ஒரு நாள் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, இணையத்தில் வைரலாகிக் கொண்டிருந்த ஒரு காணொளியைப் பார்க்க நேர்ந்தது. மனதை நெகிழ வைக்கும் அந்தக் காணொளியில் ஒரு மணப்பெண் மணமகனுக்கு ஒரு கண்ணாடியைப் பரிசளிக்கிறாள். அந்தக் கண்ணாடியை அணிந்ததும் அந்த மணமகனின் முகத்தில் பரவிய புன்னகை என்னுள்ளும் தொற்றிக்கொண்டது. அப்படி அந்த கண்ணாடியில் என்ன இருந்தது? அந்தக் கண்ணாடி வழக்கமாக நாம் அணியும் கண்ணாடிகளில் இருந்து சற்று வித்தியாசமானது. நிற வேறுபாடை உணர முடியாதவர்களுக்காகப் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டதுதான் அந்தக் கண்ணாடி. அதாவது, ‘கலர் பிளைண்ட்னஸ்’ (நிறக் குருடு) என்று சொல்லக்கூடிய ஒருவகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தனித்துவமாக உருவாக்கப்பட்டது.

குழந்தை வளர்ப்பில் நிறங்களின் பெயர்களையும் அவற்றின் வேறுபாடுகளையும் சொல்லித் தருவதுதான் முதல் படி. குழந்தைகள் வளர வளர நிறங்களின் வேறுபாடுகளை அவர்கள் மூளை கொஞ்சம் கொஞ்சமாக அறிய தொடங்கும். அதனால்தான் குழந்தைகள் நிறங்களால் எளிதாகக் கவரப்படுகின்றனர். குறிப்பாக அவர்களுக்கான பொம்மைகளும் ஆடைகளும் அத்தனை வண்ணமயமிக்கதாக இருப்பதற்கும் இதுதான் காரணம். பல நிறங்களில் இருக்கும் பந்துகளைக் குழந்தை முன் காட்டி, இது என்ன கலர் என்று கேட்பது நாம் அனைவரும் செய்யக்கூடிய ஒன்று. இது மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தூண்டிவிடுகிறது. சூரிய உதயத்தின் போதும் அஸ்தமனத்தின் போதும் உருவாகும் இளமஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்கள் நம்மை அமைதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நமக்குப் புத்துணர்வும் அளிக்கிறது. அதுபோல கடலின் நீலமும், காடுகளின் பசுமையும் நமக்குப் பரவசத்தைத் தருகிறது. வண்ணங்கள் யாவும் மனித உணர்வுகளோடு தொடர்புடையவை. ஒருவேளை நம் மூளை இந்த நிறங்களின் வேறுபாடுகளை உணராமல் போய் இருந்தால் எப்படி இருக்கும்?

மனிதனால் நிறங்களின் வேறுபாடுகளை உணர முடியாமல் போகும் நிலையைத்தான் ‘நிறக் குருடு’ என்கிறார்கள். ஒளியின் பிரதிபலிப்பாக இருக்கும் வண்ணங்களில் சிலவற்றை, சில மனிதர்களால் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. உதாரணமாகச் சிவப்பு, பச்சை போன்ற நிறங்களை வேறுபடுத்திப் பார்ப்பதில் சிலருக்குச் சிரமம் இருக்கும். சிலருக்கு நீல நிறத்தை வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாக இருக்கும். ஆனால், நிறக் குருடு என்பது பெரும்பாலும் எல்லா நிறங்களுக்கும் பொதுவானது. அதில் மக்களிடையே பொதுவாகக் காணப்படுவதுதான் இந்தச் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களின் வித்தியாசங்களை உணர முடியாமல் இருப்பது. இது தவிர க்ரே, பின்க், வைல்ட் போன்ற நிறங்களுக்கான வித்தியாசங்களைச் சிலரால் கண்டுபிடிக்க முடியாது. இப்படி நிறங்களின் வித்தியாசங்களைக் கண்டறிய முடியாமல் இருப்பவர்கள் நிறக் குருடு குறைபாடால் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்தக் குறைபாடு மரபணுக்கள் வழியாக ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்படும். X குரோமோசோமில் ஏற்படும் மரபணு பிறழ்வால் இந்த நிறக் குருடு ஏற்படுகிறது. X குரோமோசோமில் பாதிப்பு ஏற்படுவதால் இந்தக் குறைபாடு பெண்களைவிட ஆண்களை அதிகமாகப் பாதிக்கிறது. முந்தைய தொடர்களில் சொன்னது போல பெண்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கு அவர்களுக்கு இருக்கும் இரண்டு X குரோமோசோம்களுமே பாதிக்கப்பட வேண்டும். ஆனால், அப்படி இரண்டு குரோமோசோம்களுமே பாதிக்கப்படுவது என்பது குறைவாக நிகழக்கூடிய ஒன்று. ஆனால், ஆண்களுக்கு இது எளிதாக ஏற்படக் கூடிய ஒன்று. காரணம் அவர்களுக்கு ஏற்கெனவே ஒரே ஒரு X குரோமோசோம்தான் இருக்கிறது.

