மணி பதினொன்று ஆகிவிட்டது. வந்து அழைத்துச் செல்வதாகச் சொன்ன ரமேஷ் வரவில்லை.

போன் செய்த கவிதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரிங் போய்க்கொண்டிருந்தது. பதில் இல்லை.

“நித்யா, நான் அவருக்கு போன் செய்தேன், அவரு போனை எடுக்கல… தண்ணி அடிச்சிட்டு தூங்கிட்டாரு போல” என்று தயங்கியபடியே சொன்னாள் கவிதா.

“ஒன்னும் பிரச்னை இல்ல கவிதா, இங்க தூங்கிட்டு காலையில போகலாம். எனக்கும் உங்க ரெண்டு பேரையும் ரொம்ப நாள் கழிச்சுப் பாத்ததுல ரொம்ப சந்தோசம். நிறைய நேரம் உங்ககூட கிடைச்ச மாதிரி ஆச்சு” என்று மகிழ்ச்சியாகச் சொன்னாள் நித்யா.

ஷாலினி அரை தூக்கத்தில் கேட்டுக் கொண்டிருந்தாள். இருவரும் மீண்டும் பேச ஆரம்பித்தார்கள்.

“நித்யா எனக்கு வேலைக்குப் போக ஆசை. ஆனால், நான் காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் எங்கேயும் வேலைக்குப் போகவில்லை. இப்போது இவ்வளவு இடைவெளிக்கு அப்பறம் எனக்கு வேலை கிடைக்குமா என்றாலே பயமாக இருக்கிறது” என்றாள் கவிதா.

“ஏன் கிடைக்காது கவிதா? கண்டிப்பாக கிடைக்கும் உனக்கு” என்று யோசிக்காமல் பதில் சொன்னாள் நித்யா.

“ஆனால், அவினாஷை வைத்துக்கொண்டு, எல்லா வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு எப்படி வேலைக்கும் செல்வது?”

“எஸ்.ருக்மினி என்கிற (Data journalist) பத்திரிகையாளர், கள ஆய்வுகளின் அடிப்படியில் “whole numbers and half truths” என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில், இந்தியப் பெண்கள் 84% வேலை நேரத்தை ஊதியமில்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்கள் எனவும், இந்திய ஆண்கள் 80% வேலை நேரத்தைப் பணமீட்டுகிற வேலைகளில் செலவிடுகிறார்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், வெறும் 6% ஆண்கள் மட்டும் சமையல் வேலைகளிலும், 8% ஆண்கள் மட்டும் வீட்டைச் சுத்தம் செய்யும் வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள் எனவும் சொல்கிறார். நீ அந்த 84 விழுக்காட்டில் இன்னும் தொடர வேண்டுமா?. வேலைக்குச் சென்றால்தான் நிறைய மனிதர்களைச் சந்திக்க முடியும். நிறைய மனிதர்கள், நிறைய பெண்களிடம் பேசிப் பழகும்போது, வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். நீயும் வாழ்க்கை என்கிற ஓட்டத்தில் சுலபமா, சந்தோஷமாக பங்கெடுக்க முடியும்.”

“நீ சொல்றது சரிதான் நித்யா. ஆனா, வெளி உலகம் பாதுகாப்பானதாக இருக்குமா?”

“ஏன் கவிதா, உன் வீடு உனக்கு ரொம்ப செளகரியமாக, பாதுகாப்பானதாகத்தான் இருக்கா?”

“…………………”

“என்ன ஆச்சு கவிதா, உனக்குச் சொல்ல விருப்பம் இல்லைனா சொல்ல வேண்டாம்.”

சிறு தயக்கத்திற்குப் பிறகு கவிதா சொன்னாள், “ரமேஷ் அவருடைய அம்மாவின் விருப்பத்தின் பேரில்தான் என்னைக் கல்யாணம் செய்து கொண்டார். அவர் நிறைய வரதட்சணை எதிர்பார்த்தாராம். ஆனால், என் வீட்டிலிருந்து அவ்வளவாகச் செய்யவில்லை. அவருடைய அம்மாவின் விருப்பத்தின் பேரில் நடந்ததால், என்னை வார்த்தைகளால், தேள் மாதிரி கொட்டிக்கிட்டேதான் இருப்பார். நானும் எதுவும் பேசுவதில்லை.”

“ஏன் பேசுவதில்லை? அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை?”

“எனக்கு அப்படித் திருப்பிப் பேசி, சண்டையிட்டு பழக்கமில்லையே…”

“பழக்கம் இல்லனா…. இப்போதைக்குப் பேச வேண்டிய நிர்பந்தம் இருக்குத்தானே?”

“கவிதா, உனக்காக நீயே பேசலனா, வேறு யார் வந்து பேச முடியும்? உனக்காக வேறு யார் வந்து பேச வேண்டும் என எதிர்பார்க்கிறாய்? நீதானே உனக்கான விஷயங்களைப் பேசி ஆக வேண்டும்?”

“பேசுனா சண்டை வந்துடுமோனு பயமாக இருக்கு. இப்போது ஏதோ ஓரளவாவது போகிறது. இருப்பதையும் கெடுத்துக்க வேண்டாம்னுதான். அவர் நல்லவர்தான். ஆனால், என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாரு.”

