தனிப்பட்ட காதல், குடும்ப உறவோ அல்லது வேலை தொடர்பான உறவோ எதுவாயினும் நம் அணுகுமுறையாலேயே இனிமையாக இருக்கும்.
எப்படியாவது அந்த உறவைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நமக்கு நாமே அழுத்தம் தரும்போது, அங்கே மறுப்புக்கோ மாறுபட்ட கருத்துக்கோ வாய்ப்பே இல்லை. எப்போதும் சந்தோஷமாக அடிபணிந்து (Submissive) போவோம். நம் மீது நமக்கு நல்ல சுய மதிப்பில்லாதபோது நமக்கு இந்த வேலையே அதிகம், இவரைப் பகைத்துக் கொண்டு வேலை போனால் எளிதில் கிடைக்காது / நமக்கு இந்த உறவு முக்கியம் இவரில்லாமல் என் வாழ்வு முழுமையாகாது போன்ற எண்ணங்களால் நமக்கு என்று ஒரு கருத்து / விருப்பம் உள்ளதையே மறந்து விடுவோம்.
ஆனால், ஒரு கட்டத்தில் சலிப்படைந்து நம்மை நாமே வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம். அது எத்தனை இன்றியமையாத / இனிமையான உறவானாலும் மனம் சலித்த பின் உறவும் சலிக்கும். எப்போதும் உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிபடுத்தத் தயங்காதீர்கள். உங்கள் எண்ணமே உங்களின் அடையாளம், அதைத் தொலைத்துவிடாதீர்கள்.
அடுத்த விதம், தன்னைப் பற்றிய உயர்ந்த மனபான்மையின் காரணமாக வரும். இந்த வர்த்தகத்தில் / வேலையில் / உறவில் எனது தேவை / மதிப்பு அதிகம் என்கிற உணர்வின் காரணமாக வரும் அடக்கி ஆளும் தன்மை (Aggressive).
ஒரு வேளை உங்கள் எண்ணம் நிஜமாகவே இருந்தாலும், நீங்கள் எவ்வளவு மதிப்பு மிக்கவரனாலும் உங்களின் ‘நான் முக்கியம்’ என்கிற எண்ணம் உங்கள் அருகில் இருப்பவரை வெறுப்படையச் செய்யும், உங்கள் மேல் அவர்களுக்கு இருக்கும் மரியாதையும் குறையும். குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் இந்த வகை அணுகுமுறை உங்களுக்கு வெற்றியைத் தரலாம். காலம் போகப் போக உங்களை விட்டு மற்றவர்கள் ஒதுங்கிப் போவர். ஒரு சிலர் ஆதாயங்களுக்காக உங்களைப் பொறுத்துக் கொள்ளலாம், நீண்ட காலம் அவர்கள் நிஜமான நட்பாகவோ உறவாகவோ தொடர மாட்டார்கள்.
அடுத்த விதம், நானும் நீயும் சமமானவர்கள், இருவரும் இந்த உறவில், வேலையில், வியாபாரத்தில் முக்கியம் என்கிற எண்ணத்தோடு உங்களின் நிலைபாட்டில் உறுதியாகவும், அடுத்தவரின் கருத்தையும் அதே மரியாதையோடு கணக்கில் கொள்ளும் உறுதியான நிலைபாடு (Assertive). இந்த அணுகுமுறையில் இருவரும் சமமாக மதிக்கபடும்போது, அங்கே ஆரோக்கியமான கருத்து மோதல் வரலாம், ஆனால் வெறுப்போ சலிப்போ பகைமையோ வருவதில்லை.
சரி, நாம் ஆரோக்கியமாக அணுகியும் நமது உறவோ நட்போ சில அப்படி இல்லாத போதும், அவர்களுக்கான எல்லையை அலட்சியபடுத்தும் போதும் நமக்கதில் ஒரு வெறுமை, வெறுப்பு தோன்றும். அதை எப்படி சரி செய்யலாம்?
கூடுமானவரை, உறவைச் சரி செய்ய நம்மால் முடிந்த அத்தனை முயற்சியையும் செய்ய வேண்டும், ஏனெனில் இது பொருள் சம்பந்தபட்டதில்லை, இரு மனம் சம்பந்தபட்டது. சுலபமாக வேண்டாம் எனத் தூக்கி எறிய நம்மால் முடிந்தாலும் அடுத்தவரின் பாதிப்புகளையும் எண்ணிப் பார்ப்பது அவசியம்.
அத்தனை முயற்சியும் கைகூடவில்லை எனில், கவனம் நம்மால் ஆன அத்தனையும் செய்து பார்த்து வெற்றி பெறாவிடில் மட்டுமே விலகுவது என்பது நியாயம்.
