சுட்டும் அகிலத்திரட்டு

நாட்டு தெய்வ வழிபாடு என்பது தமிழர்களின் பெருமைமிகு தொன்மம், அதை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றொரு பெருங்குரல் சமீபத்தில் எழுந்துள்ளது. பார்ப்பனியத்தில் கலந்து விட்ட தமிழர்களின் தொன்மங்களை மீட்டெடுப்போம் என்று எழுச்சிமிகு குரலெழுப்புபவர்களிடம் சொல்ல நினைப்பது ஒன்றுதான்.

இந்து மதத்தின் பெருந்தெய்வ வழிபாடு சனாதனத்தின் அரியணை என்றால், நாட்டு தெய்வ வழிபாடு என்பது சனாதனத்தின் கால் பிடிக்கும் சேவகனாக, பல நூறாண்டுகளுக்கு முன்பே மாற்றப்பட்டுவிட்டது. சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் மனு நீதி சாஸ்திரத்தின் கலப்பு இல்லாத நாட்டு தெய்வக் கதைகளை எவரேனும் காட்ட முடியுமா? நமது கிராமங்களின் வில்லுப்பாட்டுகளிலும், நாட்டுப்புறப் பாடல்களிலும், வழக்காற்றுக் கதைகளிலும் நாட்டு தெய்வங்கள் சனாதன தெய்வங்களின் காவலாளிகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.

சில நாட்டு தெய்வங்கள் மிகவும் இழிவான வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக சுடலை மாடனின் கதையில், மாடன் ஆரம்பத்தில் இருந்தே மாமிச பட்சிணி என்ற காரணத்துக்காக கைலாசத்தில் இருந்து ஒதுக்கப் படுகிறான். இது பார்ப்பனியத்துக்கும் இடைநிலை சாதிகளுக்குமான சாதியப்படிநிலையை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மாமிசம் உண்பவன் குற்றவாளி, காட்டுமிராண்டி என்னும் தவறான சித்தரிப்பு இது. இந்த சித்தரிப்பை நியாயப்படுத்துவதற்காக, மாடனை சுடுகாட்டு பிணங்களைத் தின்பவனாக சொல்லும் இந்த கதையை உருவாக்கியவர் யாரென்று தெரியவில்லை.

மாடன் மாவிசக்கியின் விருப்பமின்றி அவளை வன்புணர்ச்சி செய்வதாகவும்,  மாடனின் அந்த கேடு கெட்ட செயல் வீரம் என்பது போலவும் அமைந்திருக்கும் மாடனின் கதை, பெண்ணடிமைத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் ஆணித்தரமாக நியாயப்படுத்துவதோடு, நாட்டு தெய்வமான மாடனை இழிவு செய்வதாகவும் உள்ளது.

இவ்வாறாக, சாதியப்படிநிலையை தக்க வைத்துக் கொள்ளல், ஆணாதிக்கம், பெண்ணடிமை போன்ற மனுநீதி சாஸ்திரத்தின் சனாதனக் கோட்பாடுகள் என்றோ நாட்டு தெய்வ வழிபாடுகளில் கலந்துவிட்டன.

‘சனாதன இந்து மதத்தின் பெருந்தெய்வ வழிபாடு வேண்டாம், நாட்டு தெய்வ வழிபாடு இருக்கட்டும்’ என்று சொல்வது, ‘விஷம் வேண்டாம் விஷம் கலந்த பாலை குடித்துக் கொள்வோம்’ என்பதுபோல உள்ளது. அதனால்தானோ என்னவோ, அய்யாவழி நாட்டு தெய்வ வழிபாடுகளையும் ஏற்கவில்லை.

நாட்டு தெய்வங்களை என்றால், உயிர்பலி ஏற்கும் நாட்டு தெய்வங்களை மட்டும்தான் அய்யாவழி ஏற்கவில்லையா? என்றால் இல்லை. அய்யாவழி, நாட்டு தெய்வங்களுக்கு தனியாக கோவில் அமைத்து வழிபடுவதற்கான தேவையில்லை என்றுரைக்கிறது.

