நாளிதழ்களைப் பிரித்தால் முறையற்ற உறவுகளால் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களும் குற்றச் செயல்களுமே இடம்பிடிக்கின்றன. முறை தவறிய உறவு ஒன்றும் புதிதல்ல. இந்த உலகத்தில் காலகாலமாக நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுதான். அப்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே தெரிந்த இது போன்ற விஷயங்களை இன்று ஊடகங்கள் உலகெங்கும் நொடிகளில் பரப்பி விடுகின்றன.

ஒழுக்கம் என்பதற்கான அளவீடுகள் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. ஒருவருக்கு ஒழுக்கமாகத் தோன்றும் ஒரு விஷயம், இன்னொருவருக்கு ஒழுங்கீனமாகப் படுகிறது. இங்கே திருமணம் தாண்டிய உறவு என்பது சரியா, தவறா என்று விவாதிக்கப் போவதில்லை. எது சரி, எது தவறு என்பது ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் வேறுபடும். இத்தகைய உறவுகளின் உண்மை நிலை என்ன என்பதுதான் கேள்வி. திருமணம் என்பதே இந்தச் சமுதாயம் ஒரு கட்டமைப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் ஒப்பந்தம்தான். அந்த ஒப்பந்தம் யாரையும் கட்டுப்படுத்த முடியாத ஒன்று. பரஸ்பர நம்பிக்கையுடன் இருவருமே நடந்துகொள்வதே அந்தத் திருமணத்தின் நோக்கம். அந்த நம்பிக்கை உடையும் தருணங்களில் நாம் நடந்துகொள்ளும் விதமும் நாம் எடுக்கும் முடிவுகளுமே நம்முடைய ஆளுமையை நமக்கு அறிவிக்கின்றன.

திருமணம் தாண்டிய உறவு மட்டுமல்ல. எந்த ஓர் உறவுமே சில காலம்தான் வாழ்வில் இருக்கும். வாழ்வின் இறுதி வரை ஓர் உறவை மாத்திரமே கொண்டு செல்வதென்பது குதிரைக் கொம்புதான். தம்பதிகளுக்கு இடையே உள்ள உறவில் ஏற்படும் வெற்றிடமே திருமணம் தாண்டிய உறவுக்குள் அழைத்துச் செல்கிறது. அத்தகைய வெற்றிடத்தில் காதல், அன்பு, நேரம் செலவழித்தல் என்றெல்லாம் இட்டு நிரப்புவதன் மூலம் ஓரளவு இந்தச் சிக்கலைத் தவிர்க்கலாம். அவ்வாறு வெற்றிடம் இல்லாதவர்களிடையேகூட இத்தகைய உறவுகள் ஏற்படலாம். ஆனால், இந்த உறவுகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆண்கள் இந்த விஷயத்தில் எப்போதுமே ‘ஸேஃப் ஸோனில்’தான் இருந்து கொள்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

திருமணம் தாண்டிய உறவுக்குள் நுழைவதற்கு முதல் காரணம் எதிர்பார்ப்புகள்தாம். தனது தேவையை அது எதுவாக இருந்தாலும் பூர்த்தி செய்ய இயலாத இணையின்பால் முதலில் தோன்றும் மெல்லிய வெறுப்பு, தனது விருப்பப்படி பேசும், நடந்துகொள்ளும் ஒருவரைச் சந்திக்கும் போது அடர்த்தியாகிறது. கமிட்மெண்ட் இல்லாத இதுபோன்ற உறவுகள் மகிழ்ச்சியை அளிக்கலாம். ஆனால், அந்த உறவில் சிறு விரிசல் வந்தாலும் அது விஸ்வரூபம் எடுத்து வாழ்க்கையையே கொடூரமாக்கிவிடும்.

தம்பதியர் தங்களுக்குள் ஒரு மௌனம் கலந்த பனிப்போர் ஆரம்பிக்கும்போதே உஷாராகிவிட வேண்டும். ஒருவருக்கு இன்னொருவர் மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ள வேண்டும். வெளியே எங்கேயோ யாரிடமோ மனம்விட்டுப் பேசுவதைத் தனது இணையரிடம் பேசினால் பிரச்னைகள் எழாது. பேசிச் சிக்கல்களைத் தீர்த்த காலம் போய், பேசினாலே சிக்கல்கள் வரும் காலத்தில் உள்ளோம் என்பதையும் மறுக்க முடியாது. எல்லாருமே சாய்வதற்கு ஒரு தோளைத் தேடுகிறார்கள். அந்தத் தோள் ஆறுதல் மட்டுமே தரும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது.

