“டீச்சர்…” தலை குனிந்து மும்மரமாக எழுதிக் கொண்டிருந்த  கவிதா, பழகிய குரல் கேட்டு நிமிர்ந்தாள். கல்பனா நின்றிருந்தாள். போன மாதம்வரை அவளது வகுப்பு மாணவி. இன்றைக்கு இடைநிற்றல் பட்டியலில் இருக்கிறாள். தன் சிறிய உடம்புக்குப் பொருந்தாமல், பெரிய பெண் போல சேலை கட்டி நின்று  கொண்டிருந்தவளைப் பார்த்ததும் கவிதாவுக்கு சிரிப்பு வந்தது. சேலை இடுப்பில் நிற்காமல் கோக்குமாக்காக நழுவிக்கொண்டிருந்தது. கடைசியாகப் பார்த்ததைவிட இலேசாகப் பூசினாற்போல இருந்தாள். கன்னம் உப்பிப்போய் இருந்தது. முகம் பளபளப்பாக இருந்தது. இயற்கை தந்த வனப்பு அது என நினைத்துக் கொண்டாள்.

 “என்ன கல்பனா… ஏன் ஸ்கூலுக்கு வரல?”

“அம்மா விடமாட்டேங்குது டீச்சர்…”

“ஏன்?”

“அது வந்து… வந்து… எனக்கு கல்யாணம் டீச்சர், உங்ககிட்ட படிச்சுச்சில்ல, பாண்டி, அதுதான் டீச்சர் மாப்பிள்ளை…” இப்போது அவள் முகத்தில் வெட்கம் வேறு.

கவிதா தலையில் அடித்துக்கொண்டாள்.  பதின்மூன்று வயதில் என்ன கல்யாணம்? போன மாதம் ஒருநாள் பள்ளியில் வயிற்றுவலி என்று சொல்லித் துடித்தவளை, சந்தேகத்துடன்தான் அவள் அம்மாவை அழைத்து  விபரம் சொல்லி, வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். அவள் அம்மாவும் மகள் பூப்பெய்திவிட்டதை உறுதி செய்து விட்டு, “பதினாறாம் நாள்  சடங்கு முடிஞ்ச பெறகு ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கிறேன்  டீச்சர்” என்று மறுநாள் பள்ளிக்கு வந்து சொல்லிவிட்டுச் சென்றார். ஒரு மாதம் வரைக்கும்கூட  வீட்டில் வைத்திருந்து பள்ளிக்கு அனுப்புவது கிராமங்களில் வழக்கம்தான் என்பதால், வந்து விடுவாள் என்றுதான் கவிதாவும் நினைத்தாள். ஆனால் ஒரு மாதம் கடந்தும் வரவில்லை என்பதால் இன்று பக்கத்து வீட்டு மாணவிகளை அனுப்பி கல்பனாவை கையோடு கூப்பிட்டு வரச் சொன்னாள்.  அப்படி அழைத்து  வரப்பட்டவள்தான், கல்யாணம் என்று சொல்லிக்கொண்டு, நாணிக் கோணி நிற்கிறாள். 

