‘அந்தப் பெண் மகிழ்ச்சியாக விவாகரத்து செய்தார்’ – இது போன்ற ஒரு வாக்கியம் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம், சிலருக்கு எரிச்சலாகவும். “இதெல்லாம் ஒரு பொண்ணா, விவாகரத்து ஆனதை இப்படிச் சொல்றா” என ஏச்சும் பேச்சும் அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து பரிசாக இந்தச் சமூகம் கொடுக்கும்.

திருமணமும் விவாகரத்தும் இரு தனிநபர்களின் தனிப்பட்ட விஷயம், அதில் அடுத்தவர்கள் தலையிடுவது அது பெற்றோராகவே இருந்தாலும் அநாகரிகம் எனும் சிந்தனை நம் சமூகத்தில் இன்னும் பிறக்கவில்லை, மாறாக தன் பிள்ளைகளின் திருமணம் தங்கள் பொறுப்பு எனப் பெற்றோர் நினைப்பதும், அந்தக் குழந்தைகள் விவாகரத்து செய்வதைத் தாங்கள் அங்கீகரிக்க வேண்டும் எனப் பெற்றோரும் சமூகமும் எதிர்பார்ப்பதும்தான் விவாகரத்தின் மீது பெரிய அளவில் எதிர்மறை சிந்தனை இருக்க காரணம்.

ஒருவர் தன் திருமண வாழ்வில் இருந்து வெளியேற நினைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம், ஏன் காரணம் இல்லாமல் ஏதோ ஒன்று தனக்கு ஒத்துவரவில்லை என்பதால்கூட ஒருவர் திருமண உறவில் இருந்து வெளியேறலாம். இது முழுக்க முழுக்கத் தனிநபர் சார்ந்த விஷயம். அதில் கலாச்சாரம், பண்பாடு, சமூகக் கட்டமைப்பு, மதம், ஜாதி எனப் பல காரணிகளைக் கொண்டு வந்து தனிமனித வாழ்வையும் தனிமனித சுதந்திரத்தையும் பொதுச் சமூகம் கட்டுப்படுத்த நினைப்பதென்பது நாகரிக சமூகம் செய்யும் செயலா என ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே கேள்வியெழுப்பி விடை தேட முயற்சிப்பது நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள உதவும்.

உலக அளவில் இந்தியாவில்தான் குறைந்த விகிதத்தில் விவாகரத்து நடக்கிறது, இதற்கு காரணம் நம் சமூக விழுமியங்கள்தாம், நம் கலாச்சாரமும் பண்பாடும் தான் அதிக அளவில் விவாகரத்து நடக்காமல் குடும்ப அமைப்பு சிதையாமல் இருக்க காரணம் என்பது போன்ற கருத்துகளை சமீபமாக சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிந்தது. கிட்டத்தட்ட 0.01% மட்டுமே இந்தியாவில் விவாகரத்து நடக்கிறது எனத் தரவுகளின் அடிப்படையில் தெரியவருகிறது.

இதில் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட நம் நாட்டின் கலாச்சாரமும் பண்பாடும்தான் விவாகரத்து அதிகம் நடக்காமல் இருக்க காரணம் எனும் கருத்து சரிதான். நம்மைச் சுற்றி மிக சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிடுகிறேன், அதிலிருந்து எப்படி நம் கலாச்சாரம் இதற்கு காரணம் எனப் புரிந்து கொள்ள முடியும். ஒரு பெண் தன் பெற்றோரிடமோ குடும்பத்தாரிடமோ அவள் கணவன் அவளை அடிப்பதாகச் சொன்னாலோ அவள் திருமண வாழ்வில் ஏதாவது குழப்பம் என்று சொன்னாலோ, அவர்களின் முதல் பதில் இதுவாகதான் இருக்கும், “பொண்ணு நீ கொஞ்சம் விட்டுக் குடும்மா, கல்யாண வாழ்க்கைன்னா இதெல்லாம் சகஜம், எல்லாம் சரி ஆகிரும். பொறுத்துக்கோ.”

