மானுட வரலாற்றில் திருமணம் என்பது மட்டுமே பெண் வாழ்வின் பாதுகாப்பு கேடயம், அதிலும் தாய்மை என்பது மட்டுமே அவள் வாழ்வின் பரிபூரண நிலை என்பதாகத்தான் சமூகம் கற்பித்து இருக்கிறது. அந்தத் திருமண பந்தத்தில் ஏற்படும் துன்பங்கள், அந்தத் திருமண பந்தத்தைத் தக்க வைத்துக்கொள்வது என சர்வமும் பெண்ணின் கரங்களில் அடக்கியிருக்கிறது சமூக அமைப்பு. ஆணுக்கு என்று எந்தக் கட்டுகளும் அவனுக்கு என்று இல்லற வாழ்வில் எந்தப் பொறுப்புகளும் கிடையாது என்பதுதான் சமூக நீதியாக வைத்து இருக்கிறது.

வாழ்வின் தன் ஒவ்வொரு தேவைக்கும் பெண் என்பவள் போராடிக் கொண்டே இருப்பது போலதான் திரை ஊடகங்களும் திரையிட்டுக் காட்டுகின்றன. போராட்டத்தையும் பொறுமையையும் பெண் என்பவள் மாண்டு மடியும் வரை கடைபிடித்துக்கொண்டே இருக்க வேண்டும் அவள் வாழ்நாளில் என்கிற இந்தச் சமூக நிலைப்பாடு என்றுதான் கலையுமோ?

நெடுநாள் கழித்து என் தோழியிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. உற்சாத்துடன்  என்னடி எப்படி இருக்க என்றேன்.  ‘ம்ம்… நல்லா இல்லை, எனக்குச் செத்துரலாம் போலத் தோணுது. என்னால வீட்ல இருக்க முடியல. சரி, அம்மா வீட்டுக்குப் போய் இரண்டு நாள் இருக்கலாம்ன்னு போனேன். என் மாமியார் போன் பண்ணி ஏன் மலட்டு…….? என்ன உங்க ஆத்தா வீட்ல போய் இருந்தா வேலைக்குப் போற  என் பையனுக்கு யாரு சமைச்சி போடுவா? குழந்தை பெத்துக்கதான் துப்பு இல்லை. வீட்ல வந்து ஒழுங்கா சமைச்சி போட்டு வேலைய பார்க்கவும் முடியாதா என்று திட்டிவிட்டு வைத்துவிட்டார். என் கணவர் போன் போட்டு நீ  இப்ப வரல நான் செத்துருவேன் பார்த்துக்கன்னு அப்புறம் உங்க வீட்லயே இருந்துக்கலாம்ன்னு சொன்னாரு. நான் உடனே கிளம்பி வந்துட்டேன். இப்ப என்னால இங்க இருக்க முடியல. 5வருசமா ட்ரீட்மென்ட் எடுத்து மருந்துலாம் சாப்பிட்டது வேற எனக்கு வயிறு வலிக்கு அடிக்கடி என்னால தாங்க முடியல என்றாள்’ கண்ணீருடன்.

ஹாஸ்பிடல் போனியா என்றேன். ‘ ஹ்ம்ம் போனேன். டெஸ்ட் எடுத்தாங்க. ஒண்ணுமே இல்லை எல்லாம் நார்மல்னு சொல்லிட்டாங்க எனக்கு இதுவரை ட்ரீட்மென்ட் எடுத்த மாத்திரைதான் வயிறு புண்ணாக இருக்கக் காரணம்னு சொல்லிட்டாங்க. வயிறு வலி தாங்க முடியலன்னு  சொன்னா, நடிக்காத வயிறு வலின்னு வேலை செய்ய சோம்பேறித்தனம் பண்றியா? பொய் சொல்லதான்னு சொல்லறாரு என் கணவர். ஒவ்வொரு மாசமும் என்ன குளிச்சிட்டியா? நீ  என்ன பாவம் பண்ணியோ ஒரு புள்ள பெத்துக் குடுக்க துப்பில்லை அப்டினு சொல்லி எங்க மாமியார் பேசுறத தாங்க முடியல இப்ப என்னதான் செய்யுறது’ என்று சத்தமாக அழ ஆரம்பித்தாள்.

அம்மாவிடம் சொன்னீயா என்று கேட்டேன்.

