September 12, 2023

அவசர அவசரமாக வந்து உட்கார்ந்தவளுக்கு, மேஜையிலிருந்த கப்பைப் பார்த்ததும் சற்றே ஆசுவாசம் வந்தது. அந்த மஞ்சள் சீனக் களிமண்ணாலான கப்பில் கண்சிமிட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தது ஒரு பெண் முகம். அந்த கப்பிலிருந்து வந்த வாசனையில் சொக்கித்தான் போனாள் ஷாலினி.

அதிலிருந்து மணம் பரவ, ஒரு வகை சுகம் அவள் மனதிலும் பரவியது. மிடறு மிடறாக அருந்தத் தொடங்கினாள். தொண்டை வழியாகப் பொறுத்த சூடும், சுவையோடு வாசனையும் உள்ளே இறங்கியது. ஒவ்வொரு மிடறும் ஒரு ஸ்பரிசம். ஒரு மிடறுக்கும் அடுத்த மிடறுக்குமான இடைவெளி ஒரு வகை இதம் தந்தது. தொண்டையில் ஒருவித இளஞ்சூடு பரவ, நாவில் நரம்புகள் மெலிதாய் சிலிர்க்க, காபி வாசனையை நுகர்ந்தபடி கண்களை மெதுவாக மூடி, நாற்காலியில் தலையை மெல்ல சாய்த்தாள். வியர்க்க விறுவிறுக்க வந்தவளுக்கு, ஏசி அறையில் காபியின் துணையில் தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளமுடிந்தது.

மொபைல் போன் அழைக்கவே, கண்களைத் திறக்க விருப்பம் இல்லாதவளாக மொபைலைத் தேடினாள். டிராயரில், தேடிக் கிடைக்கவில்லை. கைப்பையில்தான் இருக்க வேண்டும் எனக் கைகளால் துழாவினாள். மொபைலைத் தவிர அத்தனையும் கைக்குத் தென்பட்டன. சாக்லேட், லிப்ஸ்டிக், டிஷ்யூ பேப்பர், புத்தகம் என ஒவ்வொன்றாக வந்தன. சரி, யாராக இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் என நிதானமாக காபியைக் குடித்து முடித்தாள் ஷாலினி.

இரண்டு நாள் கழித்து கம்ப்யூட்டரை ஆன் செய்தவளுக்கு, மெயில் பாக்ஸில் இருந்த அத்தனை மெயில்களையும் பார்த்து தலை சுற்றியது. இரண்டு நாள் லீவ் எடுத்தாலே இதுதான் பிரச்னை. சரி, பார்த்துக்கலாம் என்றவாறே கண்களை ஸ்க்ரீனில் பரவவிட்டாள்.

பின்னால் நின்று கொண்டு, கைகளில் இருந்த பேப்பரால் மெதுவாக ஷாலினியின் தோளில் தட்டி, ஹலோ என்றான் நவீன். அவள் திரும்பும் வேளையில் பக்கத்தில் இருந்த சேரைத் தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, ஷாலினியின் பக்கத்தில் உட்கார்ந்தான். “என்ன ஆச்சு? கொஞ்சம் டல்லா இருக்குறது போல இருக்கு. ஏதாச்சும் பிரச்னையா?” என்று கரிசனத்துடன் கேட்டான்.

“ஐயோ, இல்லை அப்படியெல்லாம் இல்லை” என வேகமாக மறுத்தாள்.

“ஏன், ரெண்டு நாளா ஆஃபீஸு க்கு வரவில்லை?” என்று கேட்டான் நவீன்.

“என்னோட பர்சனல் வேலைக்காக லீவ் எடுத்திருந்தேன். மத்தபடி எதுவும் இல்லை. ஆமா, அதுக்கு முன்னாடி, நீங்ககூட ஒரு வாரம் லீவ் போட்டு இருந்தீங்க போல… பாக்கவே முடியவில்லை” என்றாள் ஷாலினி.

