நளினிக்கு அழுகையாக வந்தது. அவள் முன்னால் எட்டாம் வகுப்பு ஆங்கிலப்புத்தகம் விரித்தபடி கிடந்தது. நாளை ஆங்கிலத் தேர்வு. மூளையில் ஒன்றுமே ஏறவில்லை. புத்தகத்தைப் பார்க்கும்போது எல்லாமே புரிவது போலத்தான் இருக்கிறது, ஆனால் மூடி வைத்து விட்டு எழுதலாம் என நினைத்தால் வார்த்தைக்கு வார்த்தை எழுத்துப்பிழை வருகிறது அல்லது மறந்து விடுகிறது.

நளினி படிப்பது ஒரு அரசு உதவி பெறும் பள்ளி. ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி  என்ற விதிமுறைகள் எல்லாம் அப்போது இல்லை. ஒன்றாம் வகுப்பில்கூட பெயிலாக்கி விடுவார்கள். ஆறாம் வகுப்பில் இரண்டு வருடம், ஏழாம் வகுப்பில் இரண்டு வருடம், இப்போது எட்டாம் வகுப்பில் முதல் வருடம் என அவளும் விக்ரமாதித்தன்போல மனம் தளராமல் படித்துக் கொண்டிருக்கிறாள்.  அவளோடு படித்த பானு, அனுசுயா, செல்வலட்சுமி எல்லாரும் இப்போது பெரிய பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப்பெண் பிள்ளைகள்தான் பெரிய பள்ளிக்குப் போனதும் எப்படி ஸ்டைலாக மாறி விடுகிறார்கள்?அழகாக சுடிதார் போட்டு துப்பட்டாவை பின் செய்து, திருத்தமாக தலைவாரி, சைக்கிளில் கூட்டமாக ஜாலியாக சிரித்து பேசிக்கொண்டே போகிறார்கள்.   அவர்களைப்  பார்க்க நேரும்போதெல்லாம் நளினிக்கு  வெட்கமாக இருக்கும், பார்க்காததுபோல விலகிப் போய் விடுவாள். சீக்கிரம் தானும் எட்டாம்  வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்புக்கு அவர்களைப்போல சைக்கிளில் போகவேண்டும் என்பதுதான் நளினியின் இப்போதைய லட்சியமாக இருக்கிறது.

நளினியின் அம்மா, அப்பா இரண்டு பேருமே படிக்காதவர்கள்தான். அதனால்தானோ என்னவோ நளினிக்கும்  படிப்பு எட்டிக்காயாக இருக்கிறது. அப்பா சேகர் ஒரு பலசரக்குக் கடையிலும் அம்மா சுமதி பக்கத்து ஊர்  ஜவுளிக்கடையிலும்  வேலை பார்க்கிறார்கள். ‘நாலு எழுத்து படித்திருந்தால் ஏதாவது ஆபிசில் காற்றாடிக்குக் கீழே உட்கார்ந்து வேலை செய்திருக்கலாம்.  படிக்காததால்தான் இப்படி நாள் முழுக்க நின்றுகொண்டே வேலைபார்த்து கஷ்டப்படுகிறோம்’ என்ற ஆதங்கம் இருவருக்கும். அதனால் பிள்ளையை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்பது அவர்களது ஆசையாக மட்டுமல்லாமல்  வெறியாகவே இருந்தது. அதனால் ஒரே பிள்ளை என்றாலும் படிப்பு விஷயத்தில் இருவரும் நளினியிடம் கறாராகவே நடந்து கொள்கிறார்கள்.

மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் கண்மூடித்தனமான அடி, உதைதான்.  நன்றாகப் படிக்க வேண்டுமென்ற ஆசை நளினிக்கும் இருக்கத்தான் செய்கிறது. அவளும் முயற்சி செய்துதான் பார்க்கிறாள். ஆனால் படிப்பு வந்தால்தானே? ஒவ்வொரு மாதத் தேர்விலும் எல்லாப்பாடத்திலும் அவளால் ஒற்றை இலக்க மதிப்பெண்களைத் தாண்டவே முடியவில்லை.

ஆனால் படிப்பைத் தவிரவும் நிறைய விஷயங்கள் அவளுக்குப் பிடிக்கும்.  அழகாகக் கோலம் போடுவாள். மிக  நேர்த்தியாக தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தெரியும். வீட்டுக்கு வரும் பெரியவர்களை மரியாதையாக வரவேற்று உபசரித்து அவர்களுக்குப் பிடித்ததை செய்து கொடுப்பது பிடிக்கும். கை வேலைப்பாடுகள் செய்து வீட்டை அலங்கரிப்பது அவளுக்குக் கை வந்த கலை.