அதனால்தான் அய்யாவின் நிழற்தாங்கல்கள் மற்றும் பதிகளில் பள்ளியறைக்கு (கருவறைக்கு) வலது பக்கத்தில் அமைந்திருக்கும் பீடம், நாட்டு தெய்வ வழிபாட்டின் அடையாளங்களான அரிவாள், ஈட்டி, சூலம் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

அந்த பீடம் அய்யா வைகுண்டர் நாட்டு தெய்வங்களை அடக்கி ஒடுக்கி விட்டதன் அடையாளமாக நம்பப்படுகிறது. இதனால் அய்யா வழியை பின்பற்றும் மக்களுக்கு நாட்டு தெய்வங்களின் ஆராசனை, தொந்தரவு போன்றவை வராது என்பது அய்யாவழி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே, நாட்டு தெய்வங்களை சாந்திப்படுத்த தனியாக பலி பூசைகளோ, அசைவ பூசைகளோ செய்ய வேண்டியதில்லை. அய்யாவின் பதிகளிலும் நிழற்தாங்கல்களிலும் இருக்கும் நாட்டு தெய்வ பீடத்துக்கு கும்பிடு போட்டால் போதுமானது என்பதே, அய்யாவழியின் கருத்து என்று கொள்ளலாம்.

உயிர்பலியுடன் வெறியாட்டு நடத்திக் கொண்டிருந்த மக்களை திடீரென்று முழுமையாக மாற்றுவது சாத்தியமின்மை என்பதால், அய்யா வைகுண்டர் இப்படி ஒரு ஏற்பாட்டை முன்னெடுத்திருக்கலாம். ஆனால் அய்யா வைகுண்டரின் இந்த ஏற்பாடானது இந்துத்துவம் உள்நுழைவதற்கான ஓர் ஓட்டை என்பதுதான் எனது கருத்து.

அய்யா வைகுண்டர் சனாதன வழிபாட்டு முறைகளையும், நாட்டு தெய்வ வழிபாட்டு முறைகளையும் ஒழித்ததற்கு அகிலத்திரட்டு சொல்லும் காரணம்: சனாதன வழிபாட்டு முறைகளையும், நாட்டு தெய்வ வழிபாட்டு முறைகளையும் ஒழித்ததற்கான காரணத்தை அய்யா வைகுண்டர் முனிவன் ஒருவனிடம் சொல்வதாக, அகிலத்திரட்டில் வருகின்ற வரிகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கிட்டத்தட்ட அகிலத்திரட்டின் 57 வரிகளின் பொருளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

திருச்செந்தூர் கடலிலிருந்து வெளியே வந்த அய்யா வைகுண்டரிடம் (முத்துக்குட்டியிடம்) மாமுனிவன் நக்கன் என்பவன், ‘திருச்செந்தூரை விட்டு ஏன் செல்கிறீர்?’ என்று கேள்வி கேட்க, அதற்கு வைகுண்டர் (முத்துக்குட்டி), அகிலத்திரட்டில் கூறும் பதில் வரிகளே அந்த 57 வரிகள்.

