மனித குலம் எதை நோக்கிச் செல்கிறது என்று அறிய முடியாத ஒரு விளிம்பில் நிற்பதாகத் தோன்றுகிறது. உள்ளூர் செய்திகளோ உலக செய்திகளோ தினமும் நமக்குத் தரும் நிராசை மிகப் பயங்கரமானதாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் வெறுப்பின் விஷ விதைகள் வஞ்சனையின்றி தூவப்படுகின்றன. இஸ்ரேல் ஆகட்டும், மணிப்பூர் ஆகட்டும், வாச்சாத்தி, நாங்குனேரி, நிர்பயா, ரஷ்யா, ஈழம் எனத் தற்கால உதாரணங்கள் எதுவும் நம்பிக்கை தருவதாக இல்லை. வலியவை எளியவற்றை அழிக்கும்  என்கிற பொதுவிதியின் கீழாக ஏதோ ஒரு விசைக்குக் கட்டுப்பட்டு நாம் இயங்குகிறோமோ என்று மனம் பதறுகிறது. உலகம் முழுவதும் ஏதேனும் ஓர் அடையாளத்தோடு தன்னை இணைத்துக்கொள்ளவே மனிதர்கள் விரும்புகிறோம். பால், ஜாதி,இனம், மதம், மொழி, நாம் சார்ந்துள்ள பணி என்று எத்தனையோ இருக்கிறது நம்மை ஒன்றுபடுத்த. பிளவுபடுத்தவும். நாம் எப்போதும் நம்மை எதனோடோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், நாம் சார்ந்திருக்கும் அடையாளம் மட்டுமே உயர்ந்தது, மற்றவை தாழ்ந்தவை என்கிற எண்ணம் மிகவும் அபாயகரமான எல்லைக்கு நம்மை இட்டுச்செல்கிறது. சின்ன விஷயங்களில் தொடங்கி தேசங்களுக்கிடையேயான போர்கள் வரை இந்த ‘நாம்’, ‘அவர்கள்’ என்கிற பேதம் இருக்கிறது. இதில் பெரிய அளவில் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும்தாம். இரு குடும்பங்களுக்குள்ளோ, குழுக்களுக்கிடையிலோ, மதங்கள், நாடுகளுக்கிடையிலோ, பாதிக்கப்படுவதும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படக்கூடிய  (vulnerable) நிலையில் இருக்கும் ஆண்களுமே.

பெரும்பாலும் இந்த வன்முறைகள் ஆதிக்க வெறி பிடித்த பிற்போக்கு எண்ணம் கொண்ட மனிதத்தன்மையற்ற தலைவர்களால்தாம் கட்டமைக்கப்படுகின்றன. தனி மனிதனுக்கு உள்ளிருக்கும் வன்மத்தை இந்த அபாயகரமான எண்ணங்கள் கிளறிவிடுகின்றன. சமூக அமைப்பில் அழிக்க முடியாத வீர்யத்துடன் வன்மம் பரவுகிறது.  காசாவில் இருந்து வரும் காணொளிகளும் செய்திகளும் மனதை வேதனையடையச் செய்கின்றன. தார்மீகரீதியில் இப்படி அப்பாவி மனிதர்களைக் கொல்வதற்கு என்ன நியாயம் கற்பிக்க முடியும்? யாருக்கும் யாருக்கும் இடையே சண்டை, நாம் ஏன் சாகிறோம் என்றே அறிய இயலாத அப்பாவி மக்களை அழித்தொழிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இதுவரை இரண்டாம் உலகப் போர் குறித்து எண்ணிலடங்கா திரைப்படங்கள் வந்துள்ளன. இருக்க இடம் இன்றி விரட்டப்பட்ட, ஒரு குலமாக வேட்டையாடப்பட்ட யூதர்களின் கண்ணீர் சரித்திரத்தை இந்தத் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். லைஃப் இஸ் பியூட்டிஃபுல், ஜோ ஜோ ராபிட் இரண்டும் என்னை நிலைகுலைய வைத்த படங்கள். ஹோலோகாஸ்டில் கொல்லப்பட்ட குழந்தைகளை அவர்களின் உடைகளைக்கொண்டு தாய்மார்கள் அறியும் காட்சி, தூக்கிலிடப்பட்ட தாயின் காலணி வழியே அவளை மகன் அறிந்துகொள்ளும் காட்சி, யூதர்கள் பூதங்கள் போல இருப்பார்கள் என்று குழந்தைகளுக்குக் கற்பிக்கும் விவரணைகளை நாம் இந்தப் படங்களில் கண்டு இருக்கிறோம். இன ஒழிப்பின் துவேஷத்தால் துரத்தப்பட்டவர்களே, அறுபது ஆண்டுகளுக்குள்ளாக மற்றோர் இனத்தின் தடத்தை அழிக்க சூளுரைப்பதில் உள்ள உளவியல் என்னவாக இருக்கக்கூடும்? இன ஒழிப்புக்கான வெறுப்பின் வெம்மையை இஸ்ரேலைவிட அதிகமாக அறிந்தவர்கள் தற்காலத்தில் இருக்க முடியாது. ஒரு பேட்டியில் யுவல் நோவா ஹராரி சொன்னதுபோல, “நாம் ஒரு பேச்சுவார்த்தைக்கும் அமைதிக்கான பாதைக்கும் தயாராக வேண்டும். ஜெர்மனியுடன் இஸ்ரேலால் நட்பு பேண முடியும் எனில், பாலஸ்தீனத்துடன் ஏன் நட்பாக முடியாது?”

