திருமணம்

மூன்று பெண்கள் நிறைய வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். கல்லூரிக் காலத்தின் அதே சிரிப்பும் கொண்டாட்டமும் தானாக வந்து சேர்ந்து கொண்டன.

கவிதாவுக்கு நித்தியாவின் வீட்டையும், ஹாலில் இருந்த நித்யாவின் பெரிய படத்தையும், ஃபர்னிச்சர்களையும் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. அப்படியே கல்லூரியில் இருந்ததைப் போலவே இருக்கிறாள். ஏன், அதை விடவும் கூடுதல் அழகாக இருக்கிறாள். வேலை பார்க்கிறாள். தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறாள். கல்யாணம் செய்து கொள்ளாமல் தனக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் எனக் கவிதாவின் மனம் நித்யாவைக் குறித்த ஆச்சரியத்தில் நிறைந்தது.

“நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை?” தயங்கியபடியே மெதுவான குரலில், கேட்டாள் கவிதா.

“ஆமாம் நித்யா பதில் சொல்லு… இண்டியா வாண்ட்ஸ் டூ நோ…” என்றாள் ஷாலினி சிரித்துக் கொண்டே.

கவிதாவின் கண்களில் இருந்த ஆச்சரியத்தையும் மிரட்சியும் உணர்ந்த நித்யா, “சரி, கண்டிப்பாக நான் பதில் சொல்லுறேன். ஆனா முதல்ல, நீங்க இரண்டு பேரும் ஏன் கல்யாணம் செய்துகிட்டீங்கனு சொல்லுங்க…

அதற்கு அப்புறம் நான் ஏன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை எனச் சொல்கிறேன்” என்றாள்.

“நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்? எல்லோரும் கல்யாணம் பண்ணித்தானே ஆகணும்… வேறு என்ன பண்ண முடியும்? அம்மா, அப்பா பார்த்து வைத்தார்கள். கட்டிக்கிட்டேன். அவ்வளவுதான்” என்ற கவிதாவின் பதிலில் சோர்வு தெரிந்தது.

இப்போது இருவரும் ஷாலினியை நோக்கித் திரும்பினார்கள்.

“நான் அருணைக் காதலித்தேன். அதனால் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”

“அருணைக் காதலித்தாய் சரி, ஏன் கல்யாணம் செய்து கொண்டாய்?” என மீண்டும் கேட்டாள் நித்யா.

“காதலிச்சா கல்யாணம்தான் பண்ணுவாங்க. வேறு என்ன பண்ணுவாங்க?” என்று பதில் சொன்னாள் ஷாலினி.

“இல்லை ஷாலினி… நன்றாக யோசித்து பதில் சொல். காதலிச்சா கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமா என்ன? கல்யாணம் எதுக்காகப் பண்ணின?”

“சமூகத்துல ஒரு அங்கீகாரத்தோட வாழத்தான்…”

கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு மீண்டும் ஷாலினி சொன்னாள், “சிறுவயதிலிருந்தே கல்யாணம் என்றால் எனக்கென ஒரு கனவு இருந்தது. ஒரு திருவிழா போல நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் பிடித்திருந்தது. நல்ல டிரஸ் பண்ணிக்கிட்டு, முழு அலங்காரத்தோடு நிற்கும் மணப்பெண்ணைப் பார்க்கவே மிகவும் பிடிக்கும். அங்கு நடக்கும் விருந்து, உபசாரங்களை எல்லாம் பார்த்து, என்னுடைய கல்யாணமும் ஒரு விழா போல இருக்க வேண்டும் என்கிற ஆசையே இருந்தது. ஆனால், அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்பதால், நாங்கள் இருவரும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். என்னோட குடும்பம், சொந்தக்காரங்க, பிரெண்ட்ஸ் முன்னாடி ரொம்ப ஆடம்பரமான ஒரு கல்யாணத்திற்குதான் என் மனம் ஆசைப்பட்டதெல்லாம். அதற்கு வாய்ப்பில்லை என்றதும் ரெஜிஸ்டர் மேரேஜுக்கு மனம் ஒத்துக்கொண்டது. அவ்வளவுதான்.”

நித்யா சிறு புன்னகையுடன், “ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என என்னிடம் கேட்கும் திருமணமான பெண்களிடம் நான் பொதுவாகக் கேட்கும் கேள்விதான் இது. பெருவாரியான பெண்களிடம் தெளிவான பதில் இல்லை. எல்லோரும்தானே திருமணம் செய்கிறார்கள், கல்யாணம் செய்துக்கதானே வேண்டும் என்பது போன்ற பதில்கள்தாம் வருகின்றன. போன வாரம் போன்ல நம்மகூடப் படிச்ச சுதாகிட்ட கேட்ட போது அவ சொன்னா…”

“ஏய் யாரு? பெங்களூருவுல இருக்காளே அந்த சுதாவா?” என ஆச்சர்யம் பொங்கக் கேட்டாள் ஷாலினி.

“ஆமா ஷாலினி, அதே சுதாதான். அவ சொன்னத அப்படியே சொல்லுகிறேன்…”

“நான் பி.எட். முடித்துவிட்டு ஒரு கான்வென்ட் ஸ்கூல்ல வேலை பாத்தேன். அங்குள்ள பிரின்ஸ்பல் கன்யாஸ்திரி ஏகக்கெடுபிடி. எப்படிடா தப்பிக்கன்னு யோசிச்சிட்டு இருந்தேன். ஏன்னா வேலையைவிட முடியாது. அப்பா யார் யாரையோ சிபாரிசு பண்ணி வாங்கித் தந்த வேலை அது. அப்போதான் என்னைப் பெண் பார்க்க வந்தவர், பெங்களூருவில் வேலை பார்ப்பதாகச் சொன்னார். கோயம்புத்தூரில் இருக்கும் எனக்கு, எப்படியாவது தப்பிச்சா போதும்னே இருந்திச்சி. கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ்வளவு பிரச்னைகளில் இருந்து ஓடி விடுவதே நல்லதுனு எனக்குத் தோணிச்சு. கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்.”

