மனோன்மணி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். திரைப்படத்துக்கான கதாநாயகன், கதாநாயகியைத் தேர்ந்தெடுக்கப் பரிந்துரைக்குமாறு தயாரிப்பாளர் டி. ஆர். சுந்தரம் பத்திரிகை விளம்பரம் கொடுத்தார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தாம் பி. யு. சின்னப்பாவும், டி. ஆர். ராஜகுமாரியும் என்கிறது இணையம். திரைப்படமும் பெரும் வெற்றி பெற்று இருக்கிறது.

மனோன்மணியம் என்பது பேராசிரியர் பெ. சுந்தரம்

எழுதிய செய்யுள் நடை நாடகம். இது லிட்டன் என்னும் ஆங்கிலேயர் எழுதிய ‘இரகசிய வழி’ (The secret way) எனும் நூலைத் தழுவி எழுதப்பட்டது.

மிகப்பெரும் தமிழறிஞரான இவர் இந்த மனோன்மணியம் நாடகத்தில் எழுதிய சில செய்யுள்கள் ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தை’ என்கிற தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பெயர்தான் தற்போது திருநெல்வேலிப் பல்கலைக்கழத்தின் பெயர்.  

மார்டன் தியேட்டர்ஸ் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்து இருக்கிறது. Modern Theaters Ltd 1935ஆம் ஆண்டில் சேலத்தில் டி.ஆர்.சுந்தரம் தொடங்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். தென் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படத் தயாரிப்புக்கூடம் இது. இங்கு, 1982ஆம் ஆண்டுவரை 150க்கும் மேலான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

டி.ஏ. கல்யாணம், திரைப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். பி. யு. சின்னப்பா பாடிய, மோகனாங்க வதனி என்கிற பாடலை இசையமைக்கத் தன் உதவியாளரான K V மகாதேவனுக்கு டி.ஏ. கல்யாணம் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 1500 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்த மகாதேவன், முதல் புள்ளியாக இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது.

மனோன்மணியம் கதை

மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை சீவகன் ஆண்டு வந்தார். அவரின் தலைமை அமைச்சன் குடிலன். தன் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள, முதல் தடையாக இருப்பது மதுரை என நினைத்த குடிலன், தலைநகரை அரசனின் ஒப்புதலுடன் திருநெல்வேலிக்குத் தலைநகரை மாற்றினான்.

அங்கே கோட்டை கொத்தளங்கள் உருவாகின. மன்னன் சீவகனின் குருவாக விளங்கிய சுந்தர முனிவர், மன்னருக்கு வர இருக்கும் தீங்கைத் தடுக்க நினைத்துத் தானும் திருநெல்வேலியில் குடியேறினார்.

பாண்டிய மன்னன் சீவகனின் ஒரே மகள் மனோன்மணி. அவரின் தோழி வாணி. வாணியின் காதலன் நடராசன். வாணியின் தந்தை, தன் மகளைக் குடிலனின் மகன் பலதேவனுக்கு மணம் முடித்துக் கொடுக்க விரும்பினார்.

சேரநாட்டு அரசன் புருஷோத்தமன். இவரது உருவத்தை மனோன்மணி கனவிலேயே கண்டு காதலுற்றார். புருஷோத்தமனும், அவரது கனவில் வந்த மனோன்மணியிடம் காதல் கொண்டார்.

மனோன்மணிக்குப் பொருத்தமானவன் புருஷோத்தமனே என்பதை முனிவரும் சீவகனிடம் தெரிவித்தார். குடிலன், தன் மகன் பலதேவனுக்கே மனோன்மணியை மணம் முடித்தால் பாண்டிய நாடே தன் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என நினைத்தான்.

புருஷோத்தமனின் மனநிலையை அறிந்து கொள்ள, நடராசனை அனுப்ப குரு நினைத்தார். குடிலன், தன் மகன் பலதேவனைத் தூது அனுப்பலாம் எனச் சொன்னார். மன்னரும் அவ்வாறே பலதேவனை அனுப்பினார். பலதேவனின் சூழ்ச்சி சொற்களால், பாண்டிய மன்னன் மீது போர் தொடுக்கும் அளவிற்கு புருஷோத்தமன் எண்ணம் வந்து விட்டது.

இரு நாட்டுப் படைகளும் திருநெல்வேலியில் போரிட்டன. போரில் பாண்டியப் படை, தோல்வி அடைந்தது. சீவகன், நடராசனால், காப்பாற்றப்பட்டார். ஆனால், குடிலன், நடராசனால்தான் தோல்வி ஏற்பட்டது எனச் சீவகன் நம்புமாறு கூறினான். அதனால் நடராசனைக் கழுவேற்றிக் கொல்லும்படி சீவகன் கட்டளையிட்டார். இந்த வேளை, ஆலோசனை நடத்த வேண்டும் என்று முனிவர் செய்தி அனுப்ப, நடராசனின் தண்டனைத் தற்காலிகமாக நிறுத்தப் பட்டது.

முனிவர் அரண்மனையில் தனக்காக ஒதுக்கப்பட்ட அறையிலிருந்து தனது இடம் வரை ரகசிய வழி ஒன்றை ஏற்படுத்தி இருந்தார். அவ்வழியே மனோன்மணியை அழைத்துக் கொண்டு தன் ஆசிரமத்திற்கு வருமாறு சீவன்கனிடம் சொல்லி இருந்தார். சீவகன், குடிலனிடம் அனைத்தையும் சொல்லிவிட்டார்.

