கர்ப்ப காலம் என்பது 40வாரங்கள். கருவாகி, உருவாகி, குழந்தையாக வெளிவரும் வரை தாயின் கர்ப்பப்பையில் 40வாரங்கள் ஒவ்வொரு குழந்தையும் குடியிருக்கும். நாட்கள் கணக்கில் என்றால் 280நாட்கள் எனக் கணக்கில் கொள்ளலாம். ஆனால், மருத்துவர்கள் வாரக்கணக்கையே கருத்தில் கொள்வர்.

இந்த 40வாரங்கள் என்பது மூன்று மும்மாதங்களாகப் பிரிக்கப்படும்.

1-12 வாரங்கள் முதல் மும்மாதம் (1st Trimester)

13-28வாரங்கள் இரண்டாவது மும்மாதம் (2nd Trimester)

29-40 வாரங்கள் மூன்றாவது மும்மாதம் (3rd Trimester) எனவும் பிரிக்கப்படும்.

கருவின் வளர்ச்சி

1) 1,2,3வது வாரங்கள்

இந்த முதல் மூன்று வாரங்கள் என்பது கருமுட்டையானது கருக்குழாயில் இருந்து கர்ப்பப்பை நோக்கி நகரும் காலம். மிக மெல்லிய ஒரு படலமாக மட்டுமே இக்கரு காணப்படுவதால் பெரும்பாலும் இதன் வடிவத்தை நம்மால் தெளிவாகக் காண முடியாது.

2) 4வது வாரம்

4வது வார கருவை EMBRYO என அழைப்போம்.

இரண்டு அடுக்குகளாக இருக்கும் செல்கள் பிளவுபட்டு உடலுறுப்புகள் உருவாகத் தொடங்கும் முக்கிய வாரம் இது.

4வது வாரத்தில்தான் பெரும்பாலும் கருத்தரிப்பதை உறுதி செய்வோம். காரணம் மாதசுழற்சி உதிரப்போக்கு தவறியதை வைத்துதான் கர்ப்பம் தரித்து இருப்பதையே பெண்கள் அறிவர்.

3) 5வது வாரம

இந்த வாரத்தில் கரு சின்னதாகவே இருக்கும். கருவின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான வாரம் இது. இதயம் உருவாகத் தொடங்கும் வாரமும் இதுவே. இந்த வாரத்தில்தான் வாந்தி, தலைசுற்றல், சோர்வு போன்ற பிரச்னைகள் இருக்கும்.

4) 6வது வாரம்

ஸ்கேன் பரிசோதனை மூலம் கருவின் இதயத்துடிப்பைக் காணமுடியும். 6வது வாரத்தில்.கண்கள் இமைகள் உருவாகும் வாரம் இது.

5) 7வது வாரம்

10மில்லிமீட்டர் அளவு கரு வளர்ந்து இருக்கும் ஏழாவது வாரத்தில்.மூளையின் வளர்ச்சிக்கு முக்கியமான வாரம் இது. மூளை, இதயம், நுரையீரல், குடல், வயிற்றின் பிற உறுப்புகள், முகம், கண்கள்,முதுகெலும்பு என உறுப்புகள் அனைத்தும் வேகமாக வளர்ச்சிபெறும் காலம் இது.

6) 8வது வாரம்

கண் இமைகள் திறந்து மூடும். விரல்கள் வளரத் தொடங்கும்.

வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படும் வாரம் இது. ஒரு பீன்ஸ் பருப்பின் அளவிற்குக் கரு வளர்ந்து இருக்கும் இவ்வாரத்தில்.

7) 9வது வாரம்

ஸ்கேன் பரிசோதனையில் கருவின் இயக்கத்தை நன்கு காணமுடியும் இந்த வாரத்தில். கர்ப்பப்பையில் இருக்கும் கரு பனிக்குட நீரில் நீந்திக்கொண்டு இருக்கும். தாயால் இந்த அசைவுகளை உணர முடியாது. ஆனால், ஸ்கேன் பரிசோதனையில் நாம் காண முடியும் இந்த அசைவுகளை.

8) 10,11,12வது வாரங்கள்

குழந்தையின் பிறப்பு உறுப்புகள் வளர்ச்சியடையும் பருவம் இது. 11வது வாரம் வரை தாயின் இடுப்பெலும்பு கூட்டுக்குள் இருக்கும் கர்ப்பப்பை.

Pelvic organஆகவே இருக்கும் தாயின் கர்ப்பப்பை.

12வது வாரத்தில் இடுப்பெலும்பு கூட்டிற்கு மேலே தென்பட ஆரம்பிக்கும்.

Abdominal organ ஆக கர்ப்பப்பை எட்டிப்பார்க்கும் வாரம் 12வது வாரம். கருவின் உடல் உள்ளுறுப்புகள்,

வெளி உறுப்புகள் அனைத்தும் வளரத் தொடங்குவதால்

தாயின் உடல் எடை அதிகரித்து இருக்கும் இவ்வாரத்தில்.

(தொடரும்)

படைப்பாளர்:

மருத்துவர் அனுரத்னா. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஓய்வு நேரங்களில் விளிம்புநிலை மக்களை அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச்சென்று மருத்துவ உதவி வழங்குகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பிவருகிறார். பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் பங்குகொள்கிறார். மனிதி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 2012ம் ஆண்டு வெளிவந்த “மனிதநேய மாமுனிவர்” என்ற நூலின் ஆசிரியர்.