அரசியல்ரீதியான வெறுப்புணர்வைவிட அபாயகரமானது தனி மனிதர்களின் மனதில் உள்ள வன்மமும் துவேஷமும். நாங்குநேரி சம்பவம் நம் அனைவரின் மனதையும் உலுக்கியது. பிளேடு கொண்டு பென்சில் சீவும்போது கையில் காயம் ஏற்பட்டாலே அழக்கூடிய அறியாமை இருக்க வேண்டிய வயதில், அரிவாள் கொண்டு சக மாணவனை வெட்டும் வேகம் எங்கிருந்து வருகிறது? காதல் திருமணம் செய்ததற்காக வீடு புகுந்து கொல்லப்பட்ட இருவரும் தனி மனிதனின் அகங்கார வெறிக்குப் பலியானவர்கள்தாம். பாசமாக வளர்த்த பெண், தன் சொல்லை மீறிவிட்டாள் என்பதே அவளை வெட்டிக்கொல்ல போதுமான காரணமாக அமைந்துவிடுவது எவ்வளவு குரூரமான அபத்தம்? தான் என்கிற ஈகோ உடைபடுவதைத் தாள முடியாத ஆதிக்கம்தானே இதற்குக் காரணம்? இதை எழுதி முடித்த ஈரம் காய்வதற்குள் காதலித்த அக்காவை வெட்டிக்கொன்ற தம்பியின் செய்தி. மணிப்பூரில் இரண்டு பெண்களை அத்தனை ஆண்கள் கும்பலாகத் திரண்டு அடித்தபடியும் அவர்களின் உடலை மோசமாகச் சீண்டியபடியும் ஆரவாரமிட்டு நடத்திச் சென்றதைப் பார்த்து நாம் அனவருமே மனம் பதைத்தோம். அதே கும்பலிடம் ஓர் ஆண் சிக்கியிருந்தால் மிக சித்திரவதைக்கு உள்ளாகி கொல்லப்படுவான். பெண் என்பதால் மரணத்தைவிடவும் அதிகமான வேதனையைத் தரும் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். வன்புணரப்பட்டு குப்பையைப்போலத் தூக்கி எறியப்படுகிறாள். இத்தகு குற்றங்களை நிகழ்த்துபவர்களும் மிகச் சாதாரண மனிதர்களே… இயல்பு வாழ்வில் அம்மாவுக்குக் கால் அமுக்கிவிட்டு மனைவிக்குக் காய்கறி வாங்கித் தருபவர்களாகவும் அவர்கள் இருக்கக்கூடும். ஆனால், தினம் தினம் தனி மனிதர்களுக்கு எதிராகச் சாதாரண மனிதர்களாலேயே நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. சகிப்புத்தன்மை இல்லாத, சக உயிரை ஒரு பொருட்டாக மதிக்காத, வன்முறை குறித்த குற்ற உணர்ச்சி இல்லாத குலமாக மனிதகுலம் மாறி வருகிறதா என்று ஐயம் மனதில் பதற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

