காதல் புனிதமானதா? இல்லை சுயநலமானதா? சுகமானதா? வலியானதா? வந்ததா? வரவழைக்கப் பட்டதா? இப்படி ஓராயிரம் கேள்விகள் கேட்கலாம். காதல் இயல்பானது. அவ்வளவு தான்.

நம் ஊரில் தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து இன்று வரை வரும்
திரைப்படங்களைப் பார்த்தால், பெரும்பாலும் காதல் திரைப்படங்கள் தான்.
வரலாறு, இதிகாசம், இலக்கியம் என எதை எடுத்துக் கொண்டாலும், காதல் தவறானது என சொன்னதேயில்லை. அனைத்திலும் காதல் பொங்கி வழிகிறது. செவி வழி நுழைந்த காதல், விழி வழி நுழைந்த காதல் என காதல்களைப் பாடாத கவிஞர் இல்லை என்னுமளவுக்கு காதல் இருக்கிறது.

இப்படி, நமது வெளியுலக வாழ்வு முழுவதும் காதலால் நிரம்பி வழிகிறபோது,
வீட்டில் காதல் இருக்கக் கூடாது என்பது எவ்வளவு பெரிய முரண்? உடனே
சொல்லுவார்கள், “திருமணத்திற்குப் பின் இணையரைக் காதலியுங்கள்” என்று… அப்படியென்றால் காதலித்துக் கைபிடிப்பது என்பது ஏன் புறவாழ்வில்
கொண்டாடப்படுகிறது? காவிய நாயகர்களின் காதல்கள் மட்டும் ஏன் போற்றப்படுகின்றன? எது காதல்?

பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். கணவர், போலீஸ் அதிகாரி; மும்பையில் மாட்டுங்கா அரோரா திரையரங்கு அருகில் நடந்த கலவரத்தில் கத்தியால் குத்தப்பட்டார். அதன் பின் படுத்த படுக்கை தான். திருமணம் முடிந்து சிறிது காலத்தில் நடந்த நிகழ்வு. வீட்டில் ஒரு அறையில் ஜன்னல் ஓரமாய் படுத்து இருப்பார். கையில் எப்பொழுதும் ஒரு கண்ணாடி இருக்கும். தெருவில் வருவோர் போவோரை அந்த கண்ணாடி வழியே பார்த்து நலம் விசாரிப்பார். குழந்தைகளும் அத்தம்பதிக்குக் கிடையாது. முதிர்ந்த வயது வரை வாழ்ந்து தான் மறைந்தார்.

‘என்னால் சிரமப்படாதே’, என மனைவியிடம் எவ்வளவோ சொல்லிப்
பார்த்திருக்கிறார். மனைவி அசையவே இல்லை. மனைவி ஆதரவற்றவர் ஒன்றும் இல்லை. அவரை மிகவும் அன்புடன் வைத்து இருந்த சகோதரர் இருந்தார். ஆனாலும் மனைவி, இறுதிவரை கணவருடன் இருந்தார். குழந்தைகள் இல்லை என்றால் என்ன, உங்கள் தங்கையின் குழந்தைகள் என் குழந்தைகள் தானே என சொல்லி இறுதிவரை வாழ்ந்தார். அண்ணனுக்காகவே, அவரது தங்கை, செவிலியர் கல்லூரியில் சேர்ந்து
படித்துப் பணிவிடை செய்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மனைவியின் வாழ்க்கைத் தன்னால் பாதிக்கப் படக்கூடாது என நினைத்த கணவனுக்கு மனைவி மீதிருந்த காதல் பெரியதா, அல்லது இறுதி வரை கணவனுடனேயே வாழ்ந்த அந்த மனைவியின் காதல் பெரிதா? என்பதை நீங்களே சொல்லுங்கள்.

ஒரு ஆணும் பெண்ணும் காதலித்தார்கள். திருமணம் செய்து கொள்வதாக
இருந்தார்கள். திருமணத்தன்று காலை குளிப்பதற்கென கிணற்றுக்குச் சென்றவர் பிணமாகத் திரும்பினார்.

