தேவதைக் கதைகள் என்று முதன்முதலாகப் பெயரிட்டவர் – Madame D’ Aulnoy

‘சலூன்’ என்ற இடம் ஆண்களின் உலகத்திற்கே உரிய இடம். எண்ணற்ற பிம்பங்களைக் காட்டும் சுவர் கண்ணாடிகள், விதவிதமான சினிமா போஸ்டர்கள், காதருகே ரகசியம் பேசும் கத்திரியின் சத்தங்கள் என ஆண்கள் மட்டுமே அறிந்த இடம். ‘சலூன்’ என்ற சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து வந்திருக்கிறது. சலூன் என்றால் விருந்தினர்களை உபசரிக்கும் வரவேற்பு அறை என்று பொருள். 17ஆம் நூற்றாண்டில், இலக்கிய சந்திப்புகள் நடக்கும் இடங்களை சலூன் என்று அழைத்துள்ளார்கள். நண்பர்கள் ஒன்றுகூடி கதைகள் பேசுவது சலூன் சந்திப்புகளின் முக்கிய செயல்பாடாக இருந்துள்ளது.

17ஆம் நூற்றாண்டு என்பது பிரஞ்சு பிரதேசத்தின் புரட்சிக்கு முந்தைய காலம். லூயி அரசனின் மக்கள் விரோத ஆட்சி முறையும், ஏற்றத்தாழ்வை உறுதிப்படுத்தும் படிநிலையும் அடித்தட்டு மக்களை அவதியுறச் செய்தது. எந்தப் படிநிலையிலிருந்தாலும் பெண்கள் எவ்வித உரிமையுமின்றி வாழ்ந்து வந்தனர். கல்வி, திருமணம், கருத்தடை, விவாகரத்து எனப் பெண்களுக்குத் தேவையான எவ்வித அடிப்படை உரிமையும் கிடையாது.

இந்த நேரத்தில்தான் சலூன் சந்திப்புகள் மெல்ல மெல்லப் பிரபலமடைந்தன; அதனைப் பெண்களும் தங்களுக்கே உரிய இடமாக மாற்றினர். 1630களில் பெண்கள் (முதலில் வசதி வாய்ப்புப் பெற்ற பெண்கள்) தங்களது இல்லங்களில் சலூன் சந்திப்புகளை ஒருங்கிணைக்கத் தொடங்கினர். கதைகள், கவிதைகள் என இலக்கியம் சார்ந்து பேசியவர்கள், மெல்ல மெல்லப் பெண்களின் நிலை, அரசியல், பெண் சுதந்திரம், பொருளாதார விடுதலையின் முக்கியத்துவம் எனப் பெண்களின் உரிமைகள் சார்ந்தும் தீவிரமாகப் பேசவும் செய்துள்ளனர்.

பேசுவதோடு அல்லாமல், தங்களது கருத்துகளைக் கதை, கவிதை, நாவல், கட்டுரை என இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்யும் அளவிற்கு மாறினர். அது அவர்களுக்கு பொருளாதாரத்தையும் ஈட்டும் அளவிற்கு வளர்ந்து, பெண்களுக்கான உரிமைகோரும் அமைப்பாகவும் தங்களை மாற்றும் அளவுக்கு வளர்ந்தனர்.

17ஆம் நூற்றாண்டு மத்தியில், சலூன்களில் நாட்டுப்புறக் கதைகள் காற்றில் பறந்து காற்றோடு கரைந்து செவிகளுக்குள் நுழைந்து, அங்குள்ளோரைப் பரவசம் அடையச் செய்தது. கதை சொல்லுதல் என்பதை நாம் பொழுது போக்கு செயல்பாடாகவும், வீட்டிலுள்ள தாத்தா-பாட்டி மட்டுமே செய்ய வேண்டிய செயலாகவும் பார்க்கிறோம். ஆனால், கதை சொல்லுதல் என்பது வெறும் பொழுதுபோக்கு செயலல்ல என்பதற்குச் சிறந்த உதாரணமாகச் சலூன் செயல்பட்டுள்ளது.

