சமூகத்தில் அடையாளங்கள் பலவகை. அந்த அடையாளங்களால் வரும் பெருமைகளும் பலவகை. சில அடையாளங்களால் பெருமை கொள்ளக் கூடாது என்றும் சில அடையாளங்களால் பெருமைகொள்ளலாம் என்றும் பொது புத்தியில் பல கருத்துகள் நிலவுகின்றன. அவற்றுள் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் அடையாளங்களும் அடக்கம். ஒவ்வொருவரும் பிறக்கும் போதே பல அடையாளங்களோடு பிறக்கும் பொழுதிலும், சில நேரம் ‘identity crisis’ என்று சொல்லப்படும் அடையாளச் சிக்கல்களுக்கு ஆட்படுகிறார்கள். அடையாளம் குறித்தும் அது குறித்து நிலவும் சர்ச்சைகள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.

பொதுபுத்தி அளவில் இந்தியச் சமூகத்தில் சில அடையாளங்கள் மூலம் பெருமை படலாம் என்று இருக்கிறது. உதாரணத்திற்கு சாதி, மதம், பாலினம், தேசியம் போன்ற அடையாளங்களால் நாம் பெருமை கொள்ளலாம் என்று பொதுவில் நம்பப்படுகிறது. இந்த அடையாளங்கள் எல்லாம் பிறப்பில் இருந்து கூடவே வரும் அடையாளங்கள். சாகும் வரை மாறாது. இந்த நான்கு அடையாளங்களில் சாதி மற்றும் மதம் குறித்துப் பெருமைபடக் கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஓர் எண்ணம் தற்போது நிலவுகிறது. ஆனால், இந்த மாற்றம் பெயரளவில் மட்டுமே நிலவுகிறது. அதாவது பெயருக்குப் பின்னால் சாதிய அடையாளத்தைத் தூக்கிச் சுமக்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு. ஆனால், இன்றளவும் தமிழக மக்கள் மனதில் இருந்து சாதிய அழுக்கை முழுதாக அகற்ற முடியவில்லை.

பொது இடத்தில் ஒரு சராசரி தமிழ்நாட்டு குடிமகனிடம் சாதிய படிநிலை மற்றும் மத வெறுப்பு பற்றிக் கேட்டால், “சாதி, மத பாகுபாடு எல்லாம் பார்க்கக் கூடாது, அது எல்லாம் தப்பு” என்று கூறுவார். ஆனால், தன் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேற்று சாதி அல்லது மதத்தில் வாழ்க்கை துணையைத் தேடுவாரா என்று கேட்டால், வெளிப்படையாகப் பதில் கூறச் சற்றுத் தயங்குவார். அந்தத் தயக்கத்தில் இருந்தே அவர்களின் முற்போக்கு எண்ணங்களின் எல்லையை நாம் அறியலாம். வேங்கைவயல் முதல் நாங்குனேரி வரை சமீபகாலச் சாதிய வன்கொடுமை சம்பவங்கள் தமிழ்நாட்டில் ஏராளம். எனினும், இந்தப் பெயரளவு மாற்றத்தைச் சாத்தியப்படுத்தியது தமிழ் சமூகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற பல சீர்திருத்த நடவடிக்கைகள்தாம். இன்னும் பல தீவிரமான சீர்திருத்த நடவடிக்கைகள் நடந்தால்தான் சமத்துவமான சமூகத்தை நாம் அடைய முடியும் என்பது நாம் அறிந்ததே. அனால், சமீபத்தில் தமிழன் என்கிற மொழிவழி தேசிய அடையாளத்தைக் கொண்டாட வேண்டும் என்று பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இந்தப் பிரச்சார நெடி தமிழ்த் திரைப்படத்துறையில் அதிகமாகவே காணப்படுகிறது. “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” போன்ற திரைப்பட வசனங்கள் / பாடல் வரிகள் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு பிறந்த ஒவ்வொருவரையும் பெருமைப்படச் சொல்லி ஊக்குவிக்கிறது. இது போன்ற திரைப்படத் தாக்கத்தை எதிர்த்து அதே திரைத்துறையில் இருந்து ஒரு காட்சி பதில் அளித்து இருக்கும். சூப்பர் டீலக்ஸ் படத்தில் பாஹத் பாசில் சாதி பற்றோடு பேசும் போது, சமந்தா அதை இழிவாகக் கருதுவார். அப்போது பாஹத், “இந்தியன் என்று பெருமைகொள்ளணும், தமிழன்னு சொன்னா தலைநிமிர்ந்து நிற்கணும். ஆனால், சாதின்னு சொன்னா மட்டும் தப்பு. எல்லாம் கூட்டம் தானே? இது சின்னது, அது பெருசு. தேசத்துக்கு பக்தி, மொழிக்குப் பற்று, ஆனா சாதினா மட்டும் வெறி. செம போங்கு. இவன் சாதிங்கிற பேருல மத்த சாதிக்காரன் கிட்ட இருந்து நம்மள பிரிக்கிறான். அவன் நாடுங்கிற பேருல மத்த நாட்டுக்காரன் கிட்ட இருந்து நம்மள பிரிக்கிறான். இது தப்புனா அதுவும் தப்பு” என்று பதில் கூறுவார்.