மணமகனே பிணமகனாய் மணப்பறையே பிணப்பறையாய்

அணியிழையார் வாழ்த்தொலிபோ யழுகையொலி யாய்க்கழியக்

கணமதனிற் பிறந்திறுமிக் காயத்தின் வரும்பயனை

உணர்வுடையார் பெறுவருணர் வொன்றுமிலார்க் கொன்றுமிலை.

என்ற ‘திருவிளையாடற் புராணம்’ பாடல் போல் அவரது வாழ்க்கை அமைந்து
விட்டது. மணப்பெண் ஏற்கனவே கர்ப்பமாகி இருந்தார். இறுதிவரை அவர், பெற்ற குழந்தையுடன், கணவனின் வீட்டில் அப்படியே இருந்து விட்டார். தாலி அவர் கழுத்தில் ஏறவுமில்லை; இறங்கவுமில்லை. அவரை யாரும் மரியாதைக் குறைவாக நடத்தவுமில்லை. இந்த இரு கதைகளில் ஒன்று பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். மற்றொன்று காதல் திருமணம். இவர்கள் எவருடைய அன்பும் மற்றவரின் அன்புக்கு எள்ளளவும் குறைந்தது இல்லை.

காதலுக்கு அங்கீகாரம்

பணக்கார பையன், நடுத்தர வர்க்கப் பெண்ணைக் காதலித்தார். ஒரு
காலகட்டத்தில் பெண்ணும் பச்சைக் கொடி காட்டினார். பையன் தனது அம்மாவிடம் சென்று சொன்னார். மகன் என்றால் கொள்ளைப் பிரியம் அந்த அம்மாவுக்கு. அதனால் பையன் விரும்பும் பெண் தான் தனக்கு மருமகள் என்ற முடிவை அவர் எடுத்தார். பெண், தனது அம்மாவிடம் வந்து சொன்னார். பையன் வீட்டில், “உனக்கு சொத்து கிடையாது; அப்படியே செல் என சொன்னால் என்ன செய்வாய்?” என அம்மா கேட்டார். பெண் சொத்துக்காக அவரை விரும்பவில்லை என்பதை நிரூபித்தார். இரண்டு
குடும்பங்களும் பேசி ஒரு முடிவிற்கு வந்தன. ஊரே மெச்சும் திருமணமாக அது இருந்தது. இரண்டு வீடுகளிலும் அது குறித்து ஒரு நாளும் ஒரு சொல்லும்
சொல்லாமல், வந்த மருமகன்/ மகளை அப்படியே ஏற்றுக் கொண்டனர்.

பையன் பெண் இருவரும் எந்த பேதமுமில்லாத பின்னணியை உடையவர்கள். தூரத்து உறவினர். கணவரின் உறவினர் என்பதால், பெண்ணின் அம்மாவிற்கு சிறு நெருடல் இருந்தது. ஆனால் கண்ணியமான காதல் என ஒட்டுமொத்த குடும்பமும் ஆதரித்தது. ஒரு பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்பெண்ணும் மகிழ்ச்சியாகத் தான் சம்மதித்து இருந்தார். ஆனால் அதன்பிறகு, அவருடன் பணிபுரிபவர், தான் அவரை விரும்புவதாக சொல்ல இவருக்கும் அவர் மீது விருப்பம் இருப்பது தெரியவருகிறது. பெற்றோரிடம் சொல்ல, நிச்சயித்த திருமணத்தை
நிறுத்திவிட்டு, இந்த திருமணத்தை மனப்பூர்வமாக பெற்றோரே நடத்தி
வைத்தனர்.

இதே நிலை இன்னொரு வீட்டில் வந்தது. அங்கு பெண்ணின் அப்பா வேண்டா
வெறுப்பாக நடத்தி வைத்தார். சாதி கடந்த திருமணம். இரண்டுமே பிற்படுத்தப்பட்ட சமூகம் தான். ஆனால் பெண் வீட்டாரிடம் ஆதிக்க வெறி இருந்தது. அப்பா இறந்ததற்கு கூட, “மூன்றாவது ஆள் மாதிரி நின்று பார்த்து விட்டுப் போ” என அண்ணன்கள் சொல்லிவிட்டார்கள்.