கந்தகபூமியின் சிறு துண்டாய் எப்போதும் தகித்துக் கிடக்கும் அந்த கிராமம். உழைப்பைத் தவிர வேறொன்றும் அறியாத மக்கள். ஊர் முழுக்க தீப்பெட்டி ஆபிஸ்களும், பட்டாசு ஆலைகளும் நிரம்பியிருக்கும். குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் கடுமையாக உழைப்பார்கள். அதனால் அவர்கள் மொழியில் ‘துட்டு பெருத்த ஊரு’. மாலை பள்ளி விட்டவுடன் ஒட்டுமொத்த பள்ளிப் பிள்ளைகளும் ஏதோ ஒரு ஆபிஸில் கட்டு ஒட்டிக் கொண்டோ, பெட்டி மடித்துக்கொண்டோ இருப்பார்கள். நாலு நாள் லீவு விட்டால் பிள்ளைகளிடமே காசு செழிப்பாய் இருக்கும். “முன்னூறு ரூபாய்க்கு கட்டை அடுக்கினேன் டீச்சர்” எனப் பெருமையாய் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ‘குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு’ என்பதெல்லாம் அரசியல்வாதிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து செய்தித்தாள்களில் தன் படம் பார்த்து மகிழ்ந்து கொள்வதற்குத்தான். படிப்பைவிட உழைப்பை நம்பும் மக்கள். லீவில் தொடர்ச்சியாய் ஆபிஸ் போய் காசு பார்த்துப் பழகிவிட்டால், குழந்தைகளுக்கும் பள்ளிக்கு வரப் பிடிக்காது, பெற்றோர்களுக்கும் அனுப்ப மனம் வராது. அதனால்தான் பிள்ளைகள் இரண்டு நாள்கள் பள்ளிக்கு வராவிட்டால்கூட, ‘எந்த ஆபிசில் உட்கார்ந்திருக்கானோ’ என ஆசிரியர்களுக்கு ‘கெதக்’ என்று இருக்கும்.  அந்த சந்தேகத்தில்தான்   கவிதா டீச்சர் கல்பனாவை வரச் சொல்லியிருந்தாள். ஆனால் வந்தவளோ கவிதா யோசித்து பயந்ததைவிட மோசமான ஒரு கதையைச் சொல்கிறாள்.

படிப்பு பாதியில் நிற்கும் வீரியம் புரியாமல், விளையாட்டுப் பிள்ளையாய் நின்றவளிடம்  என்ன சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியாமல், திருப்பி அனுப்பினாள். மதியம் கவிதாவும் தலைமை ஆசிரியரும் அவள் வீட்டுக்கே போனார்கள். கல்பனாவின் அம்மா இருந்தார். “டீச்சர், வாங்க… வாங்க…”தடால் புடால் என வரவேற்பெல்லாம்  பலமாகத்தான் இருந்தது. அவசரமாக ஒரு பெட்ஷீட்டை விரித்தார். “வேணாம்… வேணாம்…” என சொல்லியும் கேட்காமல், “டேய் டீச்சர்களுக்கு கலரு வாங்கிட்டு வாடா…” அருகிலிருந்த சிறுவனை கடைக்கு ஏவினார்.

“ஏன் கல்பனாவை ஸ்கூலுக்கு அனுப்பல?” ஹெச்.எம். நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

“பதினாறாம் நாளு சடங்கு வச்சோம் டீச்சர், தாய்மாமன் மொற செய்ய வந்த எங்க அண்ணன், அன்னிக்கே இவளை அவரு மகன் பாண்டிக்கு நிச்சயம் பேசிட்டாக. கல்யாணம் பேசின  பிள்ளைகளை எங்க குடும்பத்துல வீட்டை விட்டு அனுப்ப மாட்டோம் டீச்சர்”, எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மகளுக்கு கல்யாணம் தகைந்த சந்தோஷத்தில்  பதிலளித்தார் கல்பனாவின் அம்மா.

“இந்தக்காலத்துல போய் இப்படிப் பேசறீங்க…? அவளுக்கு பதிமூணு வயசுதான் ஆகுது. இந்த வயசுல கல்யாணம் பண்ணுவீங்களா?”, கோபத்தை அடக்கிக்கொண்டு வலிய புன்னகைத்துக் கேட்டாள் கவிதா.

அவளின் நியாயமான  கோபத்தை புரிந்துகொண்ட ஹெச்.எம்., மெதுவாக கவிதாவின் கையை அழுத்தி ‘பொங்காத’ என்று சமிக்ஞை கொடுத்தார்.  இது போன்ற சமயங்களில் பொங்கி வரும் கோபம் பத்து பைசாவுக்குப் பெறாது என்பது அவருக்குத் தெரியும்.