மொத்தத்தில் இந்தத் திரைப்படக் காட்சி கூறுவது, எல்லா வகையான அடையாளமும் நம்மைச் சக மனிதர்களிடம் இருந்து பிரிக்கவே செய்கின்றன என்பதுதான். அப்போது அனைவரும் அடையாளம் இல்லாமல் இருக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஏன் என்றால், இந்தச் சமூகத்தில் வாழ ஒவ்வொருவருக்கும் இரு அங்கீகாரங்கள் தேவைப்படுகின்றன. அந்த அங்கீகாரம் ஒவ்வொருவரின் அடையாளம் மூலமாகத்தான் வழங்கபடுகிறது. எனவே, நம் ஒவ்வொருவருக்கும் அடையாளம் மிக முக்கியம். ஆனால், அந்த அடையாளம் எது என்பதில்தான் விஷயம் இருக்கிறது.

அது எந்த அடையாளம் என்று ஆராய்வதற்கு முன், கனடாவில் வளரும் தன் பெண் பிள்ளைகளுக்கு இப்பொழுதே தன் சுய சாதியில் மருமகன்கள் தேடும் ஒரு சாதியவாதி உடன் நான் நடத்திய உரையாடல் பற்றிப் பாப்போம். கனடாவில் நடைபெற்ற ஒரு விழாவில் திருமணம் பற்றிப் பேச்சு வந்தது. திருமணத்திற்கு இணையதளங்களில் துணை தேடுவதை எதிர்த்துப் பேசினார். ஏன் அப்படி என்று கேட்டதற்கு, சாதி அல்லது மதம் மறுத்து திருமணம் செய்பவர்களின் பிள்ளைகளுக்கு எந்தச் சாதி அல்லது மத அடையாளம் சூட்டுவது என்று குழப்பம் வரும் என்று கூறினார். அதனால், அந்தக் குழந்தைக்குகளுக்கு அடையாளச் சிக்கல் ஏற்படும் என்று கூறினார்.

சாதி, மத அடையாளங்கள் வைத்துக்கொண்டு கனடாவில் பிறந்து வாழப்போகும் வருங்காலச் சந்ததியினர் என்ன செய்யப் போறார்கள் என்று கேட்டேன். அதற்கு சாதி, மதம், மொழி போன்ற அடையாளங்கள் மூலம்தான் நம் இந்தியர்கள் உலகில் எங்கு சென்று வாழ்ந்தாலும் அவர்களின் தனிப்பட்ட அடையாளங்களை இழக்காமல் இருக்க முடியும் என்று கூறினார். அதுமட்டும் இல்லை, இந்த அடையாளங்களை இழந்தால் நாம் நம் பெருமைகளையும் இழந்துவிடுவோம் என்று கவலை வேறு பட்டுக்கொண்டார். நீங்கள் கூறிய அனைத்து அடையாளங்களும் குழந்தை பிறந்த போதே செவிலியர் நினைத்தால் மாற்ற முடியும். குழந்தையைப் படுக்கை மாற்றிப் போட்டு விட்டால் போதும், இந்த எல்லா அடையாளங்களையும் ஒரு நொடியில் மாற்றிவிடலாம்.