பல வருடங்களுக்கு முன்பு நான் குடியிருந்த வீட்டில் ஒரு பெண் அவரது கணவர் இரவுப் பணிக்குச் சென்ற பின்னர் தனது காதலரை வரவழைத்திருந்தார். இது தெரிந்த பக்கத்து வீட்டு நபர் அவர்களை எல்லார் முன்பும் அவமானப்படுத்தி விட்டார். காலையில் பணியிலிருந்து வீடு திரும்பிய கணவரிடம் ஆளுக்காள் முந்திக்கொண்டு புகாரளித்தனர். அவர் எதுவுமே பேசவில்லை. மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார். மெல்லிய வாக்குவாதம் மட்டுமே தெளிவில்லாமல் கேட்டது. ஒரு மணி நேரம் கழித்து அந்தப் பெண் கையில் ஒரு சூட்கேசுடன் வெளியேறிவிட்டார். அவரது கணவர் அமைதியாக நின்றிருந்தார். அந்த விஷயத்தை அவரிடம் யாரும் விவாதிக்கவும் இல்லை. என்ன நடந்தது என்று கேட்கவும் இல்லை. அதன்பின் அதே குடியிருப்பில் அவர் பத்து வருடங்கள் குடியிருந்தார். இந்த விஷயத்தைப் பற்றி ஒரு சிறு முணுமுணுப்புகூடக் கிடையாது. அந்தப் பெண்ணிடமும் ஒரு கோணம் இருக்கும் என்கிற உண்மை இந்தச் சமுதாயத்துக்கு ஏன் தெரியாமல் போயிற்று? ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தது மூலமாகவே அந்த ஆண் மீது குற்றமில்லை என்று உறுதியாகச் சொல்லிவிட இயலுமா? அது அவர்களின் தனிப்பட்ட பிரச்னை என்று மற்றவர்கள் தலையிடாமல் இருக்க வேண்டும். இருபக்கமும் இருக்கும் உண்மை நிலவரம் தெரியாமல் இடையில் புகுந்து கலவரம் செய்யாமல் இருப்பதே நல்லது.

திருமணம் தாண்டிய உறவு முறை என்பது அவரவர் அந்தரங்கப் பிரச்னை. அது தனிப்பட்ட மனிதர்களின் பிரச்னை என்கிற அடிப்படையில் பார்க்கப்பட வேண்டுமே தவிர, அதை முந்தைய காலகட்டத்தின் எண்ணங்களோடு அணுகக் கூடாது. ஒரு பெண்ணோ ஆணோ வெளியே உறவை ஏற்படுத்திக் கொண்டால் அதனால் வரும் தேவையற்ற பிரச்னைகளை அவர்கள்தாம் எதிர்கொள்ள வேண்டும். ஒருவரைத் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபடக் கூடாது என்று கட்டுப்படுத்த இயலாது. ஆனால், மீறி ஈடுபடும்போது அவரது இணையைச் சட்டரீதியாகப் பிரிந்து விரும்பிய உறவில் இணைந்துகொள்ளலாம் என்று மட்டும் சொல்லலாம். ஏனெனில் மனித மனம் மாறுதல்களுக்கு உட்பட்டது. உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் அந்த உணர்ச்சி வேகம் தணிந்ததும் நிறையவே சிந்திக்க வைக்கும். இதை மனதில் வைத்துக் கொண்டு ஓர் உறவுக்குள் நுழைய வேண்டும். அவரவர் கோணத்தில் அவரவர் நியாயங்கள். அதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

இதனை மிட்லைஃப் கிரைசிஸ் என்கிறார்கள். மாறாக இன்னும் சிலர் வெவ்வேறு விதமான அனுபவங்களைப் பெற தானே வலியச் சென்று மாட்டிக்கொள்வதும் உண்டு. சும்மா ஒரு ‘த்ரில்’லுக்காகவும் முயற்சி செய்கிறார்கள். இத்தகைய உறவுகளில் நிம்மதி கிடைக்காது. யாருக்காவது தெரிந்தால் என்னாவது என்கிற மன உளைச்சலிலேயே உழல நேர்கிறது. இணையின் மீதான அதிருப்தி, மனதுக்குப் பிடித்த இணை அமையாதது, பணிபுரியும் இடத்தில் பழக்கமானவர்கள் என்று எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.

