ஹாய் தோழமைகளே,

சுய ஒழுங்கு பயிற்சிகளைச் செய்து பார்த்தீர்களா? உங்கள் அனுபவங்களைக் கேட்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

இந்த அத்தியாயத்தில் மிக மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறோம். Empathy (மற்றவர் நிலையில் இருந்து பார்த்தல்), மற்ற உயிர்களிடம் பரிவோடு இருத்தல் என எப்படிச் சொன்னாலும், சக உயிரும் நம்மைப் போலவே உடலும் உணர்வும் கொண்டது என்கிற உணர்வோடு நடந்து கொள்ளுதல்.

தன்னை அறிவதோடு, மற்ற உயிரின் மேலுள்ள பரிவும் சேர்ந்தால் நமக்கு மற்றவரின் மேல் எந்த விதமான மன மாச்சரியத்திற்கும் இடமில்லை. உணர்வு கொந்தளிப்பும் குறையும். இன்றைக்கு உதவிக்கு வரும் பெண் விடுமுறை, அலுவலக வேலையோடு இதுவும் சேர்த்து பளு எனும்போது கோபம் வரும். அந்தக் கோபம், விடுமுறை எடுத்த உதவியாளர் மீது நிச்சயம் பாயும் (நியாயம் இல்லாத போதும்).

ஆனால், அவரும் மனுஷிதானே, அவருக்கும் உடல் சார்ந்த பிரச்னைகள், குடும்பம் சார்ந்த சவால்கள் இருக்கலாம் என்றெண்ணிக் கொண்டால் கோபம் குறையும். அடுத்து செய்ய வேண்டியதைத் திட்டமிடலாம். நமக்குத் தேவையான உதவியைக் குடும்பத்தாரிடம் கேட்கலாம். முடியாததை மறுநாளுக்கு ஒத்தி வைக்கலாம். இது போன்று ஆக்கபூர்வமாக நமது சக்தியைச் செலவு செய்யப் பரிவு உதவி செய்யும். இல்லாவிடில் அவள் மேலுள்ள கோபத்தை நாம் மற்றவர் மேல் காட்டுவோம் அல்லது இத்தனையையும் நான் மட்டுமே செய்ய வேண்டி இருக்கிறதென சுய இரக்கத்திற்கு ஆளாவோம். இது எதுவுமே ஆரோக்கியமான மனதிற்கு உகந்ததல்ல.

அடுத்தவர் மேல் பரிவு காட்டவும், அவர் நிலையில் நின்று யோசிப்பதைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ஒரு கதை நினைவு வருகிறது.

ஒரு சிறுவன் தோட்டத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்திருந்தபோது பக்கத்திலிருந்த மரத்தில் இருந்த கூட்டுப்புழு அதன் மேலிருந்த கூட்டை உடைத்து  வெளியே வர முயற்சி செய்து கொண்டிருந்தது. அவன் வெகு நேரம் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். கூட்டில் இருந்து வெளிவர போராடிக்கொண்டிருந்த அந்தப் பூச்சியின் மேல் இரக்கப்பட்ட அவன், அதற்கு உதவி செய்ய முடிவு செய்தான். ஒரு கத்தரிக்கோலால் கூட்டைக் கிழித்து அது வெளிவர உதவினான். அழகிய பட்டாம் பூச்சி ஒன்று வெளிவந்தது. அதைப் பார்த்த அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. தான் ஓர் உயிருக்கு உதவி செய்தோம் என்று.

வெளியே வந்த பட்டாம் பூச்சி பறக்க முயற்சி செய்தது. ஆனால், அதன் சிறகுகளில் தேவையான வலிமை இல்லாத காரணத்தால் பறக்க முடியவில்லை. கூட்டைத் தானே போராடி உடைத்திருந்தால் சிறகுகளுக்கு வலிமை கூடி இருக்கும். இப்போது பறக்க முடியாமல் முயற்சி  செய்து செய்து அதன் உயிரை விட்டுவிட்டது. சிறுவனுக்குச் சொல்ல முடியாத துயரம்.

அந்தச் சிறுவன் பட்டாம்பூச்சிக்கு உதவிதான் செய்தான். ஆனால், பட்டாம்பூச்சியின் நிலையில் இருந்து அதற்கென்ன உதவி தேவைப்படும் என்று யோசித்திருந்தால் சும்மா இருப்பதே உதவிதான் என்று புரிந்திருக்கும். 