இது தான் சுதாவோட காரணம் என்றதும் மூவரும் சிரித்தார்கள்.

மீண்டும் தொடர்ந்தாள் நித்யா, “நான் பேசுவது உங்க ரெண்டு பேருக்கும் போரடிக்கலதானே?”

“இல்லை இல்லை நித்யா…” என்றார்கள் ஷாலினியும் கவிதாவும் ஒரு சேர.

“சரி, இப்போ இதே கேள்வியை, ஏன் கல்யாணம் செய்து கொண்டார்கள் என ஆண்களிடம் கேட்டால், எந்த மாதிரியான பதில்கள் வரும்?” எனப் புதுக் கேள்வியை முன் வைத்தாள் நித்யா.

கவிதா கலங்கிய குரலில், “உடல் தேவைக்காக, வாரிசுக்காக” எனச் சொல்லி முடித்த கணமே, அவள் கண்கள் ஈரமாவதை இருவரும் கவனித்தார்கள். கவிதாவின் முகத்தில், அவமானங்களும் தன்னைக் குறுகி குறுகிப் போக வைத்த பதிலின் ரேகைகளும் தெரிந்தன. அவளுடைய ஒற்றைப் பதில் அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை, சில வினாடிகளிலேயே அவளுடைய தோழிகளுக்குப் புரிய வைத்துவிட்டது.

கவிதாவைச் சமாதானம் செய்ய, தானாகவே முன்வந்து பதில் சொல்ல ஆரம்பித்தாள் ஷாலினி.

“என்னைக் கல்யாணம் செய்வதற்கு அருண் நிறைய அழுத்தங்கள் கொடுத்து வந்தான். இருவருமே சமூக அங்கீகாரத்திற்காகக் கல்யாணம் செய்து கொண்டாலும், ஏதோ கல்யாணம்தான் என் மீதான முழு உரிமையும் அவனுக்குத் தருவதாக இருந்தது போலும். ஆனால், எனக்கோ, அந்த முழு உரிமை அல்லது கல்யாணம் என்னை அவனுடைய உடமைப் பொருளாக ஆக்கிவிட்டதோ என எண்ணத் தோன்றும். ஏனென்றால் கல்யாணத்திற்கு முன்னால் வரை எங்களுக்குள் சண்டை இல்லை. கல்யாணத்திற்குப் பிறகு அருண் தருகிற கெடுபிடி, நான் அவனுடைய உடமைப் பொருள் என்கிற நினைப்பைத்தான் தினம் தருகிறது” என்றாள் ஷாலினி.

இப்போது நித்யா, “ம்… இந்தக் கேள்விகளை எல்லாம் நம்மைச் சிந்திக்க வைக்க மட்டுமே கேட்டேன். இவை அனைத்தும் நம் அனுபவங்களை வைத்து நாம் கொண்டிருக்கும் புரிதலகள்தாம். எனக்கும் 25 வயதில் வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்தார்கள். அந்நேரத்தில் அப்பா தவறிட்டார். திருமணப் பேச்சு அதோடு நின்றது. குடும்பப் பொறுப்பு அப்படியே என் தலையில் விழுந்தது. பிறகு ஒருவரைக் காதலித்தேன்.”

அமைதியானாள் நித்யா.

“யாரு நித்யா? தில்லைநாதனா?” என்று கேட்டாள் கவிதா.

இல்லை எனத் தலையாட்டினாள் நித்யா.

“இல்லை… தில்லை காலேஜ் படிக்கும்போது உங்கிட்ட நிறைய தடவை இது பத்திப் பேசினான். நீ காது கொடுத்துக் கேட்கவே இல்லை. இப்பவும் போன மாசம் எங்கிட்ட பேசும் போது உன்னைப் பற்றிக் கேட்டான். பெங்களூருவில் நல்ல வேலையில இருக்கான்” எனச் சொல்லி முடித்தாள் ஷாலினி.

“என்னவோ தெரியல. எனக்கு தில்லை மேல பெருசா ஈர்ப்பு ஏற்படல” என்றாள் நித்யா.

“உன்ன உள்ளங்கைல வைச்சி தாங்க இப்பவும் ரெடியா இருக்கான். உனக்கு ஏன் பிடிக்கலன்னு எனக்குத் தெரியல” என்று சொன்ன ஷாலினியிடம், போதும் எனக் கையைக் காமித்தாள் நித்யா.

“இப்போதைக்கு நான் கல்யாணம் பண்ற நிலையிலோ, அதைப் பத்தி யோசிக்கிற நிலையிலோ இல்லை” எனச் சிறிது அழுத்தமாகச் சொல்லி முற்றுப்புள்ளி வைத்தாள்.

“பற்றிக் கொள்ள ஏதும் இல்லை, என்னைத் தவிர,

சொல்லிக் கொள்ள ஏதும் இல்லை சில கவிதை தவிர,

மேலே வானம், கீழே பூமி – இடையில் நான் எனும் இந்தப் பேரதிசயம். அவ்வளவே… பசிக்கிறது… ஏற்கெனவே ஆர்டர் செய்து வைச்சிட்டேன். வாங்க சாப்பிடலாம்” என நித்யா அழைக்க, மூவரும் மேஜையை நோக்கி நடந்தார்கள்.

(தொடரும்)