இந்த கதைகளில் முதல், மூன்று கதையில் வரும் தம்பதியினர் காதலை ஒரு போதும் அவமானகரமானதாகக் கருதியதே இல்லை. வருந்தியதும் இல்லை. ஏனென்றால், பெற்றோரின் முழு அங்கீகாரமும் அவர்களுக்குக் கிடைத்தது. அங்கீகாரம் பெற்ற காதல்  அவமானகரமான செயலாக மாறுவதே இல்லை. ஒரு காதலுக்கான மரியாதை என்பது பெற்றோர் கொடுக்கும் அங்கீகாரத்தில் வலுப்பெறுகிறது.

மனப்பூர்வமாக சம்மதித்த குடும்பங்களில் பெற்றோரும், உடன்பிறந்தோரும்
அவர்கள் காதல் குறித்து எந்த விமரிசனமும் பொது வெளியில் வைக்கவில்லை என்றால், ஊரும் அது குறித்து எந்த அபிப்பிராயமும் சொல்லாது. அவர்களது காதலோ, சமயமோ, அவர்களின் பிள்ளைகளின் வாழ்வில் குறுக்கிடாது. பிள்ளைகளின் திருமணத்தில், தடையாக அவர்களின் காதல் இருக்காது. மிக இயல்பான வாழ்க்கையை அவர்களால் வாழ இயலும்.

அனுசரித்துப் போவதில்லையா?

கணவன் மனைவி, ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போகிறார்களா அல்லது சண்டைக் கோழிகளாகவே எப்போதும் இருக்கிறார்களா என்பதற்கும் காதல் திருமணத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா எனக் கேட்டால் எனது பதில் இல்லை என்பது தான்.

காதல் திருமணம் செய்துகொண்ட இரு தம்பதிகள் தெரியும். ஒரு தம்பதி, இரு
பக்கமும் அனுசரித்து நடக்க வேண்டும் என்ற கூடுதல் பொறுப்புடன்
இருக்கிறார்கள். இருபக்கமும் குடும்பத்திற்கு உதவுவார்கள். அன்புடன்
இருப்பார்கள். விட்டுக் கொடுத்துப் போவார்கள். இன்னொரு தம்பதி
இருபக்கமுமே தேவைக்கு மட்டும் போகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் தேவையில் ஏதேனும்  குறைபடும்போது, நான் இணையரைத் தேர்ந்தெடுத்ததால் என்னை உங்களுக்குத் பிடிக்கவில்லை என்பதாக காய் நகர்த்தி இருபக்கம் இருந்து தப்பிக்கத் தான்  முயற்சிக்கிறார்களே தவிர, இரு பக்கமும் இணக்கமாக இருப்பது எப்படி என அவர்கள் சிந்திப்பதே இல்லை. இது அவர்களின் தனிப்பட்ட இயல்பு தான். பெற்றோர் பார்த்து வைத்திருந்தாலும் அந்த முதல் தம்பதி, இருபக்கமும் அனுசரித்துப் போயிருக்கும். இந்த இரண்டாவது தம்பதி இரு பக்கமும் குறை சொல்லியிருக்கும்.

தன் இணையைத் தானே தேர்ந்தெடுப்பது அசிங்கமா?

அமெரிக்காவில், பலரும் என்னிடம் கேட்டு இருக்கிறார்கள். எந்த பழக்கமும்
இல்லாத ஒரு ஆணுடன், திருமணமான அன்றே படுக்கையைப் பகிர முடியுமா, அசிங்கமாக இருக்காதா என… இங்கு boy/ girl friend என ஆகி, பலகாலம் ஆனபின் தான் அடுத்த கட்டத்திற்கே நகருவார்கள். அதனால் அவர்களுக்கு நமது வாழ்வு அசிங்கமாகத் தெரிகிறது.