குடிலன், மனோன்மணியை முனிவரிடம் அனுப்புவதற்கு முன் தன் மகன் பலதேவனுக்கு மனோன்மணியைத் திருமணம் முடித்து அனுப்பலாம் என்றும் கூறினான். சீவகனும் அதற்கு ஒத்துக்கொண்டார். தந்தை சொன்னதால், மனோன்மணியும் பலதேவனை மணக்க ஒத்துக்கொண்டார். பின், குடிலன் ரகசிய வழியைக் கண்டறிய புறப்பட்டான். அந்த வழி சேரநாட்டுப் படைகள் தங்கி இருந்த பாசறையின் அருகில் கொண்டு போய் அவரை விட்டது.

புருஷோத்தமனைக் குடிலன் சந்தித்தான். சீவகனைக் காட்டிக் கொடுக்கும் விதமாகப் பேசினான். இவ்வாறானவன் தேவையில்லை என்ற புருஷோத்தமன், குடிலனைக் கைது செய்தார். குடிலனை இழுத்துக் கொண்டு ரகசிய வழி வழியாகத் தன் வீரர்களுடன் அரண்மனையை நோக்கிச் சென்றார். அந்த வேளையில், மனோன்மணி பலதேவன் திருமண ஏற்பாடு நடந்து கொண்டு இருந்தது. மனோன்மணி, தான் கனவில் கண்ட புருஷோத்தமனைக் கண்டதும் அவர் கழுத்தில் மாலையைச் சூட்டி அவர் மார்பிலேயே மயங்கி விழுந்தார். இருவரும் இணைந்தனர்.

சீவகன் அனைத்து உண்மைகளையும் அறிந்துகொண்டார். குடிலன் தண்டனை பெற்றான்.

மணி ஓசையுடன், The Modern Theatres Ltd Salem எனத் தொடங்கும் இத்திரைப்படத்தில் எடுத்தவுடன் நாயகி டி. ஆர். ராஜகுமாரியின் முகத்தைத்தான் நட்சத்திரத்தினுள் காட்டுகிறார்கள். கீழே அவர் பெயரையும் ஆங்கிலத்தில் போடுகிறார்கள்.

பின் மனோன்மணி எனத் தமிழில் பெயர் போட்டுவிட்டு, கதை எழுதியவர், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயர்களை ஆங்கிலத்தில் போடுகிறார்கள்.

கதை ராவ்பகதூர் பெ. சுந்தரம் பிள்ளை

இயக்கம் டி. ஆர். சுந்தரம்

வசனம் டி. வி. சாரி

பாடல்கள் பாபநாசம் ராஜகோபாலையர்

இசை கல்யாணம் குழு

என ஆங்கிலத்தில் போட்டபின் நடிகர்கள் பெயர் வருகிறது.

நடிகர்கள்

பி. யூ. சின்னப்பா

செருகளத்தூர் சாமா

டி. எஸ். பாலையா

ஆர். பாலசுப்பிரமணியம்

டி. ஆர். மகாலிங்கம்

கே. கே. பெருமாள்

என். எஸ். கிருஷ்ணன் காளி என். ரத்தினம்

எல். நாராயணராவ்

பி. ஜி. வெங்கடேசன்

பபூன் சண்முகம்

எஸ். எஸ். கொகொ

சாண்டோ நடேசம்பிள்ளை

ஏ. சகுந்தலா

டி. ஏ. மதுரம்

சி. டி. ராஜகாந்தம்

பி. ஆர். மங்களம்

பி. யு. சின்னப்பா புருஷோத்தமனாக நடித்துள்ளார்.

மனோன்மணியாக டி. ஆர். ராஜகுமாரி நடித்துள்ளார். 1939-ஆம் ஆண்டு குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான டி. ஆர். ராஜகுமாரி, தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா, எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம், எம்.ஜி.ஆர் சிவாஜி என அன்றைய அனைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் நடித்தவர்; திரைப்படத் தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர் என பல முகங்கள் கொண்டவர்.

செருகளத்தூர் சாமா முனிவர் பாத்திரத்திற்கு அப்படியே பொருந்திவிடுகிறார்.

டி. எஸ். பாலையாதான் அந்தக் கால நம்பியார். பல படங்களில் வில்லனாக வந்துள்ளார். இதிலும் அவர் வில்லன்தான். குடிலன் மகனாக வருகிறார்.

டி. ஆர். மகாலிங்கம், நடராஜன் வேடத்தில் வருகிறார். அவருக்கு இணை ஏ. சகுந்தலா. நாயக நாயகி இணையைவிட, இந்த இணை அவ்வளவு அற்புதமாக இருந்தது.

என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் மற்றோர் இணை. காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து வைக்க ஒத்துக் கொள்ளாததால், பண்டாரமாக மாறி பின் மதுரம் (செல்லம்மா) காதலிப்பதாக, NSK பாத்திரம். செல்லம்மாவின் அப்பாவை சம்மதிக்க வைப்பதற்கு, வீட்டில் இருந்த மாட்டை விரட்டி விட்டு விட்டு. முற்பிறவியில் தான் கிருஷ்ணரின் நண்பர் என நம்ப வைத்து ஏமாற்றுவது போன்ற நகைச்சுவை கதை இவர்களுக்கானது. கதை நன்றாகவே இருந்தது.

இன்னொரு நகைச்சுவை ஜோடி, காளி என். ரத்தினம் மற்றும் கோமதி. தெலுங்கு, கன்னட, மலையாள, இந்தி ஆட்கள் நால்வரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, திரும்ப கேட்க வந்தவர்களை அடித்து துரத்தும்கதை அது.

இப்படி இரு கிளைக்கதைகள் உள்ளன. படம் பார்க்கும் போது, புகழ்பெற்ற நாடகத்தை அப்படியே, சிதைக்காமல் பார்த்த அனுபவம் கிடைத்தது.

(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.