கருப்பசாமி, சுடலை மாடன், இசக்கி, பேச்சியம்மன், முத்தாரம்மன், பெருமாள், கட்டையேறும் பெருமாள், சாஸ்தா, முனீஸ்வரன், வாதை, காளி, ராக்கம்மாள், வீர மாத்தி, ஐயனார், மதுரை வீரன், மாசாணம், மாசாணத்தம்மன், காத்தவராயன், வேடியப்பன், ஹைகோர்ட் மஹாராஜா, பலவேசக்காரன், பலவேசக்காரி, பாவாடை ராயர், மாரியம்மன், அங்காளம்மன், போச்சம்மா, மைசம்மா, எல்லம்மா, போத்த ராஜு, கேரளாவின் நாக தெய்வங்கள், ஏழு கன்னிகள் என்றெல்லாம் பல பெயர்களில் வழங்கப்படும் நாட்டு தெய்வங்கள் இந்துத்துவத்தின் மாய வலைக்குள் முழுவதுமாக வீழ்ந்து விடாத தெய்வங்கள் என்று சொல்வதற்கில்லை. காரணம், மேற்கூறிய நாட்டு தெய்வங்களுக்கென்று வரலாற்றுக் கதைகள் இருந்தாலும், அக்கதைகளை ஆரியக் கடவுளர்களோடு தொடர்புபடுத்திதான் வில்லுப்பாட்டு போன்ற கலைகளில் கதைகளாகக் கூறப்படுகிறது. என்றாலும் சாதியப் படிநிலையில் இந்தத் தெய்வங்கள் இன்னும் சிறு தெய்வங்கள் என்கிற பெயரோடு, இரண்டாவது படிநிலையில்தான் இருக்கின்றன. அதிலும் பன்றி, எருமை போன்ற விலங்குகளை பலி வாங்கும் தெய்வங்கள் சாதியப் படிநிலையில் கீழே இருப்பதைக் காண முடிகிறது.

இத்தகைய தெய்வங்களை இந்துத்துவம் முழுமையாக விழுங்குவதற்குத் தடையாக நான் பார்க்கும் விஷயங்கள் இரண்டு. 1. பலியிடுதல் 2.சாமியாட்டம். பார்ப்பனர்களின் தூய்மை, சைவ விரதங்கள், சாத்வீகம் போன்றவற்றிற்கு எதிரானவை இவ்வழிபாடுகள். ஏன் சாமி ஆடுகிறார்கள் என்பது ஆராயப்பட வேண்டிய, மிகக் கடினமான கேள்வி! சாமியாட்டத்தின் பிறப்பிடம் எதுவென்று தேடினால், அந்த ஆராய்ச்சி சங்க காலத்தின் வெறியாடலில் கொண்டு போய் நிறுத்தும்.

அக்காலத்தில் இருந்த வெறியாடலுக்கும் இப்போது கோயில்களில் நடைபெறும் சாமியாட்டத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்கிற கேள்வியும் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய கேள்வி. இப்போது, சம காலத்தில் எனக்குத் தெரிந்த சாமியாடுபவர்களின் வாழ்வியல் சூழ்நிலைகளைக் கொண்டு, சாமியாட்டத்தின் பின்னணி பற்றிய என் ஆய்வும் முடிவும்தான் இந்தக் கட்டுரை.

சம காலத்தில் சாமியாடுபவர்களை நான் மூன்று வகைகளாகப் பிரிக்கிறேன்.

1. விரும்பிச் சாமியாடுபவர்கள்

2. விருப்பமில்லை என்று வெளியே சொல்லிக் கொண்டு, விரும்பிச் சாமியாடுபவர்கள்.

3. சாமியாட விருப்பமில்லாதவர்கள்.

விரும்பிச் சாமியாடுபவர்கள் :

பெரும்பாலும் சாமியாட விரும்புபவர்கள், ஏதேனும் ஒரு வகையில் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத மனிதர்களாக இருப்பதைக் காணமுடிகிறது. மிகவும் ஏழ்மையான சூழலில் இருக்கும் மனிதர்களைச் சமூகத்தினர் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அப்படியானவர்களில் சிலர் சாமியாடுவதன் மூலம் ‘சாமி’ என்கிற உயர்ந்த ஸ்தானத்தைப் பெறவும், கோயில்களில் சாமியாடுவதால் கிடைக்கும் மரியாதைக்காகவும், வருமானத்திற்காகவும் சாமியாடுவதை நான் பார்க்கிறேன்.

எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவரின் தாய் அவனது சிறு வயதிலேயே இறந்துவிட்டார். படிப்பையும் ஆறாவதோடு நிறுத்தி விட்ட அவர் திக்கிப் பேசும் சுபாவம் உடையவர். அவருக்கு ஊருக்குள் கிடைக்கும் ஒரே மரியாதை அவர் சாமியாடுபவர் என்பது மட்டுமே! அவரும் அதை விரும்புகிறார். மேலும் கோயில் திருவிழாக்களின் போது, சாமி சிலைக்கு அலங்காரம் செய்யவும், பூசைகள் செய்யவும் அவரை ஊரார்  அழைக்கிறார்கள். அதை அவர் பெருமையாகக் கருதுகிறார். இப்போது கம்பெனி ஒன்றில் கூலி வேலை செய்யும் அவருக்கு, கோயிலில் வாரம் இருமுறை பூசை செய்வதற்கு ஊரிலிருந்து சம்பளம் [மாதமொன்றிற்கு ரூ. 8000] கொடுக்கப்படுகிறது. அந்த வருமானம் அவரது பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருக்கலாம். மேலும் ஊரில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாவிட்டால் விபூதி போடவும் அழைக்கப்படுவார்.

அவரிடமிருக்கும் வேறு எந்தத் தகுதிகளுக்காகவும் அவருக்குக் கிடைக்காத மரியாதை, சாமியாடுவதன் மூலம் கிடைப்பதால், அவர் விரும்பிச் சாமியாடுகிறார் என்பது என் கணிப்பு.

“கோயில் கொடையில், மேளம் அடிக்கும் போது, சாமியின் அருள் ஓரிரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே உச்சத்தில் இருக்கும். அதன் பிறகு, ஆராசனை மட்டுமே இருக்கும். நான் ஆடுவது எனக்குத் தெரியும், ஆனால், என்னென்ன பேசுகிறேன் என்பது எனக்கு நினைவிருக்காது” என்று அவர் தன் அனுபவத்தை என்னிடம் சொல்லியிருக்கிறார்.

இப்போது 30 வயதைக் கடந்துவிட்ட அவருக்குக் கல்யாணத்துக்குப் பெண் கிடைக்கவில்லை என்பது, அவருடைய பெரிய வருத்தமாக இருக்கிறது. சாமியாடுவதால்தான் தனக்குப் பெண் கிடைக்கவில்லை என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். என்றாலும் கூட, அவர் சாமியாடுவதை நிறுத்த விரும்பவில்லை. அவர் கோயிலில் சாமியாடுபவர் என்கிற உண்மையை மறைத்தாவது ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவிட வேண்டும் என்கிற உறுதியான முடிவோடு இருக்கிறார். தனக்குச் சாமியின் அருள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் அவர் ஓர் அசைவப் பிரியர். மட்டன் குழம்பு, மீன் குழம்பு வாசனைகளை நினைத்துக் கொண்டே, அவர் கோயிலுக்குக் காப்புக் கட்டி விரதம் இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

அவருடைய அண்ணனும் சாமியாடுபவர். அவரும் தான் சாமியாடும் விஷயத்தை மறைத்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்தார். அவருடைய திருமணம் முடிந்த முதல் வருட திருவிழாவின் போது, கணவன் சாமியாடுவதைக் கண்ட, அவரது மனைவிக்கு அதிர்ச்சி. பெரிய சண்டை போட்டார். அதற்கு மேல் அவரால் என்ன செய்ய முடியும்? தாலி கட்டியாகிவிட்டது, வயிற்றிலோ பிள்ளை! சண்டையிட்டு ஓய்ந்தார், அவ்வளவுதான். இப்போது தமையன் வழியை தம்பியும் பின்பற்ற தயாராகிவிட்டார்.

எப்படியானாலும் சாமியாடுவதன் மூலம் கிடைக்கும் மரியாதையையும், பொருளாதார வரவையும் அவரும், அவரது அண்ணனும் இழக்க விரும்பவில்லை.

நாங்கள் குடியிருந்த ஊருக்கு அருகில் பள்ளக்குடி என்கிற ஊர் இருந்தது. ஒரு பாட்டி சொல்வார், ‘பள்ளக்குடிக்கெல்லாம் நாங்க போக மாட்டோம். அவங்க கொறைஞ்சவங்க’ என்று.

