காதல் என்கிற சொல்லை உச்சரிக்கும் போதே பதின் பருவத்தினருக்கு மட்டுமல்ல சில முதிர் பருவத்தினருக்குக்கூட மனம் இனித்துக் கிளுகிளுப்பூட்டும். ஆமாம், இந்தக் காதல் என்றால் என்ன? இரண்டு உயிர்களுக்கிடையே ஏற்படும் ஓர் ஈர்ப்பு, இனம் தெரியாத அன்பு, தன்னலமற்ற அக்கறை, சேர்ந்து வாழ வேண்டும் என்கிற உணர்வு இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதே இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல். காதல் என்கிற சொல் பிற்காலத்தில் தோன்றிய ஒன்று. காமம் என்றே முன்னோர் காதலைச் சுட்டினர். காதலுக்குரிய கடவுள் காமன் என்று அழைக்கப்பட்டான். அவனுடைய கோயில் காமக்கோட்டம் என்று அழைக்கப்பட்டது.

உலகம் தோன்றிய காலம் தொட்டே காதலும் தோன்றிவிட்டது. உலகின் முதல் பெண்ணுக்கும் ஆணுக்கும் இனவிருத்திக்காகத் தோன்றிய விருப்பம் நாளடைவில் காதலாக வடிவெடுத்திருக்கலாம். ஆதியில் காதல் என்பதே கிடையாது. தாய்வழிச் சமூகத்தில் பெண் தலைமை தாங்கினாள். அன்றைய இரவை யாருடன் கழிப்பது என்கிற முடிவை அவளே எடுத்தாள். வேட்டையிலோ போரிலோ வென்ற ஆணை மட்டுமே அவள் தேர்ந்தெடுத்தாள். ஏனெனில் அப்போதுதான் வலிமையான வாரிசு பிறக்கும் என்பதால். அதனால் ஆணுக்குப் பெண்ணை அடையத் தன் வலிமையை அவளுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் பின்னர் தலைமைப் பொறுப்பு ஆணின் கைக்குச் சென்றபின் திருமணம், குடும்பம், சமுதாயம் என்று பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி அவளைத் தன் உடைமையாக அறிவித்தான். அதனால்தான் அன்றைய ராஜ்ஜியங்களுக்கு இடையிலான போர்களில் இதர பொருட்களைப் போலவே பெண்களையும் வெறும் பொருளாகக் கருதிக் கவர்ந்து சென்றார்கள். பெண்கள் பொருட்டு யுத்தங்களும் மூண்டன.

இன்னாருக்கு இன்னார் மீது இத்தனை மணிக்குக் காதல் பிறக்கும் என்று வரையறுக்க முடியாது. ஆனால், இயற்கையின் மாயவிசையில் இருவருக்கு இடையில் அன்பு ஊற்றெடுப்பதின் மர்மம் மட்டும் இன்னும் விளங்கவில்லை. அந்த இருவர் பெண்ணும் ஆணுமாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் கிடையாது. LGBTQIA+ ஆகவும் இருக்கலாம் என்கிற புரிதல் இப்போதுதான் மெல்ல ஆரம்பித்திருக்கிறது.

ரோமானிய அரசன் இரண்டாம் கிளாடியுஸ் மிமி ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்றும், இதுவரை நடந்த திருமணங்களை எல்லாம் ரத்து செய்வதாகவும் அதிரடி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். ஏனென்றால் ஆண்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்களது வீரம் குறைந்து விடுமென்ற எண்ணத்தினால் இத்தகைய கட்டளையைப் பிறப்பித்திருக்கிறார். எனவே திருமணத்துக்கு தடை விதித்திருக்கிறார். இதனால் நாட்டிலுள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இத்தகைய சூழலில் திருமணம் செய்துகொள்ள விருப்பம் கொண்ட ஆண்களுக்கு வேலண்டைன் என்கிற பாதிரியார் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து வைத்தார். இதை அறிந்த மன்னன் அவரைக் கைது செய்து தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தார். சிறையில் இருக்கும் போது சிறைக் காவலரின் பார்வையிழந்த மகள் அஸ்டோரியஸ் மீது காதல் கொண்டார் வேலண்டைன். அவள் அவரைச் சிறையிலிருந்து விடுவிக்க முயற்சி செய்தாள். இவ்விஷயம் அவளது தந்தைக்குத் தெரியவே, அவளை வீட்டுச் சிறையில் வைத்தார். அந்தக் காதல் நிறைவேறவில்லை. வேலண்டைனின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாள்  கி.பி.270 பிப்ரவரி 14. ஆகவேதான் அன்றைய தினத்தைக் காதலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