திருமணம் மீறிய உறவைக் குற்றமாகக் கருதும் சில நாடுகளில் நம் நாடும் இருக்கிறது. திருமணம் என்கிற ஒன்றை வாழ்க்கை ஒப்பந்தமாக மட்டுமே பார்க்க வேண்டுமேயல்லாது அதைத் தன் வாழ்வைக் கட்டுப்படுத்தும் ஒன்றாக வரித்துவிடக் கூடாது. திருமணம் ஆகிவிட்டது என்கிற ஒரே காரணத்துக்காக அதிலுள்ள எல்லாச் சிக்கல்களையும் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பது அறம் அல்ல. பலதார மணத்தைப் பண்பாடாகக் கொண்ட நம் நாட்டில் திருமணம் தாண்டிய உறவுகள் மட்டும் சலனத்தை ஏற்படுத்துவது ஏனோ?

இந்தியத் தண்டனைச் சட்டத்தில் சர்ச்சைக்குரிய சட்டங்கள் சில உண்டு. அவற்றில் சட்டப் பிரிவு 497 என்பது முக்கியமானது. இது திருமண உறவுக்கு வெளியே பாலியல் உறவு கொள்வோருக்குத் தண்டனை வழங்கும் சட்டமாகும். இதில் ஆண்களுக்குத்தான் தண்டனை உண்டு. பெண்களுக்குக் கிடையாது. ஒரு பெண் தனது கணவரின் அனுமதி அல்லாமல் வேறு ஓர் ஆணுடன் திருமணத்துக்கு அப்பாற்பட்டு உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று 497-ம் பிரிவு கூறுகிறது. ஆனால், இதில் அந்தப் பெண் தண்டிக்கப்பட மாட்டார். ஆண் மட்டுமே தண்டிக்கப்படுவார். 1860இல் இந்த சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கைது செய்யப்படும் ஆண்கள், பாலியல் வன்புணர்வு என்கிற குற்றத்தின் கீழ் தண்டனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதற்கு 5 வருடம் வரை சிறைத் தண்டனை அளிக்கப்படும். 

இந்தச் சட்டப் பிரிவிற்கு எதிராக மூன்று காரணங்களுக்காக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சட்டப்பிரிவின் கீழ் எப்படி ஓர் ஆணுக்கு மட்டுமே தண்டனை தரலாம் என்றும், இது பாலியல் சமத்துவத்திற்கு எதிரானது என்றும், பெண்கள் ஆண்களின் சொத்துகள் போலப் பார்க்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

வாழ்க்கைத் துணைகளுக்கு இடையிலான திருமணத்தை மீறிய உறவு என்பது ஒரு தனிப்பட்ட விஷயம் என்றும், சிவில் சட்டத்தின்படி இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டிருக்கும் எந்தத் தரப்புக்கு எதிராகவும் குற்ற நடவடிக்கையைப் பிரயோகிக்க வேண்டியதில்லை என்று கூறியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அந்நியோன்யமான, தனிப்பட்ட அளவிலான தேர்வை மேற்கொள்பவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்குவதை அரசால் நியாயப்படுத்திவிட முடியாது என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

‘மேலும் தனது மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருக்கும் வேறொரு ஆணுக்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை  ஆணுக்கு இருந்துவந்த நிலையில், அதேபோல் வழக்கு தொடர்வதற்கான உரிமையைப் பெண்களுக்கு மறுக்கும் இந்தச் சட்டம் நன்மை பயக்கக்கூடியது என்று கருதிவிட முடியாது; சொல்லப்போனால், இச்சட்டம் பாரபட்சமானது’ என்றும் கூறியிருக்கிறது.

இந்த விஷயம் தனிப்பட்ட ரீதியிலானது என்றும், அதில் தலையிடுவது தனிநபர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகும் என்றும் கூறியிருக்கிறது. இதுவரை இருந்த சட்டப்பிரிவின்படி திருமணம் மீறிய உறவில் ஈடுபட்ட பெண், பாதிக்கப்பட்ட சொத்து என்றும், அதன் எஜமான் ஆன ஆண் பாதிப்புக்குள்ளான உரிமையாளன் என்றும் இருந்தது. ரத்தமும் சதையுமான ஒரு மனுஷி வெறும் ஆணின் சொத்தாகக் கருதப்பட்ட பிற்போக்குத் தனமான சட்டத்தின் தலையில் உச்சநீதிமன்றம் இந்தப் பிரிவை நீக்கியதன் மூலம் ஒரு கொட்டு வைத்திருக்கிறது. 

