பெண்களின் உணர்வுகளைக் குறித்தும், ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையேயுள்ள உணர்வு வேறுபாடுகளைக் குறித்தும் ஏகப்பட்ட ஆய்வுகள் உலகெங்கும் தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஏன், எந்தவொரு முடிவுக்கும் வராமல் இந்த ஆய்வுகள் இன்னும் பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட புள்ளியிலேயே தொடங்கி, இன்னும் அதே புள்ளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன?

சில ஆய்வு முடிவுகள் பெண்கள்தாம் ஆண்களைவிட உணர்வு மிகுந்தவர்கள் என்றும், வேறு சில முடிவுகள் ஆண் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை… அவனுக்கும் பெண்ணுக்கிருக்கும் அதே அளவு உணர்வுகள் இருக்கின்றன. ஆனால், இருவரும் அவற்றை வெளிப்படுத்திக்கொள்ளும் விதம்தான் வெவ்வேறானவை என்றும்… ‘பெண்கள் ஆச்சரியம், காதல், அன்பு, ஆசை, அழகுணர்ச்சி, பயம்’ போன்ற உணர்வுகளை பகிரங்கமாக வெட்கமின்றி தனிப்பட்ட முறையிலும் சமூகத்தின் முன்பும் வெளிப்படுத்திவிடுகிறாள். ஆனால், ஆண்கள் தங்களது இயலாமை, பலவீனங்களைக்கூட நேரடியாக வெளிப்படுத்தாமல் அதை, ‘கோபம்’ என்கிற சாயம் பூசியே வெளிப்படுத்திக்கொள்கிறார்கள்.

தான், தன் துணையைப் பாதுகாக்க இந்தப் பூமியில் அவதானித்துள்ள ஒரு முழு நேரக் காவல்காரர், தன் தோள்களில் தனது குடும்பத்தின் பாரத்தைச் சுமக்க வந்துள்ளவர், ஒரு முதலாளி, ஒரு கண்டிப்பான சட்ட திட்டங்களை வகுத்து அவற்றின் நேர்கோட்டில் குடும்ப உறுப்பினர்கள் என்னும் ஆட்டு மந்தையை மேய்க்கப் பிறந்த ஒரு மேய்ப்பன், எல்லாவற்றிற்கும் மேலாக, தன்னை உணர்வளவிலும், உடலளவிலும் சார்ந்திருக்கும் தனது மனைவிக்கு… ‘அவளை ஆளப் பிறந்த ஓர் அரசன்’… இத்தகைய பண்புகளை மட்டுமே, தன் அந்தரங்க வாழ்விலும் சமூகத்தின் முன்னிலையிலும் வெளிப்படுத்த விரும்புகிறான் என்றும் இன்னும் சில ஆய்வுகள் முடிவுகள் வெளிவந்துள்ளன.

‘இப்படி ஆளுக்கொரு முடிவுகளைச் சொன்னால், நாங்கள் எதை எடுத்துக்கொள்வது? மனைவியைப் புரிந்துகொள்ள ஏதாவது வழி கிடைக்குமா என்று இங்கே வந்தால், ஏற்கெனவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் எங்கள் அந்தரங்க வாழ்வை, சுத்தமாகத் துவைத்துக் காயப் போட்டு விடுவீர்கள் போலவே’ என நொந்து போயிருக்கும் ஆண்களில் நீங்களும் ஒருவரா? பதற்றம் தேவையில்லை. ‘மனிதம்’ என்கிற அடிப்படைக்குள் வாருங்கள். இதுதான் உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கான முதல் வழி.

உங்களுக்குப் பசிப்பதுபோல்தான் அவளுக்கும் பசிக்கும், வெகு தூரம் நடந்தால், உங்களுக்குக் கால் வலிப்பது போல்தான் அவளுக்கும் வலிக்கும், அவமரியாதையான வார்த்தைகள் தன்னை நோக்கி வீசப்படும்போது, உங்களுக்கு கோபம் வருவதைபோல்தான் அவளுக்கும் வரும். இந்த அடிப்படைகளைப் புரிந்துகொள்வது முதல் படி.