“நளினிக்கா, நளினிக்கா, இங்கிலீஷ் பரிட்சைக்கு படிச்சிட்டியா?” விரித்து வைத்த புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், குரல் கேட்டு நிமிர்கிறாள். கூடப்படிக்கும் வித்யா சிரித்தபடி நின்று கொண்டிருக்க, கோபமாக வந்தது. “உன்னை எத்தனை தடவை சொல்லியிருக்கேன், அக்கானு கூப்பிடாத, நளினினு கூப்பிடுனு?” வித்யா பயந்து போனாள். “இல்லக்கா. அது வந்து… அது வந்து…” தடுமாறியவள் பின்வாங்கி ஓடிவிட்டாள். கூடப் படிக்கும் பையன்கள் எல்லாம் வேண்டுமென்றே “அக்கா…அக்கா…நளினிக்கா, எப்போ நீயும் பாஸ் ஆவக்கா?” என கிண்டலாகப் பாடி வெறுப்பேற்றுவதால்,  “நளினிக்கா” என யார் கூப்பிட்டாலும்  முகமெல்லாம் சிவந்துபோக இப்படித்தான் எரிந்து விழுவாள்.

புத்தகத்தையே பார்த்துக்கொண்டிருப்பது நளினிக்கு அலுப்பாக இருந்தது.  புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, நேற்று பாதியில் விட்டிருந்த குட்டி மண்பானையை எடுத்து வர்ணம் கொடுத்து அழகு படுத்தத் தொடங்கினாள். அம்மா அப்பாவுக்கு செலவு வைக்காமல் கிடைக்கும் பொருள்களை வைத்து நிறைய கைவினைப் பொருள்கள் செய்து அவர்களது வீட்டை அழகுபடுத்தி வைத்திருக்கிறாள். ஆனால் ஏனோ எத்தனை செய்தாலும் வீட்டுக்கு வரும் அத்தனை பேரும் படிப்பைப் பற்றி மட்டுமே திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். போனமுறை விஜயா சித்தி வந்த போது ஆசையாய் தான் வரைந்திருந்த ஓவிய நோட்டை எடுத்துக் காட்டினாள். பள்ளியில் கொடுத்திருந்த ஒரு பெரிய நோட்டு முழுக்க விதவிதமான பறவைகள், விலங்குகள், இயற்கைக்காட்சிகள் ஏன் குழந்தைகள், மனிதர்களைக்கூட அவ்வளவு தத்ரூபமாக வரைந்து நிறைத்திருக்கிறாள்.

“சித்தி… இதைப் பார்த்தீங்களா? எதைப்பார்த்தாலும் என்னால அழகா வரைய முடியும்,  ஏன் உங்களைக்கூட அரை மணி நேரத்துல நான் அழகா வரைஞ்சுடுவேன். வரைஞ்சு காட்டட்டுமா?”, என ஆசையாகக் கேட்டாள். சித்தி நோட்டைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தவள், ஒன்றும் பேசாமல் மூடி வைத்து விட்டு, “அது சரி நளினி, போன மாத பரிட்சையில் எத்தனை மார்க், எத்தனாவது ரேங்க்?” எனக் கேட்கவும் நளினியின் முகம் சுருங்கிவிட்டது. நோட்டை எடுத்துக்கொண்டு அமைதியாகப் போய் விட்டாள்.

சித்தி மட்டுமல்ல, யார் வீட்டுக்கு வந்தாலும், கேட்கும் முதல் கேள்வி அதுதான் “நளினி எப்படி படிக்கிறாள்?  எப்படி படிக்கிறாள்? எப்படிப் படிக்கிறாள்?” ச்சே…

வீட்டுக்கு வருபவர்கள் மட்டுமல்ல, குடும்ப விசேஷங்களுக்கு இவர்கள் சென்றாலும் விடாது தொடர்ந்து கொண்டேயிருக்கும் இவை போன்ற  கேள்விகள். ‘அவங்கவங்க வீட்டுப் பிள்ளைகளை மட்டும் கேட்க வேண்டியதுதானே? எதுக்கு போற வீட்டுல எல்லாம், இந்தப்பெரியவுங்க படிப்பு படிப்புனு கேள்வி கேட்டு உயிரை வாங்கறாங்க?’ எனத் தோன்றும் நளினிக்கு. கேள்விகள் மட்டுமல்ல. கேள்வியைத் தொடர்ந்து அறிவுரைகள்…அறிவுரைகள்.  ஆனால் ஒரு வார்த்தை அவள் யாரையும் எதிர்த்துப்  பேசிவிட மாட்டாள். எல்லாவற்றுக்கும் ஒரு புன்முறுவல் மட்டுமே அவளிடமிருந்து பதிலாக வரும்.

