“நிலா, நாளைக்குச் சாயங்காலம் மறந்துடாதே!”

“என்ன?” லாப்டாப்பிலிருந்து கண்ணை எடுக்காமல் கேட்டாள் நிலா.

“ஒரு நிமிஷம் இங்கே பாரேன், பேசிட்டு இருக்கேன்ல?”

“சொல்லு வருண். கேட்டுட்டுத்தானே இருக்கேன்… நாளைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு, அதுக்கு ப்ரெசென்டேஷன் ரெடி பண்ணிட்டு இருக்கேன். சொல்லு” என்று சிடுசிடுத்தாள் நிலா.

“நாளைக்கு உங்க சித்தப்பா பொண்ணு கல்யாண ரிஷப்சன் இருக்கு. போன மாசமே பத்திரிகை வெச்சாங்க… காலையில் கல்யாணத்துக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்டே… ஈவினிங் ரிஷப்சனுக்காச்சும் போகணும். உன் புது சாரிஸ்கூட அயர்ன் பண்ணி வெச்சிருக்கேன்” என்றான் அவளது பாராட்டை எதிர்பார்த்தபடி.

“ஹய்யோ ஆமாம்ல… கிஃப்ட் வாங்கிட்டியா?”

“……”

சென்ற வார இறுதியில் ஷாப்பிங் போகலாம், அப்போது சேர்ந்து போய் வாங்கலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அயல்நாட்டிலிருந்து வந்த தோழி திடீரென்று ட்ரிப் ஏற்பாடு செய்துவிட்டதால் வெள்ளியன்று மாலை கிளம்பிப் போன நிலா திங்கள் காலைதான் வந்தாள். இடையில் போனையும் எடுக்கவில்லை.

வருண் மௌனமாக முறைப்பதை உணர்ந்த நிலா,

“ஹேய், சாரி சாரி. பட் ப்ளீஸ்டா… கொஞ்சம் ஆபிஸ்லேருந்து சீக்கிரமா கிளம்பிப் போய் ஏதாச்சும் வாங்கிட்டு வந்துடறியா? எனக்கு ஈவினிங் லேட்டாகும்” என்றாள்.

”ரெண்டு பேரும் போய் வாங்கலாம்னு தானே…”

“இதுல என்ன இருக்கு. உன் சாய்ஸ் சூப்பரா தாண்டா குட்டி இருக்கும். சாடர்டே, சண்டே நீயே போய் வாங்கி இருக்கலாம். எனக்காக வெய்ட் பண்ணி ஏன் டைம் வேஸ்ட் பண்ற?”

எப்போதும் இப்படித்தான். நிலாவின் உறவினர் விசேஷங்களைக்கூட வருண்தான் நினைவில் வைத்திருக்க வேண்டும். எந்தக் குழந்தைக்கு எப்போது பிறந்தநாள், திருமணநாள் என்று எல்லாமும் நினைவு வைத்து வாழ்த்துச் சொல்ல வைப்பதும் வருண்தான்.

திருமணம் முடிந்து விருந்துக்கு அழைப்பது மட்டுமல்ல, ஓய்வு நேரத்திலோ திடீரென்றோ யாரும் வந்துவிட்டால், தன் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களை இன்முகத்துடன் உபசரிப்பதில் வருணை அடித்துக் கொள்ள யாருமில்லை. நிலா வீட்டில் இருப்பதே அதிசயம் என்று அலுத்துக்கொள்வதில் உள்ளூரப் பெருமை வேறு.

ஆனால், இந்த முறை என்னவோ சலிப்பாக இருந்தது. முக்கியமான மீட்டிங் வேறு. அதையே மிஸ் செய்துவிட்டுத் தான் நிகழ்ச்சிக்குப் போக வேண்டும். லேசாக முணு முணுத்து முகத்தை உம்மென்று தூக்கி வைத்துக்கொண்டான் வருண். நிலா ஓரக்கண்ணால் கவனித்தாள்.

”இப்ப என்ன ஆச்சுன்னு மூஞ்சைத் தூக்கி வெச்சிருக்கே? எங்கேயும் போறதில்லன்னு புலம்ப வேண்டியது. ஒரு ஃபங்ஷன் வருது ஜாலியா போகலாம்னா அதுல ஒரு பிரச்னை பண்ண வேண்டியது. கிஃப்ட் எல்லாம் வேண்டாம் பேசாம மொய் கவர் குடுத்துடலாம்.” வேலையை எளிதாக முடிக்க ஒரு தீர்வை முன் வைத்தாள் நிலா.

“ஐயோ வேணாம். அது நல்லா இருக்காது. நானே போய் வாங்கிட்டு வந்துடறேன்.” வருண் அவசரமாக மறுத்தான்.

“வேணாம், சொன்னாக் கேளு வருண், ரொம்ப அலட்டிக்காதே!”

“உனக்கென்ன, லேடிஸ்கு இதைப் பத்தி எல்லாம் எந்தக் கவலையும் இல்ல. உன் சித்தப்பாவும் மத்த அண்ணன் தம்பிங்களும் குத்திக் குத்திக் காமிப்பாங்க.” வருண் கழுத்தை நொடித்தான்.

“என்னவோ பண்ணு போ. என்னை வேலை செய்ய விடு.” பிரச்னை முடிந்து தன் தலை தப்பியது என்று வேலைக்குள் மூழ்கினாள் நிலா.

”சரி, உன்கிட்ட பேசினாலே லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கு. ஒரு டீ போட்டு எடுத்துட்டு வாடா செல்லம்!”

“இந்த நேரத்துலயா?”

“ப்ளீஸ்!” தலையசைத்து இதழ் குவித்து நிலா கெஞ்சிக் கேட்கவும் வருணால் மறுக்க முடியவில்லை. சிரித்துக் கொண்டே எழுந்தான்.

தானும் ஒரு டீ குடிக்கலாமே என்று நினைத்தால் இரண்டு டீ போடப் பால் இல்லை. தயிருக்கு வேறு உறை ஊற்ற வேண்டும். கடையில் தயிர் வாங்கினால் அத்தைக்குப் பிடிக்காது. பெருமூச்சுடன் நிலாவுக்கு மட்டும் டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்தான் வருண்.

டீயைக் கொண்டு வந்து வைத்த வருணை ஏறெடுத்தும் பார்க்காமல் வேலை செய்து கொண்டிருந்தாள் நிலா.

இன்னொரு பெருமூச்சுடன் பாத்திரங்களை ஒழித்துப் போட்டுவிட்டு, கிச்சனைத் துடைத்து, வாசல் கதவையும் பூட்டிவிட்டுத் தனது அலுவல் வேலைகளை முடிக்க லேப்டாப்பைத் திறந்தான் வருண்.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.