இரண்டாவது, கண்டிப்பாக மேற்கத்திய நாடுகளில் வாழும் ஆண்களின் சிந்தனை முறை, வளர்ப்பு, அவர்களது சுற்றுச் சூழல் வடிவமைத்துள்ள ஆண்களின் மனோபாவம், பெண்களை அவர்கள் நடத்தும் விதம், அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட விஷயங்கள், சிந்தனை முறைகள் உட்பட இன்னும் பல நூதன அம்சங்கள் அந்நாட்டுப் பெண்களின் மன உணர்வுகளையும், உணர்ச்சி வெளிப்பாடுகளையும் தீர்மானிக்கின்றன. இவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளையும் அவற்றின் முடிவுகளையும் உங்கள் வாழ்க்கையோடு அல்லது வாழ்க்கைத் துணையோடு ஒப்பிட்டுப் பார்த்து, நீங்கள் உங்கள் அந்தரங்கப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது.

‘ஒண்ணு தலையை இப்படி ஆட்டு… இல்ல, அப்படி ஆட்டு… ஏண்டா இப்படி மாத்தி மாத்தி குத்துமதிப்பா ஆட்டி என் உசுர எடுக்கற?’ என வடிவேலு கேட்பதைப்போல்தான் நம் ஆண்களிடமும் கேட்கத் தோன்றுகிறது.

ஒன்று, மேற்கத்திய வழிமுறைகளையும் எதிர்பார்ப்பு அம்சங்களையும் உங்கள் இல்லற வாழ்வில் பின்பற்ற விரும்பினீர்களென்றால், அவற்றைத் தெரிந்து கொள்வதற்கான முழு முயற்சிகளைச் சிரத்தையுடன் எடுக்க வேண்டும். இல்லை, உங்கள் சூழலுக்குத் தகுந்தவாறு சில மாற்றங்களைச் சுயநலமின்றி, உங்கள் துணையுடன் கலந்து பேசி, அவளது ஆசைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து ஒரு பரஸ்பரத் தீர்மானத்திற்கு வர வேண்டும்.

இப்படி இரண்டு எல்லைகளுக்குள்ளுமே வராமல், எப்போதும் ஒரு ‘ரெண்டாங்கெட்டான்’ மன நிலைக்குள்ளேயே செக்கு மாடுபோல் சுழன்று, தனது உணர்வுகளுக்கு வெடி வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாது, தன் மனைவியின் உணர்வுகளையும் புதைகுழிக்குள் தள்ளி விடுவார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், ‘சிந்துபைரவி சுஹாசினிபோல் ஒரு காதலி வேண்டும். ஆனால், சுலோச்சனா போல் ஒரு மனைவி வேண்டும்’ என்று எதிர்பார்ப்பார்கள். அதிலும் ‘அப்படி’ ஒரு மனைவியை வைத்துக் கொண்டு, ‘இப்படி’ ஒரு பெண்மேல் ஆசைப்படுவதும், சதா தன் மனைவியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவளோடு ஒப்பிட்டுப் பேசுவதும் தனது கலவியல் உணர்வுகளைத் தூண்டாதது இந்த ‘அப்பாவி மனைவியின்’ தவறுதான் என்றும் தங்களுக்குத் தாங்களே காரணங்களைக் கற்பித்துக் கொள்வார்கள்.

இன்னும் ஒரு சில ஆண்கள் இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடுமளவிற்கு அடுத்தபடிக்குப் போய், ‘சுஹாசினி போன்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, திருமணத்திற்குப் பிறகு அவள் ‘சுலோச்சனாவாக’ மாறிவிட வேண்டுமென்று கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் எதிர்பார்ப்பார்கள்.

எந்த விஷயத்திற்காக ஒரு பெண்ணிடம் ஈர்க்கப்பட்டு அவளைத் தனதாக்கிக் கொண்டானோ… அந்த விஷயத்தைத்தான் அவள் தனக்குச் சொந்தமாகிவிட்ட பிறகு அவளிடமிருந்து முற்றிலும் சுவடு தெரியாமல் அழிக்க விரும்புகிறான். சொல்லப்போனால் ஒரு பெண்ணின் ‘செக்ஸ் அப்பீல்’ (பாலினக் கவர்ச்சி) என்பதே அவளது நடவடிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள்,குணம், இயல்புகளைச் சார்ந்தவைதான். அதை அழித்துவிட்ட பிறகு அவளிடம் என்ன மிஞ்சியிரும்?