தீபாவளி பக்கத்தில் வருவதால், கடையில் சுமதிக்கு ஓய்வில்லாமல் வேலை. நாள் முழுக்க நின்று நின்று கால் கடுத்துவிட்டது. மாதவிடாய் வேறு, கால்வலி தாங்க முடியாமல் ஒரு நிமிடம் உட்கார்ந்தபோது, முதலாளி பார்த்துவிட்டார். “மகாராணி சொகுசா ரெஸ்ட் எடுக்கத்தான் இங்க வேலைக்கு வந்தாகளோ, ஒழுங்கா வேலை பார்க்கறதுனா பாரு… இல்ல கணக்கை முடிச்சு பணத்த வாங்கிட்டு எடத்தைக் காலிபண்ணு” என கொடூரமான குரலில் எல்லாருக்கும் முன்பாகக்  திட்டிவிட, சுமதிக்கு அவமானமாகப் போய்விட்டது. உடல்வலி, அவமானம், எரிச்சல் என கலவையான மனஉணர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தவள், “நளினி…” என வெளியிலிருந்தே கத்தினாள்.

அம்மா அழைத்ததைக் கவனிக்காமல், ஒரு பொம்மைக்கு தனது பழைய பாவாடையை வெட்டி ட்ரெஸ் தைத்துக்கொண்டிருந்த  நளினியைப் பார்த்ததும் சுமதிக்கு ஆத்திரமாக வந்தது. ஓய்வில்லாத உழைப்பின் கடுமை கோபமாக மாறியது. கையில் கொண்டு வந்த சாப்பாட்டுக் கூடையை தூக்கி எறிந்தவள், நளினியின் கையிலிருந்த பொம்மையைப் பிடுங்கி தூர வீசினாள்.  “ஒனக்காகத்தானே கண்டவனுங்ககிட்ட எல்லாம் பேச்சு வாங்கிட்டு  உயிரைக்கொடுத்து உழைச்சிட்டு வாறேன்… நீயானா படிக்காம பொம்மைக்கு அலங்காரம் பண்ணிக்கிட்டு இருக்கியா? படி படின்னு கழுதையாக் கத்துறது தெரியல?  படிப்பு மட்டும் மண்டையில ஏற மாட்டேங்குது, ஆனா இப்படி உருப்படாத வேலை மட்டும் பார்க்கத்தெரியுது,” கத்திக்கொண்டே கையில் கிடைத்த கரண்டியைக் கொண்டு ஆத்திரம் தீருமட்டும் நளினியை அடித்துவிட்டு தானும் மூலையில் உட்கார்ந்து அழத்தொடங்கினாள்.        

அந்தப் பொம்மை நளினிக்கு மிகவும் பிடித்த பொம்மை. சின்னவயதில் பக்கத்து ஊர் திருவிழாவுக்குச் சென்றபோது, அப்பா முதன்முறையாக வாங்கிக் கொடுத்த பொம்மை என்பதால் அதன்மீது நளினிக்கு அப்படி ஒரு பிடித்தம். அதன் கண் படபடவென ஆடிக்கொண்டேயிருப்பதால் உயிருள்ள குழந்தை போலவே இருக்கும்.  ‘மூக்கும் முழியும் அப்படியே நளினியைப் போலவேயிருக்கு’ என்று அப்பா அடிக்கடி சொல்வார். அவ்வப்போது தனியாக இருக்கும்போது நளினி அந்த பொம்மையுடன்தான் பேசிக்கொண்டிருப்பாள். அடிக்கடி அந்தப் பொம்மைக்கு விதவிதமாக ஆடைகள் தைத்துப் போடுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். தன்னையொத்த தோழியாக, தங்கையாக ஏன் சமயங்களில் அந்த பொம்மைதான் நளினி என்பது போலப் பாவித்து பேசிக்கொண்டிருப்பாள். அம்மா அந்தப்பக்கம் நகன்றதும் ஓடிச்சென்று தன் செல்ல பொம்மையை எடுத்து தடவிக்கொடுத்தாள். “அம்மா தூக்கிப்போட்டதில் வலிக்குதாடாம்மா? சாரிடா…” என தன் வலி மறந்து பொம்மைக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தாள்.