அறையின் அடுத்த பக்கத்திலிருந்து, யாரோ நவீன் எனக் கூப்பிட, இதோ வருகிறேன் என்று சீட்டிலிருந்து எழுந்து கொண்டான்.

ஷாலினிக்கோ மனத்தைப் போட்டுக் குடைந்தது. ‘எதுக்கு பிரச்னையான்னு கேட்டான்? எனக்குப் பிரச்னைன்னு இவனுக்கு எப்படித் தெரியும்? ஏன் இப்படிக் கேட்டான்? பாக்க அப்படித் தெரியுதா என்ன?’ என்று கேட்டுக்கொண்டே, ரெஸ்ட்ரூம் நோக்கி நடந்தாள்.

கண்ணாடியில் முகம் கொஞ்சம் மங்கலாகத் தெரியவே, லைட்டை ஆன் செய்துகொண்டாள். மையிட்ட கொஞ்சம் பெரிய கண்கள், நேர்த்தியாகத் திருத்தப்பட்ட அடர்த்தியான புருவங்கள், அணிந்திருந்த சுடிதாருக்கு மேட்ச் ஆகும் நிறத்தில் லிப்ஸ்டிக் போடப்பட்ட மெல்லிய உதடுகள்.

நான் நல்லாதானே இருக்கேன், எதுவும் தெரியவில்லையே?. நவீன் எதுக்கு அப்படிக் கேட்டான் எனப் புரியாமல் குழம்பினாள்.

கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளலாம் எனச் சொல்லிக்கொண்டே தன் சீட்டுக்கு வந்தாள். டிராயரில் இருந்து சின்னக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு, லிப்ஸ்டிக்கை எடுக்க, கைப்பையில் துழாவினாள். இப்போது கையில் போன் வந்தது. கூடவே வந்து போன மிஸ்டு கால் நினைவிற்கு வந்தது. போனைப் பார்த்தாள். அருணிடம் இருந்து இரண்டு முறை மிஸ்டு கால் வந்திருந்தது. பெயரைப் பார்த்ததும் முகமே மாறிப் போனது.

இன்னைக்கு என்ன சொல்லப் போகிறானோ என்று கவலையும் கோபமுமாக இருந்தது. மீண்டும் ஸ்கிரீன் அருண் காலிங் எனக் காட்டியது. ஒரு நொடி எடுக்கவா, வேண்டாமா என யோசித்தவள், போனை எடுத்தாள்.

“ஷாலு… ஷாலு… தயவுசெய்து போனை கட் பண்ணிடாத… ப்ளீஸ் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு. உண்மையிலேயே நான், அதை வேணும்னே சொல்லல.. கோபத்துல பேசிட்டேன். அன்னைக்குத் தண்ணி வேற அடிச்சு இருந்தேன். என்ன பேசுறதுன்னு தெரியாம அப்படிப் பேசிட்டேன். மன்னிச்சுக்கோ. நான்…”

ஷாலினி இடை மறித்து, “இத பாருங்க.. நான் ரெண்டு நாள் கழிச்சு, இன்னைக்கித்தான் ஆபீசுக்கு வந்திருக்கிறேன். ஆபிஸ்ல நிறைய வேலை இருக்கு. நான் அப்புறமா உங்க கிட்ட பேசுறேன். இப்போ பேச முடியாது. தயவுசெய்து புரிஞ்சிக்கோங்க” என்றபடியே போனைத் துண்டித்தாள்.

மீண்டும் கம்ப்யூட்டரில் மூழ்கிப் போனாள். ஆபீஸ் வேலையின் பரபரப்பில் எல்லாம் மறந்தே போனது. மீண்டும் போன் அடித்தது, மணியைப் பார்த்தாள். சரியாக 4 எனக் காட்டியது. போனை எடுத்தவள், இப்போது அருணிடம் நிதானமாக பேச ஆரம்பித்தாள்.

