சாதாரணமாக சொந்த ஊருக்கு வழக்கமாகச் சென்றாலும் போகும் வரும் வழியில் என் வாழ்க்கையின் வழிகாட்டிகளாகத் தங்களது நேரத்தை எனக்காக தந்தவர்களை சந்தித்துச் செல்வதை கடந்த 10 ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டுள்ளேன். அவ்வாறு சொந்தத்தில் ஒரு குடும்பம் விழாவிற்குச் செல்ல வேண்டியிருந்தது. தன் வீட்டு விழாக்கான அழைப்பைப் பல நாட்களுக்கு முன்பே விடுத்தார்கள் என்றால் எப்படியாவது கலந்துகொள்வேன். அதற்காக அந்த நாளை ஒதுக்கிவிடுவது எனது வழக்கமாகக் கொண்டு இருக்கிறேன். (நான் கண்டிப்பாக வரவேண்டும், வராமல் இருந்துவிடக் கூடாது என்பவர்களே தங்கள் வீட்டில் விசேஷம் நாள் குறித்தவுடன் பகிர்வார்கள் என்பது என் கணிப்பு).

திண்டுக்கல் செல்ல நேர்ந்தது. கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலாக இருந்தது. காலை 4மணிக்கே செல்ல வேண்டிய பேருந்து தாமதமாக 8 மணிக்குதான் திண்டுக்கல் சென்றடைய நேர்ந்தது. ஒருவரைச் சந்திக்க வாய்ப்பு இருந்தால் அருகில் உள்ள மற்றொரு நகரத்திற்குச் சென்றுவிட்டு மறுநாள் திண்டுக்கல் வரலாம் எனக் காத்திருந்தேன். காத்திருக்கும் நேரத்தில் பிளான் 2ஒன்றை யோசித்து, பல நாள் இல்லை இல்லை பல ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்ட ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்தேன்.

ஆம், அந்த ஆசை யாதெனில் திண்டுக்கல் மலைக்கோட்டைக்குச் செல்வதே. யாரும் வருவார்களா, யாருடனும் சேர்ந்து செல்ல முடியுமா என செய்தேன். (முழு விவரத்தையும் சொல்லிக் கேட்கவில்லை. ஏனெனில் அது எனது 2வது பிளான்தானே!)

பழக்கமான தம்பி ஒருவரை எனக்கு மலைக்கோட்டையில் 4 மணியளவில் இறக்கிவிட முடியுமா எனக் கேட்க, அவர் அக்கா இந்தக் கொழுத்துகின்ற வெயிலில் தன்னால் வரமுடியாது என்றார்.

நான் இருந்த மனநிலையில் என்னை மகிழ்வித்துக் கொள்ள நானே தனியாக இருசக்கர வாகனத்தில் கூகுள் மேப் போட்டு பயணித்தேன். ஒரு 15 நிமிடங்களில் வழி கேட்டு திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு நுழைவாயில் சென்றடைந்தேன்.

நுழைவு வாயிலில் நுழைவுச்சீட்டு கேட்டபோது, (ஏற்கெனவே அங்கே நண்பர்கள் கூட்டமாக அல்லது குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள்.) நான் தனியாகச் செல்கிறோம் என்கிற சிறு கவலையுடன், எப்படித் தனியாகச் சென்று திரும்பப் போகிறேன் என்கிற எண்ணம் என்னை ஆட்கொண்டது. நுழைவுச் சீட்டு கொடுக்கும் நபர் என்னிடம் நான் தனியாக வந்ததால் அனுமதிக்க முடியாது என்றார். கூடவே ஆண் ஒருவர் தனியாக வந்தாலே விடுவதில்லை என்றார். அடுக்கடுக்காகப் பல கேள்விகள்… ‘சக்கரை, பிரஷர், ஆஸ்துமா இருக்கா?… தலைசுற்றல் வருமா?

அங்கு புல் புதர்கள் இருந்தன. சில காலத்திற்கு முன் தனியாகச் சென்றவர் தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரைக் கீழிறக்க பெரிய பாடாகிவிட்டது.