அம்மா விளாசிய விளாசலில் நளினியின் காலெல்லாம் பட்டை பட்டையாக வீங்கிவிட்டது. இரவு பத்துமணிக்கு மேல்வந்த  சேகரிடம் சுமதி புலம்பித் தவித்தாள். அவனும் தன் பங்குக்கு நளினியைத் திட்டிவிட்டு, பின்னர் மனசு கேட்காமல், மகளை அருகில் அழைத்து காலைத் தடவிப் பார்த்துவிட்டு,  எண்ணெய் போட்டு நீவிவிட்டான். தனக்காக மாங்கு மாங்கு என்று உழைத்து விட்டு வரும் அம்மாவையும் அப்பாவையும் பார்க்க நளினிக்கும் பாவமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்காகவாவது நன்றாக படிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறாள். ஆனால் என்ன செய்ய? அம்மா சொல்வதுபோல படிப்பு மண்டையில் ஏற மாட்டேங்குதே? ‘படிப்பதை எழுதிப்பார்த்தால் மறக்காது’ என்று அறிவியல் டீச்சர் சொன்னதிலிருந்து ஒவ்வொரு கேள்வியையும் பல முறை படித்து தனக்குள் சொல்லிப் பார்த்து எழுதியும் பார்ப்பாள். ஆனாலும் மறுநாள் ஸ்கூலில் டீச்சர் கேட்கும்போது எல்லாம் மறந்து விடுகிறது.

மறுநாள் பள்ளிக்குச் சென்றதும் காலை பள்ளிக்கூடுகை நேரத்திலேயே தவமணி டீச்சர் கண்டுபிடித்து விட்டார். “என்ன நளினி, ஏன் காலை நொண்டி நொண்டி நடக்குற?” அவர்  எப்போதும் பிள்ளைகளை கவனித்துக் கொண்டேயிருப்பார்.  குழந்தைகளின் வீட்டுச்சூழ்நிலை, உடல்நிலை, மனநிலை எல்லாவற்றையும் எப்படித்தான் கண்டுபிடிப்பாரோ..? அதற்கேற்றார் போல அவரவரிடம் அன்பாகப்பேசி, வழிநடத்தி கவனித்துக்கொள்வார். அவர் கேட்டதும், நளினி பொறுக்கமுடியாமல் கடகடவென எல்லாவற்றையும் ஒப்பித்து விட்டாள். தன்னால் படிக்க முடியவில்லை என்பதையும் சொன்னாள்.

“நான் எப்படியாவது இந்தமுறை எட்டாவது பாஸ் ஆகனும் டீச்சர். ஆனா என்னால படிக்க முடியல… மார்க் வாங்க முடியல,  எங்க அம்மா, அப்பா பாவம்” கண்ணீருடன் தன் இயலாமையை ஒப்புக்கொண்ட அந்தக் குழந்தையை யோசனையுடன் பார்த்தார்.

அவர் பலவருடங்களாக அதே பள்ளியில் பணிபுரிவதால், சிறுவயதிலிருந்தே நளினியைப் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பதால் அவளது பிரச்னையை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

இது கற்றல் குறைபாடுடைய குழந்தை. இவள் படிக்க விரும்புகிறாள், படிக்க முயற்சிக்கிறாள்தான். ஆனால் அவளால் இயலவில்லை, அதுபுரியாமல் வீட்டில் அம்மாவும் அப்பாவும் அவளைக் கஷ்டப்படுத்துகிறார்கள். ரிசல்ட் ரிசல்ட் என பள்ளி ஒருபுறம் அழுத்த, குடும்ப மானம், கௌரவம் என குடும்பம் மறுபுறம் அழுத்த பாவம் குழந்தை தவித்துப்போகிறாள். டிஸ்லெக்சியா, டிஸ்கிராபியா மாதிரி கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வாசிப்பது, எழுதுவது கஷ்டமாக இருக்கும். கையெழுத்து மோசமாக இருக்கும். சிந்திப்பதும் சிந்திப்பதைக் கோர்வையாக எழுதுவதும் கஷ்டமாக இருக்கும், மனதில் இருப்பதை வார்த்தைகளாக்குவதில் சிக்கல் இருக்கும்.  எந்த விஷயத்திலும் தொடர்ச்சியாக கவனம் செலுத்த முடியாது.

