கடந்த இருபது வருடங்களில் தமிழ் சினிமா வரவேற்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. முன்பெல்லாம் சாதியையும் பெண் மீதான ஒடுக்குமுறையையும் பாதுகாக்கும் காட்சிகள் தமிழ் சினிமாவில் அதிகம். பெண் என்றால் குடும்பத்திற்கு அடங்கி இருக்க வேண்டும், பிள்ளை பெறுவதும், வீட்டு வேலை செய்வதும் அவர்களின் தலையாயக் கடமையெனச் சமூகத்திற்கேற்ப சினிமாக்களும் முன்மொழிந்தன. நவீன சினிமா மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது. மாற்றத்திற்கான கருத்துகளையும், சாதியையும் பெண்ணடிமைத்தனத்தையும் கேள்விக்குள்ளாக்கும் திரைப்படங்கள் தமிழில் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆனால், அவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதுதான் வருத்தம்.
அவ்வகையில் பெண்களைக் கருத்துகளால் கவர்ந்த கண்ணகி திரைப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமானது.

கண்ணகி திரைப்பட இயக்குநர் யஷ்வந்த் கிஷோரிடம் சில கேள்விகளை முன்னிருத்தி நேர்காணல் செய்தோம்.

பெண்களின் பிரச்னையை மையப்படுத்தும் கதையைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படித் தோன்றியது?

எல்லா ஆண்களும் தன் தினசரி வாழ்க்கையில் பெண்களைக் கடந்து செல்கின்றனர். நிஜ வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிக்கதைகள் இருக்கின்றன. அவர்களுக்கென்று உணர்வுகளும் வலிகளும் கனவுகளும் உள்ளன. ஆனால், சினிமாக்களில் அவர்களின் உணர்வுகளையும், கனவுகளையும் பிரதிபலிப்பதாகப் பெரும்பாலான காட்சிகள் இல்லை. கதாநாயகனுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெண் கதாபாத்திரத்துக்குக் கொடுக்கப்பதில்லை. பெண்களின் உலகை சினிமாவில் காட்ட விரும்பினேன். விருப்பத்தின் விளைவே கண்ணகி திரைப்படம். இந்தப் படத்தில் வரும் காட்சியில் ஒரு பெண் தனக்குத் திருமணப் பேச்சு எடுத்தவுடன் தன்னைக் கண்ணாடியில் பார்த்து ரசிப்பாள். அதே போல் இன்னொரு கதாபாத்திரம் விவாகாரத்துக்குப் பின் தாலி கட்டுவதா, வேண்டாமா என்பது தெரியவில்லை என்கிற விவாதத்தை முன்வைப்பார். இவையெல்லாம் பெண்களின் வாழ்க்கையில் மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால், இவையெல்லாம் வெறுமனே கடந்து செல்லாமல் சமூகத்தில் விவாதமாக்கும் முயற்சியே ’கண்ணகி’.

முதல் படமே கமர்ஷியல் படமாக இல்லாமல் கருத்துச் சொல்லும் படமாக எடுத்துள்ளீர்கள். அதுவும் முதல் படத்திலேயே செங்கொடியைக் காட்சிப்படுத்தியுள்ளீர்கள். இதனால் திரைத்துறையில் உங்கள் எதிர்காலம் என்னவாகும் என்கிற அச்சமில்லையா?

நான் யார், என்னுடைய கருத்தியல் என்னவாக உள்ளது என்பதை மறைத்துவிட்டு, சம்பாதிக்கும் பணத்தையும் புகழையும் குப்பையாகத்தான் கருதுகிறேன். நாம் சாதி, மதம், பாலினம் போன்ற விடுதலைகளை முன்வைக்கிறோம். தனி மனிதன் தன் கருத்துகளை முன் வைப்பதற்கே போதுமான சுதந்திரம் இல்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. நான் எந்தவித இசத்துக்குள்ளும் (கம்யூனிசம், பெரியாரியம், அம்பேத்கரியம்) சிக்காத மனிதன், ஆனால் நாட்டின் யதார்த்தமான போக்குகளை உணர்ந்தவன். நிஜத்தில் என்ன இருக்கிறதோ அதையே திரையில் காட்சிப்படுத்தியுள்ளேன்.