தன் மகனுக்கு/ மகளுக்கு/ கேர்ள், பாய் பிரெண்ட் இல்லை என வருத்தமாக
சொல்லும் அம்மாக்களை இங்கு நான் பார்த்து இருக்கிறேன். நாமோ அப்படி
இருந்தால் வருத்தப் படுகிறோம். முப்பது வயதானாலும் நம் பிள்ளை யாரையாவது காதலித்தால், எப்படி பிரித்து விடுவது என ரூம் போட்டு சிந்திக்கிறோம். சரி தவறு என்பதெல்லாம் வாழும் சூழ்நிலையைப் பொறுத்ததுதான். இதில் காதலும் அடக்கம்.

முன்பு பிறந்த உடன் இன்னாருக்கு இன்னார் என பல வீடுகளில் பேசி வைத்து
இருந்து இருக்கிறார்கள். சிறு வயதில் இருந்தே காதலித்து
இருக்கிறார்கள். சிறு வயதில் சிறு வீடு கட்டி விளையாடும் விளையாட்டுகள்
குறித்துக் காட்டும் போது, அவர்கள் திருமணம் செய்வது போன்றெல்லாம்
விளையாடி இருக்கிறார்கள். அதைப் பார்த்துப் பெற்றோர் பூரிப்பு
அடைந்தார்கள் என பல 50, 60 கள் திரைப்படங்களில் பார்க்கலாம். இவையெல்லாம் காதல் இல்லையா? இந்த காதலெல்லாம் எந்த வகையில் சேர்த்தி? இப்படிப்  பேசி வைத்தபின், ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்றாலும் இருவரையும் பெற்றோர் இணைத்து வைத்து இருக்கிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், மிக இயல்பாகவே இருவரின் காதலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. சில வீடுகளில் இவ்வாறு பேசி வைத்த பெரியவர்கள், அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டால் பிரித்தும் வைத்து இருக்கிறார்கள்.

‘பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, நான் சொல்பவரைத் தான் நீ காதலிக்க
வேண்டும். எனக்கு விருப்பமில்லை என்றால் நிராகரிக்க வேண்டும்’ என்பதெல்லாம்தான் பெற்றோர் பாசமா? ஒரு காலத்தில் பிள்ளைகளின் காதலுக்குத் தூண்டுதலாக பெற்றோரே இருந்து இருக்கிறார்கள். ஆனால் தாங்களாக பிள்ளைகள் காதலித்தால், ‘இந்த வயசிலேயே உனக்கு காதல் கேட்குதா?’ என்கிறார்கள்.

இது ஒருபக்கம் என்றால், மாமா பையன் அத்தை பையன் என குடும்பம் தூண்டும் வழக்கம் நம்மிடம் இருந்தது தானே! அப்படி காதலித்தவர்கள் டூரிங்
டாக்கீஸ்களிலும், வயலிலும் வரப்பிலும், திருவிழாக்களிலும் அவர்கள் தங்கள்
காதலைப் பரிமாறிக் கொள்ளவில்லையா? அதையெல்லாம் நாம் அங்கீகரிக்காத தானே செய்தோம்? அவை மிகவும் இயல்பானவையாகவே கருத்தப்படவில்லையா? இப்போது வேறு யாரையாவது காதலித்தால் மட்டும் ஏன் குறை சொல்கிறார்கள்? அப்போது அருகருகில் அவர்கள் தான் இருந்தார்கள். இப்போது பிள்ளைகள் எங்கெங்கோ செல்கிறார்கள். பலரை சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். அது சரி என்றால், இது மட்டும் எப்படி தவறாகும்.

குழந்தைத் திருமணம் செய்த சிலர் சொல்லுவார்கள்; நானெல்லாம் ஒரு ஆணையும் ஏறெடுத்து கூட பார்த்ததில்லை என்று. அவர்களுக்கு வாய்ப்பு எங்கு அமைந்தது பார்ப்பதற்கும் நினைப்பதற்கும்?

பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்தாலும், அவர்கள் கணவன் மனைவி என வாழ்ந்து தான் குழந்தை பெறுகிறார்கள். அதை நாம் அசிங்கமாக நினைப்பது இல்லை. ஆனால் காதலிக்கும் போது, அதுவே பெற்றோருக்கு அசிங்கமாக தெரிகிறது. இது தான் நம்மிடம் இருக்கும் உளவியல் சிக்கல். உன்னால் இருக்க முடியவில்லையா என அருவருக்கத் தகுந்த முறையில் பேசும் பெற்றோர் உண்டு. இவர்களும் அவ்வாறு தான் குழந்தை பெற்றவர்கள் என ஏனோ அவர்களுக்குப் புரிவதில்லை.

பெற்றவர்களுக்குத் ‘தான் செய்வது தான் சரி’ என்ற அகம்பாவம் தான் முறையான காதலையும் கசக்க வைக்கிறது. பிள்ளைகள் மீது அன்பை வைத்தாலும், அகம்பாவத்தை வைத்தாலும், அளவுக்கு அதிகமாக நாம் வைக்கிறோம். அதன் விளைவுதான் இந்த கண்மூடித்தனமான அடக்குமுறை.

காதல் திருமணங்களும் தோல்வியும்

காதல் திருமணங்களும் பெரும்பாலும் தோல்வியிலா முடிவடைகின்றன? என கேட்டால் பலரும் சொல்லுவது ஆம் எனத்தான். அதற்குப் புள்ளி விவரம் என எதோ சொல்வார்கள். விவாகரத்திற்கு நிற்பவர்களின் அவர்களின் சதவீதம்தான் கூடுதல் என்பார்கள். இதற்கெல்லாம் ஆதாரம் உண்டா என எனக்குத் தெரியவில்லை. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஒரு வீட்டில் கணவன் குடிகாரன்; ஊதாரி. அந்த கணவனின் குணமே அது தான். காதலித்து திருமணம் செய்ததற்கும் அவரது குணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. வீட்டில் பார்த்து திருமணம் செய்து இருந்தாலும் அவர் அப்படித்தான் இருப்பார்.

இப்படி ஓராயிரம் எடுத்துக் காட்டுகள் சொல்லலாம்.  சண்டை வராத குடும்பமே கிடையாது. கணவன் மனைவியே கிடையாது. ‘என்னை அவன் கேட்டான்; இவன் கேட்டான். உன்னிடம் வந்து சிக்கிக் கொண்டேனே’ என பெற்றோர் பார்த்த திருமணத்தில் சொல்வதை நாம் பார்க்கிறோம். ஆனால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். ஆனால் காதல் திருமணத்தில் “உன்னைப் போய் கட்டினேனே” என சொல்லிவிட்டால், அது மிகவும் பெரிதாகத் தெரிகிறது. காதலித்ததனால் இவரை சமாளித்துப் போக வேண்டி இருக்கிறது என புலம்புவது போலவே, பெற்றோர் பார்த்து வைக்கும் வீடுகளிலும், புலம்பலும் சமாளிப்பும் இருக்கத்தான் செய்கிறது.

இருவர் ஒருவராக, மனமொத்து எல்லாம் வாழவே முடியாது. இருவர் மனமும் வேறு; சிந்தனை ஓட்டமும் வேறு. சண்டையே ஒரு வீட்டில் வரவில்லை என்றால், ஒருவர் தனது எண்ணங்களைக் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார்; அல்லது சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும், நமது இணையர் தானே என இருக்கிறார் என்பது தான் பொருள். இதில் இருவருமே இரண்டாவது ரகமானவர்களாக இருந்தால், சண்டை பெரிதும் இருக்காது. ஒருவர் முதல் ரகமானவராக இருந்தாலும் வீட்டில் சண்டை வரத்தான் செய்யும். நம்மில் பெரும்பாலானோர் முதல் ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

என்ன, பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்றால் அதற்கு அவர்களைக்
கைகாட்டி விடலாம். காதல் திருமணங்கள் என்றால் அது இயலாது. அவ்வளவுதான் வேறுபாடு.

