எனக்கு மிகவும் பிடித்த பாடல், ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’, எல்லாக் காலத்திற்குமான வரிகள். அதில் ‘தன்னைத் தானும் அறிந்துகொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆகவில்லையா…’

தலைவர்கள் பிறப்பதில்லை உருவாகிறார்கள். ஒவ்வொரு நாளும் கற்று, தன்னைச் செதுக்கி, மற்றவருக்கு வழிகாட்டி, அடுத்த தலைமுறைக்கு உதாரணமாகத் திகழ்பவர்கள்.

இன்று முதல் நான் தலைவி என்று அறிவித்துக்கொண்டால், நாம் தலைவியாகிவிட முடியாதே. தலைமைப் பண்புகள் நம்மிடமிருந்து நம்மை அறியாமலேயே ஒளிர வேண்டும். அதன் வெளிச்சத்தில் பலர் நம்மை தலைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பிறப்பில் நம் அனைவருக்குமே தலைவராகும் சம வாய்ப்பு உண்டு. அதை நாம் எப்படி உபயோகப்படுத்துகிறோம் என்பதில்தான் தலைவராகும் சூட்சுமம் உள்ளது.

தலைமைக்கு முதல் தகுதியே தன்னை அறிவதுதான். தன்னைத் தெரிந்துகொள்ளாத ஒருவர் அடுத்தவரை எப்போதும் புரிந்துகொள்வதில்லை. தலைமைத் தாங்குவதென்பதே அது மனதர்களையே குறிக்கும். ஒரு வியாபாரத்தையோ நிறுவனத்தையோ அல்ல. அதில் ஈடுபட்டுள்ள மனிதர்கள்தாம். தன்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாத ஒருவர், எதிரில் உள்ள மனிதனை எப்படிப் புரிந்துகொள்வார்? முதலில் தன்னை அறிந்து, அதை ஏற்றுக் கொண்டு, தேவைப்படின் மேம்படுத்திக் கொண்ட இருக்கும் ஒருவரே தலைமை ஏற்க முடியும்.

அடுத்த தகுதி மற்றவரின் பார்வையில் எந்த விஷயத்தையும் பார்த்தல். இந்தப் பண்பு, தான் மட்டுமே சரி என்கிற மனநிலையை மேம்படுத்தும், அடுத்தவருக்கும் கருத்து இருக்கலாம், அது சரியாகவும் இருக்கலாம் என்கிற திறந்த மனதைத் தரும். மிகச் சிக்கலான சவால்களுக்குக்கூட ஒரு விஷயத்தை முழுமையான கோணத்தில் இருந்து பார்த்தால் மிகவும் எளிதான தீர்வு இருப்பது புரியும்.

சைமன் ஸ்நீக் (Simon Sneak ) என்கிற பேச்சாளரின் உரையில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பேச்சு, ‘நீங்கள் தலைமை தாங்கும் துறையில் தொடர்ச்சியாகச் சரிவை சந்திக்கும் ஒரு பிரிவின் பொறுப்பாளரைச் சந்திக்க அழைக்கிறீர்கள். அவரிடம் கடந்த இரண்டு காலாண்டுகளாக உங்கள் பிரிவில் திருப்தியான வளர்ச்சி இல்லை. இது தொடர்ந்தால் அடுத்த காலாண்டில் உங்களின் வேலைக்கு உத்திரவாதமில்லை என்று நீங்கள் சொல்லலாம். அது உண்மையாகக்கூட இருக்கலாம். இங்கே நீங்கள் ஒரு மேலாளராக உங்கள் பணியைச் சிறப்பாகச் செய்தீர்கள், ஆனால், தலைவராக?

நீங்கள் இப்படிச் சொல்லும் போது, அதைக் கேட்பவருக்கு இன்னும் உத்வேகமாக வேலை செய்யத் தோன்றுமா அல்லது அடுத்த வேலையைத் தேடத் தோன்றுமா? நீங்களே முடிவு செய்யுங்கள். இங்கே ஒரு தலைவராக நீங்கள் தோற்றுவிட்டீர்கள். அதே இடத்தில், உங்களின் வளர்ச்சி சரிந்து கொண்டே போகிறதே, என்ன பிரச்னை, உங்கள் தனிப்பட்ட வாழ்வில் எல்லாம் சரியாக இருக்கிறதா? இதைச் சரிபடுத்த நான் என்ன செய்ய முடியும் என்று கேட்கும் போது நீங்கள் தலைவர்.

அந்தப் பொறுப்பாளரின் பிள்ளைகளுக்கு, திருமண வாழ்வில், பெற்றோரின் உடல் நிலையில், ஏன் அவருக்கே தனிப்பட்ட ஏதேனும் பிரச்னை இருக்கலாம். அது நிச்சயம் வேலை திறனைப் பாதிக்கும். அதைச் சரி செய்யாமல் வேலையை மட்டும் பார்ப்பது தலைமைப் பண்பல்ல.

தலைவர்கள் எப்போதும் வேலையைச் சரியாக நடத்துவதில் கவனம் செலுத்துவதில்லை, அதைச் செய்பவர்கள் சரியான மனநிலையில் நல்ல உத்வேகத்தோடு இருக்கிறார்களா என்றுதான் பார்ப்பார்கள். வேலையைச் செய்யும் மனிதர்கள் சரியாக இருந்தால் வேலை நிச்சயமாகப் பிரமாதமாக அமையும்.

அடுத்த பண்பு தொடர்புகொள்ளும் திறன். இது மொழியறிவைப் பற்றியதில்லை. மொழியைத் தாண்டி என்ன சொல்கிறோம் எப்படிச் சொல்கிறோம், உடல் மொழியை எப்படிக் கையாள்கிறோம், எதிரிலிருப்பவர் சொல்வதை எப்படிக் கேட்கிறோம், சொல்லாததை எப்படிப் புரிந்து கொள்கிறோம், அவரை எப்படி உணர வைக்கிறோம் என்பதில் உள்ளது. இதைப் பற்றி நாம் தொடர்புகொள்ளும் திறனில் பார்த்துவிட்டதால் ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டும்.

உலகப் புகழ்பெற்ற தலைவர் நெல்சன் மண்டேலாவிடம், நீங்கள் மிகச் சிறந்த தலைவராக எப்படி உங்களை வடிவமைத்துக் கொண்டீர்கள் எனக் கேட்டதற்கு, அவரின் பதில்:

“எனது தந்தை ஒரு பழங்குடி சமூகத்தின் தலைவர், அவர் கூட்டத்திற்குப் போகும் போதெல்லாம் நானும் போவேன் அப்போது நான் கற்றுக் கொண்டது இதுதான், தலைவனான என் தந்தை கடைசியில்தான் பேசுவார். அதுதான் எனது பால பாடம்” என்றாராம். மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் சாதரணமாகத் தோன்றும் இந்தப் பதில், சற்று ஆராய்வோம்.

கடைசியாகப் பேசும்போது கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர் நினைப்பதைத் தயக்கமின்றிப் பேசும் சுதந்திரம் கிடைக்கிறது. தானும் இந்த முடிவில் பங்கெடுத்தோம் என்கிற நிறைவு ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். அவர்களின் பங்களிப்பு கூடும்.

தலைவருக்கும் அனைவரின் உணர்வுகளும் புரியும்.

எவ்வளவு சிறந்த பண்பு!

இன்னும் கற்றுக்கொள்வோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.