“என்ன டீச்சர் செய்யறது? இவளுக்கு மூணு வயசு ஆகும்போது அவுக அப்பன் லாரி மோதி  செத்துப் போயிடுச்சு… அன்னிலயிருந்து இன்னிக்கு வரைக்கும் எங்க அண்ணன் குடும்பம்தான் எங்களுக்கு நல்லது கெட்டது பார்க்கறாக. அவங்க மகனுக்கு பொண்ணு கேட்கும் போது, அவுகளை எதுத்துட்டு நான் படிக்க வைக்கப்போறேன்னு சொன்னா நல்லா இருக்குமா? மூஞ்சிலேயே இடிப்பாக, அது மட்டுமில்ல… சின்ன வயசிலேயே அவனுக்கு இவ தான்னு நாங்க பேசிக்கிட்டது தான்…”

“அது சரி, நல்லாப் பண்ணுங்க, அதுக்கு வயசு இல்லையா, என்ன? படிப்பு முடிஞ்ச பின்னாடி கல்யாணத்தை வச்சிக்கிட வேண்டியது தான? அவனும் சின்னப்பையன் தான, எங்ககிட்ட தான் நாலு வருஷத்துக்கு முன்னால எட்டாப்பு படிச்சான்… இப்படி ரெண்டு சின்னப்புள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறீங்க? அதுங்களுக்கு என்னா தெரியும்?” ஹெச்.எம். தன் பங்குக்கு விடாமல் வாதாடிக் கொண்டிருந்தார்.

“என்னா, சின்ன வயசு? எனக்கு பன்னண்டு வயசுல கல்யாணம், இவுக அப்பனுக்கு பதினாறு வயசு… நாங்க கல்யாணம் கட்டிக்கிடலியா, புள்ளப் பொறலியா? பொழைக்கலியா? அதது, காலா காலத்துல நடக்குறதுதான் நல்லது”, பதிலுக்கு கல்பனாவின் அம்மா குரலுயர்த்தி இவர்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்தார்.

மேலும் சிறிது நேரம், திருமணத்துக்குத் தயாராகாத கல்பனாவின் உடல்நிலை, குழந்தைத் திருமணம் சட்டப்படி தவறு, செல்லாது என்றெல்லாம்  இரண்டுபேரும் வாதாடித் தோற்றார்கள். 

“டீச்சர் உங்களுக்கென்ன, அப்பனில்லாத புள்ளையை வளர்த்து கட்டிக்கொடுக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உங்களப்போல டவுனில இருக்குறவுகளுக்கு எல்லாம் ஈசியா இருக்கும். நான் யார் யார்ட்ட பேச்சு வாங்குறது? ஊர்க்காரங்களுக்கு முன்னாடி பேசி முடிச்சி, தட்டு மாத்திக்கிட்டோம். இனிமேட்டுக்கு எதுவும் மாத்த முடியாது”, தீர்மானமாய் சொல்லிவிட்டு உள்ளே போனார் கல்பனாவின் அம்மா.  அதற்குமேல் வற்புறுத்த முடியாமல் தொங்கிய முகத்துடன் இருவரும் திரும்பினார்கள்.

மூன்றாம் மாதத்தில் முகமெல்லாம் பூரிப்புடன் கல்பனாவே கல்யாணப் பத்திரிக்கையை  எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வந்தாள். “நீயாவது உங்க அம்மாகிட்ட படிக்கணும், கல்யாணம் வேணாம்னு சொல்லியிருக்கலாம் இல்ல?”, ஆற்றாமையுடன் கவிதா கேட்டாள். கலகலவென சிரித்த கல்பனா, கவிதா சொன்னதை காதில் வாங்கவே இல்லை. “கல்யாணத்துக்கு  புதுசா பெரிய நெக்லஸும், ஆரமும் எடுத்துருக்கு டீச்சர்… மாமா வீட்ல  பத்து பவுன் நகை பரிசம் போட்டாங்க, பட்ரோஸ் கலர்ல  மொழங்கால் வரைக்கும் ஜரிகை போட்ட பட்டுச் சேலை சூப்பரா இருக்கு டீச்சர்…” என கண்கள் விரிய மூச்சு விடாமல் பேசிக்கொண்டே போனாள். அவளையே பார்த்தாள் கவிதா. அந்தக் கண்களில் புதுச்சேலை, நகை என்ற அந்த வயதுக்குரிய ஆர்வமும், பிரமிப்பும் இருந்ததே தவிர கல்யாணம், வாழ்க்கை குறித்த எந்த புரிதலும் இருக்க நியாயமில்லை என நினைத்துக்கொண்டாள். கல்யாணத்துக்கு பள்ளியில் இருந்து யாரும் போகவில்லை.