படத்தில் பேசப்படும் வசனங்கள் ஆழமானதாக உள்ளது. இவை தீவிர வாசிப்பின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. நீங்கள் இதுவரை படித்த புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

எனக்குப் புத்தகம் வாசிக்கும் பழக்கமில்லை. நானே படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் என்னால் இரண்டு பக்கத்துக்கு மேல் படிக்க முடியாது. இரண்டு பத்தி படித்துவிட்டு நாள் முழுக்க யோசிப்பேன். இதனால்தான் என்னவோ புத்தகம் படிப்பது எனக்குச் சிரமம். ஆனால், மனிதர்களை உற்றுநோக்குவதும், தினசரி செய்திகளை வாசிப்பதும் என்னுடைய பழக்கமாக இருந்தது. இதனால் ஒவ்வொரு நிகழ்ச்சிப் போக்குக்குப் பின்னால் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ள முடிந்தது. சாதி மறுப்பு திருமணங்களில் ஆணவக்கொலை நடக்கிறது. இக்கொலைகளை ஆராய்ந்தால் பெரும்பான்மையான வழக்குகளில் மணமகன் தாழ்த்தப்பட்ட சாதியாக இருப்பதால் ஆணவக்கொலை நடந்திருக்கும். இவற்றையெல்லாம் ஆழமாக கவனித்தால் பெண்ணின் கருப்பை மீதான சாதி மற்றும் பொருளாதார ஆதிக்கம் புரியும்.

பெண் சுதந்திரம் என்றால் ஆடை, சுதந்திர பாலியல் போக்கு போன்ற கலாச்சார விடுதலையை மட்டும் பேசும் குரலாகச் சுருங்கிவிடுகிறது. பெண்களின் பொருளாதார மற்றும் அரசியல் விடுதலை பற்றி உங்கள் கருத்து?

பெண்ணியம் சார்ந்த கருத்துகள் பரவலாகப் பேசப்பட்டாலும் அவை மேலோட்டமாகவே பேசப்படுவதுதான் வருத்தம். உடை சுதந்திரம், குடிபோதை எங்கள் உரிமை என்றெல்லாம் பேசப்படுகிறது. இது சுதந்திரமா என்றால் சுதந்திரம்தான். இவற்றையெல்லாம் வைத்துப் பெண்ணை அவமதிக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இவை மட்டுமே அடிப்படையில்லை. அடிப்படையான தேவைகள் பெண்கள் கல்வி கற்பதும், வேலைக்குச் செல்வதும், சுய முன்னேற்றம் அடைவதும் மக்களுக்கான அரசியலில் ஈடுபடுவதும் மிக முக்கியமானது. ஏழை எளிய பெண்கள் இன்னும் முழுமையாகக் கல்வியைப் பெறவில்லை, பொருளாதாரத் தன்னிறைவு அடையவில்லை, அரசியல் மற்றும் சமூக விடுதலை கிடைக்கவில்லை, இதற்கான முன்னெடுப்புகளை அரசும், சமூக இயக்கமும் எடுக்க வேண்டும். இதற்கான போராட்டத்தை நீர்த்துப் போகவிடக் கூடாது.

சமூகப் பிரச்னைகளை முன்னிருத்தக்கூடிய சில படங்கள் மட்டுமே வெளியாகின்றன. அதுவும் போதுமான வரவேற்பைப் பெறவில்லை. இதற்கான காரணம் என்ன?

பெரும்பாலானவர்களின் உளவியல் என்பது தரத்தைக் காட்டிலும் பிராண்ட் வேல்யுவிற்கு (brand value) முக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளது. பிராண்டெட் எல்லாமே தரமானதாக இருப்பதில்லை, ஆனால், குறைகள் இருந்தாலும் தரமானதாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறது. அதேபோல் தான் சினிமாவிலும் சிறிய படங்களுக்கான முக்கியத்துவம் கிடைப்பதில்லை.

தங்களின் வருங்காலப் படங்களும் பெண்கள் மற்றும் சமூக பிரச்னைகளை முன்னிருத்தி இருக்குமா?
சமூகப் பிரச்னைகளை முன்னிருத்தி இருக்குமா என்று தெரியவில்லை. பிரச்னைகளை வியாபாரமாக்க விரும்பவில்லை. ஆனால், இனி வரும் எல்லாப் படங்களும் உளவியல் ரீதியான அணுகுமுறை கொண்டவையாக இருக்கும்.

படைப்பாளர்:

கு.சௌமியா, பத்திரிகையாளர்.