ஊரிலிருந்து வருணின் அக்கா தம்பிக்குப் பொங்கல் சீர் கொண்டுவந்திருந்தார். நிலாவின் அப்பா அதில் ஏதோ குற்றம், குறை கண்டுபிடித்து முணு முணுத்துக் கொண்டிருந்தார்.

வேந்தனையும் வெண்பாவையும் ஆசையுடன் அழைத்தார் வருணின் அக்கா.

“வாங்க, வாங்க, எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்?”

“நல்லா இருக்கோம் அத்தை. நீங்க எப்படி இருக்கீங்க?”

அப்போது நிலா அந்தப் பக்கம் வந்தாள்.

எழுந்து நின்ற அக்கா, “மருமகளே” என்று மரியாதையுடன் அழைத்தார்.

“வாங்கண்ணி, எப்போ வந்தீங்க?” என்று நாத்தனாரை அலட்சியமாகக் கேட்டாள் நிலா.

“இப்பதான். நீங்க டீ சாப்டுங்க!” வருண் தந்து சென்ற டீயைக் குடிப்பதா, வேண்டாமா என்று தயங்கி நின்ற அக்கா, தம்பியை அழைத்து அவனது மனைவிக்கு டீ கொண்டு வரச் சொன்னார்.

“நீ சும்மா இரு. அவங்க இப்பதான் எழுந்து வராங்க. இன்னும் டிபனே சாப்டலை. என் பொண்டாட்டிக்கு டீ குடுக்க எனக்குத் தெரியாதா?” என்று செல்லமாகக் கோபித்தாலும் நிலாவிடம் டீயா, காபியா என்று கேட்டு அவள் காபி என்றதும் அவசர அவசரமாகக் கலந்து கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் சென்றான்.

வருணின் அக்கா குழந்தைகளுக்கு வாங்கி வந்திருந்த பரிசுப் பொருள்களைக் கொடுத்தார்.

வேந்தன் தனக்கு அத்தை வாங்கிவந்த பரிசைப் பார்த்துப் பரவசமடைந்தான். அழகான கிச்சன் செட். சின்ன கேஸ் அடுப்பு, பாத்திரங்கள், தோசைக்கல், எல்லாம் இருந்தன. கண்கள் மலர்ந்து விரிய அதைப் பிரித்துப் பார்த்தவன், “ஹை! கிச்சன் செட். எப்படி அத்தை தெரியும்? எனக்கு இது ரொம்பப் பிடிக்கும்னு?”

”உங்கப்பனும் இதே மாதிரி கிச்சன் செட் பைத்தியம்தான். எத்தனை வயசு வரைக்கும் வெச்சு விளையாடி இருக்கான் தெரியுமா?” என்று சிரித்தார் அக்கா.

”அப்படியா? ஆனா, சமையல்ல ஒண்ணும் அந்த ஆர்வத்தைக் காணோமே?” நிலா ரகசியமாகச் சொல்ல, பெரிய ஜோக் போல அக்காவும் சேர்ந்து சிரித்தார்.

வெண்பாவை அருகில் அழைத்த அத்தை, அவளுக்கான பரிசுப் பொருளைக் கொடுத்தார். ரோபாட் உருவாக்கும் செட். அதற்கான செய்முறை விளக்கங்களுடன் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு நிலாவே பரவசமானாள்.

“தாங்க்யூ அத்தை! போன தடவை மாதிரி கார்தான் இருக்கும்னு நினைச்சேன். இது ரொம்ப சூப்பரா இருக்கு!”

”வருண்!”

”என்ன நிலா?”

”என் ஃபார்மல் டாப்ஸ் எல்லாம் ஏன் துவைக்கவே இல்ல? நாளைக்கு ஆபிஸ்க்குப் போட்டுட்டுப் போக ஒரு நல்ல ட்ரஸ்கூட இல்ல.”

”நிலா, நான்தான் அன்னிக்கே சொன்னேன்ல? வாஷிங் மெஷின் ரிப்பேர்னு.”

”அதுனால?” நிலாவின் குரல் அபாயகரமாக ஒலித்தது.