பெண்களின் பாலுணர்வு தூண்டப்படுவது, ‘ஒரு ஆண் அவளை நடத்தும் விதத்தைச் சார்ந்தே அமைகிறது. திருமணத்திற்கு முன் அவன் எப்படித் தன்னை நடத்தியதால், அவள் அவன்பால் தூண்டப்பட்டாலோ… அதற்கு நேர்மாறாக அவன் நடந்துகொள்ளத் தொடங்குகையில்… அவன் முற்றிலும் வேறான, ஓர் அந்நிய நபராகத்தான் அவளுக்குத் தோன்ற ஆரம்பிக்கின்றான்.

அந்த நிலையில், தான் அடியோடு ஏமாற்றப்பட்டதைப் போன்று சுய பச்சாதாபமும் தன் மீதான கழிவிரக்கமும் தன் கணவன் மீது கோபமும்தான் தோன்றுமேயொழிய, அவன் மீதான காம உணர்வு ஒரு துளிகூட இருக்காது.
இன்னும் சுருக்கமாக, தெளிவாகச் சொல்லப்போனால், திருமணத்திற்குப் பிறகு வேறோர் ஆண்மீது ஈர்க்கப்படும் பெண்கள் அங்கே தேடுவது இன்னோர் ஆணையல்ல… திருமணத்திற்குப் பிறகு, தான் தொலைத்துவிட்ட தனது கணவனின் பழைய முகத்தைதான்.

பல வருடங்களுக்கு முன்னால், ‘எய்ட்ஸ் ‘ விழிப்புணர்வுப் பிரசாரம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில், பாலியல் தொழிலாளிகளுக்கும் திருநங்கைகளுக்கும் நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு, அதைப் பற்றிய செய்தி வெளியிட ஒரு பத்திரிக்கையாளர் என்கிற முறையில் அழைக்கப்பட்டிருந்தேன்.

கருத்தரங்கின் தேநீர் இடைவேளையின் போதும், நிகழ்ச்சி முடிந்த பின்னும் சில பாலியல் தொழிலாளிகளிடமும், திருநங்கைகளிடமும் பேசிக்கொண்டிருந்தேன். “என்னதான் பல நபர்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டாலும், எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, சக மனுஷியாக நடத்தும் ஒரு ஆண் எங்களிடம் வரும்போது மட்டுமே உணர்வளவிலும் உடலளவிலும் தூண்டப்படுகிறோம். அப்படி ஒரு ஆண் திருமணம் என்கிற பந்தம் எங்களுடன்
கொண்டிருக்காவிட்டாலும்கூட, நீண்ட காலம் எங்கள் வாழ்க்கையில் உடன் வருகிறான்” என்பதுதான்.

ஆக, தன் வாழ்க்கையில் தினம் தினம் புதிய ஆண்களைச் சந்திக்கும் பெண்களாயிருந்தாலும், தன்னை, தான் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஏற்றுக்கொண்டு, அவளை, அவளது உணர்வுகளை மதிக்கும் ஓர் ஆண்தான் அவளது உணர்வுகளைத் தூண்டும் காரணி. அப்படியிருக்கும் போது, கணவனைத் தவிர வேறு ஆண்களைப் பார்க்கவோ பேசவோகூட அனுமதிக்கப் படாத பல கோடிப் பெண்கள் எவ்வளவு அதிகமாக , உணர்வுரீதியாகத் தன் கணவனைச் சார்ந்திருப்பார்கள்?

நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய மூன்றாவது மிக முக்கியமான விஷயம், இந்தச் சமூக எல்லை வரையறைகள் சார்ந்து ஒரு பெண்ணைப் புரிந்துகொள்ளும் முயற்சிகளும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும்தான். சில பொதுவான வழிமுறைகளை சொல்லிவிட்டு, அதை ஒவ்வொரு வீட்டின் படுக்கையறைச் சுவர்களிலும் ஒட்டி வைத்துக் கொண்டு, இவற்றை மட்டும் பின்பற்றுங்கள்.