தீதும் நன்றும் பிறர் தர வாரா

மனிதன் எங்கு தோற்கிறான் என்றால், தனது வாழ்வில் ஏற்படும் அத்தனை
நன்மைக்கும் தீமைக்கும் சிக்கலுக்கும் அடுத்தவர் தான் காரணம் என
கைகாட்டும் போது தான். எது நடந்தாலும் நீ தான் காரணம் என பெற்றோர்
பார்க்கும் வீடுகளில் அவர்களை நோக்கிப் பிள்ளைகள் கை காட்டுகின்றன.
பெற்றோர் சமரசம் செய்யப் போகிறார்கள். சில வீடுகளில் தாத்தா பாட்டி என ஆனபின் கூட இது நடக்கிறது. பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்றாலும், நமக்கு இவர் தான், அவருக்கு நாம் தான். நாமே நமது சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அம்மா அப்பாவின் மனதை வருத்தமடையச் செய்யக் கூடாது என நினைக்கும் கணவன் மனைவி, விரைவில் எழுந்து விடுவார்கள். தங்களுக்குள் சமரசம் செய்து கொள்ள முற்படுவார்கள்.

காதலித்துத் திருமணம் செய்தவர்கள் பெற்றோரைக் காரணம் சொல்ல முடியாது என்ற இடமே அவர்களின் வெற்றியின் முதல் படி தான். தீதும் நன்றும் நம்மிடம் இருந்து தான் பிறக்கிறது என்ற புரிதல் அவர்களுக்கு வந்து விடுகிறது.

காதலித்து திருமணம் செய்தவர்களின் வாழ்வில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் என சிலவற்றை சிந்தித்து விட்டு, நம் அருகில் இருக்கும் வீடுகளில் இருக்கிறதா என பாருங்கள். நம் வீட்டில் இருக்கிறதா எனப் பாருங்கள் கண்டிப்பாக இருக்கும். அந்த வீடுகளில் பல, பெற்றோர் பார்த்து வைத்துத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் வாழ்வதாக இருக்கும். நாம் எப்படித் திருமணம் செய்து கொண்டோம் என்பது நமக்கே தெரியும் தானே!

Photo by Gabby Orcutt on Unsplash

மாறுபட்ட குடும்ப வழக்கங்கள்

சிலர் சொல்லுவார்கள்,  வேறு வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டால்,
பழக்க வழக்கங்கள் வேறுபட்டு இருக்கும். குடும்பம் நடத்துவது சிரமம்
என்று.

ஒரே சாதியில்,  சமயத்தில் உள்ள இரு வீடுகளின் பழக்க வழக்கங்கள் ஒரே
மாதிரியா இருக்கின்றன? உங்கள் அம்மாவின் குணம், சமைக்கும் விதம் என
எதிலெல்லாம் உங்கள் மாமியாரின் செயல்கள் ஒத்துப் போகின்றன என பாருங்கள். பிறகு சொல்லுங்கள்.

எப்படி ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை வாய்ந்தவர்களோ, அவ்வாறே ஒவ்வொரு குடும்பமும் தனித்தன்மை வாய்ந்தது. இரண்டு குடும்பங்களின் தன்மைகளையும் கொண்டு தான் ஒரு கணவன் மனைவி, தங்களின் குடும்பத்தை அமைத்துக் கொள்ள இயலும்.