காதலுக்கு என்று ஒரு குறிப்பிட்ட தினத்தைக் கொண்டாடுவது மேல்நாட்டினரிடமிருந்து ஒட்டிக் கொண்ட வழக்கம் என்றுதான் நாம் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் சங்க காலத்திலேயே காதலர் தினம் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பது வியப்புக்குரிய விஷயம். வேலண்டைன் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பே காதலர் தினத்தைக் கொண்டாடியவர்கள் நாம்.

காதல் என்பது தன்னலம் கருதாது. தன் இணைக்காகவே உருகும். என்றாலும் காதல் என்கிற ஒன்றுதான் இன்றும் உலகத்தை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. பண்டைய தமிழருக்கு வீரமும், காதலும் இரு கண்களாக இருந்தன. மாசி மாத சித்திரை நட்சத்திரம் தொடக்கத்தில் இருந்து பங்குனி மாத சித்திரை நட்சத்திரம் வரையிலான இருபத்தெட்டு நாட்கள் அந்தக் காதல் பெருவிழாவை அரசர் முதல் சாமானியர் வரை எல்லாருமே கொண்டாடி மகிழ்ந்தனர். இலக்கியங்களில் இந்திர விழா காவிரி பூம்பட்டினத்தில் நடந்ததாகக் குறிப்பிடுகின்றனர். சிம்மனூர் செப்பேட்டில் மதுரையிலும் இந்திர விழா கொண்டாடியதாக ஒரு குறிப்பு இருந்திருக்கிறது. அன்று இந்த விழா பின் பனிக் காலமான மாசி மாதத்தில் கொண்டாடப்பட்டு இருக்கிறது. இன்றும் நாம் பின்பனிக் காலமான பிப்ரவரியில்தான் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறோம். 

பின்பனிக் காலத்தை ஏன் தமிழர் தேர்ந்தெடுத்தனர் என்றால், மழைக்காலம் முடிவுற்று முன்பனியான கடும்பனியில் வாடியிருந்த செடிகொடிகள் துளிர்த்து, வசந்தத்தின் வாயிலில் நுழையும் காலமாதலால் இயற்கையிலேயே உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் ஊற்றெடுக்கும் என்பதால் இந்தக் காலத்தைத் தமிழர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் போலும். மேலும் பூக்கள் அரும்பி மலர்ந்து கண்ணுக்கு விருந்தளிக்கும் காலமும் இஃதே.

  “கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்

   வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்

   பங்குனி முயக்கத்து பனியரசு யாண்டுளன்..” 

                        (சிலம்பு: 14: 110-112

கொண்டற்காற்று பாண்டியனின் கூடல் நகரிலே புகுந்து நெடுவேளான மன்மதனின் வில் விழாவைக் காணும் பின்பனிக் காலமாகிய பனியரசன் எங்குள்ளான் எனக் கேட்டது என்று கூறும் இளங்கோவடிகள் மதுரை நகரில் நடந்த காதல் விழா ஆகிய வில்விழாவைச் சொல்கிறார். இவ்விழா காமன் விழாவும் ஆனதால் இது பங்குனி முயக்கம் என்று அழைக்கப்பட்டது. முயக்கம் என்றால் காணுதல் என்றும் தொடர்ந்து காணுதல் என்றும் இருவிதமான பொருள் இருக்கிறது.

அகநானூறும்

 “வருபுனல் நெரிதரும் இகுகரை பேரியாற்று

 உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற் 

 பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்..”

                                   (அகம் : 137: 8-9)

எனப் பேரியாற்றங்கரையில் நடந்த காதல் விழாவைப் பங்குனி முயக்கமாகக் காட்டுகிறது.

இதனைச் சோழ நாட்டினர் பங்குனி விழாவாகவும், சேர நாட்டினர் உள்ளி விழாவாகவும் கொண்டாடினர் என்பதை,

 “கழுமலர் தந்த நல்தேர்ச் செம்பியன்

  பங்குனி விழாவின் உறந்தையொடு

  உள்ளி விழாவின் வஞ்சியும் சிறிதே..”

என்கிற நற்றிணைப் பாடல் விளக்குகிறது.

