லில்லி ஹார்னிங்

மனித வரலாற்றில் முதலாம் உலகப் போரானது எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றில் பெரிதும் பேசப்படாத ஓர் அம்சம் இருக்கிறது. ஆண்களில் பெரும்பான்மையானோர் போருக்குச் சென்ற பிறகு வேறு வழியின்றி பல கதவுகள் பெண்களுக்காகத் திறக்கப்பட்டன. பெண்களை வேலைக்கு அனுப்பத் தயங்கிய சமூகம் என்ன செய்வதென்று தெரியாமல், வேலைக்கு ஆள் இல்லாத ஒரே காரணத்தால் பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்கியது. போர் முடியும் தறுவாயில் 30 லட்சம் பெண்கள் தொழிற்சாலைகளில் வேலையில் இருந்ததாக ஒரு தரவு கூறுகிறது. ஆள் இல்லை என்று தெரிந்ததும், “நான் இந்த வேலைக்கு வருகிறேன், இதற்கான தகுதிகள் என்னிடம் உண்டு” என்று பல பெண்கள் அரசுக்கு ஆர்வத்துடன் கடிதம் எழுதினர். ஆண்கள் போருக்குச் சென்றதால் பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என்று பல துறைகளில் பணியிடங்கள் காலியாகவே, பெண்கள் அந்த வேலைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

உதாரணமாக, திறமையான தொல்லுயிரியலாளராக இருந்தும் பெண் என்பதாலேயே டார்தி பேட்டுக்கு வேலை கிடைக்கவில்லை. லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் அந்தக் காலகட்டத்தில் பெண்களை வேலைக்கு எடுக்கும் வழக்கம் இருக்கவில்லை. ஆனால், வேலையில் இருந்த ஆண்கள் போருக்குச் சென்றுவிட்டதால் அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட டோரதி, “நான் இந்தப் பணியைச் செய்கிறேன்” என்று தானாகவே முன்வந்தார். சிறப்பான தொல்லுயிர் ஆராய்ச்சியாளராகவும் அருங்காட்சியத்தின் முக்கிய அலுவலராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

எலிசபெத் க்ரேவ்ஸ்

கேனரி பெண்களைத் தெரியுமா? கேனரி என்பது மைக்ரோனீசியத் தீவுகளைச் சேர்ந்த ஒரு மஞ்சள் நிறப்பறவை. முதலாம் உலகப் போர் காலத்தில் பல பிரிட்டிஷ் பெண்கள் ஆயுதத் தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்தத் தொழிற்சாலைகளில் சிலவற்றில் டி.என்.டி உற்பத்தி செய்யப்பட்டது. தொடர்ந்து டி.என்.டியை எதிர்கொண்டதால் இந்தப் பெண்களின் தோலே ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாக மாறிவிட்டதாம்! இது கேனரி பறவையின் நிறத்தை நினைவுபடுத்தியதால் இந்தப் பெண்களை கேனரி பெண்கள் என்று அழைத்தார்கள். தோல் நிறமாற்றம் மட்டுமல்லாமல் தலைவலி, குமட்டல் போன்ற பிற பிரச்னைகளும் இந்தப் பெண்களுக்கு ஏற்பட்டன. காலப்போக்கில் தொழிற்சாலை நிர்வாகங்கள் பெண்களுக்கு முகக்கவசங்கள் வழங்கத் தொடங்கியதும் இந்தப் பிரச்னை குறைந்தது.

முதலாம் உலகப் போரின்போது ஆயுதங்கள் மற்றும் மருந்துகளைத் தயாரிப்பதற்கான அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது. இதற்கு நிறைய வேதியியலாளர்கள் தேவைப்பட்டனர். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்தது பெண் அறிவியலாளர்களே. நைட்ரிக் அமிலத்தை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான செயல்முறையை வடிவமைத்த மே சிபில் லெஸ்லி, மருத்துவத் துறைக்கான மயக்க மருந்து மற்றும் வலி நிவாரணிகளை உருவாக்கித் தந்த ஜாஸ்லின் ஃபீல்ட் தார்ப், வில்வாத நச்சுக்கான முறிவைக் உருவாக்கிய ம்யூரியல் ராபர்ட்சன் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.

“பெண்கள் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள் என்பதாலேயே எல்லாம் சரியாகிவிட்டது என்று சொல்லிவிட முடியாது” என்று எழுதுகிறார் ஆராய்ச்சியாள்ர் பட்ரிசியா ஃபரா. அறிவியல்ரீதியான பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும் பணிச்சூழலில் பெண்களுக்குப் பல சவால்கள் இருந்தன. பெரிய இயந்திரங்களை இயக்கும்போதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும்போதும்கூட நீண்ட பாவாடைகள்தாம் அணியவேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். பேண்ட் அணிவது தடை செய்யப்பட்டிருந்தது, இது பெண்களுக்குப் பெரிய அசௌகரியத்தைத் தந்தது. போர்க்காலத்தில் வேலைக்கு எடுக்கப்பட்ட பல பெண்களுக்கு ஆண்களுக்குத் தரப்பட்ட ஊதியத்தில் 60% மட்டுமே தரப்பட்டது.

அறிவியல் ஆர்வத்துடன் தானாகவே வேலை செய்ய முன்வந்த பெண்களுக்கு 1918இல் ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. உலகப் போர் முடிந்ததும் ஆண்கள் வேலைக்குத் திரும்பினர். “சரி, நீங்கள் கிளம்பலாம்” என்று பல நிறுவனங்களும் அமைப்புகளும் உடனடியாகப் பெண்களை வேலையை விட்டு நிறுத்தின. “பெண்கள் வேலைக்குச் செல்வது ஆண்களின் வேலை வாய்ப்பைப் பாதிக்கும்” என்கிற கருத்து காட்டுத்தீ போல் பரவியது. தங்களது ஆர்வத்தால் உந்தப்பட்டு குறைவான சம்பளத்தில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த பெண் அறிவியலாளர்களில் கிட்டத்தட்ட அனைவரும் ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போரின் சூழல் வேறு மாதிரியாக இருந்தது. அந்தக் காலகட்டத்திலும் ஆண்கள் இல்லாத சூழலில்தான் அதிகமான பெண்கள் வேலைக்கு வந்தனர் என்றாலும் அதற்குள் ஓரளவு சமூக மாற்றம் வந்திருந்தது. பெண்களுக்கான ஓட்டுரிமை உள்ளிட்ட பலவும் பேசுபொருளாகியிருந்தன. ஆகவே பணிச்சூழலில் மிகச் சிறிய அளவில் முன்னேற்றம் இருந்தது.

இரண்டாம் உலகப் போரின்போது பணியாற்றிய பெண் அறிவியலாளர்களில் முக்கியமானவர்கள் லாஸ் அலமோஸில் இருந்த பெண்கள். ஜூலை 2023இல் வெளியான ஆப்பன்ஹைமர் திரைப்படம், அணுகுண்டு எப்படி உருவாக்கப்பட்டது என்பதை விரிவாகக் காட்டியது. லாஸ் அலமோஸ் என்கிற இடத்தில் அணுகுண்டு ஆராய்ச்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டதையும் அந்தப் படத்தில் காட்டியிருப்பார்கள். மான்ஹாட்டன் திட்டம் என்கிற பெயரில் லாஸ் அலமோஸில் இயங்கிய மிகப்பெரிய ஓர் ஆய்வுக்களத்தில் பல பெண்கள் பணியாற்றினார்கள். லாஸ் அலமோஸில் இருந்த மொத்த பணியாளர்களில் 11% பெண்கள் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். அணுகுண்டு உருவாக்கம் என்பது அறத்துக்கு எதிரானது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆகவே அணுகுண்டு தொடர்பான அறிவியலை எந்த வகையிலும் உயர்த்திப் பேச முடியாது. அந்த ஆராய்ச்சியில் பெண்களின் பங்களிப்பை மட்டுமே இங்கு விவாதிக்கிறோம்.

அங்கு இருந்த பெண் ஆராய்ச்சியாளர்களில் முக்கியமானவர் லில்லி ஹார்னிக். முதலில் இவரது கணவருக்கு லாஸ் அலமோஸில் வேதியியலாளர் பணி கிடைத்தது. ஆகவே லில்லியும் அங்கு சென்று தங்கினார். பணியாளர்களின் மனைவிமார்கள் படித்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு தட்டச்சுத் தேர்வு வைத்து, அவர்களை குமாஸ்தா வேலைக்கு எடுத்துக்கொள்வது லாஸ் அலமோஸின் நடைமுறை. தேர்வின்போதுதான் லில்லியின் அறிவியல் பின்புலமே அங்கு இருந்தவர்களுக்குத் தெரியவந்தது. உடனே லில்லி வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். பல ஆய்வுகளில் ஈடுபட்டார். முதல் அணுகுண்டு சோதனையை ஆளில்லாத தீவில் நடத்தவேண்டும் என்கிற மனுவிலும் அவர் கையெழுத்திட்டார். ஆய்வுக்குழுவில் இருந்தாலும் ஆண் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து லில்லி தள்ளியே வைக்கப்பட்டார். ஆய்வு விவாதங்களின்போது அவர் அழைக்கப்படவில்லை. “பல ஆண் அறிவியலாளர்கள் எங்களைச் சமமானவர்களாக நடத்தவில்லை, எங்களை உதவியாளர்களாகத்தான் பார்த்தார்கள்” என்று லில்லி குறிப்பிடுகிறார். இதுவே பெரும்பான்மையான பெண் அறிவியலாளர்களின் நிலையாக இருந்தது.