ஆனால் பெரிய பெரிய மேதைகள் கூட சிறுவயதில் இதுபோன்ற கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற குழந்தைகளை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். இவர்களுக்கென சில திறமைகள் இருக்கும், அதைக்கண்டறிந்து அதில் கவனம் செலுத்த வேண்டும்.  மருத்துவர்களின் உதவியோடு மிக எளிதாக இவளை மீட்டெடுத்துவிட முடியும். ஆனால் பெற்றோரின் ஒத்துழைப்பு வேண்டும். அப்படியல்லாமல் இந்த நிலை நீடித்தால், இவள் மனச்சிக்கலுக்கும் ஆளாகக்கூடும், இதை எப்படி புரியவைப்பது? நளினியைப் பார்த்துக்கொண்டே பலதும் யோசித்துக் கொண்டிருந்தார் தவமணி டீச்சர்.

ஒருநாள் “தோசைக்கரண்டியால அம்மா சூடு வைச்சிட்டாங்க டீச்சர்” என்று வந்தாள். காரணம் கேட்டபோது, “நேத்து அரைப்பரிட்சை பேப்பர் கொடுத்தாங்க இல்ல? நான் ஒண்ணுலகூட பாஸ் மார்க் வாங்கல டீச்சர்…அதனால தான்”

மற்றொரு நாள் “வீட்ல அம்மாவும் அப்பாவும்  கல்யாணத்துக்குப் போயிட்டாங்க. என்னை மட்டும் கூட்டிப்போகல.”

“ஏன் உன்னைத் தனியா விட்டுட்டு அவங்க மட்டும் போனாங்க?”

“அம்மா எங்க சொந்தக்ககாரவுங்க வீட்டு விசேஷத்துக்கு எப்பவுமே கூட்டிப்போக மாட்டாங்க டீச்சர்”

“ஏன்?”

“விசேஷ வீட்டுல சொந்தக்காரவுங்க எல்லாரும் என் படிப்பைப் பத்தி கேட்பாங்க இல்ல? அதான்…” அந்தக்கண்களில் தெரிந்த ஏக்கம் டீச்சரைக் கஷ்டப்படுத்தியது.

“தீபாவளிக்கு எனக்கு மட்டும் ட்ரெஸ் எடுக்கல டீச்சர். நான் எல்லாப்பாடத்துலயும் பாஸ் ஆனாத்தான்  இனிமேல் புது ட்ரெஸ் எடுப்பாங்களாம்”

இப்படி அந்தப்பிள்ளைக்கு விதவிதமான கொடுமைகள் வீட்டில் அரங்கேறின. பள்ளியிலோ, சக ஆசிரியர்கள் ‘படி, படி’ என வறுத்து எடுத்தார்கள். பள்ளி நிர்வாகம் தேர்ச்சி காட்ட வேண்டுமே? அவர்கள் கவலை அவர்களுக்கு. இரண்டு பக்கமும் மாட்டிக்கொண்டு விழித்தாள் நளினி.

அவள் அவஸ்தையைப் பொறுக்க முடியாமல் நளினியின் அம்மாவை அழைத்து வரச் சொன்னார் தவமணி டீச்சர்.

“டீச்சர்… கூப்பிட்டீங்களாமே? சீக்கிரம் என்னானு சொல்லுங்க, ஜவுளிக்கடையில ஒரு மணிநேரம் பெர்மிசன் கேட்டுட்டு வந்திருக்கேன்”, பரபரத்துக்கொண்டே வந்தாள் சுமதி.

“நளினி வீட்டில படிக்கிறாளா?” மெதுவாகக் கேட்டார் டீச்சர்.

“ம்ம்ம்ம்… எங்க? எப்பப்பார்த்தாலும் புத்தகத்தை வைச்சிக்கிட்டுதான் இருக்கா. ஆனா  ஒரு பரிட்சையில கூட பாஸ் ஆக மாட்டேங்கறாளே? எப்பப்பாரு வரையிறது, அலங்கரிக்கிறது, கோலம் போடறதுனு பொழுதை வெட்டியாப் போக்கிக்கிட்டு இருக்கா…” பெருமூச்சுடன் சொல்லி முடித்தாள் சுமதி.

