பொழுதுபோக்கு ஊடகங்கள் (Entertainment Medias) அனைத்தும் இன்று மக்களை, மூளைச் சலவை செய்யும் கூடாரங்களாக மாறிப்போய் கிடக்கின்றனவா?
வீட்டுத் திண்ணைகளில் ஒன்றாகக் கூடி உட்கார்ந்திருந்து கதை பேசி பொழுதைக் கழிக்கும் பண்டைய வழக்கத்தின் நீட்சிதான் இன்றைய ஊடகங்கள். அதுவே பின்னாளில் சொற்பொழிவு / கதாகாலக்ஷேபம் (நேரத்தைக் கடத்துவது / Timepass என்று பொருள்) அதன் அடுத்த கட்டமாகத் தெருக்கூத்து, இசை, நாட்டியம், நாடகம் என வளர்ந்து இன்றைய நவீன சினிமா, பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, முகநூல், YouTube இன்னும் பிற சமூக ஊடகங்களாக வளர்ந்து நிற்கிறது. இவற்றுடன் சேர்ந்து விளையாட்டும் கூட (Sports) பொழுதுபோக்கு அம்சங்களிலேயே அடங்கிவிடுகிறது.
பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, சமூக அவலங்கள் தலைதூக்கும் சமயங்களில் மக்களிடம் புரட்சி எண்ணங்களை விதைக்கவும், மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் அறியாமையை அகற்றவும் இப்படியான பொழுதுபோக்கு ஊடகங்களே பயன்பட்டன. ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் பத்திரிகைகளும் நாடகங்களும் மேடைப் பேச்சுகளும் மக்களிடம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தின என்று சொல்லவே தேவையில்லை. அதேபோல மக்களின் மன வக்கிரங்களுக்கு தீனி போடவும் இதே ஊடகங்கள்தான் பயன்பாட்டில் இருந்தன, இப்பொழுதும் இருக்கின்றன.
ஏற்கனவே வாழ்ந்தவர்களின் உண்மைக் கதைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தாலும் சரி, அல்லது அவை கற்பனை கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி, ஒரு கட்டத்தில் மக்கள் அத்தகைய பிம்பங்களிடம் உணர்வுரீதியாகப் பிணைக்கப்பட்டுவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில், இத்தகைய கற்பனை கதாபாத்திரங்களிலிருந்து தாவி, அவற்றை ஏற்று நடிக்கும் நடிகரிடமும் கூட இதேபோன்று உணர்வுரீதியாகப் பிணைக்கப்படுகிறார்கள். அந்த பிணைப்பு, குழு மனப்பான்மையாக மருவி, அவர்களுக்கு இரசிகர் மன்றங்கள் வைப்பது, அடித்துப் பிடித்து அவர்களுடைய படங்களைப் பார்த்துவிடுவது, அவர்கள் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது என முற்றிப்போய் ஒரு கட்டத்தில் அவர்களைக் கடவுளாகவே பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர். அதோடுகூட அவர்கள் என்ன சொன்னாலும் கண்களை மூடிக்கொண்டு அதை அப்படியே செய்துமுடிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
மற்றொரு பக்கம் பார்த்தால், அவர்களது பெயரும் புகழும் செல்வச்செழிப்பும் நட்சத்திர அந்தஸ்தும், சாமானிய மக்களைப் பிரமிக்க வைத்துப் பித்துப்பிடிக்க வைக்கிறது. அவர்களைப் போல முடி அலங்காரம் செய்வது தொடங்கி, அவர்களைப் போன்றே உடை அணிவது, அவர்களைப் போன்றே நடை உடை பாவனைகளை மாற்றிக்கொள்வது என ஒருபக்கம் தங்களுடைய உண்மையான அடையாளத்தையே இழந்துவிடுகிறார்கள். இன்றைய இளம் தலைமுறை செய்யும் ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்றவற்றைப் பார்த்தாலே இது புரியும்.
தனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியருக்கோ, உயிர் காக்கும் மருத்துவருக்கோ அல்லது சமுதாயத்தின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்யும் தொழிலில் இருக்கும் எந்த ஒருவருக்குமோ கொடுக்காத அன்பை, முக்கியத்துவத்தை, தனக்குப் பிடித்த நட்சத்திரங்களுக்கு அள்ளிக்கொடுத்து, அவர்களைத் தம் தலைவர்களாக ஏற்று நம் நாட்டையே தூக்கி அவர்கள் கையில் கொடுக்கும் அளவுக்கு அவர்கள்பால் ஒரு அதீத நம்பிக்கை உருவாகிவிடுகிறது.