லாஸ் அல்மோஸ்

தூய்மையான யுரேனியத்தைப் பிரித்தெடுக்க ஆராய்ச்சி மேற்கொண்ட எல்டா ஆண்டர்சன், அணுகுண்டு சோதனைக்கருவிகளை உருவாக்கிய ஜேன் ஹெய்டார்ன், அணுகுண்டு ஆராய்ச்சியில் பங்கெடுத்த எலிசபெத் ரிட்டில் க்ரேவ்ஸ், அணுகுண்டால் பூமியில் ஏற்படும் அதிர்வுகளை ஆராய்ந்து அணுகுண்டு வடிவமைப்புக்கு உதவிய நார்மா க்ராஸ் என்று பல பெண்கள் லாஸ் அலமோஸ் ஆராய்ச்சிகளில் பங்கெடுத்தார்கள். இவர்களில் எலிசபெத் ரிட்டில் க்ரேவ்ஸின் கதை சுவாரசியமானது.

நியூட்ரான் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக எலிசபெத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் அல் க்ரேவ்ஸும் இயற்பியலாளர் என்பதால் இருவரும் சேர்ந்து லாஸ் அலமோஸுக்கு வந்தனர். கர்ப்பிணியாக இருந்ததால் நேரடிக் கதிர்வீச்சு உள்ள ஆய்வுக்கூடங்களில் இருந்து மிகவும் தொலைவில் இருந்தபடி எலிசபெத் வேலை செய்தார். 1945ஆம் ஆண்டு ட்ரினிடி சோதனை நடந்தபோது அவருக்குத் திடீரென்று பிரசவ வலி எடுத்தது. உடனடியாகத் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று எலிசபெத் தகவல் அனுப்பினார். ஆனால், வெடிகுண்டு சோதனை நடக்க சில நொடிகளே இருந்ததால் உடனே உதவி கிடைக்கவில்லை. பொறுமை காத்த எலிசபெத், வெடிகுண்டு வெடித்த பிறகு தான் செய்யவேண்டிய சோதனைகளை எல்லாம் செய்து முடித்து கணக்குகளை மேற்கொண்டார். பிரசவ வலியோடு எல்லாவற்றையும் செய்தார். அறிவியல் ஆய்வுக்காக வைத்திருந்த ஸ்டாப் வாட்ச் கடிகாரத்தின்மூலம் வலி ஏற்படும் இடைவெளியைக் கணக்கெடுத்தார். அடுத்த சில மணி நேரத்தில் அவருக்கு உதவி கிடைத்தது. ஓர் ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

“பிரசவ வலியைப் பெண்கள் நினைத்தால் பொறுத்துக்கொள்ளலாம்” என்று யாராவது உதாரணம் காட்டுவதற்கான கதையாக இதைப் பார்க்கக் கூடாது. தன்னையே மறந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆண் அறிவியலாளர்களுக்கு நிகராகப் பெண்களும் அறிவியலில் உழைப்பைத் தந்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டவே இந்த நிகழ்வை விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.

பல்வேறு விதங்களில் உழைப்பைக் கொடுத்தாலும் லாஸ் அலமோஸைச் சேர்ந்த பெண்களுக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. அட, இவ்வளவு ஏன்? ஆப்பன்ஹைமர் திரைப்படத்தில்கூட அவர்களின் பங்களிப்பு பேசப்படவில்லை. அவர்களது ஆராய்ச்சிகள் குறைந்தபட்சம் போகிற போக்கில்கூடக் காட்டப்படவில்லை. “மான்ஹாட்டன் திட்டத்தில் முக்கியப் பங்களித்த பல பெண் அறிவியலாளர்கள் இந்தப் படத்தில் இடம்பெறவில்லை” என்று எழுதுகிறார் கேட்டி ஹஃப்னர். ஆப்பன்ஹைமருடன் பணியாற்றிய பல ஆண் அறிவியலாளர்கள் இந்தப் படத்தில் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

