ஆண் பெண் ஈர்ப்பு என்பது இயற்கையானதும் தவிர்க்க முடியாததும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. அதேபோல காதல் என்பது வெவ்வேறு சூழலில், வெவ்வேறு நபர்களிடத்தில் வந்தாலும் நமது சமூகம் வகுத்திருக்கும் அறநெறிக்குள் வருவது மட்டுமே காதலாக ஏற்கப்படுகிறது. காதல், ஒருதலைக்காதல், காமமில்லா காதல், திருமணம் தாண்டிய உறவு (EMA), கள்ளக்காதல் என என்ன பெயரில் வேண்டுமானால் அழைத்துக்கொள்ளலாம். ஆனால், அதன்பின் இருக்கும் உணர்வு ஆண் – பெண் ஈர்ப்பின் இயற்கை விழைவுதான்.

கலாச்சாரம் கெட்டுவிட்டது, பண்பாடு மறந்துவிட்டது என்று பிதற்றும் பலருக்கும் நம் கலாச்சாரத்தில் இதெல்லாம் புதிதில்லை என்பதை எப்படிப் புரிய வைப்பதென்று தெரியவில்லை. இந்திரன் கவுதம முனிவரின் மனைவி மீது ஆசைப்பட்டது, ஜமத்கனி முனிவரின் மனைவி நீர்நிலையில் தெரிந்த தேவ புருஷன் ஒருவரின்பால் சில நிமிடம் சலனம் ஏற்பட்டதால் கற்பு நெறியில் இருந்து தவறினார் எனப் பரசுராமர் அவர் தலையைக் கொய்தார், சாபம் என கலர் கலர் கதைகளாகத் திரித்து வைத்திருக்கிறோம். இந்தக் கதைகளுக்குப் பின்னால் இருப்பது அனைத்தும் மக்கள் மீது அறங்கள் என்கிற பெயரில் திணிக்கப்பட்ட பயங்களே. சங்ககாலம் தொடங்கி டெக்னாலஜி காலம் வரை அத்தனை அச்சுறுத்தல்களையும் அடக்குமுறைகளையும் மீறி காதல் தன் போக்கில் காட்டாறெனக் கடந்து செல்கிறது.

காதல், திருமணம் என்கிற பந்தத்துக்குள் நுழையாத இருவரிடையே ஏற்படும்போது ஜாதி, அந்தஸ்து, மதம் என்கிற பெயரில் பிரச்னைகளைச் சந்திக்கிறது என்றால், திருமணமான பின் ஏற்படும் காதல்கள் வேறு மாதிரி பிரச்னைகளைச் சந்திக்கின்றன. திருமணம் தாண்டிய உறவு சரி அல்லது தவறு என்பதற்குள் நான் செல்லவில்லை. இது தனிப்பட்ட நபர்களின் தேர்வு. இதனால் பெண்கள் என்ன மாதிரி பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது என்பதை மட்டும் பகிர முனைகிறேன்.

திருமணம் தாண்டிய உறவுக்குக் காரணம் துணையின் அன்பு போதாமை, அக்கறையின்மை, கலவியில் திருப்தியில்லாமை என்று ஆயிரம் காரணங்கள் அடுக்கினாலும், அவற்றின் பலவற்றில் உண்மை இருந்தாலும், அதெல்லாம் தாண்டி தொடர்ச்சியான ஒரே மாதிரியான வாழ்க்கையில் ஏற்படும் சலிப்பைக் (Boredom) கையாளத் தெரியாமைதான் முக்கியக் காரணமாகப் பார்க்கிறேன்.

இன்றைய காலகட்டத்தில் திருமணம் தாண்டிய உறவு வெகு சாதாரணம் என்பது போன்ற போலியான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், அன்றும் சரி இன்றும் சரி திருமணம் தாண்டிய உறவு பல உளவியல் சிக்கல்களையும் சமூக சிக்கல்களையும் இருப்பாலருக்கும் கொண்டு வந்து சேர்க்கும் என்றாலும், இயல்பாகவே கணவனைச் சார்ந்து வாழும் பெண் அதிகம் பாதிக்கப்படுகிறாள். விவாகரத்து பெற்று வேறு ஓர் ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்துகொள்பவர்கள் பற்றி எதுவும் கூறவில்லை. குழந்தைகள், குடும்பம் என்கிற பெரிய அமைப்பிற்குள் இருந்து கொண்டு அதைவிட்டு வெளியே வர மனமில்லாதவர்கள், அதே நேரம் வேறு ஒருவரைக் காதலிக்கும் பெண்கள் இந்த உறவினால் நிறைய மன உளைச்சல்களை அனுபவிக்கின்றனர்.