அது மட்டும் இல்லை. இந்த அடையாளங்கள் எல்லாம் பிறப்பின் அடிப்படையில் என்னோடு ஒட்டிக்கொண்டு நான் வேண்டாம் என்று விலக நினைத்தாலும் சாகும் வரை நீங்காத அடையாளங்கள். முதலில், பிறப்பே ஒரு விபத்து. இங்கு யாரும் இந்தச் சாதியில் பிறந்த, இந்த மதத்தைப் பின்பற்றும், அல்லது இந்த மொழி பேசும் பெற்றோருக்குத்தான் பிறப்பேன் என்று முயற்சி எடுத்துப் பிறப்பது கிடையாது. எனவே, என் உழைப்பே இல்லாமல் பிறந்தேன் என்கிற ஒரே காரணத்திற்காக என்னோடு ஒட்டிக் கொண்டிருக்கும் எந்த அடையாளம் கொண்டும் நான் பெருமைபட்டுக்கொள்வதில் எந்தப் பெருமையும் இல்லை என்றேன்.

முன்னோர்கள் மூலம் வரும் சாதிய அடையாளம் வேண்டாம், ஆனால் முன்னோர்கள் வழி வரும் சொத்து மட்டும் வேண்டாம் என்று சொல்ல மாட்டீர்கள், அப்படித்தானே என்றார் அவர். முன்னோர் வழி வருவது அடையாளமோ சொத்தோ, எனக்கு அது வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்கவேண்டியது நான். மாறாக இந்தச் சமூகம் என் மீது அவற்றைத் திணிக்கக் கூடாது. ஒருவேளை அந்தச் சொத்து எனக்கு வேண்டும் என்றாலும், அதைப் பற்றி நான் எந்த வகையிலும் பெருமைகொள்ள முடியாது. ஏன் என்றால், அந்தச் சொத்தை உருவாக்க நான் எந்த வகையிலும் பங்கு அளிக்கவில்லை. எனவே, என் உழைப்பு இல்லாமல் எனக்கு வரும் எந்தச் சொத்தும் எனக்குப் பெருமை தேடித் தராது. மாறாக, என் சொந்த உழைப்பில் நானே படித்து, நானே எனக்காக உருவாக்கிக்கொள்ளும் என் வேலை அல்லது தொழில்தான் என் அடையாளம். எனது கல்வி தந்த அடையாளம் மூலம் நான் உழைத்து ஈட்டிய செல்வங்கள் கொண்டுதான் நான் முழு உரிமையோடு எந்தத் தயக்கமும் இன்றி நெஞ்சை நிமிர்த்தி பெருமைபட்டுக்கொள்ள முடியும் என்றேன். அந்த அங்கிள் பாவம். அமைதியாகிவிட்டார். இவ்வாறு இனிதே இந்த உரையாடல் நிறைவடைந்தது.

பொதுவில், சுயமாக உழைத்து தனக்கென ஓர் அடையாளத்தைச் சம்பாதிக்க திராணி இல்லாதவர்கள்தாம், பிறப்பு அடிப்படையில் சமூகம் சூட்டும் அடையாளங்கள் மூலம் பெருமையைத் தேடிக்கொள்கிறார்கள். இவ்வகை பெருமைகள், சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அப்படியே தொடர வைக்கின்றன. மாறாக, ஒருவர் சொந்த முயற்சியினால் ஒப்பீட்டு அளவில் ஒரு சின்ன சாதனை செய்தால்கூட மற்றவரின் பெரிய சாதனைக்குச் சற்றும் சிறுமை ஆகாது. இங்கு நேர்மையாக உழைத்து, சுயமாக உருவாக்கப்படும் ஒவ்வோர் அடையாளமும் சமமே. எனவே, நம் சொந்த முயற்சியால் நம்மால் நமக்காக உருவாக்க முடிந்த அடையாளங்களைக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்வோம்.

படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