‘கொறைஞ்சவங்க’ என்றால் என்ன? என்று நான் சிந்தித்த போது, அந்த ஊர் பள்ளத்தில் இருப்பதால் அது பள்ளக்குடி போலும், அதனால்தான் ‘கொறைஞ்சவங்க’ என்று பாட்டி சொல்கிறார் போலும் என்று நினைத்துக்கொண்டேன். நான் வள்ர்ந்த பிறகே தெரிந்தது, பள்ளக்குடி என்பது ஒரு சாதியைச் சுட்டிக்காட்டும் ஊர் என்று!

அந்தப் பாட்டி சாதியால் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்னும் அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்று எனக்குத் தெரிந்தது. அத்துடன் அந்தப் பாட்டியைக் கீழ் சாதி என்று சொல்லவும் ஒரு சாதியினர் இருக்கிறார்கள், அவர்கள் அந்த ஊரின் கிழக்கே இருக்கிறார்கள் என்றும் தெரிந்துகொண்டேன்.

ஊருக்குள் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவமனையில் பார்த்த பிறகும் குணமாகாமல் இருந்தால், “பள்ளக்குடிக்காரனைக் கூட்டிட்டு வந்து பாரு” என்று சொல்வார்கள்.

ஆம்! பள்ளக்குடியில் குடியிருக்கும் அந்தத் தாத்தா ஒரு சாமியாடி. அவரிடம் அருள் வாக்கு கேட்க தங்களை உயர் சாதியினராகக் கருதுபவரும்கூட, அவரைத் தேடி பள்ளக்குடிக்குச் செல்வதுண்டு. பள்ளக்குடி தாத்தாவை, தங்கள் வீட்டுக்கு அழைத்து வருவதும் உண்டு.

பள்ளக்குடி தாத்தா நோயாளியைப் பார்த்துவிட்டு, ஒரு சேவல், ஒரு முட்டை, சூடம், பத்தி, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், சாம்பிராணி மற்றும் சில பொருட்களை வாங்கி வரும்படி பட்டியல் போட்டுக் கொடுப்பார். நோயாளியின் சொந்தக்காரர் பட்டியலில் இருக்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பார்கள். இரவு 12 மணிக்கு மேல் நோயாளியைத் தன்னுடைய இடத்துக்கு வரச்சொல்லியோ, அல்லது அவர் நோயாளியின் வீட்டுக்குச் சென்றோ பூஜை செய்வார். என்னென்ன பூசைகள் என்பதை வெளியே சொல்லக் கூடாது என்று நோயாளியிடம் உறுதியாகச் சொல்லி அனுப்பிவிடுவார்.

ஒருமுறை எங்கள் வீட்டுக்கருகில் இருந்த ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், பள்ளக்குடி தாத்தா அவருக்கு இரவு சாம பூசை செய்துவிட்டுச் சென்றார். அடுத்த நாள், அந்த வீட்டிலிருக்கும் அண்ணன் சொன்னான், “பலி குடுத்த கோழி இன்னைக்குப் பள்ளக்குடிக்காரனுக்கு விருந்து” என்று.

ஆம்! கோழியை நோயாளியின் உடல் முழுவதும் தடவி முச்சந்தியில், கோழியின் கழுத்தை வெட்டி பலி கொடுத்துவிடுவார் பள்ளக்குடி தாத்தா. அந்தத் தாத்தாவுக்கு எல்லாரும் பயப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.

“பள்ளக்குடிக்காரன் வித்தைத் தெரிஞ்சவன், செய்வினை எடுக்கத் தெரிஞ்சவனுக்கு வைக்கத் தெரியாதா? அவனையெல்லாம் பகைச்சுக்கக் கூடாதப்பா” என்பார்கள்.

எனில், தாழ்த்தப்பட்ட ஒருவருக்குச் சாமியாடுவதால் மரியாதை கிடைக்கிறது. சாதி இழிவைத் தாண்டி, அவர் மதிக்கப்படுகிறார். அவருக்கான வாழ்வாதாரம் சாமியாடுவதால் பாதுகாப்படைகிறது.

மூன்றாவது உதாரணமாக இளம்பெண் ஒருவர், பெயர் சித்ரா [சித்தரிக்கப்பட்டது]. சித்ரா தன்னுடைய 16 வயதிலேயே, அவர்  காதலித்தவனுடன் போனார். உறவினர்களும் ஊராரும் அவரை ஒதுக்கினார்கள். அதற்கு முக்கியக் காரணம், அவர் கல்யாணம் செய்து கொண்ட வாலிபனின் குடும்பம் விபச்சாரத்தைத் தொழிலாகக் கொண்ட குடும்பம் என்பதால். காலங்களின் நகர்வில் சித்ரா இரண்டு பிள்ளைகளைப் பெற்றார். அதன் பிறகுதான், அவளது கணவன் உழைக்காமல் தாய் மற்றும் சகோதரியின் விபச்சார உழைப்பில் வாழ்ந்து பழகிய, பெரிய குடிகாரன் என்பது அவருக்குத் தெரியவந்தது.