“சொல்லுங்க, எதுக்கு கால் பண்ணிங்க?” “ஷாலு, நான் சொல்றத கேளு. நான் கோபத்துல குடிபோதையில் அப்படிப் பேசிட்டேன். நான் இனிமே குடிக்கவே மாட்டேன்னு, உனக்கு சத்தியம் செஞ்சு தரேன். அன்னைக்கு நடந்தத மனசுல வைச்சிக்காத; வீட்டுக்கு வந்துரு. நீ இல்லாம வீடே வெறிச்சோடி இருக்கு. நான் சாயந்திரம் உன்னோட ஆபீஸ்க்கு வரட்டுமா?”

ஷாலினிக்குக் கோபம் தலைக்கேறியது. அவனிடம் காட்டிக்கொள்ள வேண்டாம் என நினைத்தவள், “சரிங்க, எனக்குக் கொஞ்சம் டைம் தாங்க. நான் சாயந்தரம் 6 மணிக்கு உங்கள கூப்புடுறேன். அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்” என அமைதியாகச் சொல்லி போனைத் துண்டித்தாள்.

‘ச்சை… தலைய கொண்டு போய் முட்டிக்கலாம் போல இருக்கு. 2 நிமிஷம் பேசினாலே, இவ்வளவு டென்ஷன தந்துட்டு போறானுங்க.. ச்சை…’

அருண் வீட்டிற்குச் செய்வதற்கு, அல்லது எனக்குச் செய்யவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. அது எதையுமே இதுவரை செய்ததில்லை. நான் குடிய விடப் போகிறேன் என்பதை ஏதோ எனக்கு வைர நெக்லஸ் வாங்கித் தர மாதிரியும் சொந்தமா அப்பார்ட்மெண்ட் வாங்கி அதுல என்னைக் குடி வைக்கப் போறது மாதிரியும் சொல்கிறான்.

பல நேரங்களில் சாதாரண விஷயங்களைக்கூட ஆண்கள் எவ்வளவு பெரிதுபடுத்திச் சொல்கிறார்கள். நமக்குப் பிறக்கும் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிறேன் எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்வது எல்லாம் என்ன மனநிலை? அடுத்த வீட்டுப் பிள்ளையைச் சோறு ஊட்டி, குளிப்பாட்டி பார்த்துக் கொண்டால், சொல்லிக் காட்டலாம். தான் பெத்த பிள்ளையைப் பார்ப்பதில் என்ன பெருமை வேண்டி கிடக்கு? எனக்கென செய்ய வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு…

குடிக்காமல் இருப்பதுதானே நார்மல், அதை எப்படிப் பெரிய சாதனை போல பேசுகிறான்? அவன் குடிக்காமல் இருந்தால் அவனுக்கு , அவன் உடல் நலத்திற்குதான் நல்லது. அதை ஏன் எனக்கு நல்லது செய்வது போலச் சொல்கிறான்?

ஒரு வேளை இவன் ஆணாகப் பிறந்துவிட்டதையே பெருமையாக, சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கிறானோ…

நினைத்தாலே எரிச்சலாக இருந்தது.

இன்றோடு 2 நாட்கள் ஆகிவிட்டன, சென்னையின் இன்னொரு பகுதியில் இருக்கும் தன் அக்கா வீட்டிற்கு வந்து.

அன்றைய நாளின் மூன்றாவது காபியை ருசித்தவளுக்கு, அருணைப் பற்றிய நினைவுகளைவிட, காபி மேலானதாக, இதம் தரும் ஒன்றாகவே இருந்தது.

காபி…

காபியை என்னமோ உற்சாகப் பானம் என்கிறார்கள். இங்கு பலருக்கு அதுதான் வலிகளை மழுப்பி, செக்கு மனிதர்களாக ஓட வைத்துக்கொண்டிருக்கிற கானல் நீர் பானம். அதனால்தான் நிறைய முதல் சந்திப்புகள் காபியில் நிகழ்கின்றனவோ?

(தொடரும்)