“அவளுக்கு எதுல விருப்பம் இருக்கோ அதைச் செய்ய விடுங்களேன்?”

“அதுசரி… படிக்கச்சொல்ல வேண்டிய டீச்சரே இப்படிச்சொன்னா வெளங்கிப்போயிடும், கோலமும் அலங்காரமும் தான் நாளைக்கு அவளுக்கு சோறு போடப்போகுதா என்ன?”

“அய்யோ… படிக்க வேணாம்னு சொல்லல. ஆனா அதுக்காக நீங்க அவளைத் திட்டி அடிச்சுக்கிட்டே இருக்கீங்க இல்ல? அதனால சொன்னேன்”

“டீச்சர், எனக்கென்ன அவளை அடிக்கனும்னு ஆசையா என்ன? எங்களது பெரிய குடும்பம். எங்க சொந்தக்காரவுங்க வீட்டில பூரா நல்லா படிக்கிற பிள்ளைங்க. என் அக்கா பொண்ணுகூட போனவருஷம் பத்தாம் வகுப்புல ஸ்கூல் ஃபர்ஸ்ட். ஆனா இவ ஒவ்வொரு க்ளாஸ்லயும் ரெண்டு ரெண்டு வருஷம் உட்கார்ந்து சாவகாசமா அடுத்த க்ளாஸ்க்கு போறா. இவளை எல்லாரும் எளக்காரமா பார்க்குறாக. ஒரு கூட்டம் கும்பலுக்கு போகக்கூட கஷ்டமா இருக்கு. அதுமட்டுமில்ல… நாங்க தான் ரெண்டு பேரும் படிக்கல. இவளையாவது நல்லா படிக்க வைக்கனும்னுதான் இந்தப்பாடு படறோம்…ஆனா இந்தக் கழுதைக்கு அது ஏதாவது தெரியுதா?” சுமதி அவள் பாட்டை சொல்லி முடித்தாள்.

“டாக்டர்ட்ட வேணா காட்டுவோமா?” தவமணி டீச்சர் மெதுவாக ஆரம்பித்தார்.

“டாக்டர் ட்டயா எதுக்கு?” சுமதிக்கு நிஜமாகவே ஒன்றும் புரியவில்லை.

“இல்ல… ஏன் படிக்க கஷ்டப்படறானு டாக்டர் கண்டு பிடிச்சிடுவாங்க, சில பிள்ளைகளுக்கு இயற்கையாகவே படிக்கிறதுல குறைபாடு இருக்கும். அதை டாக்டர் உறுதி செய்துட்டா அதுக்கேத்த ஸ்கூல்ல சேர்த்து விடலாம். இல்லை, டாக்டர் சர்டிஃபிகேட் கொடுத்திட்டா அதை கவர்ன்மென்ட்ல காட்டி, இவ பரிட்சை எழுதுறதுல இருந்து விலக்கு வாங்கலாம்” பொறுமையாக விளக்கினார் டீச்சர்.

“என்னா டீச்சர் நீங்க பேசறீங்க..? எம்பிள்ளையை சீக்காளினு சொல்றீங்களா?”

“அய்யோ அப்படிச் சொல்லலை… பிள்ளை படிக்க கஷ்டப்படறாளே?அதனால டாக்டர்ட்ட காட்டி…”

“டீச்சர் அப்படிக்கிப்படி ஊருக்குள்ள யார்ட்டயாவது சொல்லீறாதீங்க. பொட்டப்புள்ள…நாளைக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கனும். நல்லா படிக்க வைப்பாங்கனு ஸ்கூல்ல சேத்துவிட்டா எம்புள்ளையை நோயாளின்னு முத்திரை குத்தி கதையைத் திருப்புறீங்களா? உங்களுக்கு சொல்லிக்கொடுக்கத் தெரியலைனா சொல்லிடுங்க. நான் வேற பெரிய ஸ்கூல்ல சேர்த்துக்கறேன். இதத்தான் படிச்சிட்டு வந்தாங்களோ என்னவோ?” புலம்பியவாறே சென்று விட்டாள். எதையும் புரிந்துகொள்ளும் மனநிலையில் அவள் இல்லை.

அதற்குப்பிறகு இது குறித்து டீச்சரால் சுமதியிடம் பேச முடியவில்லை. அந்தக் குழந்தைக்கு ஏதாவது செய்து விட மாட்டோமா என மனசு தவித்தாலும், ஒன்றும் செய்துவிட முடியாது என்ற  யதார்த்தம் முகத்தில் அறைந்தது.

