காலை ஏழரை மணிக்கு காலிங் பெல் அடித்தது. ‘லட்சுமியாத்தான் இருக்கணும்’ என்றபடி, கட்டிலில் இருந்து எழுந்து கதவைத் திறந்தாள் நித்யா. வந்து விழுந்த காலை வெளிச்சம் கண்களை கூசச் செய்தது.

“என்னக்கா தூங்கிட்டு இருந்தீங்களா? டிஸ்ரப் பண்ணிட்டேனா?” என்று கேட்டபடியே உள்ளே வந்தாள் லட்சுமி.

தலையை இல்லை என அசைத்துவிட்டு, நியூஸ் பேப்பரைக் கையில் எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்தாள் நித்யா.

காலிங் பெல் சத்தத்தில் எழுந்துகொண்ட ஷாலினியும் கவிதாவும் சோபாவில் உட்கார்ந்து கொண்டார்கள்.

டேபிளைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்த லட்சுமியிடம், “அக்கா, என்னுடைய பிரண்ட்ஸ் வந்திருக்காங்க. உள்ள குழந்தை தூங்கிட்டு இருக்கான். அதனால, அந்த ரூம் பெருக்க வேண்டாம். முதல்ல எங்களுக்கு காபி போட்டுக் கொடுங்களேன்” என்றாள் நித்யா.

“பாலை ஸ்டவ்ல வைச்சிட்டேன். இதோ தர்ரேன்.” என்றபடி சமையலறைக்குச் சென்றாள் லட்சுமி.

“இந்தாங்க காப்பி” என்று நீட்டிய லட்சுமியின் முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. கொஞ்சம் உற்றுப் பார்த்தால், இடது பக்க தாடை வீங்கியிருந்தது தெளிவாகத் தெரிந்தது. கண் இமைகள் இரண்டும் வீங்கி இருந்தன.

“லட்சுமி அக்கா, என்னாச்சு? திரும்பவும் உங்களை அடிச்சாரா உங்க புருஷன்?”

“ஆமாக்கா… நேத்து ராத்திரி காசு குடுன்னு கேட்டாரு. போன வாரம்தான் என்கிட்ட இருந்து கரும்பு  ஜூஸ் கடை வைக்கப் போறேன் அப்படின்னு, மூக்குத்திய வாங்கிட்டுப் போனாரு. சேட்டுக் கடைல அடகு வச்சி, பூரா பணத்தையும் செலவு செஞ்சாச்சு. கரும்பு மிஷினும் வாங்கல. நேத்திக்கு என்கிட்ட இன்னும் பணம் கேட்டாரு. நான் என் மூக்குத்திய திருப்பிக் கேட்டேன். அவ்வளவுதான். அவருக்குக் கோபம் வந்துடுச்சு. சுவரோடு சேர்த்து வச்சி என்ன அடிச்சிட்டாரு. குழந்தை இல்லைன்னு வேற சொல்லிக் காட்டி, அடிக்க ஆரம்பிச்சாரு. குடி போதையில, என் வீட்ட விட்டு வெளிய போகச் சொல்லி துரத்தனாரு. ஏதோ பக்கத்து வீட்ல உள்ளவங்களால, சண்டை அதோட நின்னுச்சி.”

“இவ்வளவு அடிச்சதுக்கப்புறமும், நீங்க சும்மாவா விட்டீங்க?”

“என்னம்மா செய்யறது? என்னால என்ன செய்ய முடியும்?” 

“போலிஸ் ஸ்டேஷன் போயி கம்ப்ளையிண்ட் கொடுக்க வேண்டியதுதானே? இப்படி நீங்க சம்பாதிக்கிறதையும் பிடுங்கிட்டு, அடிக்கவும் செய்யுற, அந்த ஆளை எல்லாம் போலீஸ்ல சொல்லி உள்ள தள்ளுறதுல தப்பே இல்ல.”