உறையூர்ப் பங்குனி விழா ஊர்கொண்ட பெருவிழாவாக நடந்தது என்று இறையனார் அகப்பொருள் உரை கூறுகிறது. உள்ளி என்பது நினைத்தல், விழைதல், தேடல் என்கிற பொருள்களில் வருவதால் காதலரைத் தேடும் விழா உள்ளிவிழா என்று அழைக்கப்பட்டிருக்கும். 

வில்லவன் விழா, வேனில் விழா, உள்ளி விழா, இந்திர விழா, பங்குனி விழா போன்ற விழாக்களில் காதல் கடவுளைப் போற்றியும் காதலை உயர்வாகச் சிறப்பித்தும் தமிழர்கள் பெரிதும் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். பின் படிக்க காலம் எனப்படும் இளவேனிற் காலம் காதல் கடவுளுக்குரிய காலமாகக் கருதப்படுகிறது. கரும்பு வில்லையும், ஐந்து வகை மலர்களால் ஆன அம்பையும் கொண்டுள்ள காமக் கடவுளுக்கான வில்லவன் விழாவாகவும் இது கொண்டாடப்பட்டது. 

சோழ அரசனான தூங்கெயில் எறிந்த நெடுங்கோட் செம்பியன் என்பவன் பொதிகை மலையில் தங்கியிருந்த அகத்தியரின் ஆலோசனைப்படி காமன் விழாவை அரசவிழாவாக நடத்தத் தொடங்கினான். இவ்விழாவை மாசித் திங்களில் கால்கோள் இட்டு பங்குனித் திங்கள் சித்திரை நட்சத்திரம் வரை இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான் என மணிமேகலை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காதலர் தினப் பெருவிழாவை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று செம்பியன் கூறியுள்ளதைப் பார்ப்போமா? காதலர்கள் கூடிக் களிக்கும் இடங்களில் பந்தலிட்டுக் குளிர்ச்சியான ஆற்று மணலைப் பரப்ப வேண்டுமாம். விழா அரங்கங்களில் நல்ல அழகான இன்பம் பொங்கும் விதத்தில் உரையாளர்களைப் பேசச் சொல்ல வேண்டுமாம். பேச்சுத் திறன் உடையவர்கள் சமயத் தத்துவங்களைக் காதலர்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமாம். வாதங்களை மென்மையாக வாதிட்டே தீர்த்து வைக்க வேண்டுமாம். பகைவரைக் கண்டால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போய்விட வேண்டுமாம். மென்மையான மணல் குன்றுகளிலும், மலர் நிரம்பிய சோலைகளிலும், குளிர்ச்சியான ஆற்றங்கரையிலும், மரங்கள் தாழப் படர்ந்து நிழல் கொடுக்கும் நீர்த் துறைகளிலும் கூடிக் களிக்கும் மக்கள் ஒற்றுமையாக இருக்கத் தேவையான காவல் ஏற்பாடுகளைச் செவ்வனே செய்ய வேண்டுமாம். நம் மக்கள் எப்படிக் காதலர் மாதத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?.

சோழர் காலத்தில் யவனர் என்கிற பெயரில் ரோமானியர்கள் தமிழகத்தோடு வணிகத் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை. அதன் பொருட்டு இக்காமன் விழா குறித்த செய்திகளால் கவரப்பட்ட ரோமானியர்கள் தாங்களும் கொண்டாட ஏற்படுத்திக் கொண்டதே இந்த நவீன காதலர் தினக் கொண்டாட்டம் என்று கருத நிறைய வாய்ப்பிருக்கிறது. 