திருமணம் மிகவும் ஆடம்பரமாக முடிந்ததாகவும், ‘நாப்பது பவுனு நகையும், மிக்சி, கிரைண்டரு, பீரோன்னு ஊரு மெச்ச சீரு செஞ்சதாகவும், கல்யாண விருந்து சூப்பரா இருந்ததாகவும்’ பிள்ளைகள் வந்து சொன்னார்கள். ஒரு நாள் மாலையில் ஆசிரியர்கள் எல்லாரும் வீட்டுக்குத் திரும்பிய பஸ்ஸில் கல்பனாவும் ஏறினாள். கூட அந்தப் பையனும். கழுத்து நிறைய நகை, முகம் நிறைய சிரிப்பு,  டீச்சர்களைப் பார்த்ததும் அவளது சிரிப்பு, வெட்கமாக மாறியது. “எங்க அத்தை வீட்டுக்கு  விருந்துக்குப் போறோம் டீச்சர்…” என்றாள், பொத்தாம் பொதுவாக. கணவனாக நின்ற பாண்டிக்கு 17,18 வயசு இருக்கும். இப்போதுதான் மீசை இலேசாக எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. இடுப்பில் நிற்காத ஒரு பட்டுவேஷ்டி, சிலுசிலு சட்டை என புது மாப்பிள்ளை தோரணை மாறாமல் இருந்தவன் டீச்சர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டான். பள்ளியில் படிக்கும்போது ரொம்ப விவரமாக இருக்கமாட்டான். மற்ற பையன்கள் அவனை எப்போது கேலி செய்து வம்பிழுத்தாலும், கோபப்படாமல், அசட்டுத்தனமாக சிரித்துக்கொண்டே இருப்பான். எட்டாம் வகுப்பு முடித்தவுடன் எவ்வளவோ சொல்லியும் மேற்கொண்டு படிக்காமல் பக்கத்து ஊர் பெட்ரோல் பல்க்கில் வேலைக்குப் போய்விட்டான்.

ஒரு வருடம் ஆகியிருக்கும். ஒருநாள் கல்பனா, தன் சித்தி மகளை  பள்ளிக்குவிட வந்திருந்தாள். கர்ப்பமாக இருக்கிறாள் என்பது பார்த்தவுடன் தெரிந்தது. ஆனால் ரொம்ப சோகமாக இருந்தாள். அவள் கண் இமைத்தால் கண்ணீர் சொட்டுகள் உருண்டோடத் தயாராய் இருந்தன.

“என்ன கல்பனா, ஏன் ஒரு மாதிரியா இருக்க?” கேட்டாள் கவிதா.

“ஒண்ணுமில்ல டீச்சர், பாண்டி வேற கல்யாணம் பண்ணிக்கிடுச்சு டீச்சர்”, சொற்கள் தயங்கித் தயங்கி வந்தன.

“வேற கல்யாணமா, அது எப்படி, புரியல?”

“கல்யாணம் ஆன புதுசுல பாண்டி நல்லாத்தான் இருந்துச்சு டீச்சர்… ஆனா திடீர்னு ஒருநாள்  என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டு, நம்ம க்ளாஸ்ல படிச்சாள்ல வளர்மதி…? அவளைக் கூட்டிட்டுப் போய் இருக்கங்குடி கோவில்ல வைச்சுக் கல்யாணம் பண்ணிக்கிடுச்சு டீச்சர்…” இப்போது கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.

கேட்கக் கேட்க அயர்ச்சியாக இருந்தது கவிதாவுக்கு. அவள் சொல்லும் வளர்மதி கல்பனாவுடன் படித்தவள்தான். ஏழு படிக்கும்போதே படிப்பு வரவில்லை என வீட்டில் நிப்பாட்டி விட்டார்கள். அவள் அம்மாவுடன் பக்கத்து ஊர் பட்டாசு ஆலைக்குப்  போனதாகவும், போகும் போது, வரும்போது பாண்டிக்கும் வளர்மதிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டதாகவும் கல்பனா கூறினாள்.

“நீ என்ன செய்யறே இப்போ? எங்க இருக்க?”