காதலின் பொன் வீதியில்

காதலித்துப் போனதால் மாமியாருக்கு இவரைப் பிடிக்கவில்லை என சிலரைச் சொல்லுவார்கள். பெற்றோர் பார்த்து வைத்த வீடுகளில் அவர்களை மட்டும் மாமியார்கள் கொஞ்சவா செய்கிறார்கள்? இது ஒரு ஆணாதிக்கச் சிக்கல். ஆணின் அம்மா என்ற அகங்காரம். பெண் அம்மா வீட்டிற்குப் போனால் அனுசரித்துப் போ என்பார்கள். இது ஆணடிமைத்தனத்தின் வடிவம். குடும்ப வன்முறையே இந்த ‘அனுசரித்துப் போ’ என்பதில் இருந்து தான் தொடங்குகிறது. எதாவது சொன்னால், ஆண், ‘நீ பார்த்து வைத்த பெண் தானே!’ என சொல்லி, எளிதாக தப்பித்துக் கொள்கிறான். இது குடும்ப வன்முறையை அடுத்த படிக்கு எடுத்துச் செல்கிறது. இதுவே காதல் திருமணம் என்றால், இருவருக்கும் பொறுப்பு கூடுகிறது. காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள், பெரும்பாலும் பொறுப்பாக தங்கள் வாழ்வை நடத்துகிறார்கள்.

பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் பொதுவாக சம அந்தஸ்தில் தான் நடக்கும். விதிவிலக்காகத் தான், ஏழை பணக்கார திருமணங்கள் நடக்கும். வசதியில்லாமல், படிக்காத , குடிகார மாப்பிள்ளை கையில் படித்த பெண் சிக்கிக் கொள்வதும் உண்டு. பெற்றோர் பார்த்து வைத்த திருமணத்திலும் சிறிது சிறிதாக நிலம் வாங்கி, வீடு வாங்கி, என தான் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வீடுகளும் உண்டு. மனைவிக்கு அவரது அம்மா போட்ட நகையை விற்று தொழில் தொடங்கி, வெறும் கையராக மாறியவர்களும், குடித்து அழித்தவர்களும் உண்டு. மறுப்பதற்கு இல்லை.

ஆனால், காதல் திருமணங்களில் எல்லா ஏற்றத்தாழ்வுகளும் இருக்க வாய்ப்பு
உண்டு. ஆனால் அது சிக்கலே இல்லை. பணம், வசதி படிப்பு எல்லாம் இரண்டாம் பட்சம். உண்மையில் ஒருவர் ஒருவரை அன்பு செய்தால் படிப்பு/ வசதி இருப்பவர், இணையரைக் கை தூக்கி விடுவார். இருவரும் இணைந்து மேலே வருவார்கள். ஒருவருக்கு ஒரு திறமை, வசதி இருக்கும். அடுத்தவருக்கு
கண்டிப்பாக இன்னொரு திறமை, வசதி இருக்கும்.

பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் அனைத்தும் வெற்றிகரமாகவும்
இல்லை. காதல் திருமணங்கள் அனைத்தும் தோல்வியில் முடியவும் இல்லை. வெள்ளை சுவற்றில் கரும்புள்ளி போல காதல் திருமணங்களில் இருக்கும் பிரச்சனைகள் வெளியே தெரிகின்றன. கருப்பு சுவரில் இருக்கும் பழுப்பு புள்ளிபோல் பெற்றோர் பார்க்கும் திருமணங்களில் வரும் சிக்கல்கள் வெளியில் பளிச்சென்று தெரிவதில்லை.

மொத்தத்தில் திருமணம் என்பதே கணிக்க முடியாதது தான். காதலித்துத்
திருமணம் செய்து கொண்டு, சண்டை போடுபவர்களும் உண்டு. நன்றாக
வாழ்பவர்களும் உண்டு. பெற்றோர் பார்த்த திருமணத்தில் சண்டை போடுபவர்களும் உண்டு. நன்றாக வாழ்பவர்களும் உண்டு. பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களிலும் கணவன் மனைவிக்குள் விரிசல் வருகிறது. குடும்ப உறவினருடன் விரிசல் வருகிறது. அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. ஆனால், காதல் திருமணம் என்றால், அவை அனைத்தையும் ‘காதல் தான் காரணம்’ என்ற
வண்டியில் ஏற்றி விடுகிறோம். அவ்வளவுதான். எல்லா பிரச்சனைகளுக்குமான ஒரே காரணமாக நாம் சொல்லுவது  “காதல் காதல் காதல்”. ஆனால் உண்மை அது அல்ல என்று தான் அனுபவம் உணர்த்துகிறது.

-இன்னும் வரும்.

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.