எனவே சித்ரா வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. எட்டாம் வகுப்புகூடத் தாண்டாத சித்ராவின் உழைப்பால் இரண்டு குழந்தைகளை இந்த உலகில் வளர்க்க இயலவில்லை.

எனவே சித்ரா வாழும் அதே ஊரில், தன் மனைவியுடன் சண்டையும் சச்சரவுமாக வாழ்ந்துகொண்டிருந்த காய்கறி வியாபாரி ஒருவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் வளர்ந்தது. வியாபாரி தன் மனைவியையும், சித்ரா தன் கணவனையும் விவாகரத்து செய்யாமலே பழகி, கூடி வாழ்வதால் அது ஊரார் பார்வையில் கள்ள உறவாகிவிட்டது. பல பிரச்னைகளுக்கும் சண்டைகளுக்கும் பிறகு சித்ராவும் வியாபாரியும் தங்கள் உறவில் வெற்றி கண்டனர். அதாவது, “நாங்கள் இப்படித்தான் வாழ்வோம், உங்களால் முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள்” என்று இந்தச் சமூகத்திடம் சொல்லிவிட்டு, அவர்கள் தங்களின் உறவைத் தொடர்கிறார்கள்.

இப்போது சித்ராவின் கணவன் ஊரைவிட்டு எங்கோ சென்றுவிட்டார். வியாபாரியின் மனைவி முடிந்த அளவு சண்டையிட்டு ஓய்ந்து ஒதுங்கிவிட்டார்.

வியாபாரியுடன் உறவில் வாழும் சித்ராவை ஊரில் எல்லாரும் இகழ்ந்தார்கள், குடும்பத்தினர் முன்பைவிட அதிகமாக ஒதுக்கித் தள்ளினார்கள்.

ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தார் எல்லாருக்கும், பொதுவான கன்னி தெய்வம் ஒன்று சித்ரா மீது இறங்கியதாம். பூப்படையும் முன் சிறு வயதில் இறந்து போன பெண் குழந்தைகளுக்குப் படையல் வைத்துக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. அத்தகைய தெய்வத்தை கன்னி என்றழைக்கிறார்கள். சித்ரா கன்னியைக் கொண்டு ஆடி எல்லாருக்கும் அருள் வாக்கு வழங்கினார்.

நடத்தைகெட்டவள் என்று சொல்லி ஊராரால் ஒதுக்கி வைக்கப்பட்ட சித்ரா, இன்று சாமியாகிவிட்டார். கேவலமாகப் பேசிய குடும்பத்தார் இப்போது சித்ராவின் காலில் விழுந்து அருள் வாக்கு கேட்கிறார்களாம்.

எனக்குத் தெரிந்த இன்னும் சிலர், சாமி மீது பக்தி கொண்டவர்கள் என்று தங்களை நம்பிக்கொண்டு, அதை நிரூபிக்க, விரும்பிச் சாமியாடுகிறார்கள். அது அவர்கள் தெய்வத்துக்குச் செய்யும் கடமையாக அல்லது காணிக்கையாக நினைத்துச் செய்கிறார்கள்.

தசராவுக்கு மாலை போட்டு விரதம் மேற்கொள்ளும் இன்றைய இளைஞர்கள் சாமியாடுவதைப் பெருமையாகப் பேசிக்கொள்வதைப் பார்க்கிறேன். நவராத்திரி விழா முடிந்து ஆயுத பூஜை தினத்தன்று குலசைக்குச் செல்லும்போது, சாமியாடும் இளைஞர்கள் மிகுந்த பக்திமான்களாக கௌரவிக்கப்படுவதால், இளைஞர்களுக்கு இப்படியொரு விருப்பம் இருக்கிறது என்று கருதுகிறேன்.

இதுபோல் எத்தனையோ பேர் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், பிறப்பாலும், செயல்களாலும் கிடைக்காத அங்கீகாரத்தையும் நன்மதிப்பையும் பெறுவதற்காகவும் சாமியாடுபவர்கள் அவர்கள்.