”எனக்கும் இப்படிக் கஷ்டபடுறதுல ஆசையா என்ன? விட்டுட்டுப் போகணும்னு நிறைய தடவை தோணிருக்கு… ஆனா, அதுக்குத் தனியா வாழ த்ராணி இருக்கணுமே…”

“இப்படி இருந்து கஷ்டபடுறதுக்குத் தனியாவே வாழ்ந்துட்டுப் போயிடலாம்.”

“எங்கம்மா, இந்த ஊர்ல தனியா வாழுறது இன்னும் கஷ்டம். கண்டவனும் சீண்ட ஏதுவாச்சி போங்க… வேலைக்குப் போற இடத்துல, வீட்டுக்காரனுங்க பல்ல இளிப்பானுங்க. உதவி செய்யுறேங்க பேர்ல, 100, 200 தந்துட்டு, இவனுங்க பண்ணுற அட்டூழியம் தாங்காது. புருஷன்கூட இல்லைனா இன்னும் மேல போவானுங்க. இந்தப் பொம்பளைங்க மட்டும் நமக்கு சப்போர்ட் பண்ணுவாங்கனா நினைக்கிறீங்க? அதுவும் இல்ல. நாம வீட்ல சண்டை, கணவன்கூடப் பிரச்னைன்னு தெரிஞ்சாலே, அவங்க நடந்துக்கிற விதம் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அவங்க கணவனோட பேச அனுமதிக்க மாட்டாங்க. அப்படியே பேசிட்டாலும், நாம என்னவோ அவங்க புருஷன தூக்கிட்டு போயிடுவோம்னு, பார்வையாலே…” எனக் குரலைத் தாழ்த்தினாள் கவிதா.

“என் கணவன் பொறுப்பான ஒரு ஆண்தான்; தவறு ஏதும் செய்ய மாட்டார் எனக் கணவன் மீது நம்பிக்கை வைக்கலாம். அல்லது, பொண்ணுங்களையாவது நம்பலாம், நட்போ, உறவோ, இவள் தனக்குத் தீங்கிழைக்க மாட்டாள் என… அதுவும் இல்லனா, தன்னையாவது நம்பணும், என்னைவிடச் சிறந்த பொருத்தமான ஆள் வேறு யாரும் இல்லை என. ஆனால், அதெல்லாம் இல்லாமல், இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றால், அவர்கள் அவ்வளவு பாதுகாப்பற்ற உணர்வோடு இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். சமூக, பொருளாதார நிலைகளில் தன்னிறைவு அடையவில்லை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். இதில் வருத்தப்பட ஏதும் இல்லை.” என்றாள் நித்யா.

“என்னமோ போம்மா, கூட்டி கழிச்சிப் பாத்தா, புருஷன் இல்லாம வாழ்றது இந்த உலகத்துல ரொம்ப கஷ்டம். அதுக்கு இந்தப் புருஷங்கிற ஒரு கஷ்டத்தைக் கட்டிக்கிட்டு பொழப்பயாவது பாக்கலாம்” என்ற லட்சுமியின் பதில் நால்வரையுமே சில நொடிகள் மெளனத்துக்குள் இட்டுச் சென்றது. அந்த மெளன நொடிகளில், அடுத்த வேலைக்கு நகர்ந்து கொண்டாள் லட்சுமி.

“இல்லை கணவனிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும் காதலும் கிடைக்காமல் வாழ்றது இன்னும் கொடுமையாக இருக்கிறது. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் கணவரிடமிருந்து அன்பும் ஆதரவும் கிடைக்கிறது. என் போன்ற சிலருக்கு அது வாய்க்கவில்லை. அவர் அன்பாகப் பேசி எனக்கு நினைவில்லை. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்; பாடுற மாட்டை பாடி கறக்கணும்னு சொல்வாங்க. நானும் என்னவெல்லாமோ செய்துட்டேன். ரமேஷ் எதற்கும் மசிவதாக இல்லை. ஒரு ஆணிடம் இருந்து, கணவனிடம் இருந்து அன்பைப் பெறுவது அவ்வளவு கஷ்டமான காரியமா?” கவிதாவின் குரலில் ஏக்கம் தெரிந்தது.