“நான் இப்போ அம்மா வீட்டுலதான் டீச்சர் இருக்கேன், பெட்டி அடைக்க, தீப்பெட்டி ஆபிஸ் போறேன். ஏழு மாசமாச்சு, வளைகாப்புகூட போடல. அவங்க ரெண்டு பேரும் சாத்தூர்ல வீடு எடுத்து தங்கியிருக்காங்க, நீங்க சொன்னப்பவே படிக்கனும்னு அடம் பிடிச்சு படிச்சிருக்கனும் டீச்சர், நகையையும் சேலையையும் பார்த்ததும் புத்தி மாறிப்போச்சு…” விரக்தியுடன் சொன்னவளைப் பார்க்கிறாள் கவிதா.  கல்யாண சேதி சொல்ல வந்தவளிடம் இருந்த பூரிப்பு, சந்தோஷம் எல்லாம் நினைவுக்கு வந்தது. வெள்ளந்தியாக இருந்தவளை இந்த வாழ்க்கை ஒரு வருடத்துக்குள் எப்படி தலைகீழாய் மாற்றிவிட்டது?

இந்தப்பிள்ளைக்கு என்ன செய்யலாம் என மனசு பரபரத்தது. ‘உன்னால் என்ன செய்து விட முடியும்?’ ஏளனமாகக் கேட்ட மனசாட்சியை தள்ளி வைத்து விட்டு, அவள் அம்மாவை வீட்டுக்கே போய்ப் பார்த்தாள் கவிதா. அவர் முகத்திலும் சுரத்து இல்லை. கவிதாவைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சியுடன் பேசினார். “நீங்க சொன்னதைக் கேட்டிருக்கலாம் டீச்சர்… ஆனா, கல்யாணமாகி ரெண்டு பேரும் நல்லாத்தான் இருந்தாக. சினிமா, விருந்து, டூர்னு நல்லாதான் கூட்டிட்டுப் போனான். அப்பறம் என்ன ஆச்சோ தெரியல…வளர்மதி கூட பழக்கமாயிடிச்சு… உங்களுக்குத் தெரியுமே, கல்பனாவும் அவளும் ஒரு சோட்டு தான். அவளும் இவனுக்கு முறைப்பொண்ணுதான். ஒரு நா அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேந்னு வீட்டுக்குக் கூப்பிட்டு வந்துட்டான். இவ அங்க இருக்க மாட்டேனு எங்கூட வந்துட்டா… எங்க அண்ணனும் மகனுக்கு எவ்வளவோ புத்தி சொல்லி பார்த்துச்சு. அவன் கேட்கல. கோபத்தில் அடிக்கப்போகவும், அவன் வீட்டை விட்டுப் போயிட்டான், ம்ம்ம்ம்ம்ம்…

இவளுக்கு காரியம் பத்தாது… புருசன முந்தானைல முடிஞ்சு வைக்கத்தெரியாத கூறு கெட்டவள வைச்சிக்கிட்டு…நான் என்ன செய்வேன்…? இன்னும் எவ்வளவு காலம் கெடக்கு…” அழுதார். 

இதற்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் கவிதா அமைதியாக இருந்தாள். மூவரின் மூளைக்குள்ளும் வெவ்வேறு உணர்வுகள் ஓட  அந்த இடம் அமைதியால் கனத்துப் போயிருந்தது.

திடீரெனெ கல்பனாவின் அம்மா, மூக்கை உறிஞ்சியபடியே, “இவ சாதகத்தை நாலு ஜோசியக்காரங்கட்ட  பார்த்துட்டேன், எல்லாரும் ஒண்ணு சொன்னாக்குல, இவளுக்கு கெரகம் சரியில்லை, பிள்ளை பொறந்தா சரியாயிடும்னு சொல்லி  பரிகாரமும் சொல்லிருக்காக. நேரம் சரியில்லைனா பாவம்… யாரை, என்ன குத்தம் சொல்றது?” தனக்குத்தானே ஆறுதல் சொல்வதுபோல சொல்லிக்கொண்டார்.

“சரி… சரி… ஆனா ரெண்டு கல்யாணமும் சட்டப்படி செல்லாதுதான். உங்க திருப்திக்கு பரிகாரத்தை செய்யுங்க, என்ன நடக்குது னு பார்க்கலாம். நல்லபடியா டெலிவரி ஆகட்டும். அதுக்குப் பெறகு, கல்பனாவை பத்தாவது எழுத வைப்போம்… அவளால முடியற வரை படிச்சிட்டு ஏதாவது ஒரு வேலைக்குப் போகட்டும்.”

