சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் மைல்கல்லாக அமைந்திருக்கிறது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம். குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே இருந்த ஒரு தொழில் இன்று அனைத்துச் சாதியினருக்கும் சாத்தியமாக்கி இருக்கிறது. கேரளத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் பிராமணர் அல்லாதோர், தலித்துகள் மற்றும் குறிப்பாகப் பெண்களும் அர்ச்சகராகலாம் என்கிற சாதி ஏற்றத்தாழ்வைக் கடந்து பாலினச் சமத்துவத்தையும் மையப்படுத்தி இருக்கிறது, அர்ச்சகர்களில் பெண்களின் நியமனம்.

“பெண்கள் விமானத்தை இயக்கினாலும் விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. இனி அந்த நிலை இல்லை. ‘கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்’ என்கிற முதல்வர் ஸ்டாலின் கூற்று மிகவும் முக்கியமானது.

கருவறைக்குள் நுழைய முடிந்த பெண்களால் ஏன் அரசியலில் நுழைய முடியவில்லை? சட்டமியற்றும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருக்கக் காரணம் என்ன, கட்சிகளில் அதிகாரமிக்க பொறுப்புகளில் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது போன்ற கேள்விகள் அரசியலில் பெண்களின் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதையும், அதற்கான காரணங்களை நோக்கியும் நம்மை நகர்த்துகிறது.

இந்தியாவில் பெண்கள் சமூக, பொருளாதார, பண்பாடு மற்றும் அரசியல் தளத்தில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பிறகும் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சமத்துவமற்ற நிலையிலேயே உள்ளனர். ஆனால், இந்தியத் துணைக்கண்டத்தில் பெண்களின் அரசியல் பங்கேற்பு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் மிகச் சொற்ப அளவே உள்ளன என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.

சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இந்தியாவில் குறைந்த அளவிலேயே உள்ளது. அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைவிட இந்தியா, பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தில் கீழ் நிலையில் இருப்பதை நாடாளுமன்றத்தில் கனிமொழி சுட்டிக்காட்டினார்.

மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் உலக சராசரியான 20 சதவீதத்தைவிடக் குறைவாகவே உள்ளது. அதே போல இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் சட்டமன்றங்களில் பெண்களின் எண்ணிக்கை 20சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.(praveenrai, 2020)

2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 724 பெண்களில் 78 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதாவது 14.6%. இந்தத் தேர்தலில் 7 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களிலிருந்து ஒரு பெண் பிரதிநிதிகூட இல்லை. உத்திரபிரதேசம் மற்றும் மேற்குவங்கம் மட்டுமே தலா 6 உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்பியுள்ளது. 303 வேட்பாளர்களைக் கொண்டு பெரும்பான்மையாக வெற்றிபெற்ற பாஜக 55 பெண் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியது. அதில் வெற்றி பெற்ற மக்களவை பெண் உறுப்பினர்கள் 42. 2019 மக்களவை தேர்தலில் ஒடிசா முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டையும் மேற்குவங்கம் மம்தா பானர்ஜி அரசு 40% இட ஒதுக்கீட்டைப் பெண்களுக்கு வழங்கியது. நாடாளுமன்றத்தில் 37% பெண் உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ்.

16 ஆவது மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 66 அதாவது 12.1%. கடந்த மக்களவையை ஒப்பிடுகையில் இதன் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு இன்னும் அமல்படுத்தாத நிலையில், மக்களவையில் பெண்கள் 33% சதவீதத்தை அடைய இன்னும் 40 ஆண்டுகள் ஆகும் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.

ஆண்களும் பெண்களும் சமமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் 10சதவீதத்துக்கும் குறைவாகவே பெண்கள் அரசியலில் பங்கேற்றுள்ளனர். அரசியலில் பெண்கள் இருந்ததே இல்லையா என்றால் இருந்திருக்கிறார்கள். இந்தியாவின் முதல் பெண் முதல்வர் பெருமையைப் பெறுகிறார் உத்திரபிரதேசத்தின் சுசேதா கிருபளானி, அதேபோல டெல்லியில் ஷீலா தீட்சித், குஜராத்தின் ஆனத்திபென் பட்டேல், ராஜஸ்தானின் வசுந்திர ராஜே, மேற்க்குவங்கத்தில் மம்தா, காஷ்மீரில் மெகபூபா முத்தி, நான்குமுறை முதலமைச்சராக இருந்த உத்திரபிரதேசத்தின் மாயாவதி இந்தியாவின் முதல் பெண் தலித் முதல்வர் என்கிற பெருமையைப் பெறுகிறார். தமிழகத்தில் ஜானகி குறுகிய காலகட்டத்தில் முதல்வராக இருந்தார், அதன் பின்னர் வந்த ஜெயலலிதா தமிழக அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்தார். இந்தியா மொத்தமும் 16 முதலமைச்சர்கள் இதுவரை இருந்துள்ளனர். முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி, குடியரசுத் தலைவர்கள் பிரதிபா பாட்டில், திரெளபதி முர்மு என விரல்விட்டு எண்ணும் அளவிற்கே பெண்களின் அரசியல் பங்கேற்பு இந்தியாவில் இருந்திருக்கிறது.

