பளிச்சிடும் ஒளிவிளக்குகள் கண்களைத் திறக்க முடியாமல் கூசச் செய்தது. ஆனாலும் வாழ்வில் அதுவரை எனக்கு அறிமுகமில்லாத அந்தக் காட்சிகள் அத்தனையும் கண்டு களிக்க… உள்வாங்க… மனசு துடித்தது. நூற்றுக்கணக்கான பார்கள், பப்கள், ரெஸ்டாரண்டுகள், தெரு உணவுக் கடைகள், மசாஜ் நிலையங்கள், அதிரும் இசை… ஆங்காங்கே சிறு சிறு மேடைகள்… பார்களில் இருக்கக்கூடிய டிஜேகள், பாரம்பரியமான வியட்நாமிய இசையை ரீமிக்ஸ் செய்து அலறவிடுகிறார்கள். இசை தெறிக்க, மேடை அதிர அதிர ஆணும் பெண்ணுமாக உடலை லாகவமாக அசைத்து அசைத்து நடனமாடுகிறார்கள். ஒருவர் மட்டுமே நிற்கும் அளவிலான வட்ட வடிவ கண்ணாடிக் கூண்டுக்குள் அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்கள் ஆண்களை அழைக்கிறார்கள். மலைப்பாம்பைக் கழுத்தில் சுற்றிக்கொண்டு ஒருவர் நடந்துகொண்டிருந்தார். சிறு சிறு வண்டிகளில் வியட்நாமிய உணவு வகைகளை வைத்துக்கொண்டு வியாபாரிகள் நகர்கிறார்கள். வண்டியில் இருக்கும் எந்த உணவுப் பொருளைப் பார்த்தாலும் தோலுரித்த பாம்பு போல் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஆல்கஹால் நெடி மூச்சு முட்டுகிறது. கூட்டம்… கூட்டம்…கூட்டம்… நடக்க முடியவில்லை, அந்தக் கூட்டமே நம்மைத் தள்ளிக்கொண்டு முன்னேறுகிறது. அவர்களின் உற்சாக உணர்வு நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

பகலெல்லாம் போர் பற்றிய நினைவுகளிலேயே சுற்றிக் கொண்டிருந்ததால் இரவு ஜாலியாக எங்கேயாவது போவோம் எனத் தீர்மானித்தோம். ஆளுக்கோர் இடத்தைச் சொல்ல, பெரும்பான்மை பலத்தில் வாக்கிங் ஸ்ட்ரீட் வெற்றிபெற, நடையைக் கட்டியிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த ‘டி தாம்’ என்கிற இடத்திலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் இருந்தது அந்த புய் வியன் தெரு.

புய் வியன் வாக்கிங் ஸ்ட்ரீட் என்பது ஹோ சி மின் நகரின் 1வது மாவட்டத்தில் ஏறக்குறைய ஒன்றரை கி.மீ. நீளத்தில் இருக்கிறது. புய் வியன், டி தாம் மற்றும் பாம் நு லாவொ ஆகிய மூன்று தெருக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்தத் தெரு பாங்காக்கின் சுற்றுலா தெருவான காவோ சான் தெருவுக்குச் சமமாகப் பார்க்கப்படுவதால் ‘காவோ சான் சைகோன்’ என்கிற செல்லப்பெயரும் இருக்கிறது. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் ஹாட் ஸ்பாட் இந்த வாக்கிங் ஸ்ட்ரீட்தான். பரபரப்பான பகல் பொழுதைக் கடந்ததும் சலசலப்பான கலகலப்பான சைகோனீஸ் இரவு வாழ்க்கை கோலாகலமாகத் தொடங்குகிறது. உணவு – பானம் – மசாஜ் அனைத்தும் விடிய விடிய, திகட்ட திகட்ட கிடைக்கிறது. தெருவெங்கும் இலவச வைஃபை.

அது என்ன வாக்கிங் ஸ்ட்ரீட்? நம் ஊரில் கொண்டாடப்படும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ போன்றதுதான் இந்த வாக்கிங் ஸ்ட்ரீட்டும்! என்ன நாம் ஆடல், பாடல், பாரம்பரிய விளையாட்டு என முடித்துக்கொள்கிறோம். அவர்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறார்கள்.