‘கேள்வி கேளா நீசன் கெடுவது அறியாமல்

நாள்வழியாய்ச் சாணாரை ஞாயமில்லாது அடித்தான்

சொன்னேன் புத்தி நீசனுக்குத் திருவனந்தபுரமே இருந்து

என்னையும் பாராமல் இளப்பம் இட்டான் சாணாரை

ஆனதால் நீசனுக்கு யான் அதிக கோபமுடன்

நான் அவ்வூர் விட்டு நாடி வந்தேன் செந்தூரு’1

‘கேள்வி கேட்க முடியாத அதிகாரத்தில் இருக்கும் நீசன், தன் புத்தியால் தான் கெடுவதை உணராமல், சாணார் சாதி மக்களை அடித்தான். திருவனந்தபுரத்தில் இருந்து, நீசனுக்கு புத்தி சொன்னேன். என் புத்திமதியை மதிக்காமல் சாணாரை எளக்காரமாக நடத்தினான். அதனால் நீசனுடன் கோபம் கொண்டு திருச்செந்தூரில் வந்து சிறிது நாட்கள் தங்கியிருந்தேன்’, இது மேற்சொன்ன வரிகளுக்கான பொருள். அதன் பிறகு திருச்செந்தூரில் நடந்த சம்பவங்களை விளக்கும் வரிகள் கீழ்க்கண்ட வரிகள்.

‘வெங்கப்பையல் சிலர்கள் வேசையுட ஆசையினால்

என்னைக் கெணியாமல் என் கோவிலுள்ளேதான்

சன்னைச் சொல்லிப் பெண்களுடன் சரசமிட்டு எச்சிட்டான்

இருபேரும் ஒத்திருந்தாலும் பழுதல்லவோ’ 2

வெங்கைப்பயல் என்பது நாஞ்சில் நாட்டின் வட்டார வழக்குச் சொல்லாகும். ‘வெங்கைப்பயல்’ என்றால் ‘வீணன், உருப்படாதவன்’ என்று அர்த்தமாகிறது. வேசை என்பது ‘விலைமகள்’ என்று பொருள்.

‘வீணர்கள் சிலர் விலைமகளுடைய ஆசையால், என்னைப் பொருட்படுத்தாமல், என் கோவிலுக்குள்ளே, கீழ்த்தரமான சொற்களைக் கூறி, பெண்களுடன் சரசமாடி கோவிலை எச்சில் படுத்தினார்கள்’ என்பது மேற்கூறிய வரிகளின் பொருளாகும்.

இதில், ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருச்செந்தூர் கோயிலுக்குள், ஆண் பெண்களின் தகாத கலவி உறவு நிகழ்ந்தது’ என்பது சொல்லப்பட்டிருக்கிறது. ‘வேசையுட ஆசையினால்’ என்ற சொல்லை நோக்குங்கால், கோவிலில் விபச்சாரம் நிகழ்ந்தது என்றும் பொருள் கொள்ளலாம். பூசை, புனக்காரம், காணிக்கை போன்ற பழக்கங்களை ஒழிக்க வேண்டியதன் காரணங்களில் ஒன்றாக அய்யா வைகுண்டர் இதை சுட்டிக் காட்டுகிறார்.

‘ஒருவன் பெண்ணாளை ஒரு நம்பூரிப் பிடித்து

எனக்கு ஏவல் பண்ணி ஏந்திழையாள் போகுகையில்

மனக்குழலி தன்னுடைய மார்பிற் கலைபிடித்து

இழுத்து வலித்து இழுக்கேடு செய்யவென்று

பழுத்துச் சழிந்த பருத்த ஒரு நம்பூரி

மேல்தலையில் இட்ட முத்திரி கழற்றாமல்

மால் மயக்கத்தாலே மனம் கலங்கி நம்பூரி

மங்கை மனம் கலங்க வாரிப் பிடித்து இழுத்துக்

கொங்கைதனைப் பங்கமதாய்க் கூறழியவே கிழித்து

வேதனைகள் செய்ய மெல்லியவள்  கோபமுற்று

மோதி என் பேரில் ஒரு சாபம் கூறினளே’ 3 என்ற அகிலத்திரட்டின் வரிகளை வாசித்து முடித்தபின், சில மணித்துளிகள் அதிர்ச்சியில் உறைந்துபோனேன்.