ஆண்களுக்குச் சாதகமான நமது சமூக அமைப்பில் திருமணம் தாண்டிய உறவில் ஆணுக்கு ஒரு நீதி என்றால், பெண்ணுக்கு ஒரு நீதி என்கிற பாரபட்சம்தான் இன்றும் நிலவி வருகிறது. கணவனைக் கூடையில் சுமந்து சென்ற நளாயினியில் ஆரம்பித்து, தற்போதைய வெப் சீரிஸ் மாடர்ன் லவ்வில் காதலியை வீட்டுக்கு அழைத்து வரும் கணவனின் காதலை ஏற்று, பெண் ஒதுங்கிச் செல்வது வரை இந்த ஆண் மைய சமூக அமைப்பு வலியுறுத்த தலைப்படுவது பாலியல் சமத்துவமின்மையையும், ஆணின் வாழ்க்கைக்காக உன் சந்தோஷத்தை விட்டுக்கொடு என்பதையும்தான்.

ஓர் ஆண் சபலப்படுவதோ பல பெண்களிடம் வழிவதோ நமது சமூகக் கட்டமைப்பில் பெரிய கிண்டல் கேலிக்குள்ளாவதில்லை. மாறாக அவன் ஆண்மையின் (!) உன்னதங்களாகப் போற்றப்படுகின்றன. ஆனால், பெண் சாதாரண நட்பைக்கூடத் திருட்டுத்தனமாகத் தொடர வேண்டிய நிலைமைதான் பல இடங்களில். நட்பே அப்படி என்றால் திருமணம் தாண்டிய உறவு பற்றிச் சொல்லவே வேண்டாம்.

கணவனைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலையில்தான் பல பெண்கள் வாழ்க்கை இன்றும் உள்ளது. சுயசம்பாத்தியத்தில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும், ஒரு திருமண உறவில் இருந்து பிரிந்து இன்னோர் உறவுக்குள் நுழைவது சாதாரணமானது இல்லை. அதுவும் அந்தப் பெண்ணுக்கு குழந்தைகள் இருந்து விட்டால், அது இந்தத் திருமணம் தாண்டிய உறவைப் பெண்ணுக்குப் பெருஞ்சிக்கலாக்குகிறது. சுயசம்பாத்தியம் இருக்கும் பெண் மன உளைச்சல்களை எதிர்கொண்டாலும் தனித்துவிடப்படும்போது, ஓரளவு தன்னைச் சமன்படுத்திக்கொண்டு மெல்ல வாழ ஆரம்பித்துவிடுவாள். தனக்கென வாழ்வாதாரத்துக்கு வழி இல்லாத பெண் நரகத்தில் வாழ்வதுபோலதான் வாழ வேண்டும்.

கணவர் தாண்டி வேறு ஓர் ஆணுடன் பெண்ணுக்கு ஈர்ப்பு ஏற்படும் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத நம் சமூக அமைப்பில், பெண்ணுக்கு காதல் உணர்வு, காம உணர்வு இருப்பதை, அதை அவள் வெளிப்படுத்துவதற்கே பல்வேறு மனத்தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கணவரிடம்கூடக் கூற முடியாத நிலைதான். சமூகம் வகுத்து வைத்திருக்கும் அறநெறி, பயமுறுத்தி வைத்திருக்கும் கற்பு நெறி இதற்குள் இருந்து முற்றிலும் வெளிவர முடியாமல், அதே நேரம் வேறோர் ஆண் மீது காதல் வயப்பட்டால் அதையும் வெளிப்படுத்த முடியாமல் குற்ற உணர்வுக்குள்ளும், பாதுகாப்பின்மை (insecure) உணர்வுக்குள்ளும் உழலத் தொடங்குகிறாள்.

பிள்ளைகள் வளர்ந்து தங்கள் உலகம் நோக்கி நகரும் நேரத்தில் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரும் வெறுமையைச் சந்திக்கும் பல பெண்கள் இந்தத் திருமணம் தாண்டிய உறவில் சிக்கிக்கொள்கிறார்கள். இங்கு ஆண்கள் திருமணமான பெண்ணிடம் காதல் சொல்வதோ, அவளைத் தனது சபலத்துக்குப் பயன்படுத்திக்கொள்வதோ, காமத்துக்கு இரையாக்கிக்கொள்வதோ பெருங்குற்றமாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால், ஒரு பெண் அதனைச் செய்தால் அவளை வார்த்தைகளாலேயே வன்புணர்வு செய்து வக்கிரத்தை தீர்த்துக்கொள்பவர்கள்தாம் அதிகம். மற்றொன்று பல ஆண்கள் திருமணம் தாண்டிய உறவு என்று வரும்போது தெளிவாக இருக்கிறார்கள். குடும்பம்தான் முதன்மையானது, தனக்குப் பிரச்னை இல்லாத வகையில் இன்னொரு பெண்ணுடன் உறவு என்பது பெரிதாக எந்தப் பொறுப்பும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லாமல் தங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் மகிழ்ச்சி என்கிற நிலையில் உறுதியாக இருக்கிறார்கள்.