முதலாம் உலகப் போர் காலத்தில் பெண் அறிவியலாளர்களுக்கு ஊதியம் குறைவாக இருந்தது என்று பார்த்தோம். “இப்போதும் அந்த நிலை கொஞ்சம் இருக்கிறது” என்கின்றன ஆய்வுகள். 2022இல் நடந்த ஓர் ஆராய்ச்சியில் 3000 பல்கலைக்கழகக் கல்வியாளர்களின் சூழல் ஆராயப்பட்டது. இதில், ஒரே அளவிலான ஆராய்ச்சி செயல்திறன் இருந்தாலும், பெண் கல்வியாளர்களுக்குக் கிடைக்கும் ஊதிய உயர்வு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆண் அறிவியல் பேராசிரியர்களுக்கு ஒரு ரூபாய் ஊதிய உயர்வு கிடைக்கிறது என்றால், அதே நிலையில் உள்ள பெண் அறிவியல் பேராசிரியர்களுக்கு 89 பைசா மட்டுமே ஊதிய உயர்வு கிடைப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. எல்லா இடங்களிலும் இதே சூழல் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இன்னமும் சிறிதளவேனும் ஊதிய இடைவெளி இருக்கிறது என்பது நிச்சயம் வேதனையானது. ஒரு ஸ்டெம் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்போது இயல்பாகவே இந்த ஊதிய இடைவெளி குறைகிறது என்று சொல்கிறது 2016ஆம் ஆண்டில் வெளிவந்த ஹெவிட்டின் ஆய்வு. ஆனால், பெண்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டுமானால் பாரபட்சமின்றி அவர்கள் வேலைக்கு எடுக்கப்பட வேண்டுமே?

அறிவியல் துறையில் பெண்களை வேலைக்கு எடுப்பதில் இருக்கும் பாரபட்சம் பெருமளவில் குறைந்திருக்கிறது என்றாலும் அது முழுமையாக நீங்கவில்லை. அது மட்டுமல்லாமல், குறைவான பாரபட்சமாக இருந்தாலும் அது தரும் பாதிப்பு அதிகம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

உதாரணமாக ஓர் ஆராய்ச்சியைப் பார்க்கலாம். 1996ஆம் ஆண்டில் ரிச்சர்ட் மார்டெல், டேவிட் லேன் மற்றும் சிந்தியா எம்ரிச் ஆகியோர் ஒரு கணிப்பொறி சோதனையை நடத்தினார்கள். ஒரு நிறுவனத்தில் எட்டு படிநிலைகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். மேலே போகப் போக பணியிடங்களின் எண்ணிக்கை குறையும். முதல் படிநிலையில் 500 பேர் இருப்பர்கள் என்றால் எட்டாவது படிநிலையில், அதாவது நிறுவனத்தின் உச்ச பொறுப்புகளில் பத்துப் பேர் மட்டுமே இருப்பார்கள். ஆரம்பகட்டத்தில் ஒரே எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பணி உயர்வுக்காகக் காத்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். முதல் கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்துக்குப் போகும்போது பெண்கள்மீது 1% மட்டுமே பாரபட்சம் காட்டப்படுகிறது. இது அடுத்தடுத்த படிநிலைகளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். 1% மட்டுமே பாரபட்சம் இருந்தாலும், இறுதிக்கட்டமான எட்டாவது நிலையில் பெண்களின் எண்ணிக்கை 35 சதவீதமாகக் குறையும் என்கிறது இவர்களின் ஆய்வு. அதாவது முதல் கட்டத்தில் இருக்கும் ஒரு சதவீத பாரபட்சம், இறுதிக் கட்டத்தை எட்டும்போது பல மடங்கு உயர்ந்துவிடுகிறது.

இன்னோர் ஆராய்ச்சியையும் பார்க்கலாம். 2004ஆம் ஆண்டில் மைக்கெல் நார்டன், ஜோசப் வாண்டெல்லோ, ஜான் டார்லி ஆகியோர் இணைந்து ஓர் ஆய்வை மேற்கொண்டனர். அதில் ஒரு சோதனை நடத்தப்பட்டது. ஒரு கட்டுமான நிறுவனத்தின் உயர்நிலைப் பணியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். இந்தப் பின்னணியில் 93 ஆண்களிடம் சில விண்ணப்பங்களைக் கொடுத்து, “யாரை வேலைக்குத் தேர்ந்தெடுப்பீர்கள்?” என்று ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். சோதனையின் முடிவில், விண்ணப்பத்தில் உள்ள கல்வித்தகுதி, அனுபவம் ஆகிய கூறுகள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும், ஆண்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டது தெரியவந்தது.

“கல்வித்தகுதி குறைவாக இருந்தாலும் ஒரு கட்டுமானம் சார்ந்த உயர்நிலைப் பொறுப்புக்கு ஆண் பணியாளர்தான் சரியாக இருப்பார்” என்பதை அவர்கள் காரணமாக சொன்னார்கள். “வேலைவாய்ப்பில் இருக்கும் பால்சார்ந்த பாரபட்சத்தை இது சுட்டிக்காட்டுகிறது” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இத்தனை பாரபட்சங்களையும் தாண்டி பெண்கள் அறிவியல் துறைக்குள் நுழைந்தாலும் அவர்களால் தொய்வின்றி ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமா? அதற்குத் தடைகள் இருக்கின்றனவா?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!