“ஆடுற மாட்டை ஆடி கறக்கணும். பாடுற மாட்டை பாடி கறக்கணும்னு சொல்லுறதெல்லாம் சரிதான். ஆனா, அதுக்கு முன்னாடி அது பசு மாடு தானானு செக் பண்ணிக்கணும். ஏன்னா, காளை மாடுகிட்ட போயி பால் கறக்கணும்னு நினைக்கிறது முட்டாள்தனம்தானே?

என்ன சொல்லுற நித்யா?”

”உனக்குச் சில விஷயங்கள் சொல்றேன்.

முதலாவதாக காளை மாட்டினால், உழைப்பை மட்டுமே தரமுடியும். கோழியால் முட்டைதான் தர முடியும். பசு மாட்டிடமிருந்து உழவு மாட்டிற்கான உழைப்பை எதிர்பார்க்க முடியாது. அவற்றால் என்ன முடியுமோ அவற்றைத்தான் தர முடியும். அது போல அன்பு இல்லாதவரிடம், உணர்வுரீதியான ஆதரவு தர முடியாதவரிடம் இருந்து, அவற்றை எதிர்பார்க்காதே. ஏனென்றால் அவர்களிடம் அது இல்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

கணவனிடமிருந்து கிடைக்கும் அன்பும் துணையிடமிருந்து கிடைக்கும் அனுசரணையும் வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே. அதுவே வாழ்க்கை கிடையாது. கிடைத்தால் வாழலாம். கிடைக்காவிட்டாலும் வாழலாம். இப்படி வருத்தப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம். அதற்காக உருண்டு புரண்டு கொண்டிருப்பதற்கான அவசியம் இல்லை.

வாழ்க்கையின் அந்தப் பகுதி உனக்கு மிக முக்கியமானதாகப்பட்டால், அதை உருவாக்கிக் கொள்ள, தகுந்த துணையைத் தேடிக்கொள்ளவும் தயங்காதே.”

அத்தனை விஷயங்களையும் உள் வாங்கிக் கொண்டிருந்தாள் கவிதா.

”நெறைய பேர் உயிர் வாழ கணவரிடம் இருந்து கிடைக்கும் அன்புதான் முக்கியம் என்கிற ரேஞ்சில் காலை, மாலை என 24 மணி நேரமும் துணையைப் பற்றிய சிந்தனையுடனே, அவர்களுக்காகவே வாழ்கிறார்கள். ஆனால், அதில் அவர்களுக்குத் திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைத்து விடுகிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. அப்படிக் கிடைப்பதாக இருந்தால் இங்கு பெண்களின் நாற்பதுகள் நந்தவனமாக இருக்குமே. இங்கு நாற்பதுகளில் எஞ்சியது எரிச்சலும் ஏக்கமும் ஏமாற்றமும்தான். ஏனென்றால், சுயம் என்கிற ஒன்றை, ‘நான்’ என்கிற ஒன்றை உறவுகளில் தேடினால், கிடைப்பதில்லை. ஒரு பெண் தனியாக அல்லது தனக்கான வாழ்க்கையை வாழ்கிறார் என்பதைவிட முக்கியமாக, அவர் தனது துணையுடன் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறார் என்பதைப் பொதுச் சமூகம் கண்காணித்துக்கொண்டேதான் வருகிறது.”

ஆணையும் அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் சுலபமாகப் பிரித்துப் பார்க்கும் சமூகத்தால், பெண்களை அப்படிப் பார்க்க முடிவதில்லை. கணவன், குடும்பம் என்று இணைத்தே பார்த்து, அதனடிப்படையிலே, பெண்ணைப் பற்றித் தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறது.

மரகதத் தும்பிகளின் வண்ணமற்ற முன் இறக்கைகள் அதன் அழகிற்குப் பங்கமல்ல. மறுக்கப்பட்ட அன்பும்  தரப்படாத அங்கீகாரமும் பெண் வாழ்வின் கண்ணாடி இறக்கைகளாக மட்டும் இருந்துவிட்டுப் போகட்டுமே.  சுயம் அவளிடம் மட்டுமே தேடப்படட்டும்.

(தொடரும்)