அடையாள அட்டை இருக்கா?’ என அடுத்தடுத்து கேட்கும் போது ஏன் வந்தோம் என்றாகிவிட்டது. எனது அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து நான் மருத்துவர்தான், இங்கு வேலை செய்கிறேன். நான் தனியாகச் செல்ல முடியும் என நினைக்கிறேன்’ என்று சொல்லி நுழைவுச் சீட்டை வாங்கிக்கொண்டு படி ஏற ஆரம்பித்தேன். தோராயமாக 50-60 படிகள் (படிகள் பாறையில் செதுக்கி உருவாக்கப்பட்டவை.) ஏறியதும் மூச்சு வாங்கியது எனக்கு. மேலும் உள்ளுர பயம் பற்றிக்கொண்டது. கீழே இறங்கி விடுவோமா என மனதில் கேள்வி எழுந்தது! ‘இந்த வயதில் தனியாக ஒரு செயலைச் செய்ய முடியாது என்று ஒது(க்)ங்கினால் நீ எப்படி உன் டிரக்கிங் செல்லும் திட்டங்களைச் செயல்படுத்துவாய்? உன்னைப் பாதுகாப்பாக எப்படிப் பார்த்துக்கொள்வாய்?’ என எனக்கு நானே கேட்க
(மனம் சொன்னது, ஆமாம் பயம்தான் அதுக்கென்ன இப்போ? பொறுமையா நிதானமாகச் செல்). பொதுவாகத் தனித்துப் பயணப்படுதல் எனக்கு வழக்கம் என்பதால் வழியில் வருபவர்களிடம் உதவி கேட்கும் பழக்கம் இமயமலை டிரக்கிங் சென்றபோது கிடைத்தது. என்னை ஒரு 10 வயது சிறுவன் கடந்து சென்றான். அவன் உடன் வந்திருந்த தந்தை, அண்ணனிடம் நானும் உடன் வரலாமா கூட்டிச் செல்ல முடியுமா என்றேன். அவர்களின் சம்மதத்துடன் படிகட்டுகளில் பயணத்தை மேற்கொண்ட போது சில உரையாடல்களுடன் சென்றோம். கோட்டைக்குள் நுழைய 25-30 படிகள் இருக்கும் போது திட்டு இருந்ததில் உடன் வந்தவர்கள் அமர்ந்துகொண்டார்கள். நானோ கால்களில் நடுக்கமாக உணர்ந்தேன். சட்டென நினைவில் வந்தது, ஆம் என் எண்ணங்களை மாற்ற ஓர் ஒளிப்படம் எடுத்தால் சாதாரண அல்லது மகிழ்வான மனநிலைக்கு வந்து விடுவேன். உடனே தந்தையிடம் உங்கள் அனைவரையும் படம் எடுத்துத் தரவா என நானே கேட்க, அவரது திறன்பேசியைக் கொடுத்தார். 2, 3 படம் எடுத்துக் கொடுத்தேன். கால் நடுக்கம் காணமல் போயிருந்தது. மேலும் படியேறி கோட்டைக்குள் நுழைவுந்தோம்.

சற்று இளைப்பாறிய நேரத்தில் உடன் வந்தவர்களைக் காணவில்லை. மேலே பழைய கோயில், திப்பு சுல்தான் பீரங்கி காண இன்னும் படி பல ஏற வேண்டும். போகலாமா, வேண்டாமா, நம்மால் முடியுமா என மனதில் குழப்பம் வேறு மறுபடியும் வந்து சென்றது. (நுழைவுக் கட்டணம் எடுக்கும் போது சொன்ன ஒருவருக்கு எலும்பு முறிவு நினைவில் வந்தது).
நடப்பது நடக்கட்டும் என மலையை ஏற ஆரம்பித்தேன். உச்சியைத் தொட 20 படிகள் இருந்தபோது, ஒரு குடும்பத்தார் மேலிருந்து இறங்க ஆரம்பித்திருந்தனர். அதில் ஒரு பெண் உட்கார்ந்து உட்கார்ந்து படிகளில் இறங்கியதைப் பார்க்கும்போதே என்னை அறியாமல் மேல் படியை நோக்கி எனது கைகள் நகர்ந்தன. அடடா! என்னவொரு நிலைமை கை வைக்காதே, குனியாதே என உள்மனம் சொல்ல, ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன். திரும்பவும் மனதில் உன்னால் முடியும் பயப்படாதே சாதாரணமாகவே ஏற ஆரம்பி என்று சொல்லிச் சொல்லி என்னை நானே மனதில் தேற்றிக்கொண்டேன். கடகடவென ஒரு வழியாக ஏறிவிட்டேன்.