சலூன்களை பெண்கள் தங்களுக்கான தளமாக மாற்றி, தங்கள் மனதிலுள்ள குரல்களை எந்தவித தயக்கமுமின்றி கதைகளாகப் பேசினர். நாட்டுப்புறக் கதைகளின் வழியே அவர்கள் தங்கள் குரலைப் பதிவு செய்தனர். நாட்டுப்புறக் கதைகள் காலத்துக்கேற்ப புதிய உருவை எடுத்துக்கொண்டன. காலத்தின் சாட்சியாக இக்கதைகள் புதிய வடிவத்தை எடுத்தன. புதிய கதைகள் உருவாகின. Folk Tales எனும் நாட்டுப்புறவியலில் Fairy Tales – தேவதைக் கதைகள் எனும் புதிய வகைமை உருவானது.

தேவதைக் கதைகள் குழந்தைகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கதைகள் இல்லை என்றாலும், மாயாஜாலk கதை வடிவத்தால் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாயின. Cinderella, Snow White and the Seven Dwarfs, Little Red Hiding hood, Beauty and the Beast போன்ற கதைகள் அனைத்துமே தேவதைக் கதைகளின் வகைமையில் சேர்கின்றன. சித்திரக் குள்ளன், குட்டிச் சாத்தான், ராட்சச மனிதர்கள், தேவதைகள், பூதம், பேசும் மிருகங்கள், மாய மந்திரங்கள், மாயாவிகள், மந்திரக்காரி என ஏதோ ஒரு கதாபாத்திரம் மாய-மந்திர சாகசத்துடன் கதையை நகர்த்தும். தேவதைக் கதைகள் இலக்கியத்தில் –பிரான்சை சேர்ந்த சார்ல் பெரோ (Charles Perrault), ஆண்டரசன் அல்லது ஜெர்மனியைச் சேர்ந்த க்ரிம் சகோதரர்கள் (Grimm Brothers) ஆகிய பெயர்கள் மிகவும் பிரபலம்.

இந்த மூன்று பெயர்களுக்கும் இணையாத பெயர்தான் மேடம் ஆல்னாய் (Madame D’Aulnoy) என்பவர். சார்ல் பெரோ காலத்திலே வாழ்ந்தவர்தான் மேடம் ஆல்னாய். இவர்தான்  ‘Fairy Tales’ எனும் சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்.

மேடம் ஆல்னாய்,Wikipedia

மேடம் ஆல்னாய் ( Marie-Catherine Le Jumel de Barneville, Baroness d’Aulnoy) 1650களில் பிரெஞ்சு தேசத்தில் பிறந்தவர். 13 வயதிலே திருமணமாகி தனது பால்யத்தைத் தொலைத்தவர். அவரது கணவர் – குடியிலும் சூதாட்டத்திலும் சொத்தைக் கழித்துவிட்டு, ஆல்னாயை பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாக்கினார். கணவரின் கொடுமைகளுக்குப் பலியாகும் சாதாரண பெண்ணாக ஆல்னாய் வாழ்வில்லை. மாறாக தனது உயிரைத் தக்கவைத்துக்கொள்ள, கணவனைக் கொலை செய்யும் அளவுக்குச் சென்றவர் என்றும் சொல்லப்படுகிறது! அதனால் அவர் சிறைத் தண்டனை பெற்றார் என்றும் சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் வேறு நாட்டிற்கு தப்பித்துச் சென்று ரகசியமாக வாழ்ந்தார் என்றும் கூறுகின்றனர். தனது 50ஆவது வயதில் மேட ஆல்னாய் மீண்டும் பிரான்சுக்கு வந்து, சலூன் சந்திப்புகளை ஒருங்கிணைத்துள்ளார்.