“போங்க டீச்சர், மனுசங்க சொல்லுக்கு முன்னாடி சட்டம் என்னா பெரிய சட்டம்? கல்யாணம் செல்லாதுனு சட்டம் சொன்னாப்புல, இவ பழைய கல்பனா ஆயிடுவாளா? அவ தலையெழுத்து அம்புட்டுதான், இனிமே படிச்சி அவ என்ன கலெக்டர் வேலைக்கா போகப்போறா… இப்படி வயித்த தள்ளிக்கிட்டு நிக்கறாளே,  என்ன செய்யறதுனு தெரியாம, தெனம் நான் செத்து செத்து பொழைக்கறேன். நீங்க இப்பயும் வந்து படிப்பு, பரிச்சைனு சொல்லிக்கிட்டு கெடக்கீங்க… மரத்த வைச்சவன் தண்ணி ஊத்துவான்…அதது பாட்டுக்கு காலம் ஓடும், நீங்க ஏதும் அவளைக் கொழப்பி வுட்றாதீக” ஆற்றாமையுடன் தொடங்கி, வேண்டுகோளுடன் முடித்துவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார்.

அதற்கு மேல் பேச வழியின்றி கவிதா வெறித்துப் பார்த்தவாறு வெளியேறினாள்.

நான்கு மாதம் கடந்த ஒரு சித்திரை மாதம்… வெயில் கொடூரமாய் தகித்துக் கொண்டிருந்த ஒரு நாள், அந்த கிராமமே பரபரத்துக்கிடந்தது. ஆள்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் சத்தமும் அதைத் தொடர்ந்து பெண்கள் கத்தி கத்தி ஒப்பாரி வைக்கும் சத்தமும் கேட்டது. உள்ளூர்கார பால்வாடி டீச்சர் வந்து விஷயத்தைச் சொன்னார்.

“டீச்சர், பாண்டி மருந்தைக் குடிச்சு செத்துட்டானாம்…”

திடுக்கென்றது.

“கடவுளே… என்ன  ஆச்சு, ஏன் அப்படிச் செஞ்சான்?”

“அவங்க அப்பாட்ட பைக் கேட்டானாம். அவர் என் தங்கச்சி மகளை வைச்சி வாழத் துப்பில்லாம, இன்னொருத்திய இழுத்துக்கிட்டு ஓடினவனுக்கு இந்த வீட்லயிருந்து ஒண்ணும் கிடையாதுனு திட்டியிருக்கார். கோபத்துல தோட்டத்துக்கு அடிக்க வாங்கி வச்சிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடிச்சிட்டான், ரொம்ப ரோசக்காரப் பையன் டீச்சர்” தகவலோடு சேர்த்து அவனுக்கு ஒரு சர்டிஃபிகேட்டும் கொடுத்து விட்டுச்சென்றார்.

அந்தப் பதினேழு வயது சிறுவனின் அசட்டுத்தனமாய் சிரிக்கும் முகம் கவிதாவின் நினைவில் வந்து போனது.  உலகமறியா வயதில் அறியாமைக்குப்  பலியான இரண்டு குழந்தைகள்…

பதினான்கு வயதில் கைம்பெண்ணாய் கையில் ஒரு பச்சிளம் குழந்தையை ஏந்தியபடி கல்பனா நிற்கும் காட்சி மனசுக்குள் விரிந்தது. சித்திரை மாசத்து புழுக்கம் மனசுக்குள் நுழைந்து வதைக்கத் தொடங்கியது.

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். அடுத்து, ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும், ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வி த் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் அழகாக எழுதியிருக்கிறார். இம்மூன்று தொடர்களும் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. ‘வியட்நாம் அனுபவங்கள் ‘என்கிற இவரது நான்காவது தொடர் நூலாக்கம் பெற்றுவருகிறது. இது தவிர ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்துக்காக ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் எழுதியுள்ளார். குட்டிப் பெண்களின் பெரிய கதைகள் இவர் எழுதும் ஐந்தாவது தொடர்.