“சும்மா பூசி மெழுகாத கவிதா… ரமேஷ் உன்ன செளகரியமா வைச்சிருக்காரா? உன்னால அவர்கூட மனம் விட்டுப் பேச முடியுதா?”

“பேசுறதே இல்லை, இதுல எங்க மனம் விட்டு பேசுறது?”

“அப்போ நல்லவரு வல்லவருனு சொல்லிட்டு உன்னைச் சமாதானபடுத்திட்டு இருக்காத. நிறைய பேர் என்ன நினைக்கிறாங்கனா, எதிரே நிக்கிற புலிகிட்ட போய், நான் ஆடு, அதனால என்னைச் சாப்பிடாத என்பது போல், தங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார்கள். தான் நல்ல பொண்ணு எனவும் தனக்கு எதுவும் பேசத் தெரியாது எனவும் காட்டிக்கொள்வதனால் என்ன பலன்?. எதிர்பார்த்த ரிசல்ட் எப்படி வரும்?. குடும்ப வாழ்க்கையில் எதிர்பார்க்கும் நட்பும், மரியாதையும் எப்படிக் கிடைக்கும்?”

“…………………”

“நீ இருக்குறது ஒரு டென்னிஸ் மைதானம் என வைத்துக்கொள்வோம். நீ களத்தில் நிற்கிறாய். ஆட்டம் தொடங்கிவிட்டது. எதிரில் நிற்பவர் பந்தை உன் மேல் படும்படி அடிக்கிறார். உன் கையில் பந்தை அடிக்கும் மட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இல்லை எனக்கு டென்னிஸ் ஆடவே வராது. பல்லாங்குழிதான் ஆடவரும் என்று சொல்வதால் உனக்கு என்ன பலன்?”

முதல் பந்து உன் மேல் பட்ட பின், இரண்டாவது பந்தில் அந்த மட்டையை எடுத்து உன்னைப் பாதுகாக்கும் முயற்சியாவது செய்திருக்க வேண்டும் அல்லவா? இத்தனை வருடங்களாக ஒருவரின் கடுமையான சொற்களைக் கேட்டுக் கொண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. பேசத் தெரியவில்லை என்றால், புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியதுதான். பலிகடாவாக நிற்க வேண்டாம். ஏதேதோ காரணங்கள் சொல்லித் தன்னையே சமாதானப்படுத்தவும் வேண்டாம்.”

“………..”

“அன்பு கிடைக்கவில்லை. தன்னை மரியாதையாக நடத்தவில்லை எனும் போதே, நாம் புரிந்துகொள்ள வேண்டியது, நாம் களத்தில் சரியாக ஆடவில்லை என்பதே. ஆனால், இங்கு நிறைய நேரம் அதை, நம்முடைய குறையாக எடுத்துக்கொள்கிறோம்.”

“………”

“நான் அழகாக இல்லை. நான் கணவர் அளவுக்குத் திறமைசாலி இல்லை. நான் நிறைய வரதட்சணை கொண்டு வரவில்லை என, அடுத்தவரின் தவறான செயல்களுக்கு, நம் குறைகளைக் காரணங்களாகச் சொல்லுவோம்.”

“ஆனால், உண்மையில் அது கையாளத் தெரியாமல் இருப்பதும், முடிவெடுக்கத் தெரியாமல் இருப்பதும்தான்.”

“நித்யா, எல்லாவற்றிற்கும் காரணம் நான் எனச் சொல்கிறாயா?”

“இல்லை, நீதான் உன் வாழ்க்கைக்கும், உன் சந்தோஷத்திற்கும் முழுப் பொறுப்பு. பலிகடா மாதிரி சந்தோஷத்தைத் தொலைத்து, சமுதாயத்திடம் உன்னை நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மேலும், அன்பும் மரியாதையும் கிடைக்காமல் போனதிற்கான காரணம், தன் மீதான சில குறைகள்தாம் எனத் தாழ்வாக நினைத்து, குற்ற உணர்ச்சியோடு எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக்கொள்ளவும் வேண்டாம். உனக்காகப் பேச வேண்டிய இடங்களில் நீ பேச முயற்சிக்கலாம். எதுவாக இருந்தாலும் புதிதாகக் கற்றுக்கொள்ள ஆரம்பபிக்கலாம். மாற்றத்தோடு தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் மாற்றத்தை ஆதரிக்கவும் பழகலாம்.”

“எல்லாமே எனக்குப் புதுசா இருக்கு.”

“ம்… கவிதா, நீதான் உன்னைச் சந்தோசமா வச்சிக்கணும்.”

“அப்போ ரமேஷ் மாதிரியான ஆட்கள், அப்படியேதான் இருப்பாங்களா?”

“ஆமா நீ மாறாத வரை, நீ முடிவெடுக்காதவரை, நீ வீட்டில் நடக்கும் துன்பங்களை மறைத்து, எல்லாம் நன்றாகவே செல்கிறது என உன்னையே நீ சமாதானம் செய்துகொண்டிருக்கும் வரை, ரமேஷ் மாதிரியான ஆட்கள் மாற மாட்டார்கள்.

முதலில் உனக்கென ஒரு வேலையைத் தேடிக் கொள். ஏனென்றால், பொருளாதார சுதந்திரம் மிகவும் முக்கியம்.”

(தொடரும்)