இது தவிர, வானவில்லில் இருக்கும் ஏழு நிறங்களும் ஒன்றோடு இன்னொன்று தொடர்புடையவை. இந்த வண்ணங்களுக்கு இடையே இருக்கும் தொடர்புகளை வேறுபடுத்திப் பார்ப்பதற்கென்றே மூளையில் ஒரு பகுதி இருக்கிறது. விபத்துகள் மூலம் இந்தப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாகச் சிவப்பு, பச்சை, நீலம் போன்ற நிறங்களை வேறுபடுத்திப் பார்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பிறவியில் இருந்தே இருக்கும் நிறக் குருடு குறைபாட்டிற்கு மரபணுக்கள் காரணமாக இருக்கலாம். ஆனால், விபத்துகள் மூலம் ஏற்படும் பாதிப்புகளால் இடைப்பட்ட காலத்தில்கூட ஒருவருக்கு நிறக் குருடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சரி, இதனால் தினசரி வாழ்க்கையில் என்ன விளைவுகள் ஏற்படப் போகின்றன என்கிற கேள்வி நம் எல்லோரிடமும் உண்டாகும் ஒரு பொதுவான கேள்விதான்.

இந்தக் கேள்வியைச் சற்று ஆழமாக அணுக வேண்டும். நிறக் குருடு உள்ள ஒருவர் சாலையில் செல்லும் போது அங்கே இருக்கும் போக்குவரத்து விளக்குகளில் பிரதானமாக இருக்கும் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களை வேறுபடுத்திப் பார்த்து அதற்கேற்ப வாகனத்தை இயக்க வேண்டும். ஆனால், இது அவர்களுக்கு அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஒரு நிமிடம் தாமதித்தாலும்கூட அது அந்த நபருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

அது போல மின்சாரம் மற்றும் மின்னணுவியல் (electronics) துறை சார்ந்தவர்களுக்கும் இந்தக் குறைபாடு பெரும் சவாலாக இருக்கும். காரணம், இந்தத் துறைகளில் பயன்படுத்தப்படும் கம்பிகள் அனைத்தும் பச்சை, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் இருக்கின்றன. இதனால் அவற்றைக் கண்டறிந்து வேலை பார்ப்பது என்பது நிறக் குருடு உடையவர்களுக்குப் பெரும் சவாலான ஒன்று. போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறைகளில் வேலை பார்ப்பதற்கு நடத்தப்படும் தகுதி தேர்வுகளில் “நிறக் குருடு தேர்வு” மிக முக்கியமானது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டும்தான் இது போன்ற துறைகளில் வேலை பார்க்க முடியும்.

நிறக் குருடு குறைபாட்டை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியாது என்றாலும் சிகிச்சைகள் மூலம் அந்தக் குறைபாட்டின் பாதிப்புகளைக் குறைக்க முடியும். அதில் ஒன்றுதான் இணையத்தில் வைராலான வீடியோவில் வரும் கண்ணாடி. இந்தக் கண்ணாடியை அணிந்துகொள்ளும் போது நிறக் குருடு உள்ளவர்களால் மற்றவர்களைப் போல நிறங்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளைக் கண்டறிய முடியும். இந்தக் கண்ணாடியில் இருக்கும் ஃபில்டர்ஸ் வழியாக ஒரு நிறத்தையும் மற்றொரு நிறத்தையும் அதன் வித்தியாசங்களைக் கொண்டு தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியும். கண்ணாடியைப் போலவே இந்தக் குறைபாட்டைக் கடந்து வர பிரத்யேகமான லென்ஸ்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் குறைபாடு நரம்பு மற்றும் மூளையோடு தொடர்புடையதால் இதை லேசர் போன்ற அதிநவீன சிகிச்சை முறைகளால் குணப்படுத்த முடியாது.

இதுவரை ஓரிரு நிறங்களை வேறுபடுத்திப் பார்ப்பதில் ஏற்படும் சிரமங்களையும் விளைவுகளையும் பற்றிப் பார்த்தோம். ஆனால், உலகின் அத்தனை நிறங்களும் கரறுப்பு வெள்ளையாக மாறினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு நிலைதான் ஏக்ரோமாடோப்சியா (achromatopsia). இதுவும் ஒருவகையான நிறக் குருடு குறைபாடுதான். இந்தக் குறைபாடுடையவர்களால் எந்த நிறத்தையும் பார்க்க முடியாது. அத்தனை நிறங்களும் கறுப்பு வெள்ளையாக மட்டுமே காட்சியளிக்கும். இதற்கென்றே தனித்துவமாக உருவாக்கப்பட்ட கண்ணாடிகளைக் கொண்டு இதை ஓரளவு கடக்க முடியுமே தவிர, இதையும் முழுமையாகக் குணப்படுத்த முடியாது. இது போன்ற நிறக் குருடு குறைபாடுடையவர்கள் குழந்தைக்காகத் தயாராகும் போது மரபியல் ஆலோசகர்களின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கேட்டறிவது அவசியம். வருங்காலத் தலைமுறைகள் இது போன்ற மரபணு குறைபாடுகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இதுதான் சிறந்த வழி. இந்தக் குறைபாடு விபத்துகள் மூலம் ஏற்படும் பாதிப்புகளால்கூட ஏற்படலாம் என்பதால் போக்குவரத்து, மின்சாரத் துறைகளில் வேலை பார்ப்பவர்கள் நிறக் குருடு தேர்வில் தேர்ச்சி பெற்று, அதற்கான உரிய தகுதி சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் கண் பார்வைத் திறனை அறிவதோடு, அறியாமையால் ஏற்படும் சில முக்கியமான விபத்துகளையும் தவிர்க்கவும் முடியும்.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.