குறைந்தபட்சமாக அந்தப் பெண்ணின் குமுறலைக் காது கொடுத்து கேட்கக்கூட யாரும் தயாராவதில்லை, அவளின் கல்யாண வாழ்வில் ஏற்பட்ட குழப்பம் அதிகமாவது போல் இருந்தால்கூட, ஏன் அந்தப் பெண் பகிரங்கமாக உடல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாலும்கூட, ஏதாவது பேசி அந்தப் பெண்ணை அவள் கணவனுடன் சேர்த்து வைத்துவிடுவதுதான் தாங்கள் அந்தப் பெண்ணிற்குச் செய்யும் மிகப்பெரிய நன்மை எனச் செயல்படுகிறது இந்த ஒட்டு மொத்த சமூகமும். அந்தப் பெண்ணுக்கு இந்தச் சமூகத்தின் அங்கீகாரத்தோடு அவள் பெற்றோரால் அமைத்து வைக்கப்பட்ட வாழ்க்கை, அது எப்படிப்பட்டதென்றாலும் இந்தச் சமூகத்திற்காக வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறாள். அதற்கு காரணம் நம் கலாச்சாரத்தில் குடும்பம், பெண்கள், திருமணம், குழந்தைகள், தாய்மை, பெண்மை போன்றவை புனிதப் படுத்தப்பட்டிருப்பதும், பெண்கள் விட்டுக்கொடுத்து வாழ்பவர்கள், பெண்கள் கடலினும் பெரிதாகப் பொறுமை காப்பவர்கள், பெண் என்பவள் தியாகத்தின் உருவம், திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர், கணவன் மனைவி உறவு என்பது உயிர் பிரியும் வரை உடன் வரும் புனிதமான உறவு என்பது போன்ற மிகைப்படுத்தல்களும் சேர்ந்து பிடிக்காத உறவாக இருந்தாலும் அதில் அந்தப் பெண்ணை வாழ நிர்பந்திக்கிறது. சமூக அளவில் திருமணம் சார்ந்து பல கட்டுப்பாடுகள் இருப்பினும் இதில் இருந்து ஆண் விடுதலை பெற வேண்டும் என நினைத்தால் அதை மிக எளிதாக ஏற்றுக் கொள்ளும் சமூகம், அந்த விடுதலையைப் பெண் விரும்பினால் எதிர்க்கிறது.

ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே, பெண் குழந்தைகளை விரும்பும் பெற்றோர் உனக்கான இளவரசன் எங்கோ பிறந்திருக்கிறான் எனச் சொல்லிக் கொஞ்சுவதும், பெண் பிள்ளைகளைப் பிடிக்காத பெற்றோர் எப்படித் திருமணம் செய்து வைப்பது என்ற கவலையுடன் அந்தக் குழந்தையை அணுகுவதும் மிக சாதாரணமாக நாம் பார்க்கும் காட்சிகள், இவை இரண்டிலும் பொதுவாக இருப்பது அந்தப் பெண் குழந்தையின் திருமணம் சார்ந்த கவலைதான். பெண் குழந்தை பிறக்கும் போதே அவளின் திருமணம் சார்ந்த கவலையும் சேர்ந்தே பிறக்கிறது. பெண்கள் தனியாக வாழ முடியாது எனக் காலம் காலமாகச் சொல்லி வைத்திருப்பதும், தன் பிள்ளைகளுக்குத் தாங்கள்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் எனப் பெற்றோர் நினைப்பதும்தான் இத்தகைய கவலைகளுக்கு முக்கியக் காரணம். பிள்ளைகள் அவர்கள் துணையை அவர்களே தேர்ந்தெடுக்கட்டும் என நினைப்பவர்களுக்கு இது போன்ற எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், அப்படிப் பெரும்பான்மையான பெற்றோர் நினைப்பதில்லை, காரணம் சாதி, மதம் போன்ற அடிப்படைவாதங்களின் தாக்கம்.

இது ஒருபுறமிருக்க, விவாகரத்தை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்கூட விவாகரத்திற்குப் பின் அந்தப் பெண் தனியாக வாழ்வது குறித்து கவலை கொள்கிறார்கள், என் மகள் தனியாக வாழட்டுமே அதனால் என்ன எனும் மனப்போக்கே 99.9 சதவீதம் பெற்றோருக்கு இல்லை. மேலும் பொருளாதாரத்தில் தன்னிறைவடையாத குடும்பத்தில் இந்தக் கவலை மிக அதிகம். பெரும்பான்மையான வீடுகளில் பெண் பிள்ளைகளின் திருமணம் குறித்த பேச்சு வரும் போது முதல் வார்த்தையாக வருவது, “என் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சுட்டா கடமை முடிஞ்சுரும்” அதாவது பெண் குழந்தைகள் இன்றும்கூட மனதளவில் பெற்றோருக்கு ஒரு பாரமாகவே உள்ளனர், அந்தப் பாரத்தை அவளுக்கு ஒரு திருமணம் செய்வதன் மூலம் இறக்கி வைக்கலாம் என நினைப்பவர்களுக்கு, திருமணம் ஆன பெண் அந்த உறவை முறித்துக் கொள்வதன் மூலம் மீண்டும் பாரத்தைச் சுமக்க வேண்டி வருமோ என்கிற எண்ணமும் பெண்கள் விவாகரத்து செய்வதை எதிர்க்கும் மனநிலைக்குத் தள்ளுகிறது.

சமீபத்தில் (2022) இந்தியக் குடும்பங்களில் ‘நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே (NFHS)’ நடத்திய பெரிய அளவிலான பல சுற்றுக் கணக்கெடுப்பில் ‘திருமணமான 18 – 49 வயதுடைய 29.3% இந்தியப் பெண்கள் குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். 18 – 49 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் 3.1% பேர் அவர்களின் கர்ப்ப காலத்தில் உடல் ரீதியான வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள். உடல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும்கூடப் பெரும்பான்மையான பெண்கள் தங்கள் திருமண உறவில் இருந்து விவாகரத்து பெறுவது குறித்துச் சிந்திக்காமல் இருக்கக் காரணம் என்ன?