அன்றைக்கு பவானி டீச்சர் வகுப்பு. சமூக அறிவியல் பாடம். அவரது வகுப்பில்  ஊசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருக்கும். டீச்சரை நிமிர்ந்து பார்த்து பேசுவதற்கே பிள்ளைகளுக்கு அச்சமாக இருக்கும். சமூக அறிவியலில் எல்லாப்பிள்ளைகளும் நூறு மார்க் எடுத்தாலும் திருப்தி வராது அவருக்கு. ஒவ்வொரு வருடமும் ஆண்டுவிழாவில் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைத்த ஆசிரியர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டு பணமுடிப்பும், விருதுக் கேடயமும் கொடுப்பார்கள். அதை வாங்கிவிட வேண்டும் பவானி டீச்சருக்கு.

அதனால் தனது பாடத்தில் முழு மதிப்பெண் எடுக்க வைப்பதற்காக பிள்ளைகளை திட்டி, மிரட்டி, அடித்து என அத்தனை உபாயங்களையும் கையாளத் தயங்க மாட்டார். பவானி டீச்சருக்கு நளினியைப் பார்க்கும்போதெல்லாம் இவளாலேயே இந்த வருடம் இவர் விருது வாங்கமுடியாமல் போய்விடுமோ என கோபமாக வரும்.  அதனால் அவரது வகுப்பில் எப்போதும் நளினிக்கு திட்டும் அடியும் கிடைத்துக் கொண்டேயிருக்கும். எல்லா மாணவர்களுக்கும் முன்னால் அவளை இழிவாகப்பேசுவதும், அதைக் கேட்டு மாணவர்கள் சிரிப்பதும் நளினிக்கு அவமானமாக இருக்கும், அழுகையாக வரும்.

அன்றைக்கு மாணவர்களைக் குழு குழுவாகப் பிரித்து விட்டு படிக்கச் சொல்லியிருந்தார். மாணவர்களை நன்றாகப் படிக்க வைத்து விட்டால், குழுத் தலைவர்களுக்கு பரிசு தருவதாக வேறு அறிவித்து விட்டதால், ஒவ்வொருவரும், தங்களுக்குக் கீழிருக்கும் மாணவர்களை சக்கையாகப் பிழிந்து கொண்டிருந்தார்கள். நளினி, ரம்யாவின் குழுவில் இருந்தாள். ஏற்கனவே ரம்யாவுக்கு நளினியை பிடிக்கவே பிடிக்காது.

மாலை படித்து முடித்ததும் பவானி டீச்சரிடம் நளினியைப்பற்றி புகார் சொன்னாள். “நளினி நான் சொல்றதைக் கேக்குறதே இல்லை டீச்சர், படிக்கவே மாட்டேங்கறா, டீச்சர்கிட்ட சொன்னா சொல்லிக்கோ, எனக்கொன்னும் பயமில்லைனு சொல்றா டீச்சர்” புகார்களை அடுக்கினாள். பவானி டீச்சருக்கு வந்த ஆத்திரத்தில், நளினியின் முடியைப்பிடித்து இழுத்து, பட் பட்டென கன்னத்தில் அறைந்தார். வகுப்பில் அனைவரும்  பயத்தில் உறைந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கோள் மூட்டிவிட்ட ரம்யாவுக்கே நளினியைப்பார்க்க பாவமாக இருந்தது. “நாளைக்கு இந்த பாடத்தை படிச்சிட்டு வரல… ஹெச் எம்கிட்ட சொல்லி உன் டி.சியைக் கிழிச்சுக் கொடுத்து ஸ்கூலை விட்டே வெளியே அனுப்பிச்சுடுவேன்”, உறுமி விட்டு சென்றுவிட்டார்.

நளினிக்கு அடி வாங்கியதைவிட டீச்சர் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. ‘உண்மையிலேயே டிசியைக் கொடுத்து அனுப்பிடுவாங்களோ? அப்படி அனுப்பிட்டா அம்மாவும் அப்பாவும் எப்படி கஷ்டப்படுவாங்க? பாவம்ல அம்மா…” நினைத்து நினைத்து அழுதாள்.

அதே நேரத்தில் சுமதி வேலை பார்க்கும் கடையில் மதியச் சாப்பாட்டு நேரத்தில் உடன் பணிபுரியும் எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். “என்ன சுமதிக்கா… இந்த வருஷமாச்சம் எட்டாம் வகுப்புல உட்காராம நளினி ஒம்பதாம் வகுப்பு போயிடுவாளா? இல்ல வழக்கம்போலத்தானா?”