இத்தகைய காதல் பெருவிழா காலப் போக்கில் மறைந்து மீண்டும் தொண்ணூறுகளில் உயிர்ப்பித்தது. அன்றைய காதலர்களுக்கு வாழ்த்து அட்டைகள், இதய வடிவ கீ-செயின்கள் போன்றவை அன்பைப் பரிமாறிக்கொள்ள உதவிய பரிசுப் பொருட்கள். தகவல் தொடர்பு கடினமாக இருந்த அக்காலத்தில் இந்தப் பொருட்கள் அவர்கள் காதலை வற்றாமல் இருக்கச் செய்தன. எண்ணற்ற நாவல்கள், திரைப் படங்கள், பாடல்கள் போன்றவை காதலைப் போற்றின. மில்லேனியத்தின் துவக்கத்தில் கணினி வருகைக்குப் பின் இந்த வாழ்த்து அட்டைகள் மெல்ல மறையத் தொடங்கி இப்போது வழக்கொழிந்தே போயின. நினைத்தால் பேசிக்கொள்ளும், பார்த்துக்கொள்ளும் டிஜிட்டல் யுகத்தில் காதலிக்கோ/காதலனுக்கோ காத்துக் கொண்டிருக்கும் நேரம் மிச்சமாகத் தொடங்கியது. இதனால் கனவின் மாயா லோகத்தில் இருந்து விடுபட்டு மிச்ச வேலைகளைப் பார்க்கும் பொறுப்பும் இளைய தலைமுறைக்கு வந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. காதலுக்காக உருகாமல் யதார்த்தத்தைப் புரிந்துகொள்வோர் பெருகி வருகிறார்கள். 

அதே நேரத்தில் இன்னும் அதிகமாக காதலுக்குள் சாதி, மதங்களின் கிளைகள் ஊடுருவியிருக்கின்றன. அவை தங்கள் கோரப் பற்களை மறைத்துக்கொண்டு மர்மப் புன்னகை புரிகின்றன. காதலைக் கொண்டாடும் இந்த மண்ணில்தான் மகளோ/மகனோ வேறு சாதியில்/மதத்தில் காதலிக்கிறார்கள் என்று தெரிந்ததும் கையில் அரிவாளை எடுக்கிறார்கள். அல்லது, “இந்தக் குடும்ப கௌரவத்தையும்.. அப்பாவோட மானத்தையும் காப்பாத்தணும்னா நீயே தூக்குக் கயித்தை மாட்டிக்கம்மா” என்று நீலிக்கண்ணீர் விட்டுக் காதலைத் தொங்க விடுகிறார்கள்.

பள்ளிப் பருவத்தில் முகிழ்க்கும் அறியாக்காதல் முதல் திருமணம் தாண்டிய காதல் வரை எத்தனையோ காதல்களையும், காதலர்களையும் இந்த உலகம் கண்டிருக்கிறது. “ஒரு செடியில் ஒருமுறைதான் பூப்பூக்கும்..” போன்ற அசட்டுத் தனங்கள் மறைந்து, “ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா.. நர்ஸு பொண்ணைக் காதலி..” என்றும்,  “த்ரிஷா இல்லனா திவ்யா..” என்றும் காதலும் “ஒரே காதல் ஊரில் இல்லையடா..” என்று அப்டேட்டாகிப் போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால், திடீரென்று முளைக்கும் இந்தக் கலாச்சாரக் காவலர்கள்தாம் காதலர் தினத்தன்று கண்ணில் படுவோரைப் பிடித்து ஒரு மஞ்சள் கயிற்றைக் கொடுத்து கட்டச் சொல்லி வற்புறுத்தி கேவலப்படுத்துகிறார்கள். 

காதலர்கள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், உண்மையான காதல் மீது எந்த விமர்சனமும் இல்லை. உண்மையான நேசம் என்பது இணையரை அவரது குறைகளுடனும் ஏற்றுக் கொள்வதே. நமக்குப் பிடித்த மாதிரி இணையரை மாற்ற முயலாமல், அவருக்குப் பிடித்த மாதிரி நம் சுயம் தொலைத்து நாமும் மாறிவிடாமல், அவரவர் நிறை, குறைகளை அடுத்தவர் புரிந்து கொண்டு, பிரிந்தே இருக்கும் இரு தண்டவாளங்கள் போல சேர்ந்தே பயணிப்பதுதான் உண்மையான காதல். அத்தகைய காதல் வாய்த்துவிட்டால் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட சோதனைகள் வந்தாலும் அந்தக் காதலின் மெல்லிய இழை எல்லாவற்றையும் தகர்த்து எறிந்துவிடும். பிப்ரவரி மாதத்துப் பின்பனிக் காலம் மட்டுமல்லாது எல்லாப் பருவகாலங்களிலும் திகட்டத் திகட்டக் காதலிப்போம். அன்பைப் பகிர்வோம். இளமையில் வருவது மட்டுமல்ல காதல். உடல் மீதான ஈர்ப்பு குறைந்த பின்னும் பொங்கிப் பெருகுவதே காதல். ஆதலினால் காதல் செய்வோம் செகத்தீரே! 

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ என்கிற நூல்களாக வெளிவந்திருக்கிறது.