விவாகரத்திற்குப் பின் இந்தச் சமூகம் தன்னை அங்கீகரிக்காது எனும் பயம் ஒருபுறம் இருந்தாலும், பொருளாதார பலம் இல்லாமல் எப்படி வாழ முடியும் எனும் கேள்விகள்தாம், கலாச்சாரம் பண்பாடு எனும் காரணங்களுக்கு அடுத்தபடியாக வந்து நின்று, அவர்கள் வன்முறை நிறைந்த உறவில் நீடிக்க காரணமாக அமைகிறது. பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவடையும் போது தனியாக வாழ முடியும் எனும் தன்னம்பிக்கை பிறக்கும், அந்தத் தன்னம்பிக்கை அவளைச் சுயமாகச் சிந்திக்க வைக்கும். அப்படிச் சிந்திக்கும் போது தனக்கு எது தேவை, எது தேவையில்லை எனும் முடிவை சுயமாக எடுக்கும் தெளிவு பிறக்கும். அந்தத் தெளிவு தன்னை எவையெல்லாம் அழுத்துகிறதோ அவற்றையெல்லாம் கடந்து வரும் வலிமையை அவளுக்குக் கொடுக்கும்.

பெண்கள் விவாகரத்து செய்வதைப் பொறுத்த வரை, பொருளாதாரத்தில் சுயமாக நிற்கும் பெண்களின் விவாகரத்தையும்கூட இச்சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை, அதற்கு காரணம் ஒரு பெண் எப்படித் தனியாக வழ முடியும், அதுவும் மகிழ்ச்சியாக எனும் மனப்போக்குதான். அதை மீறி விவாகரத்து செய்து தனியாக ஒரு பெண் வாழும் போது அவளை மனரீதியாகச் சோர்வடையச் செய்யும் வேலைகளைச் செய்யவும் தவறுவதில்லை பொது சமூகம். அதையும் மீறி ஒரு பெண் வாழ்ந்தால் அவளுக்குச் சமூகத்தில் எந்த ஓர் அங்கீகாரமும் கிடைக்காது எனும் மாயையையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படியான பல மனத் தடைகளை ஏற்படுத்தி, தனக்குப் பிடிக்காத திருமண உறவில் இருந்து வெளியேற நினைக்கும் பெண்களின் கால்களில் கண்ணுக்குத் தெரியாத கலாச்சார சங்கிலியைப் பூட்டி வைக்கிறது இந்தச் சமூகம்.

அந்தச் சங்கிலியை உடைக்க பெண்களின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ள ஆயுதம்தான் சட்டரீதியாக விவாகரத்து செய்யும் உரிமை. ஆனால், அந்த ஆயுதம் பெண்களின் கைகளில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொலைவில் வைக்க பலவாறு முயற்சிக்கிறது இந்தச் சமூகம். அந்த முயற்சியில் பொதுசமூகம் காட்டியெழுப்பியுள்ள மிகப்பெரிய மாயச்சுவர்தான் கலாச்சாரம், பண்பாடு, புனிதம் போன்றவை. இந்தக் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றில் சிக்காமல், பிடிக்காத உறவில் இருந்து வெளியேறும் தைரியம் பெண்களுக்கு வர வேண்டும். பெண்கள் எடுக்கும் இதுபோன்ற ஒவ்வொரு முடிவிற்கும் இந்தச் சமூகத்தின் ஒப்புதல் பெரும் பணியில் தங்கள் நேரத்தைச் செலவிடாமல், பெண்கள் அவர்களின் வாழ்வை சுதந்திரமாக வாழ பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.

திருமணம் நடந்து விட்டது என்பதற்காகவே பிடிக்காத உறவில் நீடிக்காமல், கண்ணுக்குத் தெரியாத சங்கிலியை, சட்டம் கொண்டு நொறுக்கிவிட்டு வெளியேறுவதுதான் கணவன் மனைவி இருவரின் எதிர்காலத்திற்கும் நல்லது, குறிப்பாகப் பெண்களின் எதிர்காலத்திற்கு நல்லது.

இனி யாராவது விவாகரத்து செய்தால், “இனிய விவாகரத்து நாள் வாழ்த்துகள்” என வாழ்த்துச் சொல்லும் அளவு விசாலமான மனநிலையுடன் இருப்போம். குறைந்தபட்சம் அப்படியிருக்க முயற்சிப்போம்.

படைப்பாளர்:

நாகஜோதி

Doctor of pharmacy (Pharm.D) படித்திருக்கிறார். ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிகிறார். நாத்திகவாதி. பெண்ணியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம் சார்ந்து இயங்குகிறார். டிவிட்டரில் இயங்கும் முச்சந்துமன்றம் என்கிற புத்தக வாசிப்புக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.