தனி மனிதன் அல்லது மனிதியாக, சாதி, பொருளாதாரம், ஒழுக்கக்கேடு போன்றவற்றால் இழிவுபடுத்தி ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் பலரும் சாமியாடும் போது, சமுதாயத்தில் மதிக்கப்படுவதைக் காணமுடிகிறது. எனவே மேற்கூறிய வாழ்வாதார தேவை மற்றும் அங்கீகாரத்திற்காக இவர்கள் விரும்பிச் சாமியாடுகிறார்கள். தாங்கள் விரும்பிச் சாமியாடுவதை ஒத்துக்கொள்கிறார்கள்.

2. விருப்பமில்லை என்று வெளியே சொல்லிக்கொண்டு, விரும்பிச் சாமி ஆடுபவர்கள்.

பெரும்பாலான சாமியாடும் மனிதர்கள் ஏழையாக இருப்பதைப் பார்த்தோம். சிறு  எண்ணிக்கையில் பண வசதி படைத்தவர்களும் சாமியாடுவதைக் காண முடிகிறது. இவர்கள் சாமியாடுவதைக் கௌரவக் குறைச்சலாக நினைப்பவர்கள். ஆனாலும் ஏதோ ஓர் உளவியல் இவர்களைச் சாமியாடுவதற்கு உந்தித் தள்ளுகிறது. என்ன மாதிரியான உளவியல்?

எனக்கு தெரிந்த ஒரு பணக்காரப் பெண்ணுக்கு, திருமணம் முடிந்து பல வருடங்களாகக் குழந்தை இல்லை. கணவனுக்கு அரசாங்க உத்தியோகம் என்பதால் ஊருக்குள் மிகுந்த மதிப்பு உண்டு. எத்தனையோ மருத்துவமனைகளில் கணவனும் மனைவியும் சோதனை செய்தாகிவிட்டது. பற்பல கோயில்களில் பற்பல வேண்டுதல்களையும், விரதங்களையும் நிறைவேற்றியாகி விட்டது. என்றாலும் குழந்தை பிறக்கவில்லை.

ஒரு தம்பதியருக்குக் குழந்தை இல்லை என்றால், இந்தச் சமூகம் அவர்களை எவ்வாறெல்லாம் குத்திக் கிழித்துக் காயப்படுத்தும் என்பது நாம் அறிந்ததே! அவ்வாறான அத்தனை உளவியல் ரீதியான வலிகளையும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகச் சந்தித்து நொந்து போன அவருக்கு, எப்படியோ ஒரு பிள்ளையைப் பெற்றுக் காட்டி விட்டால் போதும் என்கிற மனநிலை.

எந்த மருந்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற மனநிலையில் இருந்த அந்தப் பெண் சாமியாடி ஒருவரிடம் கணக்கு [குறி அல்லது நிமித்தம்] கேட்டார். ‘உன் குலதெய்வம் யாக்கியம்மை (இசக்கியம்மை) ஆராசனை உன் மேல இருக்கு, அவ கோயில்ல சாமியாடினால் உனக்குக் குழந்தை பிறக்கும் என்று சொல்லிவிட்டார்.’

ஏற்கெனவே மனமுருகி சாமி கும்பிடும் போது ஏற்படும் புல்லரிப்பை அவர் உணர்ந்திருந்தார். இப்போது அந்தச் சாமியாடி குறி சொன்னதும், அதைச் சாமியாட்டத்துக்கான ஆராசனை என்று நம்பியும் விட்டார். பிறகென்ன? அடுத்த முறை கோயில் கொடையின் போது, அவர் மீது குலதெய்வம் இறங்கியதாம். அவர் சாமியாடி எல்லாருக்கும் கணக்கு சொல்கிறார்.

அடுத்த வருடத்தில் அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஊரில் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் அவரது குழந்தை சோதனைக் குழாய் மூலம் பிறந்தது என்பது.

தான் சாமியாடுவது பற்றி, அவர் எல்லோரிடமும் சொல்வது, “எல்லாம் என் பிள்ளைக்காக! எனக்குச் சாமியாட விருப்பமில்லை, ஆனால் நான் சாமியாட சம்மதிச்சதாலதான் எனக்குக் குழந்தை பிறந்தது.”

சாமியாட விரும்பாதவர்கள்:

முதல் உதாரணமாக, என் சிறுவயதில் சுடலைமாட சாமி ஆடிய தாத்தாவைப் பற்றிச் சொல்கிறேன். அப்போது எனக்கு பதின்மூன்று வயது இருக்கும். அப்போது ஊரில் அடிக்கடி கோஷ்டி மோதல்கள் நிகழ்வதுண்டு. அப்போது காரணம் தெரியாது. பின்னாளில் காரணம் தெரிந்து கொண்டேன்.