”நீதானே எப்பவும் சர்வீஸ்க்கு ஆளக் கூட்டிட்டு வருவே. நான் யாரையாச்சும் கூப்ட்டு மெஷினக் கெடுத்துடுவேன், கூப்பிடாதேன்னு சொல்லுவ…”


“சரி,  எனக்கு ஆயிரம் டென்ஷன். மறந்துட்டேன். நீ ஞாபகப்படுத்தக் கூடாதா?” எரிந்து விழுந்தாள் நிலா.

…..

“ச்ச… வீடா இது! ஒரு வேலை உருப்படியா நடக்குறதில்ல.” சோஃபாவில் அமர்ந்து தலையைப் பிடித்துக்கொண்டாள் நிலா. கடும் கோபத்தில் இருக்கிறாள் என்று அர்த்தம்.

வருணின் அக்கா தர்மசங்கடத்தில் நெளிந்தார்.

“என்னப்பா வருண், வேலையில கவனமா இருக்க வேண்டாமா? கையாலயே துவைச்சுப் போட்டுடுப்பா” என்று தம்பி மனைவியின் மனம் கோணாமல் பேசினார் அக்கா.

வருணுக்கு அவமானமும் கோபமும் பிடுங்கித் தின்றது.

வாஷிங் மெஷின் அருகில் கூடை நிறைய வழிந்து கொண்டிருந்தன துணிகள்.

இன்று சரியாகிவிடும், நாளைக்குச் சரியாகிவிடும் என்று ஒரு வாரமாக மிஷினை ரிப்பேர் செய்யாமல் விட்டதில் வீட்டில் அனைவரின் துணியும் சேர்ந்து விட்டன.

அடுப்படி வேலைகளைப் பாதியில் விட்டுவிட்டு அத்தனை துணிகளையும் அள்ளிக்கொண்டு பால்கனிக்குச் சென்றான்.

முதலில் நிலாவின் வெள்ளை டாப்ஸ், தனது வெள்ளை ஷர்ட், குழந்தைகளின் வெள்ளை யூனிஃபார்ம் எல்லாவற்றையும் தனியாகப் பிரித்தெடுத்து ஒரு பக்கெட்டில் சோப்புத் தூளைப் போட்டு ஊற வைத்தான்.

பின்பு, ”நான் நன்றாகச் சாயம் போவேன்” என்று கட்டியம் கூறிய நிலாவின் அட நீலச்சுடிதாரையும் வேந்தனின் மஞ்சள் சட்டையையும் தனித்தனியாக  பக்கெட்டுகளில் ஊற வைத்தான்.

அனைவரின் அழுக்கு சாக்ஸுகளையும் தனியாக ஒரு குவளையில் ஊற வைத்தான்.

பின்பு சமையலை முடித்துவிட்டு வந்து மெதுவாக ஒவ்வொன்றாகத் துவைக்கலானான்.

நிலா காபி டீ குடிக்கும் போது மிகவும் அலட்சியமாக இருப்பாள். அந்தக் கறைகளுக்காகவே தனியாக ஸ்டெய்ன் கார்ட் வாங்கி வைத்திருப்பான் வருண். வாஷிங் மெஷினுக்குள் போடும் முன்பு கறை இருக்கும் இடத்தில் அதைச் சில சொட்டுகள் விட்டுத்தேய்த்து கறையை நீக்கிய பின்பே மெஷினில் போடுவான். இன்று எல்லாம் கையில் தான்.

அத்தனை துணிகளையும் துவைத்து விட்டு நிமிர்ந்த போது ஒன்றரை மணி நேரம் ஓடி இருந்தது.

கூடத்தில் பெண்கள் அனைவரும் அரட்டைக் கச்சேரியில். வேந்தன் கிச்சன் செட்டை ஓரமாக வைத்து விட்டுக் கிச்சனில் அடுப்பைக் கவனித்துக் கொண்டிருக்க, வெண்பா செய்த ரோபாட்டை அனைவரும் மெச்சிப் பாராட்டிக் கொண்டிருந்தனர்.

படைப்பாளர்

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.