அதேபோல ஆண்கள் திருமணம் தாண்டிய உறவில் பெரும்பாலும் உணர்வுப்பூர்வமாக இணைய மாட்டார்கள். தங்கள் தேர்வு காமம், அதில் நுழைய காதல் ஒரு துருப்புசீட்டு என்ற தெளிவு இருக்கும். ஆனால், காதல் இல்லாத காமம் சாத்தியமில்லை என்கிற எண்ணம் சின்ன வயதிலேயே விதைக்கப்பட்டு, அதை வாழ்வியலாக ஏற்று வாழும் பெண்கள் வேறு ஆணுடன் காதல் அல்லது உறவு என்று வரும்போது பல்வேறு குழப்பங்களால் அவளுக்குள்ளாகச் சிறைப்பட்டு, அப்படிச் சிறைப்படுவதாலேயே மூச்சு முட்டி, காமம் குறித்து அவளறியாமல் ஊறிப்போன நம்பிக்கையால் திருமணம் தாண்டிய உறவையும் உணர்வுப்பூர்வமாக அணுகுகின்றனர். திருமணம் ஆன ஆணிடம் காதல் வயப்பட்டு உறவுக்குள் நுழையும் பெண், அந்த ஆணுக்கு உறவில் சலிப்பு ஏற்பட்டு புறக்கணிக்கப்படும் போது பெரும் மன உளைச்சலுக்குள்ளாகிறாள்.

ஆண் பெரும்பாலும் ஒரு பெண்ணை அடைய காட்டும் முனைப்பை அதைத் தொடர்வதில் காட்டுவதில்லை. இந்த உண்மையைப் பெண்களால் ஏற்க முடிவதில்லை.

திருமணமாகாமல் காதலில் இருக்கும் பெண் அடையும் மன உளைச்சலைவிட, திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் பெண் அடையும் மன உளைச்சல் கொடுமையானது. முதலாவதுக்குச் சிலரிடமாவது ஆதரவு கிடைக்கும், இரண்டாவதுக்கு ஆதரவு கிடைக்காது என்பதைவிட அவள் சொல்லும் எந்த நியாயமும் நிராகரிக்கப்படும். இதனால் இந்தத் திருமணம் தாண்டிய உறவில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் இதிலிருந்து மீண்டு வர முடியாமல், குற்ற உணர்விலும் கழிவிரக்கத்திலும் பாதிக்கப்பட்டு தன்னைத் தானே ஒடுக்கிக்கொள்கிறார்கள்.

இந்த உறவுக்குள் நுழையும் பெண்கள் தெரிந்தகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று, என்ன உருகி உருகி காதலிக்கிறேன் என ஆண் கூறினாலும் யதார்த்த உண்மை, மனைவி அல்லாத பெண் பெரும்பாலும் ஆணுக்கு ஒரு செக்ஸ் டாய்தான். அதுமட்டுமல்ல, பெண்களைப்போலவே ஆண்கள் இந்த உறவில் அதிகமாக பொஸசிவ் காட்டுவார்கள். காரணம், அவர்களைப் பொறுத்தவரை அவனுடன் உறவில் இருக்கும் பெண் அவனின் உடைமை. ஆனால், பெண்ணுக்கு எந்த உரிமையும் இருக்காது. அவள் காதலித்த ஒரே காரணத்தால், தான் முதன்மை இல்லாததை மனக்கசப்புடன் விழுங்கி ஆக வேண்டியிருக்கும். இதை ஏற்பது பெண்களுக்கு மிகக் கடினமான ஒன்று. தனக்கு உரிமை இல்லை, கிடைக்காது என்பது ஓரிருமுறை மனதளவில் அடி வாங்கும் வரை புரியாது. புரிந்தாலும் அதை ஏற்க மனமும் வராது. இல்லாத ஒன்றை எதிர்பார்த்து ஏங்கத் தொடங்கி, பின் அதுவே மன உளைச்சலாக, விரக்தியாக பெண்ணின் சந்தோஷத்தைச் சுருட்டிவிடும்.

திருமணம் தாண்டிய உறவில் நுழையும் போது எதை இழந்து, எதைப் பெறப்போகிறோம் பெறுகிறோம் என்பதுதான் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று.

(தொடரும்)

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.