முதலில் ஆழ்ந்த மூச்செடுத்து நம்மை தளர்வு செய்து கொண்டு…
- இந்த உறவில் நம் தேவை என்ன என்பதை அறிந்து கொள்ளவும்.
- நம்மோடு உறவில் இருப்பவரின் தேவை எது என யோசிக்கவும்.
- இது இரண்டும் ஏதோ ஒரு புள்ளியில் இணைகிறதா இருவரும் மகிழ்ச்சியோடு தொடர வாய்ப்புள்ளதா என ஆராயவும்.
- ஒரு சில சிறிய விட்டுக் கொடுத்தல் நமது உறவைப் பலபடுத்தும். இருவருக்கும் மகிழ்ச்சியைத் தருமென்றால் அதை மகிழ்வோடு செய்யுங்கள், ஏதோ தியாகி போன்ற எண்ணத்தில் அல்ல. இது ஒரு வழி பாதை அல்ல இருவரும் சேர்ந்தே சில விட்டுக்கொடுத்தலைச் செய்யலாம. இது தனிப்பட்ட குடும்ப / காதல் உறவுக்குப் பொருந்துமென்றாலும், சேர்ந்து செயல்படுவது எப்போதும் இனிமைதான்.
- எல்லாக் கதவும் அடைபட்டது மாற்றத்திற்கு வழி இல்லை என்கிற நிலையில் எது உங்களுக்கு முன்னுரிமை எனப் பாருங்கள். உங்களின் எதிர்பார்ப்புகளா, அந்த உறவா?
- ஒரு வேளை அந்த உறவுதான் என்றால் நீங்கள் உங்களின் மன அமைதிக்காகவும், மகிழ்ச்சிகாகவும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். இந்த முடிவு எந்த வெளி அழுத்தமும் இல்லாமல் உங்களுக்காக நீங்கள் எடுக்கும்போது பெரிதாக எந்த வருத்தமும் இருக்காது. எப்படி நம் பெற்றோரை, உடன் பிறந்தோரை, நம் பிள்ளைகளை அவர்களின் இயல்போடு ஏற்றுக் கொள்கிறோமோ அது போல இயல்பாக மற்றவரின் இயல்போடு ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அன்பு தரும். இதற்கு உங்களின் மீது உங்களுக்கு ஆழ்ந்த நேசமும் உயர்ந்த சுயமதிப்பும் எதற்காகவும் மற்றவரைச் சார்ந்திராத சுயசார்பும் உங்களிடம் இருக்க வேண்டும்.
- உங்களின் முன்னுரிமை உங்களின் எதிர்பார்ப்புகள் நினைவேறுதல் என்றால், சம்பந்தபட்டவரிடம் அதைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி, அவர்களுக்கும் அதைப் புரிந்து மாற்றிக்கொள்ள காலம் அளித்து, ஒரு வேளை இப்படியே தொடர்ந்தால் உங்களின் நிலைபாடு என்ன என்பதையும் தெளிவாகக் கூறிவிடுங்கள். இப்போது முடிவு அவர்களின் கையில் உங்களுக்காக மாறுவதோ அல்லது பிரிவுக்கு தயாராவதோ.
எந்த முடிவாக இருந்தாலும் அதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கைப் பாதையில் முடிவுவரை உங்களுடன் நடக்கப் போவது நீங்கள் மட்டும்தான், வாழ்வோ வர்த்தகமோ வேலையோ ஒருவரோடு முடிந்துவிடுவது இல்லை.
அவர்களோடு இருந்த நல்ல தருணங்களை மனதில் இருத்தி விடை கொடுங்கள்.
இப்போது என்ன நடந்திருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து இருந்த இனிமையான தருணங்களுக்காகவும், அந்த நாட்களை நினைத்தால் உங்கள் முகத்தில் மலரும் புன்னகைக்காகவும் ஆரோக்கியமான முறையில் விடை கொடுப்பது உங்களின் மனக் காயங்களையும் சீக்கிரம் ஆற்றும், தெளிவான மனம்தான் இதில் கற்ற பாடங்களால் அடுத்த உறவில் தவறு நேராமல் பார்த்துக்கொள்ள உதவும்.
யார் கண்டது நீங்கள் இருவரும் மறுபடியும் மாறுபட்ட மனிதராகச் சந்திக்கலாம், அப்போது அந்த உறவு இனிக்கலாம். காலம் நமக்கு வைத்திருக்கும் ஆச்சரியங்களை யார் அறிவார்?
வாங்க ஆரோக்கிய உறவுகளை உருவாக்கலாம், வாழ்வைக் கொண்டாடலாம்.
(தொடரும்)
படைப்பாளர்:
யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.