மேடம் ஆல்னாயின் கதைகள் வழக்கமான நாட்டுப்புறக் கதைகளாக மட்டுமல்லாமல் – பெண்களை மையப்படுத்தியும் – பெண்களின் பார்வையில் பேசும் கதைகளாகவும் இருந்துள்ளன. சமகாலத்துப் பெண்களைக் கதாபாத்திரங்களாக உருவாக்கினர். சுய வரலாறும் அதே நேரம் சாகசங்களும் நிறைந்த கதைகள் அவை. இந்தப் புதிய கதைகளுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருந்துள்ளது.  மேடம் ஆல்னாய் அவர்களை ‘கிளியோ’  (Clio) என்று மக்கள் அன்போடு அழைத்துள்ளனர். கிளியோ என்பவர் கிரேக்க மரபில் நினைவுகளின் கடவுளாகக் கருதப்படுகிறார். அதேபோல் அவரது கதைகளை ‘Conte de Fee’ (Fairy tales) என்றழைத்தனர்.

இந்த 21ஆம் நூற்றாண்டில், பெண்ணியம் குறித்து நடக்கும் ஆய்வுகளில் மேடம் ஆல்னாயின் படைப்புகள் மீது கவனிப்பு வந்துள்ளதாக மேற்குலக பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. அதுமட்டுமல்ல, மேடம் ஆல்னாய் தனது படைப்புகளில் சொந்த வாழ்விலிருந்து பல நிகழ்வுகளைப் பயன்படுத்தியுள்ளார் என்றும், அதே போல் அவர் தனது கருத்துகளைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் என்றும் குறிப்பிடுகின்றனர். மேடம் ஆல்னாயின் படைப்புகள் வழியே 17ஆம் நூற்றாண்டின் நிலை குறித்து அறிந்துகொள்ள முடிகிறது என்கின்றனர்.

The Blue Bird அட்டைப்படம், Wikipedia

‘Blue Bird’ என்ற இவரது புத்தகத்தை பெண் விடுதலை வரலாற்றின் மிக முக்கிய ஆவணமாகக் கவனிக்கவேண்டும் என்கிறார்கள். கடந்த 2021ஆம் ஆண்டு இவரது கதைகள் மீண்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.

மேடம் ஆல்னாயின் படைப்புகளை பெண்ணியம் சார்ந்து செய்யப்படும் ஆய்வுகள் போலவே, அவரது சிறார் இலக்கிய பங்களிப்புகள் குறித்தும் தனியே ஆய்வு செய்யப்பட வேண்டும். நாட்டுப்புறவியலில் பெரும் பங்களிப்புச் செய்த சார்ல் பெரோ என்பவரை ‘நவீன நாட்டுப்புறவியலில் தந்தை’ என்று அழைக்கிறார்கள். ஆனால், அதே காலத்தில் வாழ்ந்து, Fairy Tales – என்ற சொல்லுக்குத் தாயாயிருந்த ஆல்னாய் குறித்து எந்த வழ்க்கைக் குறிப்பும் தற்போதில்லை.

தந்தை என்று ஒருவர் தொடர்ந்து பல்வேறு துறைகளில் நாம் சில முன்னோடிகளுக்குப் பெயர் சூட்டி மரியாதை செலுத்தும் போது, தாய் என்று பெயர் சூட்டி பெண்களின் பங்களிப்பை மதிப்பதும் அவசியமானது.

அந்த வகையில் Fairy Tales துறையின் தாய் என்று அழைக்க இலக்கிய உலகம் முடிவு செய்தால் மேடம் ஆல்னாய் அதற்குச் சரியாக இருப்பாரா? முன்னெடுக்கப்படும் ஆய்வுகள் பதில் சொல்லவேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு:

https://owlcation.com/humanities/Madame-dAulnoy

References:

  1. www.theguardian.com
  2. Les Contes des Fees: The Literary Fairy Tales of France by Terri Winding
  3. wikipedia.com
  4. Gutenberg

படைப்பாளர்

பஞ்சுமிட்டாய் பிரபு

பிரபு ராஜேந்திரன் இங்கிலாந்தில் வசிக்கிறார். சிறார் இலக்கியத்தின்பால் பெரும் ஈடுபாடு கொண்டவர். பஞ்சுமிட்டாய் சிறார் இதழை நடத்திவருகிறார். சிறார் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார். ஓங்கில் கூட்டம் என்ற பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.