உங்களுக்கிருக்கும் அனைத்து விதமான உறவுச் சிக்கல்களுக்கும் இதுவே சகல நிவாரண மருந்து என்று சொல்லிவிட்டுப் போய்விடலாமே?
ஏன், பொதுவாகச் சொல்லப்படும் தீர்வுகள் தனிமனித அந்தரங்க உறவுச்சிக்கல்களைத் தீர்ப்பதில்லை? உங்கள் வீட்டுப் பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள உங்களுக்கு வழிகாட்டுவதில்லை? மனநல ஆலோசகர்கள் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் கத்திப் பேசுவது ஏன் அனைவரின் பிரச்னைகளையும் தீர்ப்பதிலை?

காரணம், மனிதர்கள் ஒவ்வொருவரும் மிக, மிகப் பிரத்யேக, சூட்சும குணங்களை உள்ளடக்கியுள்ள ஜீவராசிகள். நமது ஒவ்வொரு தலைமுடியும் நகமும் எவ்வாறு முற்றிலும் வேறுபட்ட, தனிச்சிறப்புடைய செல் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளனவோ, அதேபோல்தான் தனிநபர்களின் மனதும்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளை, அவளாலேயே முழுதாகப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு உணர்வு வலைகள் பின்னப்பட்டிருக்கும். தங்களைப் பற்றித் தாங்கள் புரிந்து கொள்ளவும், தனது உணர்ச்சிகளை அவள் வெளிப்படுத்துவதற்கான அவகாசத்தையும் தரும் கணவனால் மட்டுமே தன் மனைவியையும் உண்மையான உச்சகட்டம் அடைய வைத்து, தானும் பேரின்பக் கடலில் நீந்த முடியும்.

ஒரு பெண் வளர்ந்த சூழல், கருவறையிலிருந்து தோன்றும் ஆழ்மன சிந்தனைகள், பயங்கள்… விழிப்புணர்வுநிலை மற்றும் சுய உணர்வுத் தன்மையில் அவள் எந்தக் கட்டத்தில் இருக்கிறாள் என்பதெல்லாமே அவளது அந்தரங்க ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் தீர்மானிக்கின்றன. உங்கள் கைதொடும் தூரத்திலிருக்கும் மனைவியின் மனநிலையை, உணர்வுகளை உங்களாலேயே புரிந்துகொள்ள முடியாதபோது, அதற்கான நேரம் செலவழிக்க முடியாதபோது, பத்தோடு பதினொன்றாக நீங்களும் ஒரு வாடிக்கையாளர் என்கிற வட்டத்தில் உங்களை வைத்துப் பார்க்கும் ஒரு மனநல நிபுணரால் எப்படி உங்களுக்காக அவ்வளவு நேரம் செலவழிக்க முடியும்?

கணவனாக இருப்பதென்பது ‘ஒரு பகுதி நேர வேலை’ கிடையாது. அதுதான் உங்கள் முழுநேரத் தொழில். மனைவி என்பவள் உங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமல்ல, அவள்தான் ‘உங்கள் வாழ்க்கையே.’ நீங்கள் வேலை செய்வது, சம்பாதிப்பதெல்லாம் கணவனாயிருக்கும் இந்த முழு நேரப் பொறுப்பை நகர்த்திச் செல்ல உதவும் ஒரு சிறிய அங்கம்தான். இதைப் புரிந்து கொண்டால் மட்டுமே, இந்த அடிப்படை உண்மையை நீங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்தத் தொடரில் நான் சொல்லப்போகும் விஷயங்களை நீங்கள் உள்வாங்கி, அவற்றைப் பின்பற்றி, உங்கள் கலவியல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

திருமணமாகாத ஆண்கள் இந்தத் தொடரை வாசித்துக் கொண்டிருந்தீர்களென்றால், ‘கணவனாயிருப்பது முழு நேர வேலை’ என்கிற நிதர்சன உண்மையைக் கிரகிக்க முடிந்தால் மட்டுமே, அந்தக் கடலில் குதியுங்கள். இல்லையென்றால், நீங்கள் கரையிலேயே நின்றுவிடுவது உத்தமம்.

(தொடரும்)

படைப்பாளர்:


செலின் ராய்

காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) – இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும், அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர். பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கி, தமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியும், புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் எழுதியும் வந்தவர். பெண்களுக்கான பிரபல பத்திரிகைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது ‘The youngest Editor of Tamil Nadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. 53 ஆடியோ, வீடியோ சிடிகளைப் பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர், எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளைத் தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்.