மூன்று தெருக்களில் ஏறக்குறைய ஐம்பது வீடுகள் மட்டுமே கொண்ட அந்த ஊரின் பெயர் வெள்ளாடிச்சி விளை. வெள்ளாடிச்சி விளைக்கு கிழக்கே ஐந்தாறு பங்களா வீடுகளும், குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் இரண்டு தெருக்களும் கொண்ட அந்த ஊரின் பெயர் லாலாவிளை.

வெள்ளாடிச்சிவிளை மக்களுக்கும் லாலாவிளை மக்களுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. லாலா விளையைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் படித்து உயர்ந்த உத்தியோகங்களில் இருப்பவர்கள், பணக்காரர்கள். வெள்ளாடிச்சிவிளை ஊர் மக்களில் பெரும்பாலானோர் எட்டாம் வகுப்பைத் தாண்டாதவர்கள், சிறு சிறு ஓட்டு வீடுகளில் வசிக்கும் ஏழைகள். இவ்விரண்டு ஊர்களுக்கும் பொதுவாக இரண்டு ஒற்றுமைகள் இருக்கின்றன. ஒன்று, இரண்டு ஊர் மக்களும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். இரண்டாவது ஒற்றுமை இரண்டு ஊர்களுக்கும் பொதுவாக இருக்கும் அம்மன் கோயில்.

கோயிலுக்குள் சிலை எதுவும் கிடையாது. ஏற்றப்படும் தீபத்தைக் காளி அம்மன் என்று நம்பி மக்கள் வழிபடுவார்கள். கோயிலுக்கு வெளியே சுடலைமாடசாமி பீடத்தில் இரண்டு நடுக்கற்கள் காணப்படும். மக்கள் அதைச் சுடலை மாட சாமி என்று நம்பி வழிபடுவார்கள். இரண்டு ஊர்களுக்கும் பொதுவான கோயிலில் நடைபெற்ற சீட்டுப் பணத்தின் கூட்டல் கழித்தல் கணக்கில் குழப்பம் ஏற்பட்டது. பொறுப்பில் இருந்த லாலாவிளை ஊர்க்காரர்கள் பணத்தை ஊழல் செய்துவிட்டதாக, வெள்ளாடிச்சிவிளை ஊர் மக்கள் குற்றம் சாட்டினர்.

கறை படியாத உடை அணியும் மேல்தட்டு மக்களான லாலாவிளைக்காரர்கள் தங்கள் மரியாதை குறைந்து விட்டதாக எண்ணினர். கோயில் லாலாவிளைக்குத்தான் சொந்தம் என்று வாதாடினர். கைகலப்பு, கலவரங்கள் அடிக்கடி வெடித்தது.

படிப்பறிவு மிகுந்த லாலாவிளையினர் கோயில் தங்களுக்கே உரியது என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களாக நடைபெற்ற வழக்கில், கோயில் வெள்ளாடிச்சிவிளைக்கும் லாலாவிளைக்கும் பொதுவானது என்றும், இரு ஊராரும் ஒற்றுமையாகக் கோயில் கொடை நடத்தும்படியும் தீர்ப்பானது.

வெள்ளாடிச்சிவிளை ஊர் மக்களுடன் சரிசமமாகப் புழங்கவும், கோயில் கொடை நடத்தவும் லாலாவிளை ஊர்க்காரர்களுக்கு விருப்பமில்லை. கோபத்துடன் ஒதுங்கிக் கொண்டார்கள்.

தங்களை லாலாவிளை மக்கள் என்று நினைத்துக் கொண்டு வெள்ளாடிச்சிவிளை எல்லைக்குள் இதுவரை வாழ்ந்திருந்த மக்கள் லாலாவிளைக்குத் திரும்பினர். தங்களை வெள்ளாடிச்சிவிளை மக்கள் என்று நினைத்துக்கொண்டு லாலாவிளையில் குடியிருந்த மக்கள் வெள்ளாடிச்சிவிளைக்குத் திரும்பினர். இதில் சுடலைமாடசாமியைக் கொண்டு சாமியாடும் தாத்தா தன்னை லாலாவிளைக்காரன் என்று நினைத்து வாழ்ந்திருந்தார் போலும்!

இதில் வேடிக்கை என்னவென்றால் அவரது அண்ணன் குடும்பம் தங்களை வெள்ளாடிச்சிவிளை பிரஜையினர் என்று நினைத்திருந்ததுதான்!