2014இல் அரசியலில் பெண்கள் குறித்த புள்ளிவிவர அறிக்கையில் நாடாளுமன்ற அளவில் பெண்கள் பங்கேற்பில் இந்தியாவுக்கு 73வது இடம். நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பதவி வகிப்பதில் பெண்களின் பங்கு 9.9% மட்டுமே. வளர்ச்சியடையாத நாடுகளான ஹைதி, ருவாண்டா, காங்கோ, சாத், ஜாம்பியா உள்ளிட்ட நாடுகள் பெண்களின் அரசியல் பங்கேற்பு அதிகமாக இருக்கிறது(sugitha, 2017)

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளார்கள் 3,998, அவற்றில் பெண் வேட்பாளர்கள் 413, இத்தேர்தலில் 191 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவின் பெண் வேட்பாளர்கள் 17, வெற்றி பெற்றவர்கள் 3.188 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக பெண் வேட்பாளர்கள் 11, வெற்றி பெற்றவர்கள் 6. தமிழக சட்டமன்ற வரலாற்றில் அதிகப் பெண் உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் 1991ஆண்டு 30 உறுப்பினர்களை உள்ளடக்கி இருந்தது.1952 மற்றும் 1977களில் வெறும் 2 பெண் உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது. இன்றைய அமைச்சரவையில் 2 பெண்கள் உள்ளனர். ஆனால், 2016இல் ஜெயலலிதாவின் தலைமையிலான அமைச்சரவையில் 4பெண் அமைச்சர்கள் இருந்தனர். ஜெயலலிதா தலைமையிலான சட்டசபையே அதிகப் பெண் உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவின் பெண் வேட்பாளர்கள் 28. வெற்றி பெற்றவர்கள் 16. 104 தொகுதிகளில் போட்டியிட்ட திமுகவின் பெண் வேட்பாளர்கள் 17. வெற்றி பெற்றவர்கள் 4. ‘பன்முகத்தன்மை அதிகம் கொண்ட தமிழகத்தில், அரசியல் தளத்திலும் அத்தகைய பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும்” என்பதைத் தனது கட்டுரையில் வலியுறுத்துகிறார் இந்து குணசேகர் (Hindu Tamil, 2021)

பாலினச் சமத்தும் பேசும் இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை 1928லும், பிரான்சில் 1944லும், இத்தாலியில் 1945லும்தான் கிடைத்தது. ஆனால், 1921களிலே மதராஸ் மாகாணாத்தில் சொத்துரிமை உள்ள பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றனர். எனவே சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராக பொறுப்பேற்ற முத்துலட்சுமி,1925இல் சட்டமன்றத் துணைத் தலைவரானர். சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும் ஆவார்.

ஆனால், மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1 பெண் மட்டுமே மாவட்டச் செயலாளராக இருக்கிறார். தலைமைப் பொறுப்புகளில் துணைப் பொதுச் செயலாளராக மக்களவை உறுப்பினர் கனிமொழி இருக்கிறார். பெண்களை அரசியல்படுத்த தமிழ்நாட்டில் அரசியல் கட்சியில் மகளிரணியை உருவாக்கியவர் அண்ணாதுரை. ஆனால், அவரைத் தலைவராகக் கொண்டாடக் கூடிய கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் ஒரு பெண் மாவட்டச் செயலாளராகத் தற்போது (செப்.27) நியமிக்கப்பட்டிருக்கிறார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மக்களவைக்கு 3பெண் வேட்பாளர்களையும், மாநிலங்களவைக்கு 1உறுப்பினரையும் அனுப்பியுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆண்களைவிடப் பெண் வாக்காளர்களே அதிகம், ஆனால் அரசியல் கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளில் பெண்களுக்காகப் பல திட்டங்களைக் கொண்டுவந்த தமிழகத்தில் ஆளும் கட்சிகள், பெண் வாக்காளர்களைப் பயனாளிகளாக மாற்றிவிட்டது என்றும் அரசியல் தளத்தில் பங்கேற்பதற்கான சூழலை உருவாக்கவில்லை என்கிற குற்றசாட்டை ஆய்வாளர் ஆனந்தி சுட்டிக்காட்டுகிறார். (பிரமிளா கிருஷ்ணன், 2021)

தமிழக சட்டப் பேரவையில் பாலினச் சமத்துவம் இல்லை என்றும், சட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை மனிதி என்கிற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. மத்திய அரசுதான் பரீசலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இது அரசியல் தளத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து விவாதத்தைப் பல்வேறு தளங்களில் ஏற்படுத்தியது.

சமூகப் பொருளாதாரக் கல்வி வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்கேற்பையும் உரிமையையும் உறுதி செய்வதற்காகப் பல கட்டப் போராட்டங்கள் உலகம் முழுவதுமே நடைபெற்றிருக்கின்றன. சில சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் மாற்றங்கள் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முக்கியக் காரணங்களாக இருந்திருக்கின்றன என்பதைப் பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

அரசியல் சாசனத்தின் 14 மற்றும் 15 பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் இன, மொழி, மதம், சாதி மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. ஆனால், சமூக அரசியல் தளத்தில் பெண்களின் பங்கு என்று வரும்போது பாலின இடைவெளி இருப்பதை இவை அடையாளப்படுத்துகின்றன. அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் பெண்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும் என்பதை பெய்ஜிங் அறிவிப்பு மற்றும் நடவடிக்கைகான தளம் (Beijing declaration and platform for action) வலியுறுத்துகிறது.

அரசியல் பங்கேற்பு என்பது இந்தியக் குடிமகனின் ஜனநாயக உரிமை. கல்வி, பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருப்பது அரசியல். அத்தகைய அரசியலில் இருக்கும் பாலின இடைவெளியைத் தகர்த்து அனைவருக்குமான, அனைவரையும் உள்ளடக்கிய அரசியலை மேற்கொள்ள வேண்டும். அரசியலின் மிகப்பெரிய பங்காக இருக்கக் கூடிய அரசியல் கட்சிகள் அவர்களின் கட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.

படைப்பாளர்:

மை. மாபூபீ

சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.