“என் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு என்று தெரியுமா?” என்று புரோக்கரை பார்த்துக் கேட்டார் முத்துமணி.

‘திரு திரு’ வென்று முழித்தார் புரோக்கர். அப்போ இந்தச் சம்பந்தமும் போச்சா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “ஏங்க இந்தச் சம்பந்தத்துக்கு என்ன குறைச்சல்?” என்று எதிர் கேள்வி கேட்டார்.

“ஓட்டு வீட்டுல குடியிருக்கிற பொண்ண கட்டிக்கிட்டு நாளைக்கு என் பையன் எப்படி வந்து தன் மாமனார் வீட்ல தங்குவான்? வேற நல்ல சம்பந்தமா பாரு.”

“சரிங்க” என்று சொன்ன புரோக்கர் மனதுக்குள் புலம்பிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். தன்னுடைய பேங்க் பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா என்று கேட்ட முத்துமணிக்கு அது ஒன்றும் அவர் சம்பாதித்த பணம் இல்லை. அவர் ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். அந்தப் பணம் முழுக்க முழுக்க அவருடைய மகன் ஐடி கம்பெனியில் வேலை செய்து அவருக்கு அனுப்பிய பணம். அதைத்தான் அவர் ஏதோ தான் சம்பாதித்து சேர்த்து வைத்த பணம் போல தம்பட்டம் அடித்து முடித்திருந்தார்.

முத்துமணியின் மகன் ஆதிக்குத் தற்போது திருமணம் செய்ய தீவிரமாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் 5 வருடங்களாக. இன்னமும் பெண் அமையவில்லை. பார்க்கும் பெண்ணையெல்லாம் பிடிக்கவில்லை என்று நிராகரித்துக் கொண்டே இருக்கிறான் மகன். பெற்றோர்களுக்குச் சாதி அந்தஸ்து, ஜாதகம், முக்கியமாகவும் இருக்க மகனுக்கு தான் விரும்பியபடி தன் வருங்கால மனைவி இருக்க வேண்டும் என்பது அவனுடைய ஆசை. சாதியைப் பற்றியோ இன்ன பிற விஷயங்களைப் பற்றியோ அவனுக்குக் கவலை இல்லை என்றாலும் பெற்றோர்களை மீறி அவனால் வேறு எதுவும் செய்ய முடியாத நிலை. ஆனாலும் பிடிவாதமாகத் தான் விரும்பியபடி தன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் உறுதியாக இருந்தான்.

சிறுவயதில் இருந்தே ஆதி கொஞ்சம் பிடிவாதக்காரன் . தனக்கு வேண்டிய பொருளோ காரியமோ அடம்பிடித்து சாதித்துக்கொள்வான். ஒருமுறை வீட்டில் இருக்கின்ற பழைய தொலைக்காட்சிப் பெட்டியை மாற்றக் கோரி அடம்பிடித்து புது தொலைக்காட்சிப் பெட்டியை வாங்க வைத்தான். ஐடி நிறுவனத்துக்குத்தான் பணிக்குச் செல்வேன் என்று ஒற்றைக் காலில் நின்று, தாடி எல்லாம் வளர்த்து பெற்றோரைச் சம்மதிக்க வைத்து வேலைக்குச் சேர்ந்தான். அப்படிப்பட்டவன் பெண் பார்க்கும் விஷயத்தில் மட்டும் முடிவைப் பெற்றோர் கையில் தந்துவிடுவானா? அடம்பிடித்தான். தனக்கு இப்படித்தான் மணப்பெண் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றான்.

28 வயதில் அவனுக்கு 20 வயதில் தங்கை. ஐடி கம்பெனியில் லட்சத்தில் சம்பளம். சரி வயதும் ஆகிவிட்டது என்று வீட்டில் திருமணத்திற்குப் பெண் பார்க்கச் சொன்னான். அதெப்படி தங்கை இருக்க உனக்குத் திருமணம் முடிப்பது என்று கேட்டார்கள் அவன் பெற்றோர்.

