அன்று மாலை, ஆபிஸ் முடிந்து, பஸ்ஸுக்காகக் காத்திருந்த, ஷாலினியின் பக்கத்தில், ஒரு பைக் வந்துநின்றது. ஒரு நொடியில் புரிந்துவிட்டது. அது அருண்தான் என்று. ஹெல்மெட்டின் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு, ”முதலில் பைக்கில் ஏறு,  அப்புறம் பேசிக்கலாம்” என்றான் அருண்.

“இல்லை, நான் வரலை.” ஷாலினி அவசரமாக மறுத்தாள்.

”நீ வீட்டுக்கெல்லாம் வர வேணாம். முதல்ல பைக்ல ஏறு. அப்புறம் நாம பேசி முடிவெடுக்கலாம்.”

பஸ் ஸ்டாப்பை நெருங்கிவரும் பஸ்ஸைக் கவனித்தவள், பைக்கின் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள். சிறிது தூரம் சென்றதும்,  ஒரு ரெஸ்டாரென்ட் முன்னால் போய் பைக் நின்றது.

ரெஸ்டாரென்ட் மேஜையில் எதிரெதிராக உட்கார்ந்திருந்தார்கள். ஷாலினியும் அருணும் பலமுறை அங்கு வந்திருந்தாலும், இம்முறை அவர்கள் இருப்பது இருவருக்கும் ஏதோ புதிது போல இருந்தது. நொடிகள் மணிகளாக மௌனத்தில் கடந்தன.

அருண் பேச்சை ஆரம்பித்தான். “என்ன ஆர்டர் பண்ணட்டும்?”     

”எனக்கு எதுவும் வேண்டாம்” என வெடுக்கென பதில் சொன்னாள் ஷாலினி.

”சரி, நான் இரண்டு காபி சொல்கிறேன்” என்று பதிலை எதிர்பார்க்காமல், அவனே ஆர்டர் செய்தான். காபி வந்தது. எடுத்து ஷாலினியின் பக்கம் வைத்தவன், சிறிது நேரம் ஷாலினியின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளோ பக்கத்திலிருந்த மேஜையின் கால்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“சரி, நான் எத்தனை தடவை சாரி சொல்லிட்டேன். உன் கால்ல விழனும்னு நெனைக்கிறியா?”

கண்களை அருணை நோக்கித் திருப்பினாள். ”நீ எதுக்கு என்ன அவ்வளவு கேவலமா பேசுன?. குழந்தை இப்ப வேணாம்னு நாம சேர்ந்துதானே முடிவு பண்ணினோம். இப்ப ஏன் மாத்திப் பேசுற?”

”ஷாலு, உன்ன மீறி இங்கு எதுவும் நடக்க முடியாது. எதுவும் நடந்திராது. நீ குழந்தை பெத்துக்கவே வேணாம். ஆனா இப்ப வீட்டுக்கு வா.”

…………………

காபி உறிஞ்சும் சத்தத்தைக் கேட்டு எரிச்சலான ஷாலினி, மனுஷனுக்கு ஒரு காபி கூடவா குடிக்கத் தெரியாது. வெளிய பொது இடத்துலயுமா இப்படிக் குடிப்பாங்க? ச்சை… என உள்ளுக்குள் பொருமிக்கொண்டே தன் முன்னாலிருந்த காபியை முறைத்துக்கொண்டிருந்தாள்.

”காபி ஆறுது, எடுத்து குடி” என்றான் அருண்.

சட்டை செய்யாமல் உட்கார்ந்திருந்தாள்.

”நான் இப்ப என்ன செய்யணும்னு சொல்லு…” என்று  கேட்டான் அருண்.

”கொஞ்சம் காப்பியை மெதுவா உறிஞ்சு.”

கப்பைக் கீழே வைத்தவன், ”ஓ, இதுதான் உன் பிரச்னையா? நான் இனிமேல் காபியே குடிக்கப் போவதில்லை.”

”அருண், ஏதோ ஜாலியா பேசுறதா நினைச்சு, கோவத்த கிளப்பிட்டு இருக்காத. எனக்குக் காலைல வீட்ல வேலயும் பாத்துட்டு ஆபிஸ்லயும் வேலை பார்த்துட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால முடியல… நான் வேலைய விட்டுடலாம்னு நினைக்கிறேன்.”

சிறிது நேர மௌனத்துக்குப் பின் பேச ஆரம்பித்தான் அருண். “ஷாலினி, உன்னோட கஷ்டம் எனக்கு புரியுது. இன்னும் மூணே மாசத்துல எக்ஸாம் ரிசல்ட் வந்துரும். இதுல கண்டிப்பா, நான் கிளியர் பண்ணிருவேன். ஆன்சர் கீ செக் பண்ணிப் பாத்ததுல ஸ்கோர் நெறையவே வந்திருக்கு. இன்னும் மூணு மாதம்தான். கொஞ்சம் பொறுத்துக்கோ. நீ சீக்கிரமே வேலைய விட்டுடலாம். அன்னைக்கு நான் பேசுனது தப்புதான். நான், அக்கா கிட்ட பேசிக்கிறேன். தயவு செய்து கிளம்பு. நம்ம வீட்டுக்கு போகலாம்.”