’ஆமா, அவங்க நான் என்ன பண்ண கட்டிக் கொடுத்தச்சி இனி உன் பாடு, உன் புருஷன் பாடு. செத்தாலும் நீ அங்கதான் இருக்கணும், அதுதான் பொம்பளைக்கு லட்சணம்னு சொல்லிட்டாங்க, எந்தத் திருமணத்துக்கும், வளைகாப்புக்கும், குழந்தை பிறந்த வீட்டுக்கும் போக முடியல, ஏன் இவ இங்க வந்தாங்கற மாதிரி பார்க்குறாங்க. நான் போற ஒரே விஷேசம் கிரேத வீடு மட்டும் தான். இறந்தவங்கள குளிக்க வைக்க மட்டும் தான் என்ன கூப்பிடறாங்க ஊர்ல’ என்று சொல்லி கொண்டே அழுது தீர்த்தாள்.

என்னால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. நான் நாளை வந்து பார்க்கிறேன், அதுவரை நீ தப்பான முடிவுக்குப் போகாதே என்று அலைபேசியை வைத்துவிட்டேன். அவளைச் சந்திக்கும் போது நான் என்ன சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். குழந்தை இல்லாத அவளின் வேதனையை ஆற்ற முடியாதுதான். எந்தப் பெண்ணுக்குதான் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை இருக்காது. பெண் என்பவள் என்ன இயந்திரமா? திருமணம் ஆனவுடன் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட வேண்டுமா? குழந்தை வேண்டும் என்பதற்காக எத்தனை கோயில் குளங்களைச் சுற்றி இருப்பாள்?  பல மருத்துவமனையின் வாசலில் தவம் கிடந்திருப்பாள். தாய்மை என்பதை செயற்கை முறையிலாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயன்று தன் உயிரையும் உடல் நலனையும் பொருள்படுத்தாது விரதங்களையும் மருந்துகளையும் அனுசரித்து இருப்பாள். தன் உயிரை ஈந்தாவது தன் மீது சுமத்தப்பட்ட கலங்கத்தைத் துடைக்க எண்ணியவளின் உயிர் இங்கு கேள்விக் குறி ஆகிப்போனது வேதனைதான்.

ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் பெண்ணை மட்டும் குற்றவாளியாக நிற்க வைத்துவிடுகிறது இந்தச் சமுதாயம். எத்தனையோ தடவை சொல்லி இருப்பேன், எத்தனையோ குழந்தைகள் ஆதரவின்றி பெற்றோராக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களைத் தத்து எடுத்துக்கொள் என்று. ஆனால், மனிதர்களின் மனம் தத்து எடுத்துக் கொள்ளும் கருத்தை ஏற்றுக்கொள்ளவதில்லை.குழந்தை பெற்றுக் கொண்டால் மட்டுமே பெண் என்பவள் பூரணப்படுகிறாள், குழந்தை பெற்றால் மட்டுமே அவள் தாய்மை என்னும் உணர்வு அடைவதாகக் கற்பனைகளைப் புகுத்திவிட்டது பெண்ணின் மனதில்.

நாம் பெண்ணியச் செயல்பாட்டை நடைமுறைப் படுத்தினாலும் இல்லற வாழ்வில் ஆணின் வாழ்வும் பெண்ணின் வாழ்வும் ஒன்றானது அல்ல என்பதை மட்டும் காலம் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. இல்லற வாழ்வின் எல்லாச் சூழ்நிலையிலும் ஆணின் பணி என்பது எதுவுமே இல்லை, எல்லாம் பெண்ணைச் சார்ந்துதானே அமைகிறது. குழந்தை பேற்றில் தொடங்கி சர்வமும். எல்லாப் பெண்களின் வாழ்க்கை பக்கமும் ஒவ்வொரு விதமான கேள்வியால்தான் நிரப்பப்பட்டு இருக்கிறது. அதற்கான பதில்களை அப்பெண்கள் மாத்திரமே எழுத முடியும். அதனால் தோழியை நான் சந்திக்கும் போது அவள் உயிரின் மதிப்பை அவளுக்குப் புரிய வைக்க வேண்டும். அவள் மரணம் என்பது இதற்குத் தீர்வு அல்ல என்பதை உணர்த்த வேண்டும். மரணத்திற்குப் பின்பு அவளைப் பற்றிய நினைவுகள் யாருக்கும் இருக்கப் போவதில்லை. அவள் தாய்மை அடையாததற்கான குற்றம் அவள் மீது மட்டும் இல்லை.  அவள் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொண்டிருக்க வேண்டியது இல்லை என்பதைக் கற்றுத் தர வேண்டும். இது மட்டும்தான்  அவளுக்குச் செய்ய வேண்டியது என்பதை மட்டும் தீர்மானித்துக் கொண்டேன்.

நட்சத்திரா

ஆய்வக நுட்பனராக மருத்துவமனையில் பணிபுரிகிறேன். இதுவரை புத்தக வாசிப்பு மட்டுமே கொண்டிருந்தேன். இது என்னுடைய முதல் எழுத்துப் பணி.