ஆதி : நிஷாவுக்கு இப்போதான் இருவது வயசு. அவ படிச்சு முடிச்சு அப்புறம் கல்யாணம் பண்ணனும்னா எனக்கு 32 வயசு ஆகிடும். அப்புறம் எனக்குப் பொண்ணு தேட குறைந்தது ரெண்டு வருசம் ஆகிடும். இன்னும் ஆறு வருசம். என்னால முடியாது.

முத்துமணி : அண்ணனா பொறுப்பா பேசுடா. பொண்ணுக்கு முதல்ல கல்யாணம் பண்ணி சீர் செஞ்சுடணும். நாளைக்கு உனக்கு வரவ சொத்த பிரிக்க விடலனா என்ன பண்ண?

ஆதி : இப்போவே பிரிச்சு வச்சுடுங்க. நான் அந்தச் சொத்து வேணும், இந்தச் சொத்து வேணும்னு கேக்கல. எனக்கு இப்போ கல்யாணம் பண்ணணும். அவ்ளோதான்.

கனகா : (ஆதியின் அம்மா) சரிடா , பண்ணிக்கோ. (முத்துமணிக்கு முகபாவனையிலேயே மகனுக்குப் பெண் பார்க்க ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டார்).

இப்படியாக ஆரம்பித்த பெண் பார்க்கும் படலம் இன்னும் முடிந்தபாடில்லை. பெற்றோர் மற்றும் மகன் இருவரின் எண்ணங்களுக்கு ஏற்ற பெண் சிக்கவில்லை.

காதில் எக்ஸ்ட்ரா நாலு ஓட்டை குத்தியிருந்த பெண்ணை இவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், ஓட்டு வீட்டுப் பெண்ணை இவன் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. சற்றே பூசின உடல்வாகு உடைய பெண் இவனுக்கு வேண்டாம் என்றால், அந்தச் சம்பந்தம் அவன் பெற்றோருக்கு ரொம்ப விருப்பமானதாக இருந்தது.

ஒரே சாதிக்குள் வரன் என்று தேட ஆரம்பித்த போதே திருமண வயதில் உள்ள 98 சதவீத பெண்களை நிராகரித்து விட்டாகியது. மீதி உள்ள பெண்களில் ஜாதகம் பொருந்தி, வர்க்கம் பொருந்தி , இரு குடும்பத்திற்கும் பரஸ்பரம் பிடித்து, சம்பந்தபட்ட இருவருக்கும் பிடித்து… நிற்க… நடுவில் உறவினர்களை மறந்துவிட்டோம். இப்படியான ஒரு கடின பாதையில் பயணித்துக் கொண்டிருந்தான் ஆதி. அப்பயணதில் அவன் முன்தலை முடிகள் பல கோபித்துக் கொண்டு வர மறுத்து விடை பெற்று இருந்தன.

ஒருமுறை அவன் ஆன்-சைட் காரணமாக வெளிநாட்டுக்குச் சென்றிருந்த சமயம் ஒரு பெண் பார்க்கும் நிகழ்வு கூடி வந்தது. அவன் வர இயலாத சூழல். ஒளிப்படம் பார்த்து முடிவு செய்ய அவன் தயாராக இல்லை. போட்டோஷாப் பற்றிய கவலை அவனுக்கு. அப்போதுதான் குருவின் நியாபகம் வந்தது அவனுக்கு. குரு அவனுடைய சித்தப்பா மகன். உறவில் தோஸ்து அவன். குருவுக்கு அழைத்தான் ஆதி.

குரு : என்ன ஆதி?

ஆதி : நாளைக்கு எங்க வீட்ல எனக்குப் பெண் பார்க்க போறாங்க. நீ கூடப் போய் பொண்ண பாத்துட்டு வந்து பொண்ணு ஓகேவான்னு சொல்லு.

(தொடரும்)

படைப்பாளர்

ராம் குமார்

மருத்துவர், ஓர் ஆண் பிள்ளையை வளர்க்க கற்றுக்கொண்டிருக்கும் ஓர் அப்பா.