ஆகஸ்ட் 20, 2017 அன்று சைகோனில் வாக்கிங் ஸ்ட்ரீட் வியட்நாம் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இன்று ஹோ சி மின் நகரின் அடையாளமாகிப் போய்விட்டது, இந்த புய் வியன் தெரு. ஹனோயில் உள்ள Ta Hien தெருவும், சைகோனில் உள்ள Bui Vien தெருவும் வியட்நாமின் மிகவும் பிரபலமான இரண்டு பயணிகளின் மையமாக இருக்கின்றன. இந்தக் களேபரங்களை வேடிக்கை பார்க்கவும் அனுபவிக்கவும் மிகப் பிரபலமான புய்வியன் பியரை ஒரு கை (வாய்) பார்க்கவும், உள்ளூர் உணவு வகைகளை ருசிக்கவும் உலகெங்கிலுமிருந்து பயணிகள் வருகிறார்கள். பயணிகளின் அதீத வருகையால் உள்ளூர் மக்களால் ‘பேக் பேக்கர் மாவட்டம்’ என்றும் மேற்கத்திய கலாச்சாரம் சார்ந்த அம்சங்கள் நிறைந்திருப்பதால் Western street என்றும் அழைக்கப்படுகிறது.

1975க்கு முன்புவரை, இன்று நாம் பார்ப்பது போன்ற ஒரு பரபரப்பான பகுதியாக புய்வியன் மாறக்கூடும் என அதன் குடியிருப்பாளர்கள் கற்பனைகூடச் செய்திருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் இதைச் சுற்றியிருக்கும் ஐந்து தெருக்களும் சேர்ந்து Nguyen Van Hao Cinema (தற்பொழுது Ho Chi Minh City Drama Theater) என்றும் சர்வதேசச் சந்திப்பு என்றும் அழைக்கப்பட்டது. காரணம் அந்தக் காலகட்டத்தில் இங்கு பரவியிருந்த அச்சுக்கடைகளும் செய்தி அறைகளும் பத்திரிக்கையாளர்களையும் கலைஞர்களையும் ஈர்த்ததால் எப்போதும் இப்பகுதி சர்வதேச பத்திரிகையாளர்களால் நிரம்பியிருந்தது.

போருக்குப் பிந்தைய தேக்க நிலையிலிருந்து மீண்டு, சுற்றுலாப் பக்கம் கவனம் செலுத்தக்கூடிய நிலையை வியட்நாம் எட்டியது. வியட்நாமின் இயற்கையழகு உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுத்தது. திடீரென புற்றீசலாகக் கிளம்பி வந்த சுற்றுலாவாசிகளுக்குப் போதுமான தங்குமிடங்கள் இல்லாத நேரத்தில், குடும்பங்கள் தங்கள் வீட்டின் கீழ்தளத்தை அவர்களுக்கு வாடகைக்கு விடத் தொடங்கினர். 1990கள் வரை இந்தத் தெருக்கள் சாதாரண குடியிருப்புகளாகத்தான் இருந்திருக்கின்றன. 1986இல் அரசு சர்வதேச வியாபாரத்திற்கு அனுமதித்தபின், அயல்நாட்டு முதலீட்டை ஈர்க்க சுற்றுலாவிலும் கவனம் செலுத்தத் தொடங்கியது அரசு.

1993இல் Lonely Planet என்கிற பயணிகள் வழிகாட்டி நூல் இந்தத் தெருவை உலக சுற்றுலாவாசிகளுக்கு அடையாளம் காட்டி அறிமுகப்படுத்தியது. அதுவே சைகோன் சுற்றுலா வரலாற்றின் மைல்கல்லாக மாறியது. சுற்றுலாவாசிகளை மட்டுமல்லாது வியாபாரம் செய்ய வருபவர்களையும் ஹோ சி மின் கவர்ந்திழுக்க, 2009இல் இந்த இடம் மிக நெருக்கமான தெருவாக மாறியது. அதைத் தொடர்ந்த 20 வருடங்களில் இந்தத் தெரு பன்முகக் கலாச்சாரமிக்கத் தெருவாக, முடிவில்லாத பார்ட்டிகளாலும் சத்தங்களாலும் நிரம்பியது. ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் ஹாட் ஸ்பாட்டாக இந்த வாக்கிங் ஸ்ட்ரீட் மாறியது. பரபரப்பான நாளிலிருந்து மக்கள் இளைப்பாறுவதற்காக இதுபோன்ற இடத்தை அரசே வழங்குகிறது.