மேற்சொன்ன வரிகளில் ‘நம்பூரி’ என்ற வார்த்தை உற்று நோக்கத்தக்கது. அகிலத்திரட்டு நாஞ்சில் நாட்டில் வட்டார வழக்குச் சொற்களால் எழுதப்பட்ட அம்மானைப் பாடல் ஆகும். இதில் மக்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் சொற்கள் நிரம்ப உள்ளன. அவ்வகையில் ‘நம்பூரி’ என்ற சொல் ‘நம்பூதிரி’ என்ற சொல்லின் ‘தி’ என்ற எழுத்து குறுகி ஒலித்து, மக்களின் பேச்சு வழக்கில் உருவான மருவல் சொல்லாகும் என்பதே எனது முடிவு.

‘நம்பூரி’ என்பது ‘நம்பூதிரி பார்ப்பனர்கள்’ சாதியை குறிக்கும் சொல்லாகும் என்பது தெளிவு. இந்த என் முடிவுக்கு மேலும் சில ஆதாரங்களை அகிலத்திரட்டிலேயே காட்ட விழைகிறேன்.

‘நம்பூரி வேதியர்கள் நாடி அகமகிழ்ந்து

பம்பை பரத்தை பகட்டுக் கைக்காட்டலோடு’4 என்ற அகிலத்திரட்டின் வரிகளில் ‘நம்பூரி வேதியர்கள்’ என்று சொல்லப்பட்டிருப்பதை நோக்குக!

‘போத்தி நம்பூரி பிராமணர்கள்தன் சீலை

மாற்றித் துவைப்பு மங்கலாய்க் காணுதுகாண்’5

என்ற அகிலத்திரட்டு வரிகளில், ‘போத்தி நம்பூரி பிராமணர்கள்’ என்ற வார்த்தையை நோக்குங்கால், ‘போத்தி’ என்பது கேரளாவின் கோவில்களில் பூசை செய்யும் அர்ச்சகர்களைக் குறிக்கும் சொல்லாகும். மக்கள் வட்டார வழக்கு மொழியில் மலையாள கோயில் அர்ச்சகர்களை ‘போத்தி’ என்று அழைப்பர். ‘போத்தி நம்பூரி பிராமணர்கள்’ என்று அகிலத்திரட்டு சொல்லியிருப்பதில் இருந்து, நம்பூரி என்பது ‘நம்பூதிரி பார்ப்பனர்’ என்ற சாதியைத்தான் குறிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

‘பூசை செய்தாய் நீயும் பிராமண நம்பூதிரிகளுக்கு

தேசம் அறியாதோ செப்பாதோ சாட்சியது’6

என்ற அகிலத்திரட்டின் வரிகள் நீசனுக்கு அய்யா வைகுண்டர் புத்தி சொல்லும் பகுதியில் வருகிறது. இதில் ‘பிராமண நம்பூரி’ என்ற வார்த்தையை காண்க!

‘பிராமண நம்பூரி புலம்பி மிகத்தான் அழுது

ஸ்ரீராமனையும் காணலையே தேசம் இருள் ஆகுதல்லோ’7 என்ற அகிலத்திரட்டின் வரிகளில், ‘பிராமண நம்பூரி’ என்றும்,

‘நம்பூரி வேதியர்கள் நாம் கெட்டோம் என்று சொல்லி

விம்பிடா வண்ணம் வெளியில் உரையாது இருந்தார்’ 8 என்ற அகிலத்திரட்டின் வரிகளில் ‘நம்பூரி வேதியர்கள்’ என்றும் இருப்பதையும் சாட்சியாகப் பகர்கிறேன்.

நம்பூரி என்ற வார்த்தை நம்பூதிரி பார்ப்பனர்களைக் குறிக்கும் என்பதை உள்வாங்கியபிறகு, மேற்சொன்ன 3 அகிலத்திரட்டு வரிகளைக் காண்போம்.