திரை நட்சத்திரங்களும் சரி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுத்துறை பிரபலங்களும் சரி, யாரும் இலவசமாக எதையும் செய்வதில்லை. மக்களிடம் அவர்களது செல்வாக்கு உயர உயர அவர்களது ஊதியம் அதிகரிக்கிறது. வருமானம் பெருகுகிறது. ஆனால் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், தன் சொந்த பணத்தையும் நேரத்தையும் செலவழித்து கூடவே அவர்கள் மீது அன்பையும் பொழியும் ஒரு சாமானியன் அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கைக்கு எந்த அளவுக்கு அவர்கள் நியாயம் செய்கிறார்கள் என்று பார்த்தால், வெகு சிலரைத் தவிர மற்றவரெல்லாம், வெறும் பூஜ்யம்தான். ஒரு காலத்தில், மக்களுடைய இத்தகைய அன்பை, நம்பிக்கையை ஆக்கப்பூர்வமாக மடைமாற்றி விட்டது போய், ஓரளவுக்குமேல் சிந்தக்கவிடாமல் மக்களின் மூளையை மழுங்கடிக்கும் ஆயுதங்களாக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அப்படியே மக்களுக்காகச் சிந்தித்து, அவர்களுக்கான சமூக நீதியுடன் முன்வைக்கப்படும் ஒரு சில திரைப்படங்களும், அதைக் கையிலெடுப்பவர்களும் சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னப்படுகிறார்கள். அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் பக்கம் மக்கள் நிற்பதுமில்லை. இங்கே கொண்டாடப்படும் ஒரு நடிகரின் படங்களின் பட்டியலைக் கேட்டால், சுலபமாகச் சொல்லிவிடுவார்கள். பாடல்களை வரி மாறாமல் பாடி விடுவார்கள். ஆனால், நம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் நம் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள்கூட முழுவதுமாக இங்கு பலருக்குத் தெரியாது! அமைச்சரவையில் யார் யார் என்னென்ன பதவியில் இருக்கிறார்கள் எனக் கேட்டால், ஒரு சாமானியனுக்கு என்றில்லை, படித்து பட்டம் பெற்ற பலருக்கும்கூட சொல்லத் தெரியாது. இந்தளவுக்குத்தான் மக்களைச் சிந்திக்க விடுகிறார்கள் என்றால் அது மிகையில்லை.
மக்களின் மனதை வென்று அவர்களது நம்பிக்கையைப் பெற்ற உச்ச நட்சத்திர அந்தஸ்தில் உள்ளவர்கள், மக்களை மந்தைகளாகவே வைத்திருக்க ஆதிக்க சக்திகளுக்கு உதவி செய்கிறார்கள். இங்கே ஒவ்வொருவரும் வாழும் சூழ்நிலையும் அவரவர் வாழ்கையில் சந்திக்கும் இன்பதுன்பங்களும் மனிதருக்கு மனிதர் மாறுபடும். எப்பொழுதுமே தன்னை உயர்வாக மற்றவரிடம் அடையாளம் காண்பித்துக்கொள்ளும் மனப்பான்மை ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இப்படித் தன்னை உறவாகக் காண்பிக்க மற்றவரை இறக்கிக் காண்பிப்பது மிகச் சுலபமான வழி.
இதுவே, ‘Hero Worship’ எனும் மந்தை மனநிலையின் ஆரம்பப் புள்ளி.
‘Self Love’ அதாவது சுய அன்பு / சுயப்பற்று இதுவே இத்தகைய மனப்பான்மையிலிருந்து விடுபடத் தீர்வாக அமையும். நாம் இங்கே யாரையும் விடத் தாழ்ந்தவர் இல்லை என்பதை முற்றிலுமாக உணரவேண்டும். நம்மை நாமே மதிக்க வேண்டும். கற்பனையில் வாழ்வதை விட்டு எதார்த்தத்தை மனமார ஏற்கவேண்டும். பொழுதுபோக்கைப் பொழுதுபோக்காக மட்டுமே கடந்துபோகவேண்டும். விண்ணில் ஜொலிக்கும் நட்சத்திரங்களைப் போல சக மனிதர்களைப் பார்த்து வியக்காமல், அவர்களும் நம்மைப்போன்றவர்களே என அவர்களையும் சக மனிதர்களாகக் கடந்துபோகும் பக்குவத்தை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.
இவற்றைப் புரிந்துகொண்டு இத்தகைய மாயைகளிலிருந்து மக்கள் விடுபட்டால் மட்டுமே, ஒருவருடைய பகுத்தாராயும் அறிவு விழிக்கும். நன்மை தீமை மக்களுக்கு விளங்கும். நம் சமூகம் மேம்படும்.
படைப்பாளர்
கிருஷ்ணப்ரியா நாராயண்
தமிழ் நாவலாசிரியர். சென்னையை சேர்ந்தவர். புத்தகங்கள் வாசித்தலில் அதிக ஆர்வம் உண்டு. இவரது 10 நாவல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளன.