”என்ன… ஆபிஸுக்கு பார்ட்டி டிரெஸ்ல போற?” எனக் கேட்ட அருணை, லேசாக முறைத்துவிட்டு, மேக்கப்பைத் தொடந்தாள் ஷாலினி.

”இன்னைக்கு ஆபிஸ்ல சின்ன ஃப்ங்ஷன் இருக்கு.. நான் லன்ச் வைக்கல… நீங்க அந்த ஹோம் டெலிவரி கிட்ட சொல்லி வாங்கிக்கோங்க.”

”பரவாயில்லை. நான் பாத்துக்கிறேன்” என்றான் அருண்.

அந்த ரம்யமான ரெஸ்ட்டாரெண்ட் வாசலில் நுழைந்தவளின் மேல்,  சூரியன் வரைந்த விளிம்புக் கோடுகள், அவள் நெளிவுகளைச் செம்மையாகச் செதுக்கியபடி இருந்தன. அந்த நெளிவுகளின் அசைவில் மனம் லகுவாகி எங்கோ பறந்தபடி இருந்தது.

அவள் அருகே வர வர, காத்திருந்த அவன் கருவிழிகள், காற்றேறும் நீர்க்குமிழி போல பெரிதாகிக் கொண்டிருந்தது. அந்தச் சிவப்பு நிற கவுன், அவளுக்கு அவ்வளவு கச்சிதமாக இருந்தது.

வெயில் வெளிச்சத்திலிருந்து, உள்ளே வந்தவளுக்கு எல்லாம் இருட்டாகவே தெரிந்தது.

நவீன் கையசைத்தான்.

அந்த டேபிளுக்கு வந்து, நவீனின் எதிரே உட்கார்ந்து கொண்டாள்.

”நீ இந்த டிரெஸ்ல அழகா இருக்கே…”

”தேங்க் யூ…”

ஷாலினிக்குச் செய்வது சரியா, இல்லை தவறா, இங்கு வந்திருக்க வேண்டாமோ எனப் பல எண்ண அலைகள் உள்ளே எழுந்து, அடங்கிக் கொண்டிருந்தன. பல ஆண்டுகள் பரிச்சயமானது போன்ற உணர்வு நவீனுக்கு.

”ஷாலினி, நீ எப்போதுமே அழகுதான். எனக்கு உன்ன முதல்முறையா பார்க்கும்போதே புடிச்சு இருந்துச்சு…”

நவீனின் கண்களில் தெரிந்த ஆர்வத்தையும் உருவத்தில் தெரிந்த மிடுக்கையும் வெளித் தெரியாமல் ரசித்தாள்.

”சரி, என்ன சாப்பிடுற?”

”ஏதாவது ஜூஸ்?”

”ஒரு மொகிட்டோ ப்ளீஸ்…” என்றவனை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டிருந்தாள் ஷாலினி.

எவ்வளவு சமர்த்தாக இருக்கிறான். ரொம்ப டீசண்டாக இருக்கிறான் என்று நவீனைச் சிலாகித்துக்கொண்டாள்.

”நீங்க ஏதோ பேசணும்னு சொன்னீங்க…”

”ஆமா… நான் சொல்றேன்…” சட்டென்று அவள் அருகே வந்து உட்கார்ந்துகொண்டான்.

”நாம ஃபியூச்சர் பத்திப் பேசலாமே” என்றவாறே அவளின் கையை எடுத்துத் தன் இடக்கையில் வைத்துக் கொண்டு, தன் வலக் கையால் மெதுவாக அவளின் கை பெருவிரலின் அடியிலிருந்து மேலாக அழுத்தி நீவிவிட்டான். ஒவ்வொரு விரலுக்கும் அதே அழுத்தம் தந்தான். உள்ளங்கையில் சரியான அழுத்தத்தில் சிறு வட்டமாக அழுத்தி, அப்படியே பெரிய வட்டமாக வரைந்தான். அந்த மசாஜ் அவளுக்கு அவ்வளவு ரிலாக்ஸ் ஆக இதமாக இருந்தது.

நகத்தின் நுனியை மிதமாக அழுத்துகையில், அவன் கையில் அந்த வெள்ளைக்கல் மோதிரம் இல்லாததைக் கவனித்தவளின் இதயம் ஒரு நிமிடம் துடிக்க மறந்தது போல இருந்தது.

”நீங்க உங்களைப் பத்திச் சொல்லுங்க” என்றாள்.

”ம்… சொல்றேன்… முதல்ல நீ ஏதாவது சாப்பிடுறியா?”

இரண்டு சாண்ட்விச் ஆர்டர் செய்துகொண்டான்.

”நான் என்ன பத்தி உனக்கு என்ன சொல்ல, கூட இருக்குறவங்கள எப்போதுமே சந்தோஷமா வச்சிருப்பேன். அவங்களோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.”

கை மணிக்கட்டை இதமாக வருடியபடியே, ஷாலினியின் கண்களைப் பார்த்துக் கேட்டான், “ஷாலினி, நீ ரொம்ப டயர்டா இருக்க…எனக்குமே டயர்டாதான் இருக்கு. என்னோட வீடு ரொம்ப பக்கம் தான், அங்க போய் கொஞ்சம் ரிலாக்ஸா உக்காந்திருக்கலாம்.”

ம்… என்று தலையசைத்தாள்.