மலைக்கோட்டை உச்சியில் பழங்காலப் புழக்கத்தில் இல்லாத பராமரிப்பு அற்ற கோயில், துணை மண்டபங்களும் இருந்தன. ஆங்காங்கே குடும்பமாகத் தோழர்கள் குழுக்களாக நின்றும் அமர்ந்தும் இயற்கையை ரசித்துக்கொண்டும் இளசுகள் ஓரத்தில் நின்று திண்டுக்கல் நகரத்தைப் பார்த்துக் கொண்டும் சிறுவர்கள் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள்.

ஒருவரிடம் என்னைப் படம் எடுத்துதரச் சொல்லி சில படங்களை எடுத்துக்கொண்டேன். (பதிவு முக்கியம்- பிற்காலத்தில் மலரும் நினைவுகள் பகிர.) நான் வேகமாக கோயிலைச் சுற்றும்போது மேற்கே கதிரவன் மழை மேகத்தின் இடையே எட்டிப் பார்த்தது. அந்த அழகைப் பல கோணங்களில் படம் எடுத்தேன். ஆனால், எனது செயல்கள் அனைத்தும் கொஞ்சம் வேகத்துடன்தான் இருந்தன. மனதுக்குள் எப்படி இறங்கப் போகிறேனோ என்கிற பயம் இருந்தது.

கோயிலுக்குள் செல்ல பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரை நான் உள்ளே சென்று பார்க்க வேண்டும். உடன் வருவாயா எனக் கேட்டு அழைத்துச் சென்று கோயிலின் உடப்புறத்தைச் சுற்றிப் பார்த்து, எப்படி ஓர் அழகான கோயில் எப்படிக் கட்டி இருக்கிறார்கள் என வியந்தேன். கூட்டிச் சென்ற சிறுவனுக்கு நன்றி சொல்லி நகர ஆரம்பித்தேன்.

சிறிது தூரம் நடந்தவந்து இறங்க ஆரம்பிக்கையில் ‘பயப்படாதே இறங்கு ஒன்றும் நடக்காது’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டே இறங்கினேன். இருந்தாலும் அருகில் வரும் குடும்பத்தில் உதவி கேட்டு, அவர்களது சின்னப் பையன் என் கையை பிடித்துக்கொண்டான். நானும் அவனது வேகத்திற்கு இறங்கினேன். சிறிது நேரத்தில் பையனின் அம்மாவும் நானும் சேர்ந்து இறங்கினோம். கடைசியாக நுழைவுச் சீட்டு கொடுத்தவரிடம் நான் இறங்கிவிட்டேன் என்பதைத் தெளிவாக உரக்கச் சொல்லிவிட்டு, இறங்குவதற்கு உதவி செய்த குடும்பத்தினரருக்கும் நன்றி கூறினேன்.

இன்னொரு முறை கூட்டமாக வந்து சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்துள்ள பாதையிலும் செல்லாம் எனக் கனவுடன் திண்டுக்கல் மலைக்கோட்டையிடம் இருந்து விடைபெற்று எனது 30 வருடக்கால ஆசையை நிறைவேற்றி மகிழ்ந்தேன். இறுதியில் துள்ளிக்குதிக்காதுதான் மிச்சம். என் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. பயம் ஒரு தடை இல்லை. பயம் நல்லதுதான் நம்மை செதுக்கிக்கொள்ள, அதற்கு எதிர்வினை புரியாமல் பயத்தை நிதானமாகக் கையாண்டு சாதிக்கலாம் பல.

படைப்பாளர்:

ஆர். சங்கீதா

அப்பாவின் உயரிய எண்ணமான மக்கள் சேவையைச் செய்ய, கிராமத்தின் முதல் மருத்துவராக ஆன இவர் ஒரு பயணக்காதலி. ரயிலும் பேருந்தும் இவரின் நெருங்கிய தோழர்கள். அந்த தோழர்கள் தந்த தோழமைகளோ ஏராளம். ஊரின் முதல் முனைவரான அம்மாவைப் பார்த்து எழுத ஆரம்பித்தார். பயணம் வாயிலாகத் தன்னையும் தேடிக் கண்டுபிடித்தார். அப்படிப் பல ஊர்கள் தரும் அனுபவங்களை her stories வழியாக வாசகர்களுக்கு சொல்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறார் ஆர். சங்கீதா.