மனிதகுலம் என்று பெருமைப்பட்டுக்கொள்வதற்கு நம்மிடம் எதுவுமே இல்லை என்றே தோன்றுகிறது. உலகில் இதுவரை தோன்றிய உயிரினங்களில் அறிவார்ந்த சமூகமாக மனித இனம் அறியப்படுகிறது. ஆனால், நம் அறிவு அனைத்தையும் நமக்கெதிராகத்தான் நாம் பயன்படுத்துகிறோம் என்கிற அடிப்படை உணர்வுகூட இல்லாமல்தான் இந்த இனம் இருக்கிறது. நாம் என்றால் அது நம் மனித இனம் முழுவதையும்தான் குறிக்கும். நம்மைச் சூழ்ந்து இருக்கும் அத்தனை உயிர்களையும் நமக்கு அளிக்கப்பட்ட ஒன்றாக, நம் பயன்பாட்டுக்காக மட்டுமே படைக்கப்பட்டதாக நாம் எடுத்துக்கொள்கிறோம். இந்தச் சுயநலம், இயற்கையைச் சீண்டுவதில் தொடங்கி சக மனிதனைச் சீண்டுவதில் முடிகிறது. அனைத்து மதங்களும் ஓயாமல் போதிப்பது அன்பைத்தான். தன்னைப்போல் பிறரை நினைக்க வேண்டும் என்கிற உயர் பண்பைத்தான். ஆனால், ஒரு தீவிரமான நம்பிக்கையாளர் அப்படி இருக்கிறாரா என்றால் அது ஒரு விடையற்ற கேள்வியாகவே இருக்கும்.

ஒரு சிற்றினம் என்னும் வகையில் நாம் அனைவரும் ஒன்றே. நம்மில் யாரும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை. இதை புரிந்துகொள்ள முடியாத சமூகம் வேறு எந்த உயிரினத்தையும்விடக் கீழானது. ஓர் ஆணால் தன் மனைவியைத் தனக்குச் சமமாக நினைக்க முடிவதில்லை. ஒரு சமூகத்தால் அடுத்த சமூகத்தைத் தனக்கு இணையாக நினைக்க முடிவதில்லை. ஒரு மொழி பேசுபவரால் அதனைப் பேசாதவரை மதிக்க முடிவதில்லை. வசதியான வாழ்வை வாழ்பவர்களுக்குச் சிரமத்துக்குள்ளானவர்களின் கஷ்டங்கள் புரிவதில்லை. ஆணுக்கோ பெண்ணுக்கோ திருநர்களின் துன்பங்கள் குறித்த அக்கறை இல்லை. நம் இயல்புக்கு மாறாக இருப்பவர்களின் வாழ்க்கை குறித்த எந்தப் புரிதலும், புரிந்துகொள்வதற்கான யத்தனமோகூட இல்லை. நமக்குள் சகிப்புத்தன்மை என்பது அபாயகரமான அளவில் குறைந்துவருகிறது.

அறிவியலின்படி ஆப்ரிக்காவின் ஒற்றை ஆதித்தாயான லூசியின் வாரிசுகள்தாம் நாம் அனைவரும். பல சிற்றினங்களாகப் பரவிப்போன மனித இனத்தில் நியாண்டர்தால், ஹோமோ எரக்டஸ், டெனிசோவன்ஸ் என எண்ணிக்கையில் அதிகமாக இருந்த மனித சிற்றினங்கள் காலப்போக்கில் அழிந்து போக, ஹோமோ சேபியன்ஸ் மட்டுமே பூமியில் நிலைத்திருக்கிறோம். ஹோமோ சேபியன்ஸ்  ‘வைஸ் மான்’ – அறிவுள்ள மனிதன் என்று அர்த்தம். சகிப்புத்தன்மை அற்ற பேரறிவு கொண்ட உயிரியினம் என்று சொல்லலாமோ? பிற இனங்கள் அழிந்து போன காரணங்கள் நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. காலநிலை மாற்றம், இடப்பெயர்வு, இயற்கையின் தேர்வு, நோய்மை, இனக்குழுக்களுக்குள் போர்கள் எனப் பல காரணங்கள் மானுடவியல்  ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், நம் ஹோமோ சேபியன்ஸ் இனம் அடுத்த நூற்றாண்டுக்குள் அழிந்துபோனால் அதற்கு ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது  வெறுப்புணர்வில் விளைந்த ஆதிக்க மனோபாவம்.

படைப்பாளர்:

ஆதிரை தீட்சண்யா

சமூகத்தின்பால் தீராத அன்பு கொண்டுள்ள மனுஷி. மனிதகுலத்தை பலகீனப்படுத்தும் அத்தனை துன்பங்களையும் அன்பின் துணை கொண்டும் பேச்சுவார்த்தை மூலமும் கடக்க முடியும் என்று எப்போதும் நம்புகிறேன். நான் வகிக்கும் பணியில் என்னால் முடிந்தவரை சமத்துவத்தைப் நிலைநாட்ட முயல்கிறேன்.  ‘society towards equality’ என்பது என் வாழ்வின் குறிக்கோள்.