அதுவரை சாமியாடிக் கொண்டிருந்தவருக்கு, அம்மன் கோயில் வெள்ளாடிச்சிவிளைக்குச் சொந்தம் என்றான பிறகு சாமியாட விருப்பமில்லை. முதன்முறையாக வெள்ளாடிச்சிவிளை மக்கள் கோயில் கொடை நிகழ்த்தியபோது, அவர் சாமியாட வரவில்லை. அன்று முழுவதும் அவருடைய வீடு பூட்டிக் கிடந்தது.

“அவன் லாலாவிளைக்காரங்கூட சேர்ந்துட்டாம்பா! வீட்டுக்குள்ள கெடந்து ஆடியிருப்பான். கோயிலுக்கு வுடக்கூடாதுன்னு வீட்டைப் பூட்டி வச்சிக்கிட்டாவ” என்று வெள்ளாடிச்சிவிளை மக்கள் பேசிக் கொண்டனர். அடுத்த வருட கோயில் கொடையின் போது அந்தச் சாமியாடி தாத்தா இயல்பாக வெளியே நடமாடினார். கோயிலில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்த இன்னோர் இளைஞர் சாமியாடிக் கொண்டிருந்தார்.

எனக்கோ ஆச்சரியம் தாள முடியவில்லை. சாமி நினைத்து சாமியாட்டம் வராதா? மனிதன் நினைத்தால் தன்னுடலில் புகுந்தாடும் சாமியை அடக்கி வென்றுவிட முடியுமா? ஒரு சிறுமியின் சந்தேகங்களும் கேள்விகளும் இந்தச் சமுதாயத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்? ஆனாலும் சிலர் எனக்குப் பதில் சொன்னார்கள்.

“அவன் பொண்டாட்டி அய்யா வழிக்காரி, சாமி தோப்பு பதிக்குக் கூட்டிட்டுப் போயி அவன் ஒடம்புல சொள்ளமாடசாமி ஏற வுடாம ஆக்கிருப்பா” என்பதே அந்தப் பதில்.

அதாவது அய்யா வழியினர் கடைபிடிக்கும் அய்யா வழிபாடு என்பது, நாட்டுத் தெய்வங்களான சுடலைமாடன், இசக்கி, வாதை, காளி போன்றோரை அடக்கி வைத்து விடும் என்றொரு நம்பிக்கையும் மக்களின் மத்தியில் நிலவுகிறது. அய்யா மனித உடலில் சாமியாட்டம் வராமல் தடுத்துவிடுபவர் என்றால், சில அய்யா நிழல் தாங்கல்களில் சாமியாடுகிறார்களே! அது எப்படி என்கிற கேள்விக்கு அவர்களிடம் விடை இல்லை.

இதே போல், ஞானஸ்தானம் எடுத்துக் கொண்ட பிறகு பேய், பிசாசு மற்றும் சாமியாட்டங்கள் மனிதர்கள் உடலில் வராது என்கிற நம்பிக்கை கிறிஸ்தவர்களிடம் நிலவுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, சாமியாடும் இளைஞரின் தாயார் பின்வருமாறு கூறினார்.

“போன வருசம் கோயில் கொடைக்கே என் மொவன் ஆடுனான் மக்கா. ஆனா, நமக்கெதுக்கு இதெல்லாம்ன்னு வீட்டுக்குள்ள பூட்டி வச்சிட்டேன். நாங்க இல்லாதப்பட்டவிய! பொங்கலுக்கும் பாயசத்துக்கும் சாமியாடுகான்னு சொல்லிருவாவல்லா மக்கா! இந்த வருசமும் அடைச்சு வச்சேன், கதவ ஒடைச்சுட்டு கோயிலுக்கு ஓடிப் போயி சாமியாடுகான். சாமி நினைச்சு புள்ளைய ஆட கேட்கும் போது நான் என்ன செய்ய முடியும்?” என்று சொல்லி அழுதார் அந்தத் தாய். ஏழ்மையில் சாமியாடுபவர்களை இந்தச் சமுதாயம் எப்படிப் பேசும் என்பதை இந்தத் தாயின் வாக்குமூலத்தில் அறிந்துகொண்டேன்.

இவரின் இந்தக் கூற்றை நான் ‘விருப்பமில்லை என்று வெளியே சொல்லிக் கொண்டு விரும்பிச் சாமியாடுபவர்களின்’ பட்டியலில் சேர்த்துக்கொண்டேன்.

இரண்டாவது உதாரணமாக ஒரு பெண்ணை குறிப்பிட நினைக்கிறேன். அந்த ஊரில் இருக்கும் இசக்கியம்மன் கோயில் கொடையின் போதெல்லாம் அவர் தன் உடல் சிலிர்த்து ஆட்டம் வருவதாக உணர்ந்தாராம். தன் தோழிகளிடம் சொன்னார்.

அந்தக் கோயிலில் இசக்கியம்மன் சாமியாடும் பாட்டிக்கு மிகுந்த வயதாகி         [90க்கும் மேல்] விட்டதால், இனி அடுத்து யார் மீது சாமியாட்டம் வரப் போகிறது என்கிற கேள்வியுடன் ஊர் மக்கள் இருந்தார்கள். இதுவரை சாமியாடிக் கொண்டிருந்த வயதான பாட்டி ஒரு மிகச்சிறிய பெட்டிக்கடை நடத்தி தன் ஜீவிதத்தை நடத்துகிறார், “முந்தி மாதிரி ஆட முடியல மக்கா. ஒடம்புல தெம்பில்ல! வயசாவு பார்த்தியா? கோயில்ல சாமியாடுனா ஒடம்பெல்லாம் வல்லிக்குவு” என்று அந்தப் பாட்டி என்னிடம் சொன்னார்.

எனில் வயதான ஒரு மனித உடலுக்கு பலம் கொடுத்து ஆட வைக்கும் சக்தி தெய்வத்துக்கு இல்லையா என்றொரு கேள்வி எழுகிறது.

இந்நிலையில் தன் மீது சாமி வருகிறது என்று அந்தத் திருமணமான இளம்பெண் தன் தோழிகளிடம் கூறினார்.

“அப்படின்னா கோயில் கொடைக்கு நீ வராத! கொட்டுச் சத்தம் கேட்டா சாமியாட்டம் கூடுதலா வரும்” என்று அவர் தோழி  அறிவுரை சொன்னார். அவருக்கோ கோயில் கொடைக் கூட்டத்தில் புத்தாடை உடுத்தி, அழகு ஒப்பனை செய்து வலம் வர கொள்ளை ஆசை.

கோயில் கொடை வந்தது. அவரும் கலந்து கொண்டார். ஆனால், சாமியாடவில்லை. இன்னொரு மணமான இளம்பெண்ணின் மீது சாமியாட்டம் வந்தது.

தோழிகள் விசாரித்தார்கள். அதற்கு அவர் கூறிய பதில் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அவர் அன்று காலையில் தன் கணவனுடன் உறவு வைத்துக்கொண்டு, குளித்துவிட்டு வந்ததாகவும், உறவு கொண்ட உடல் தீட்டு என்பதால் சாமியாட்டம் தன் மீது வரவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

அதாவது மாதவிலக்கு தீட்டு போல், உடலுறவு கொண்ட உடலும் சாமிக்குத் தீட்டு என்கிற ஒரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

அந்தக் கொடையின் போது சாமியாடிய இளம்பெண்ணுக்கும் தன் மீது சாமி வருவது பிடிக்கவில்லை. தான் சாமியாடியதை நினைத்து மிகவும் வருந்தினார்.

“ஆனாலும் சாமி பொம்பள புள்ளையளுக மேல வரப்புடாது. அதுக ஆடும் போது துணியெல்லாம் வெலகி, பார்க்கவே நல்லாயில்ல” என்று ஒரு பாட்டி சொன்னதைக் கேட்ட அவர், தான் சாமியாடவேக் கூடாது என்று உறுதியாக முடிவெடுத்தார்.

ஓரிரு மாதங்கள் அவர் தன் தாய்வீட்டுக்குச் சென்று வந்தார். அடுத்த வருடக் கோயில் கொடையில் அவர் சாமியாடவில்லை.

“எசக்கி இன்னும் யாருன்னு முடிவு பண்ணல இல்ல” என்று ஊரின் ஆண்கள் பேசிக் கொண்டார்கள்.

மொத்தத்தில் ஒரு மனிதன், தான் சாமியாடக் கூடாது என்று திடமாக முடிவெடுத்து விட்டால், அவன் சாமியாடுவதில்லை. அவனை மீறி எந்தச் சாமியும் அவனைப் பிடித்து ஆட்டுவதில்லை என்பதே எனது முடிவு.

எனது இந்த முடிவில் சிலருக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம். ஆனால்,  மேற்கூறிய அனைத்தும் என் சொந்த வாழ்வில் நான் கண்டு, படித்த அனுபவங்களே அன்றி வேறில்லை.

படைப்பாளர்:

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.