“அதெப்படி? கோயிலுக்கு நேர்ச்சை போட்ட  மாதிரி ஒவ்வொரு வகுப்பிலும் உட்கார்ந்து போனாத்தான சாமி கோவிக்காது, அவகூட படிச்ச எம்மவ அடுத்த வருசம் பன்னண்டாப்பு போகப்போறா” உடன் வேலை பார்க்கும் பார்வதி சொல்ல, கொல்லென அனைவரும் சிரித்தனர்.

சுமதிக்கு அவமானமாக இருந்தது. கண்கள் கலங்க சாப்பாட்டை அப்படியே மூடிவைத்து விட்டு எழுந்து விட்டாள்.  

கோபத்தோடு வீட்டுக்கு வந்தவள், நளினியை அருகில் அழைத்தாள். “இங்கபாரு நளினி, உன்னால் வேலை பார்க்குற இடத்துல எனக்கு அவமானமா இருக்கு. இந்த முறை எட்டாம் வகுப்புல நீ பாஸ் ஆகல… உன்னை ஒன்னும் செய்யமாட்டேன்,  நான் தூக்குல தொங்கிருவேன் பார்த்துக்க…” தீர்க்கமாக சொல்லிவிட்டு வெளியே போய்விட்டாள் சுமதி.

ஏற்கனவே பள்ளியிலிருந்து பவானி டீச்சரின் ‘டிசி மிரட்டல்’ பற்றிய பயத்தோடு வந்த நளினி, அம்மாவின் தீர்மானமான குரலைக் கேட்டு மேலும் நடுங்கிப்போனாள். மனசு படபடத்தது. தவமணி டீச்சரைப் பார்த்து பேசவேண்டும் போல இருந்தது. யாராவது அன்பாக பேசமாட்டார்களா என மனது அலை பாய்ந்தது.

ஏதேதோ உணர்வுகளுடன் தனது பொம்மையைக் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தவள், அதை நளினியாகவே நினைத்துப் பேசத் தொடங்கினாள்.  “அழாத நளினிக்குட்டி… எங்க அம்மாவுக்கு என் மேல கோபம் வரும்போதெல்லாம் உன்னையும் தூக்கி எறியறாங்க, எனக்கு படிப்பு வராததால அம்மாவுக்கு, வனிதா டீச்சருக்கு, எனக்கு,  என்னோடு சேர்ந்து உனக்குன்னு எல்லாருக்கும் கஷ்டம். அதனால  நாம் ரெண்டு பேரும் எங்காவது போயிடலாமா?” நளினியைப் பார்த்து ‘சரி’ என்பதாகக் கண்சிமிட்டியது அந்த பொம்மை.

நளினி தொடர்ந்தாள். “‘எங்க படிக்கிற? எந்த க்ளாஸ் படிக்கிற? எப்படி படிக்கிற? எத்தனை மார்க்? ஏன் நல்லாப் படிக்கல?’ இந்தக் கேள்வில்லாம் இல்லாத ஊருக்குப் போயிடுவோமா?” பொம்மை மீண்டும் கண்சிமிட்டியது.

நளினி எழுந்து தனது புத்தகப்பையை ஒருகையில்  எடுத்துக்கொண்டு, மற்றொரு கையில் பொம்மையை  தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு  வெளியே வந்தாள். தெருமுனையில் குப்பைத்தொட்டி தெரிந்தது. புத்தகப்பையை ஒருமுறை ஏக்கத்துடன் தடவிப்பார்த்தவள், கண்களை மூடிக்கொண்டு அதற்குள் தூக்கி ஏறிந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோட, பொம்மையை மட்டும் இறுக்கிப்பிடித்தவாறு இருட்டுக்குள் நடந்து, காணாமல் போனாள்.

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். அடுத்து, ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும், ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வி த் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் அழகாக எழுதியிருக்கிறார். இம்மூன்று தொடர்களும் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. ‘வியட்நாம் அனுபவங்கள் ‘என்கிற இவரது நான்காவது தொடர் நூலாக்கம் பெற்றுவருகிறது. இது தவிர ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்துக்காக ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் எழுதியுள்ளார். குட்டிப் பெண்களின் பெரிய கதைகள் இவர் எழுதும் ஐந்தாவது தொடர்.