‘ஒருவன் பெண்ணாளை ஒரு நம்பூரிப் பிடித்து

எனக்கு ஏவல் பண்ணி ஏந்திழையாள் போகுகையில்

மனக்குழலி தன்னுடைய மார்பிற் கலைபிடித்து

இழுத்து வலித்து இழுக்கேடு செய்யவென்று

பழுத்துச் சழிந்த பருத்த ஒரு நம்பூரி

மேல்தலையில் இட்ட முத்திரி கழற்றாமல்

மால் மயக்கத்தாலே மனம் கலங்கி நம்பூரி

மங்கை மனம் கலங்க வாரிப் பிடித்து இழுத்துக்

கொங்கைதனைப் பங்கமதாய்க் கூறழியவே கிழித்து

வேதனைகள் செய்ய மெல்லியவள்  கோபமுற்று

மோதி என் பேரில் ஒரு சாபம் கூறினளே’, என்ற அகிலத்திரட்டின் வரிகளுக்கு பொருளை காண்போம்.

ஏந்திழையாள் = பெண், கலை = இங்கு ‘துணி’ என்ற பொருளே பொருந்துகிறது. முத்திரி = அடையாளம், கொங்கை = மார்பின் முலை.

பொருள்: எனக்கு பணிவிடை செய்து விட்டு ஏந்திழை (பெண்) ஒருத்தி போகும் போது, மாற்றானின் பெண்டாட்டியான அவளை, ஒரு நம்பூதிரி பார்ப்பான் பிடித்தான். நம்பூதிரியுடன் மனம் பொருந்தாத பெண்ணின் மார்பை மறைத்திருந்த துணியை பிடித்து இழுத்து, வலுக்கட்டாயமாக இழுக்கான கேடு செய்தான். பழுத்து சழிந்த பருமனான ஒரு நம்பூதிரி பார்ப்பனன், அவனுடைய மேல்தலையில் இருந்த, தான் பார்ப்பனன் என்பதற்கான அடையாளத்தை கழற்றாமல், தீய காம மயக்கத்தால் மனம் கலங்கி, மங்கையின் மனம் கலங்க, அவளை வாரிப்பிடித்து இழுத்து அவளின் முலைதனை பங்கமாக கூறழியவே கிழித்து வேதனைகள் செய்ய, மெல்லிய பெண்ணவள் கோபமுற்று மோதி, என் பேரில் சாபம் கூறினாள்’

மேற்கூறிய அகிலத்திரட்டின் வரிகள், திருச்செந்தூர் கோயிலில் நம்பூதிரி பார்ப்பனன் பெண்ணொருத்தியை வன்புணர்ச்சி செய்ததாகக் கூறுகின்றன.

தொடரும்…

தரவுகள்

  1. அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் பதிப்பு 178, (2011) இரண்டாம் பதிப்பு, 1*, 2* & 3*- பக்கம் எண் 283, 4*- பக்கம் எண் 138, 5* – பக்கம் எண் 352, 6* – பக்கம் எண் 151, 7* – பக்கம் எம் 152, 8*-பக்கம் எண் -153
  2. பொ. முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, 1* ,2*, &3* – பக்கம் எண் 226, 4* -பக்கம் எண் 107, 5* – பக்கம் எண் 281, 6* – பக்கம் எண் 117, 7* & 8* – பக்கம் எண் 118.
  3. நா. விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்’ பாகம் 1 & 2, 2006ஆம் ஆண்டு, இரண்டாம் பதிப்பு.
  4. அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்திரம் & பாராயணம், நூல் தொகுப்பு: சீத. மனோன்மணி அன்பு, முதல் பதிப்பு, 2019.
  5. பொ.மு.ச.பா.த.பா. சங்குமன்னன் அவர்களால் அச்சிலியற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, பதின்மூன்றாம் பதிப்பு.
  6. ‘அய்யா வைகுண்டர் நற்பணி மன்றம், அம்பலபதி’, வெளியிட்டுள்ள ‘திருஏடு என்னும் அகிலத்திரட்டு அம்மானை’ நான்காம் பதிப்பு, 2020. பதிப்பித்தவர், ஆ. அரிசுந்தரமணி

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.