அதற்காக உச்ச நீதிமன்றமே இத்தகைய உறவுகளை ஆதரிக்கிறது என்று ஆண்கள் குதூகலம் அடைய முடியாது. இந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளதால் நீக்கப்பட்டிருக்கிறதே தவிர, இத்தகைய உறவுகளை ஆதரிப்பதற்காக வழங்கப்படவில்லை. முறையற்ற உறவு என்றெல்லாம் பொதுவெளியில் உருவகிக்கப்படும் விஷயங்கள் உண்மையிலேயே தகாதவைதானா? அதற்கான அளவுகோல் என்ன? எவையெல்லாம் இந்தத் தகாததற்குள் அடங்கும் என்று வரையறை செய்ய இயலுமா? அதெல்லாம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட காரணிகளாகத்தான் இருக்கும். அதற்காக அது ஒட்டுமொத்த சமுதாயத்தின் கருத்து என்று சொல்லலாகாது. இத்தகைய உறவுகளில் அதிகமாகக் கிடைக்கப் பெறுவது மன உளைச்சல்தான். ஆரம்பத்தில் அன்பு, பாசம், நேசம் எல்லாம் கிடைக்கிறது என்று இந்த உறவை நாடிய உள்ளம் நாளடைவில் சலித்துப் போய்விடும் என்பது உண்மை. பூமாலையாகக் கழுத்தைச் சுற்றிய உறவு அதே கழுத்தை நெறிக்கும் தாம்புக் கயிறாய் பின்னாட்களில் மாறிய வரலாறுகள்தாம் அதிகம்.

ஒருவர் தன் மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணிடம் தொடர்பில் இருந்தார். அந்தப் பெண் கணவனைப் பிரிந்து வாழ்பவர். ஆனாலும் சிறியதாக ஒரு நிறுவனத்தை நடத்திவந்தார். இந்த ஆண் அந்தப் பெண்ணிடம் கிட்டத்தட்ட நாற்பது லட்சம் ரூபாய்களைப் பெற்றிருந்தார். இது கடன் அல்ல. இருவரும் பழகிக் கொண்டிருந்த காலத்தில் அந்தப் பெண்ணிடம் தொழில் முன்னேற்றத்துக்கு வழி இல்லை என்று புலம்பியதால் காதல் மிகுதியில் அந்தப் பெண் தானாகவே முன்வந்து கொடுத்த தொகை. கொஞ்ச காலம் கழித்து இருவருக்குமிடையில் வந்த உரசலில் அந்த ஆண் அவருடன் நட்பை முறித்துக் கொண்டார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணுக்குக் கிடைத்தது வசவும் கெட்ட பெயரும்தான். அந்த உறவின் நம்பகத் தன்மை குறித்தும், எந்த உறவுமே கொஞ்ச காலம்தான் என்றும் புரிந்து வைத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

ஆண்களோ பெண்களோ தங்களது இணையருக்குப் பாலியல் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தல் வேண்டும். மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு மதிப்பளிக்க வேண்டும். சில விஷயங்களில் விட்டுக்கொடுத்தல் இருந்தால் வாழ்க்கை சிறக்கும். எப்போதும் குறையாத காதல் வாழ்வை நிறைவாக்கும். இந்தியச் சமூகத்தில் பெண்கள்  இத்தகைய உறவில் இருப்பது மட்டும் மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. ஆனால், ஆண்கள் இவ்வாறு நடந்துகொள்வது ஒரு பேசுபொருளாகக்கூட இருப்பதில்லை. ஏன் இந்தப் பாகுபாடு?  தவறு என்று சொல்வோமானால் அது இருபாலருக்கும் பொருந்தும்தானே? இந்தியத் திருமணங்கள் புனிதத் தன்மையைப் போதிக்கின்றன. அது பெண்களுக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு இத்தகைய புனிதக் கட்டுகள் ஏன் இல்லை என்கிற கேள்விக்குப் பதில்தான் என்ன?

தம்பதிக்கு இடையில் மூன்றாவது நபரை பஞ்சாயத்துக்கு எப்போதுமே அழைக்காதீர்கள். அது உங்கள் பெற்றோரோ வாரிசுகளோ உறவோ அல்லது நட்போ யாராக இருந்தாலும் ‘நோ என்ட்ரி’ போர்டை மாட்டுங்கள். எதுவாக இருந்தாலும் நீங்களே நேருக்கு நேராகப் பேசிவிடுங்கள்.

தன்னைத்தானே நேசிக்காத எவரும் இன்னொருவரை முழுதாக நேசிக்க இயலாது. சுய நேசம் எப்போதும் தோற்காது. முறிவடையாது. புகலிடம் தேடாது. நம்மை நாம் மதிக்கக் கற்றுக்கொள்வோம். எத்தகைய சூழலிலும் நம்மை நாமே மீட்டெடுக்கும் வழிகளில் ஒன்று சுயக்காதல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.