம்மாவிற்கோ டைப் 1 டயாபடிஸ் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கும் டைப் 1 டயாபடிஸ் கட்டாயமாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. பெற்றோருக்கு டைப் 1 டயாபடிஸ் இருக்கிறது என்றால் பிள்ளைகளுக்கும் அந்தக் குறைபாடு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். மற்ற மரபணுக் குறைபாடுகளைப் போல இந்தக் குறைபாடு அடுத்த தலைமுறையினரைப் பாதிப்பதற்கு எவ்வளவு வாய்ப்பிருக்கிறது என்று கணக்குப் போட்டு இத்தனை சதவீதம் வாய்ப்பிருக்கிறது என்று துல்லியமாகச் சொல்லிவிட முடியாது. எந்தெந்த மரபணுக்களில் எந்தெந்த இடத்தில் பிறழ்வுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை வைத்து இந்த வகை டயாபடிஸ் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும். இதற்கான ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் டைப் 1 டயாபடிஸ் பற்றிய சிகிச்சையும் மருத்துவமும் மேம்படும்.

அன்றாட உலகில் மக்களிடையே மிகப் பரிட்சயமான ஒன்றுதான் இந்த டைப் 2 டயாபடிஸ். இது இன்சுலின் ஹார்மோன் தேவையைவிடக் குறைவாகச் சுரப்பதினால் ஏற்படுகிறது. இன்சுலின் ஹார்மோனின் உத்தரவிற்கேற்ப உடலில் இருக்கும் செல்கள் செயல்பட்டு ரத்தச் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்கும். ஒருவேளை இந்த செல்கள் இன்சுலின் ஹார்மோனின் உத்தரவை ஏற்காமல் போனாலோ அல்லது குறைவாகச் செயல்பட்டாலோ இந்த டைப் 2 டயாபடிஸ் ஏற்படும். இது வயதானவர்களை அதிகம் பாதிக்கும். உடல் பருமன் (obesity) போன்ற இதர நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் இந்த வகை டயாபடிஸ் வரும். ஆனால், இது மிக அரிது. இந்த வகை டயாபடிஸால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் பயிற்சி, உணவு முறை மாற்றம், மாத்திரை போன்றவற்றால் தங்களின் ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்துக் கொள்ள முடியும். இந்த வகையால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரும்பாலும் இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்ளும் தேவை இருக்காது. ஆனால், இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பதை மருத்துவரிடம் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.

இந்த இரு வகைகள் தவிர, டயாபடிஸில் இருக்கும் மற்றொரு வகைதான் கர்ப்பகால நீரிழிவு குறைபாடு (gestational diabetes). இது கருவுற்ற காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஒருவகை குறைபாடு. இது கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் தேவையான அளவு இன்சுலின் சுரக்காத போது ஏற்படும். இது உடல் எடை சார்ந்ததும்கூட. மற்ற இரண்டு வகைகளைப் போல் அல்லாமல் இந்த வகை நீரிழிவு குறைபாட்டை எளிதில் உணவு முறை மாற்றம் மற்றும் முறையான சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

நீரிழிவு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்த அழுத்தம், இதய நோய், கொலஸ்டிரால் போன்றவை வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கார்போஹைட்ரேட் சத்து அதிகமாக இருக்கும் உணவு வகைகளைத் தவிர்த்து, நார்ச்சத்து அதிகம் இருக்கும் சிறுதானிய உணவுகளை உண்பது அவசியம். இது போக நடைப்பயிற்சி, யோகா, உடற்பயிற்சி போன்றவற்றைத் தொடர்ந்து செய்வது மிக அவசியம். இது பரிட்சயமான குறைபாடு என்றாலும் இதன் விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும்பட்சத்தில் அதற்கு தேவையானவற்றைச் செய்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

டைப் 2 நீரிழிவு குறைபாடுடையவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை HbA1c என்கிற ரத்தச் சர்க்கரை அளவிற்காகப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனையில் மூன்று மாதத்திற்கான ரத்தச் சர்க்கரை அளவின் சராசரியைத் தெரிந்துகொள்ள முடியும். மூன்று மாதத்திற்கான சராசரி என்பதால் இதில் நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய நிலை அதாவது pre diabetic நிலையையும் கண்டறிய முடியும். அன்றாடம் நாம் கடந்துவரும் குறைபாடு என்றாலும் இதனைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே குறைவாகத்தான் இருக்கிறது. நீரிழிவு குறைபாட்டையும், அதன் வகைகளையும், சிகிச்சை முறைகளையும், பரிசோதனைகளையும் நாம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.