இம்முறை அவனுடன் காரில் போவது மிகவும் பிடித்திருந்தது அவளுக்கு. காரின் கீயைச் சொருகியவன், சட்டென கைகளை எடுத்து முத்தமிட்டான். ஷாலினியின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

வாசலில் செடிகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

“ஷாலினி ஏதாவது சாப்பிடுறியா?”

”இல்லை…”

”இதை மட்டுமாவது குடி” என அவள் முன்னால் ஒரு கப்பைக் கொண்டு வைத்தான்.

அந்தக் கண்ணாடி கப்பில் இருந்த, ரத்தச் சிவப்பு நிற திரவம் அழகாக இருந்தது. படிகத்தின் ஜொலிப்புடன் ஜில்லென்றிருந்த கப்பைக் கையில் வைத்திருக்கவே அழகாக இருந்தது.

கொஞ்சம் சுவைத்தபடி, “இது ஃப்ரீசரா?” எனக் கேட்டாள்.

“ஆமா…”

“அஞ்சு வருஷத்துக்கப்புறம், இப்போதான் பாக்குறேன்…” என்றாள் ஷாலினி சுவைத்தபடி.

அவள் அருகில் வந்து அமர்ந்துகொண்டான் நவீன்.

“உங்க அம்மா  இருக்கறதா சொன்னீங்க… எங்க? உங்க ஒய்ஃப் எங்க?”

“இரண்டு பேரும் இங்க இல்லை…”

“ஏன்? எங்க போனாங்க?” என்று

வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருந்த இதழ்களின் அசைவுகள் அவனை இம்சிப்பதாயிருந்தது. அவளுக்கு இன்னும் மிக அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். அவள் அதரத்தின் ஈரத்தை, அவன் உதடுகள் மேலும் ஈரப்படுத்தின. அவளுக்குள் புதிதாக ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்து போல இருந்தது. வாழ்வின் சில கணங்கள் அப்படியே நீண்டுவிட வேண்டும் என்று தோன்றும். அப்படித்தான் இருந்தது ஷாலினிக்கு நவீனுடனான அந்தப் பொழுது.

அந்த நிசப்த நொடிகளின் தத்திக் கடக்கையில்                                                   அவன் முத்தம் தந்த உன்மத்த நிலையின் உச்சத்தில் இமைகள் இரண்டும் மூடிக்கொள்ள எத்தனிக்கையில் உள்ளிருந்து கேள்வி ஒன்று எழுந்தது.

அந்தக் கேள்வியை அப்படியே கேட்டாள், “ நவீன், இந்த ரிலேஷன்ஷிப்பை எப்படிக் கொண்டு போறதா உத்தேசம்?”

ஒரு நொடியில் ஆடிப்போனான் நவீன்.

அவளைத் தோளோடு சாய்த்தபடி, “எனக்குத் தெரியல” என்று மெதுவான குரலில் கிசுகிசுத்தான். 

கொஞ்சம் சுதாகரித்துக் கொண்டு எழும்பி அடுத்த சோபாவில் உட்கார்ந்துகொண்டாள் ஷாலினி.

“ஏன் என்ன ஆச்சு?”

“இல்லை … எனக்குத் தலை வலிக்கிறது. கொஞ்சம் தலை சுற்றுவது போல இருக்கிறது.”

“சரி.. இரு இரு… உனக்கு சோடா தர்றேன்.”

சோடாவில் லெமன் பிழிந்து, உப்பும் சக்கரையும் சேர்த்துக் குடிக்க வைத்தான்.

“இப்போ சரியாகிவிட்டதுதானே?”

“ஆமா, ஃபீலிங் பெட்டர்…”

அவள் தோள்களைத் தழுவிக்கொண்டே, “ஷாலினி கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்து போயேன்” என்றான்.

கொஞ்சம் தயங்கியவளிடம், “ நான் உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன். நீ தாராளமா தூங்கலாம்” எனச் சிறு நேசப் புன்னகையைக் காட்டினான்.

ஷாலினியின் மனதில் இனம் புரியாத உணர்வு.

தூங்கி விழிக்கையில் லேப்டாப்பும் கையுமாக இருந்தான் நவீன். மேஜையில் ஆர்டர் செய்து வைத்திருந்த சாப்பாடு பிரிக்கப்படாமல் இருந்தது.

”நல்லா தூங்கினியா? சாப்பிடலாமா?”

பல ஆண்டுகள் தொலைத்த தூக்கத்தை அந்த ஒரு மணி நேரம் தந்தது போல இருந்தது.

சாப்பிட்டுவிட்டுப் புறப்படத் தயாரானவள், மீண்டும் கேட்டாள், “உங்க அம்மாவும் ஒய்ஃபும் எங்க?”

“அம்மா அவுங்க தங்கை வீட்டுக்குப் போயிருக்காங்க. ஒய்ஃப் டெலிவரிக்காக அவுங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்காங்க” எனக் கண்களைப் பார்த்துச் சொன்ன நிவினை இன்னும் அதிகமாகப் பிடித்துப் போனது ஷாலினிக்கு.

நட்பாக ஒரு முறை அணைத்துவிட்டு, புறப்படத் தயாரானாள். அவள் உலகம் அவன் ஞாபகங்களால் மட்டுமே நிரம்பி இருந்தது.

(தொடரும்)