எதுவும் பேசாமல் இருந்தாள் ஷாலினி. பில் எடுத்துவர சைகை செய்தான். ஷாலினியின் ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு முன்னால் சென்றான்.

மெதுவாக அருணின் பின்னால் நடந்து சென்றவளுக்கு ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும் போதும், மனம் நவீனை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தது.

வீட்டு வாசலில் ஒரு டிபன் கேரியர் இருந்தது.

”இந்த டிபன் கேரியர் ஏது?”

“அதுவா… நான் பக்கத்துல சொல்லிருந்தேன். மதியானமும் ராத்திரியும் இந்த மாதிரி கேரியர்ல சாப்பாடு டெலிவரி செய்துவிடுவார்கள்.”

ஷாலினி எதுவும் பேசாமல், உள்ளே நுழைந்தாள். வீட்டில் எல்லாம் போட்டது போட்டபடி அப்படியே இருந்தது. கூடுதலாக எல்லா இடங்களிலும் இரண்டு அடுக்கு தூசி படர்ந்திருந்தது.

டிவியை ஆன் செய்தால், அனைத்து சேனல்களும் சந்தா காலம் முடிந்துவிட்டதாகவும், மீண்டும் புதுப்பித்துக்கொள்ளவும் காட்டின.

அடுத்த நாள் காலை பரபரப்பாகச் சமையல் வேலை செய்துகொண்டிருக்க, பிரஷர் குக்கரில் விசிலே வரவில்லை. குக்கரைத் தூக்கிப் பார்க்கும் போது, ஸ்டவ்வில் நெருப்பே வரவில்லை எனத் தெரிந்தது. கேஸ் தீர்ந்து போயிருந்தது.

கேஸ் புக்கோடு சேர்த்து வைத்திருந்த பணத்தைக் காணவில்லை. வெளியே இருந்த சிலிண்டரும் காலியாகவே இருந்தது.

”அருண், நான் கேஸ் புக் பண்ணிட்டுத் தானே போயிருந்தேன். டெலிவரி வந்துருக்கணுமே? நீங்க வாங்கி வைக்கலையா?”

”ஆமா, அன்னைக்குக் காலைல வந்துச்சி. உனக்கு போன் பண்ணேன். நீ போன் எடுக்கல. நானும் அப்படியே விட்டுட்டேன்.”

”அப்போ பணம் எங்க?”

“இல்ல ஷாலினி … அதை நான் எடுத்து செலவு பண்ணிட்டேன்.அதனால் என்ன இப்போ? அதான் இண்டக்ஷன் ஸ்டவ் இருக்கில்லே…”

பதிலைக் கேட்டதும் எரிச்சலும் கோபமும் வந்தது. ஏன் அருண் சில நேரங்களில் கொஞ்சமும் சென்ஸ் இல்லாமல் நடந்துகொள்கிறான். ஒரு காபிகூட சத்தம் வராமல் குடிக்கத் தெரியவில்லை. கேஸ் தீர்ந்து போகும் என்கிற யோசனைகூட இல்லாமல் இருக்கிறான். ஆனால், எதிர்காலம் பத்தி மட்டும் பேசிக்கொண்டே இருக்கிறான்… என மனதிற்குள் நொந்துகொண்டாள்.

குக்கரை எடுத்து இண்டக்ஷன் ஸ்டவ்வில் வைத்து, மூன்று விசில்  வந்ததும் ஆஃப் செய்துவிட்டாள். தயிரை ஊற்றிக் கிளறி லன்ச் பாக்ஸில் எடுத்துக் கொண்டு ஆபிஸுக்குக் கிளம்பினாள் ஷாலினி.

அன்று மதியம் டைனிங் ரூமை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது, அவளைப் பார்த்த நவீன்,

”ஏய் ஷாலினி, நானும் சாப்பிட வரலாமா?” என்றவாறே அவளுடன் நடக்க ஆரம்பித்தான்.

அவன் கூடவே நடக்கையில், ”இவன் எனக்கானவனாகவே இருந்தாலென்ன?” என்கிற நினைப்பு ஷாலினிக்கு உள்ளூர எழுந்தது.

”இன்னைக்கு நான் எதுவும் பெரிசா சமைக்கல.”

”ஓ அப்படியா? பரவாயில்லை.”

மேஜையில் எதிரே உட்கார்ந்துகொண்டான். லன்ச் பாக்ஸை அவனே திறந்து, ”ஏய் தயிர் சாதமா….” எனச் சாப்பிட்டான்.

ஷாலினி பதில் ஏதும் பேசவில்லை.

”ஷாலினி நான் உங்கிட்ட ஒண்ணு கேட்கலாமா?”

”ம்…”

”நாம தனியா மீட் பண்ணலாமா? உங்கிட்ட சில விஷயங்கள் டிஸ்கஸ் பண்ணணும்னு நினைக்கிறேன்.”

நவீனை ஏறிட்டுப் பார்த்தவள், ”எனக்கும் பேசணும் போல இருக்கு” என்றாள்.

அவர்களுடன் வேலை பார்க்கும் வேறு பெண்களும் டேபிளை நோக்கி வருவதைக் கவனித்தவன், வேகமாக எழுந்துகொண்டான். ”நாம ஈஸிஆர் போகலாம், ஐ வில் டெக்ஸ்ட் யூ…” என ஷாலினியிடம் கிசுகிசுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

(தொடரும்)