அந்தத் தெருவை நாங்கள் வந்த அன்றே பகலில் கடந்து நடந்திருந்தோம். அப்போதெல்லாம் இப்படியொரு முகம் காட்டாமல் அம்மாஞ்சி முகத்துடன்தான் இருந்தது. உணவகங்களின் மெல்லிய சத்தமும் கடந்து செல்லும் கார்களின் சலசலப்பும் மட்டுமே பகலில் இருந்தது. வார இறுதி நாட்களில் மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணிவரை வாக்கிங் ஸ்ட்ரீட்டின் முகம் தலைகீழாக மாறுகிறது. போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சூரிய அஸ்தமனம் வரை உழைப்பு உழைப்பு என்று இருக்கும் ஹோ சி மின் நகரம், அந்தி இறங்கும்போது மற்றொரு முகத்தைக் காட்டுகிறது. நாங்கள் சென்றது சனி இரவு என்பதால் கொண்டாட்டம் உச்சத்தில் இருந்தது. மீண்டும் காலை 7 மணிக்கு வேறு ஓர் அவதாரம் என அந்நியனாகவும் ரெமோவாகவும் அம்பியாகவும் தனது முகத்தை, குணத்தை மாற்றிக்கொண்டேயிருக்கிறது ஹோ சி மின் சிட்டி. முழுக்க சந்திரமுகியாக மாறியிருக்கும் அந்தத் தெருவுக்குள்தான் குடும்பமாக நுழைந்திருந்தோம். தெருவெங்கும் விதவிதமான நாற்காலிகள் கிடக்க, நாங்கள் உட்கார பரபரத்தோம். அடுத்த நிமிடம் ஓர் அழகிய இளம்பெண் அருகில் வந்து ஆர்டர் கேட்க, பிறகுதான் தெரிந்தது அங்கு பானங்கள் ஆர்டர் செய்பவர்கள் மட்டுமே நாற்காலிகளில் உட்கார முடியும் என்று. கேசினோ, பப் கலாச்சாரம், க்ரூஸ் டின்னர், இரவு ஷாப்பிங் எனக் களைகட்டுகிறது தெரு. இரவு முழுக்க சளைக்காமல் குடிக்கிறார்கள், உண்கிறார்கள், நடனமாடுகிறார்கள். தெருவெங்கும் விதவிதமான சரக்குகளுடன் அமர்ந்திருக்கும் பயணிகளால் நள்ளிரவிலும் இந்தப் பகுதி முழு உயிர்ப்புடன் இருக்கிறது. கலைஞர்கள் வழிப்போக்கர்களை மகிழ்விக்கிறார்கள். குறைந்த உடையணிந்த பெண்கள் தெருவெங்கும் தெரிகிறார்கள். இதற்குச் சிவப்பு விளக்கு மாவட்டம் என்கிற பெயரும் உண்டாம். இந்த அசாதாரணமான இரவு வாழ்க்கைதான், இந்த கிரேஸி நைட் லைஃப்தான் உலகெங்கிலும் உள்ள பயணிகளை ஈர்க்கிறது. ஒன்றரை கி.மீ. தூரத்தையும் நடந்து கடந்து கொண்டேயிருந்தோம்.

நம் ஊரில் குடித்துவிட்டு எவரேனும் எதிரே வந்தால், பயந்து போய்த் திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறோம். ஆனால், இங்கு ஊரே குடித்துக்கொண்டிருந்தாலும் பாதுகாப்பு குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. காவல்துறை கண்டிப்பானதாகவும் அதிகாரம் மிக்கதாகவும் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அங்குள்ள பெண்களைப் பார்க்கும் பொழுது பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதோ என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால், பாலியல் தொழில் சட்ட விரோதமானதாகவும், கடுமையான குற்றமாகவும், அபராதம், சிறைத்தண்டனை விதிக்கக்கூடியதாகவும்தான் இருக்கிறது.

கனவுலகிற்குள் நுழைந்த அதிர்ச்சி மாறாமல் நள்ளிரவு இரண்டு மணிக்கு அறைக்கு வந்து சேர்ந்தோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இலங்கை ‘எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களை அழகாக எழுதியிருக்கிறார். இவை இரண்டும் ஹெர் ஸ்டோரிஸில் தொடர்களாக வந்து, பின்னர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. வியட்நாம் அனுபவங்கள் இவரது மூன்றாவது தொடர்.