நாமும் அப்படியே ஒன்று யாரையும் புரிந்து கொள்ளாமல் கோபப்படுவோம், பொறாமைப்படுவோம், அவரோடு விரோதம் பாராட்டுவோம், இல்லாவிடில் அவருக்கு ஏதோ பிரச்னை நாம் உதவி புரிவோம் என்றெண்ணி அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் உதவி என்கிற பெயரில் ஓர் ஏழரையைக் கூட்டி, பின்னர் நான் நல்லதுதானே நினைத்தேன் என்று மருகுவோம். ஒன்று அடுத்தவருக்கு வேதனை, அடுத்தது அவரோடு நமக்கும் வேதனை.

என்ன செய்வதாய் இருந்தாலும் நான் அவரிடத்தில் இருந்தால் இந்த விஷயம் என்னை எப்படிப் பாதிக்குமென்று யோசித்தால், இருவருக்குமே நிம்மதி.

நிறைய பெண்கள் மற்றவரைப் பற்றிய வம்பு பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

“இப்போதான் வீட்டுக்காரர் தவறி ஒரு மாசம் ஆச்சு, அதுக்குள்ள ஊரைச் சுத்துறா, எங்க வீடுன்னா சொந்தகாரங்க பேசியே கொண்ணுடுவாங்க.”

“அதுவும் என்ன நீட்டா மேக்கப்புங்கிற இதெல்லாம் நல்லாவா இருக்கு?”

“அவளுக்கு என்னம்மா புருஷன் பெரிய ஆபிசரு இப்போ நல்ல காசு வரும், அவளும் வேலைக்குப் போறா, ஒரே புள்ள நம்மள போலவா?”

இப்படி மற்றவர் பற்றிப் பேசும் முன், கொஞ்சம் நிதானியுங்கள். இது அவளைப் போல நீங்கள் இருக்க முடியவில்லையே என்கிற பொறாமையைக் காட்டுகிறது.

இந்தப் பொறாமைதான் மனதில் ஆழமாக வேரூன்றி, உங்களின் உணர்வுகளை ஆட்டிப் படைக்கிறது. இதற்குப் பலியாகப் போவது உங்கள் மன நிம்மதி மட்டுமே.

அடுத்து அந்தப் பெண்ணின் நிஜமான நிலை நமக்குத் தெரியாது, குடும்பத்திற்கு இனி அவர்தான் சம்பாதிக்க வேண்டும் என்கிற நிலை இருக்கலாம், அந்த வேலையின் பொருட்டு அவருக்கு அதீத அலங்காரம் தேவைப்படலாம், இல்லாவிடினும் அது அவரது தனிப்பட்ட விருப்பமாகக்கூட இருக்கலாம். அவர் எப்போதும் பளிச்சென இருப்பதை விரும்பலாம் அல்லது அவரது கணவரின் பிடித்தமின்மையால் இத்தனை நாள் நன்றாகத் தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல் ஒரு வெற்று வாழ்வு வாழ்ந்திருக்கலாம்

அவருக்கு உங்களின் ஆத்மார்த்தமான நட்பு இப்போது மிகவும் தேவைப்படலாம். இத்தனை ‘லாம்’கள் இருக்க, நீங்கள் சொல்லும் இந்த விமர்சனங்கள் அவர் காதில் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்?

இப்படிப் பேசி முடித்தவுடன் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எத்தனை எதிர்மறை தாக்கங்களை இது உண்டு பண்ணும்? இதே நீங்கள் அவரிடம் சென்று ஆறுதலாகப் பேசி, ஏதும் தேவைப்பட்டால் நீங்கள் உதவத் தயாராக இருப்பதாகச் சொன்னால் அவருக்கு அது எத்தனை பலம்? அவருக்கு நிஜமாக என்ன தேவை என்று தெரியாத போது உனக்குதவக் காத்திருக்கிறேன் என்பதைச் சொல்வதே பேருதவிதான்.

உங்களுக்குள் உள்ள அழகிய உறவு பின்னால் உங்களுக்கு எத்தனை feel good feelings கொடுக்கும் என யோசித்துப் பாருங்கள்.

பரிவு பற்றி இன்னும் பேசலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.